Sunday, April 10, 2022

ஈஸி சேர் - 45

 #Easychair_45

அத்யாயம் : 45 ..  ஈஸி சேர்

வீடு வந்த பர்வதத்திடம் நாராயணி கேட்ட முதல் கேள்வி 'மீனாட்சி எப்படி இருக்கா?'

விவரம் சொன்னாள்.  வருத்தப்பட்டாள் நாராயணி.

நாம ஒண்ணு செய்யலாம் பர்வதம்.  வைத்தா அப்பா பூவனூரை காலி செஞ்சுட்டு வர வரைக்கும் நான் வேணா அவாத்தோடையே இருக்கேன்.  நீ இங்க உங்க அப்பாவையும் வைத்தாவையும் பார்த்துக்கோ.  தேவைப்பட்டா வந்துண்டு போயிண்டிரு.

நாராயணி சொன்னதும் ஏற்புடையதாகவே இருந்தது.  இருப்பினும் மாமியாரை இன்னொருவர் வீட்டில் வேலை செய்ய எப்படி, நன்னா இருக்குமா?  அவர் வந்தவுடன் பேசிக் கொள்ளலாம்.

வைத்தாவிடம் பேசியதில் நாராயணி சொல்வதே உசிதமாக பட்டது.

வேதராமன் சற்று சங்கோஜப் பட்டாலும் அவரும் ஏற்றுக் கொண்டார்.

பாவம், பெரியவாளா என் ஆத்துக்காரிக்கு துணையா இருக்கேன்னு சொல்றதுக்கே நாங்க கொடுத்து வைத்திருக்கோம்.  துணி மணி தோய்க்கறதுக்கெல்லாம் ஆள் இருக்கா.  சமையல் செஞ்சு அவளுக்கு ஆறுதலா இருந்தா போரும் மாமி.  அவளோட காரில் கூட போய் செக்கப்புக்கு போனா போதும்.  இன்னொரு புள்ளையாத்துல இருக்கற மாதிரியே நெனச்சுக்கோங்கோ.

சொல்லும் போதே நெகிழ்ந்து விட்டார்.  அவர் கேட்டால் உதவி செய்ய சொந்தங்கள் இருந்தாலும் இந்த சொந்தங்களையே பெரிதாக நினைத்தார்.

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.  இடைவெளியில் பால் காச்சி சாப்பிட்டு விட்டு புது வீடு குடுத்தனம்.

வைத்தா பர்வதம் புது வீட்டில்.  நான்கு வீடு தள்ளி நடராஜ ஐயர் அவர் வீட்டில், நாராயணி வேதராமன் வீட்டில்.  தினமும் எப்படியாவது ஒருமுறையாவது பர்வதம் மாமியாரைப் பார்த்து விட்டு வருவாள்.

மீண்டும் பர்வதம் பூவனூரிலிருந்து வந்து விட்டதால் சிறிய அளவிலான மடி சமையல் ஆர்டர்களை பர்வதத்திடம் கேட்டு விட்டு எடுத்துக் கொண்டார்.  கிட்டத் தட்ட நடராஜ ஐயர் வீடு மடி சமையல் வீடாகவே மாறி விட்டது.  மூவரும் உழைத்தனர்.  வருமானம் சிறிது சிறிதாக உயர்ந்து கொண்டிருந்தது.

விசு வாத்யாரும் கோவில் காரியங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு, வீட்டு சாவியை பட்டாமணியார் பொறுப்பில் விட்டு விட்டு மெட்றாஸ் வந்தார்.  வந்த உடனேயே, வைத்தா, நடராஜ ஐயர் இவர்களோடு வைதீகத் தொழிலில் சேர்ந்து கொண்டார். நங்க நல்லூர், மடிப்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இவர்கள் வைதீகங்களுக்கு படு கிராக்கி.  இவர்களும் பக்தி ஸ்ரத்தையோடு எல்லா குடும்பங்களுக்கும் செய்து கொடுத்ததால் எல்லோருக்கும் மகிழ்ச்சி.

மீனாட்சிக்கு பிரசவ நேரம் நெருங்கியதால் பர்வதம் அங்கும், நாராயணி இங்குமாக மாறிக் கொண்டார்கள்.

இதோ செல்லக்குட்டி பிறந்துவிட்டான்.  பிரசவம் கடினம், இருப்பினும் பரவசம்.  மீனாட்சியை விட தனக்கே பிறந்ததை போல பர்வதத்திடம் சந்தோஷம்.

டாக்டர் ஒரிரு மாதங்களுக்கு தாயிடம் பிரசவத்தின் போது இருந்த தொற்றின் காரணமாக குழந்தையை சற்று தூரத்தில் வைத்திருக்க சொன்னார்.  தாய்ப்பாலுக்கு மாத்திரம் சற்று சலுகை, ஏதோ ஒரு வெளிப்புற மருந்தின் உதவியோடு.

பேரிடி தான் மீனாட்சிக்கு.  இருப்பினும் பர்வதம் கூட இருப்பதால் அவளுக்கு அது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

பர்வதத்தின் மடி அவனுக்கு அத்தை மடியாயிற்று.

புதிது புதுதாய் அவனை கொஞ்ச வார்த்தைகள்.

மன்னி, மன்னி.. என்ன    பாருங்கோ.  இப்ப என்ன பார்த்து சிரிச்சான்.

அவளோடு விட்டாளா.  பள்ளிக்கூடம் விட்டு வரும் சுமதியிடம், உன் தம்பி என்னென்ன செய்யறான் தெரியுமா...அவளை அணைத்துக் கொண்டு கதை கதையாக கூறுவாள்.

இப்பதானேடா ஒண்ணுக்கு போன.  உன்ன என்ன பண்ணினா தேவலை.  உங்க அப்பாகிட்ட சொல்றேன் பாரு.

என்னென்னமோ பேசிக் கொண்டே இருக்கிறாள் அவனோடு.

சில நாட்களில் துரு துரு பார்வை அவனிடமிருந்து.  ஆனந்தத்திற்கு அளவில்லை.  தாலாட்டு பாடுகிறாள் அவன் கண்ணயர்ந்து தூங்கும் வரை. தூளியில் போட்டு, சிறிது தோளில் சாத்தி, சிறிது மடியில் கிடத்தி, சிறிது நேரம் மெத்தையில் போட்டு...ஏதோ உலகமே அவள் வசம் வந்து விட்டதைப் போல.

எல்லாவற்றையும் பக்கத்தில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி.

ஆமாம் பர்வதம், இன்னும் ரெண்டு மாசத்தில என் குழந்தைய என்கிட்ட கொடுத்துடுவியோன்னோ?

விளையாட்டாய் மீனாட்சி கேட்டது கூட அவளுக்கு அழுகையை கொடுத்தது.

விசும்ப ஆரம்பித்தாள்.  அது உங்க குழந்தை மன்னி.  நேக்கு என்ன உரிமை இருக்கு.  எனக்கு இந்த அளவு சந்தோஷம் கிடைக்கவாவது அனுமதிக்கறேளே, அதுவே போதும்.

பைத்தியம், விளையாட்டுக்கு சொன்னா, இப்படி அழறியே.  சுப்பிணி உன் புள்ள தான் டி.  நீயே வேணாலும் எடுத்துக்கோ.

கண்ணை துடைத்துக் கொண்டாள்.

நீ வாடா, உங்க அம்மா அசடு.  நீ பெரியவனானோன எங்காத்துலேயே இருக்கலாம்.

தூளியில் அவனை போட்டு லேசான ஆட்டத்துடன் தன்னை மறந்து மெல்லிய குரலில் 'நீல வண்ண கண்ணா வாடா, நீ ஒரு முத்தம் தாடா....'.  கண்ணயர்ந்தான் அவன்.

மன்னி, நான் கொஞ்சம் எங்காத்து வரைக்கும் போய்விட்டு வரட்டுமா?  இன்னிக்கு ராத்திரிக்கு மட்டும் அண்ணாவை பார்த்துக்க சொல்றேளா?

மீனாட்சிக்கு தெரியாதா என்ன?  அவள் இப்போது அழுவதற்கு தேடும் தோள் வைத்தாவின் தோள் மட்டும்தான் என்று.

சரி பர்வதம்.  நான் எப்படியோ பார்த்துக்கறேன்.  நான் விளையாட்டா சொன்னதை நெனச்சு கவலைப் படக்கூடாது, என்ன?

ட்ரைவர் இல்லை.  நானே கொண்டு விடறேன் என்றார் வேதராமன்.

தூளியை சற்று விலக்கி சுப்புணியை பார்த்து விட்டு காரில் ஏறினாள் பர்வதம்.

தொடரும்...

No comments:

Post a Comment