Friday, March 11, 2022

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில்

சோழநாடு தென்கரை தலங்கள்

122. திருப்பாம்புரம்

சிவஸ்தலம் பெயர்
திருப்பாம்புரம்
இறைவன் பெயர்
பாம்பு புரேஸ்வரர், பாம்புர நாதர், சேஷபுரீஸ்வரர்
இறைவி பெயர்
வண்டமர் பூங்குழலியம்மை
தேவாரப் பாடல்கள்
சம்பந்தர்
சீரணி திகழ்திரு மார்பில்

எப்படிப் போவது

மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி.தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மி. சென்றும் இத்தலத்தை அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு பாம்பு புரேஸ்வரர் திருக்கோயில்
திருபாம்புரம்
சுரைக்காயூர் அஞ்சல்
குடவாசல் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 612203
தொடர்புக்கு: 94439 43665 , 0435 - 246 9555

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

நாகராசன் (ஆதிசேஷன்) வழிபட்ட தலமாதலின், பாம்பு + புரம் = பாம்புரம் என்றாயிற்று.

ஆதிசேஷன் உலகைத் தாங்கும் சோர்வு நீங்கி நல்ல வலிமை பெற இறைவனருளை வேண்டி, உலகிற்கு வந்து, மகாசிவராத்தி நாளில் முதற் காலத்தில் குடந்தை நாகேஸ்வரரையும், இரண்டாங் காலத்தில் திருநாகேச்சுரம் நாகநாதரையும், மூன்றாங் காலத்தில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரரையும், நான்காம் காலத்தில் நாகூர் நாகேஸ்வரரையும் வழிபட்டு உடல் வளம் பெற்றான் என்பது தல வரலாறு.

திருப்பாம்பரம் ஒரு ராகு - கேது நிவர்த்தி ஸ்தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது ஸ்தலமகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது. மேலும் சிவராத்திரி அன்று இரவில் ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும். மேலும் ஆதிசேஷன், பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம், இந்திரன் சாபம் நீங்கிய தலம், கங்கை பாவம் தொலைந்த தலம், சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்ட தலம் இதுவாகும்.

ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 2ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 8ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

தல வரலாறு: கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருபாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார். அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருபாம்புரம் பாம்புர நாதரரையும், நானகாம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.

இவ்வாலயத்தின் இராஜகோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள பாம்பு புரேஸ்வரரை வழிபட்டால் எல்லா வகையான நாக தோஷங்கள் விலகி விடுகின்றன. மூலவர் பாம்புபுரேஸ்வரர் கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் ஒரு கையில் தாமரை மலரையும் மற்றொரு கையில் ருத்திராக்ஷ மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள். இக்கோவிலில் உள்ள சட்டநாதர் சந்நிதியும், மலையீஸ்வரர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும். திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து அருகில் இருக்கிறது. இத்தலத்து கோவிலின் பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்த்தால் திருவீழிமிழலை கோவில் விமானம் தெரியும் என்று கூறப்படுகிறது.

ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் கோவிலின் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறுகிறார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்பரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.

சிறப்புகள்

உரகபுரம், சேஷபுரி என்பன இதன் வேறு பெயர்களாம்.

நாகதோஷம் நீங்கவும், மகப்பேறு வாய்க்கவும், ராகு கேது போன்ற சர்ப்ப தோஷங்கள் விலகவும் இத்தலம் சிறந்த பிரார்த்தனையிடமாக விளங்குகிறது.

இத்தலத்தில் பாம்பு கடித்து இறப்பவர்கள் இல்லையாம். வீடுகளில் பாம்பு வந்தாலும் சாதாரணமாகப் போயிவிடுமாம் - யாரையும் கடிப்பதில்லையாம்.

இத்தலத்தில் ராகராஜனுக்கு மூல, உற்சவ விக்ரஹங்கள் உள்ளன.

பாம்பு வழிபட்ட தலமாதலின் மூலத்தானத்தில் எப்போதேனும் ஓரொரு காலங்களில் இன்றும் பாம்பினுடைய நடமாட்டம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி நாட்களில் மல்லிகை, தாழம்பூ வாசனை கோயிலுக்குள் கமகமவென வீசுமாம். அப்போது பாம்பு கோயிலுக்குள் எங்கேனும் ஓரிடத்தில் உலாவிக் கொண்டிருக்கும் என்பது பொருளாம்.

மகா சிவராத்திரியில் ஆதிசேஷன் இறைவனை வழிபட சிற்றம்பல விநாயகர் துணையுடன் ஏற்படுத்திய குளம், வடக்கு வீதியில் சிற்றம்பலக் குட்டை என்னும் பெயரில் உள்ளது.

இராசராசன், இராசேந்திரன், சுந்தர பாண்டியன், சரபோஜி மன்னன் முதலியோர் காலத்திய 15 கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.

கல்வெட்டுக்களில் இறைவன் "பாம்புரம் உடையார்" என்றும், விநாயகர் "ராஜராஜப் பிள்ளையார்" என்றும், இறைவி "மாமலையாட்டி" என்றும் குறிக்கப்பட்டுள்ளனர்.

சரபோஜி மன்னனின் பிரதிநிதி சுபேதரர் ரகுபண்டிதராயன் என்பவனால் வசந்த மண்டபமொன்று கட்டப்பட்டதாகத் தெரிகிறது

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா 21-ந்தேதி நடக்கிறது

   சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகுவும் -கேதுவும் ஒரே ரூபமாக ஈசனை இதயத்தில் வைத்து பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றார்கள் என்பது தலவரலாறு.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருப்பாம்புரம் கிராமத்தில் சேஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது. தென் காளஹஸ்தி என்று அழைக்கப்படும் இந்த கோவில் தேவார பாடல் பெற்ற தலமாகும். முன்னொரு காலத்தில் ஆதிசேஷன், தான் பெற்ற சாபத்தால் உடல் நலிவுற்று ஈசனிடம் வேண்டியபோது, ஈசன், ‘மகா சிவராத்திரி அன்று முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், 2-வது காலத்தில் திருநாகேஸ்வரம் திருநாகேஸ்வரரையும், 3-வது காலத்தில் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரரையும், 4-வது காலத்தில் நாகூர் நாகநாதரையும் வணங்கினால் சாபம் நீங்கும்’ என்று அருளினார்.

அதன்படி ஆதிசேஷன் இந்த 4 கோவில்களிலும் வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

 சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகுவும் -கேதுவும் ஒரே ரூபமாக ஈசனை இதயத்தில் வைத்து பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றார்கள் என்பது தலவரலாறு. இக்கோவிலில் அஷ்டநாகங்கள் மற்றும் அகலிகை, சுனிதன் போன்ற வடநாட்டு அரசர்களும் இறைவனை வழிபட்டதாக கூறப்படுகிறது.

வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 3.13 மணிக்கு ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி ஆவதையொட்டி திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு -கேது பெயர்ச்சி விழா நடக்கிறது.

இதையொட்டி ராகு- கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கின்றன. ராகு -கேது பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் ஆவர்.

ராகு-கேது பெயர்ச்சி விழாவில் வெளிநாடு மற்றும் வெளிமாநில பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு, குடிநீர், சுகாதாரம், கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கவியரசு, தக்கார் சீனிவாசன், மேலாளர் வள்ளிகந்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.







.

No comments:

Post a Comment