Sunday, April 10, 2022

ஈஸி சேர் - 46

 #Easychair_46

அத்யாயம் : 46 ...  ஈஸி சேர்

பர்வதவர்தினி அம்மாள் வேத பாடசாலையில் கட்டுமானப் பணிகள் ஒரு பூஜைக்குப் பிறகு படு வேகத்தில் துவங்கின.

மூன்றாக இருந்த குழந்தைகளின் எண்ணிக்கை சற்று உயர்ந்து ஆறாக அதிகரித்தது.  புதிதாக சேர்ந்த குழந்தைகள் பூணூல் போட்ட குழந்தைகள், ஏழெட்டு வயது இருக்கும் ஒவ்வொன்றுக்கும்.

வைத்யநாத ஐயர் படு பிஸியாகி விட்டார்.  காலை நான்கு மணிக்கு தானும் எழுந்து பூணூல் போட்ட குழந்தைகளையும் எழுப்பி, அனைவரும் குளித்து சந்தியாவந்தனம் மற்றும் சமிதாதானம் கற்றுவித்து, பிறகு மற்ற குழந்தைகளையும் எழுப்பி, தயார் படுத்தி, ஸ்லோகங்கள் சொல்லிக் கொடுத்து, பிறகு சம்ஸ்கிருத மொழி அரிச்சுவடி பாடங்கள், நித்திய பூஜைகள், விளையாட்டுக்கள் என்று தன் முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் ஐயப்ப சமாஜத்திலிருத்து இவருக்கு கடிதம் வந்தது.  எல்லா குழந்தைகளை மட்டும் மறுநாள் காலை ஒன்பது மணிக்கு சமாஜத்திற்கு அங்கு நடக்கும் ஐயப்ப பூஜைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தார்.  காலை ஒன்பது மணிக்கு சமாஜம் இதற்காக வண்டி ஒன்றை அனுப்பி வைக்கும் என்று கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.  அன்று மாலை ஐந்து மணிக்கு குழந்தைகள் திரும்புவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது, மறுநாள் வைத்யநாத ஐயருக்கு சற்று ஓய்வு.

குழந்தைகளை சமாஜதத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு சற்று ஈஸி சேரில் சாய்கிறார்.

இப்போது அவருக்கு அவருடைய பாரு ஞாபகம் வருகிறது.  பேச ஆரம்பித்து விடுகிறார், மனதோடும் சற்று மெல்லிய குரலோடும்.

பாரு, இப்பெல்லாம் உன் நெனைப்பே இல்லாமல் இருக்கேன்.  கொஞ்சம் தெம்பா இருக்கேன்.

நம்ம வீடு இப்ப வேத பாடசாலை தெரியுமா?  சுப்புணிதான் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தான்.  இப்ப எனக்குனு எந்த சொத்தும் இல்ல.  அத விட்டுட்டு போறோமே, இத விட்டுட்டு போறோமேன்னு ஒரு கவலை கூட இல்ல.  எப்ப நீ என்ன கூப்பிடறையோ, அப்ப உடனே வந்துடுவேன்.

பாரு, இங்க மூணு வாண்டுகள் இருக்காங்க.  மூணும் என்னை தாத்தானுதான் கூப்பிடுதுங்க.  எனக்கு இப்ப மூணு பேரங்க.  என்ன வேடிக்கை பாரு.  குழந்தையே நமக்கு இல்லாம பேரப் பசங்க.

சிரிக்கிறார்.  அழுது கொண்டே இருந்தவர் சிரிக்கிறார்.  

அந்த பசங்க பேர கேட்கலையே?  பாலு, ரகு, கோபு.  அதுல பாலு இருக்க்கானே, சரியான வாலு தெரியுமா?  மூக்குல சளியா இருக்கேடா, தொடச்சுக்கோன்னு சொன்னோண்ண என்னோட பின்னாடி வந்து என்னோட பஞ்சகச்சத்திலேயே தொடச்சுக்கறான், ஓடறான். அவனை பிடிடான்னு சொன்னேன்.  பசங்க பிடிச்சுண்டு வந்தாங்களா.  உடனே, மன்னிச்சுடுங்கோ தாத்தானு சொல்றான்.  அதுக்கப்பறம் அவன என்ன செய்ய முடியும்.  தேமேனு பஞ்சகச்சத்தால நானே அவன் மூக்க தொடச்சு விட்டேன்.  குழந்தை இல்லையா?

நீ மாத்திரம் இருந்தேன்னா எல்லா குழந்தைக்கும் வகை வகையா சமச்சு போடுவே.  உன்னையே எல்லாம் சுத்திண்டிருக்குங்க.

பேசிக் கொண்டே இருந்தார் அவருடைய பாருவோட.

சிரித்துக் கொண்டிருந்த அவர், சற்று அழத்தொடங்கிவிட்டார் இப்போது.

அவருக்கு இப்போ அந்த விபத்து ஞாபகம் வந்து விட்டது.

பாரு, அன்னிக்கு ஒன்னோட நானும் வந்திருக்கணும்.  வந்திருந்தா ரெண்டு பேரும் ஒண்ணாவே போயிருக்கலாம்.

ருக்கு மாமி மந்திராலயம் போறா, நீங்களும் வரேளான்னு கேட்டியே.  அன்னிக்கு ஒரு வைதீகம் மட்டும் ஒத்துண்டு இருக்கலேன்னா ஒன்னோட வந்திருப்பேன்.

இப்படி மந்திராலயம் போறேன்னு மண்ணுலயா போவ.

அவர் இப்போது அவளோடு தொடர்ந்து பேச முடியவில்லை.

விருட்டென்று ஈஸி சேரிலிருந்து எழுந்தார்.

பகவானே, என்ன சீக்கிரம் கூட்டிக்கோடா.  திரும்பத் திரும்ப இப்படி சித்ரவதை பண்றதுல அப்படி என்ன உனக்கு சந்தோஷமோ தெரியல.

எழுந்து மணியைப் பார்த்தார்.  மாத்யான்னிகம் பண்ற நேரமாச்சே.  பசங்க வறதுக்குள்ளே சாப்பிட்டு விட்டு கொஞ்சம் தலைய சாய்ப்போம்.

சமையல் வேலை செய்யும் அனந்து அவருக்காக கொத்தமல்லி ரசமும் அவரைக்காய் கறியும் பண்ணி வெச்சிருந்தது ஞாபகத்துக்கு வந்தது.

மாத்யான்னிகத்துக்கு தயாரானார்.

தொடரும்.....

No comments:

Post a Comment