Thursday, March 31, 2022

தாம்பத்தியம்

 சிறுகதை

தாம்பத்தியம்

சாரதா காலை நேர பரபரப்பில் சமையலறையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தாள். காலை டிபனும்  மதிய உணவும்தனித்தனியாக செய்து கொண்டிருந்தாள்

சாரதா கொஞ்சம் இங்கே வாயேன் கண்ணாடி எங்கேயோ மறந்து வைத்துவிட்டேன் எடுத்துக்கொடு காலை செய்தித்தாள் படிக்காமல் என்னவோ போல இருக்கு கணவன் உரக்க குரல் கொடுத்தார்

செத்த இருங்கோ  இதோ வரேன். பக்கத்திலேயே இருக்கும் எழுந்து எடுக்க சோம்பல் முணங்கிக் கொண்டே கையை முந்தானையை தலைப்பில் துடைத்துக்கொண்டு இதோ இருக்கு பாருங்கோ பக்கத்திலேயே  இருக்கு

எழுந்து எடுக்க சோம்பல் டக்கென்று அவர் கையில் திணித்துவிட்டு உள்ளே சென்றாள்.

என்னமோ விதவிதமா சமைத்து கொடுக்கிற மாதிரி இல்ல அலட்டிக்கரே

ஒரு நாள் செஞ்சி பாருங்கோ தெரியும்

ஓஹோ என்ன வாய் நீளறது.

இதற்கு மேல் பேசினால் வீண் வாக்குவாதம் சில நேரங்களில் அவரின் கைரேகைகள் தன் கன்னத்தில் பழுத்துவிடும் எதற்கு என்று தன் சமையல் வேலையில் மும்முரமாக இருந்தாள்.

மகனுக்குப் பிடித்த பூரியும் கிழங்கும் ரெடி மருமகளுக்கு இட்லிக்கு தனியாக சாம்பார் பேரனுக்கும் பேத்திக்கும் தக்காளி சாதம் காலை டிபனுக்கு இட்லி தனியாக வேர்க்கடலை சட்னியும் செய்தாள். இது போதாதென்று கணவனுக்கு வாய்க்கு ருசியாக இட்லிக்கு பொடியும் நல்லெண்ணெயும் வேண்டும்.

கடிகாரம் முட்களை விட இவள் வேகவேகமாக ஓடி ஓடி செய்து கொண்டிருந்தாள் அம்மா ரெடியா ஒவ்வொருவராக டைனிங் டேபிளில் வந்து அமர எல்லாவற்றையும் எடுத்துவைத்து  பரிமாற ஆரம்பித்தாள்

அனைவரும் ரசித்து ருசித்து சாப்பிட கணவன் எதையோ குறை சொல்லிக்கொண்டு சாப்பிட எல்லாம் சரியா இருக்கு நீங்க மட்டும் எப்பவுமே குறை சொல்லாமல் சாப்பிட மாட்டீங்க இன்று சொன்ன சாரதாவை என்ன திமிரு அதிகம் ஆயிடுத்தா தட்டை தூக்கி எறிந்தார் அது கீழே உருண்டு ஓடியது யாரும் எதுவும் சொல்லவில்லை சாரதாவுக்கு கண்களில் கண்ணீர் முட்டியது அதை துடைத்துக்கொண்டே கீழே சிந்தியதை வழித்துக்கொண்டு தட்டை  எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

பேரன் மது தாத்தா பாட்டி பாவம் இல்ல ஏன் திட்டுற என்று சொல்லிக் கொண்டே  பாட்டியிடம் சென்று ஏன் பாட்டி நீ கோபப்பட மாட்டியா அம்மா சும்மா தானே இருக்கா அம்மாவை உனக்கு ஹெல்ப் பண்ண சொல்லக்கூடாதா என்றான் மழலை மொழியில் 

அம்மா வேலைக்கு போறாடா நான் ஆத்துல சும்மா தானே இருக்கேன் அதான். தாத்தாவுக்கு எப்பவுமே ருசி மாறாமல் இருக்கணும் அப்படியே பழகிட்டா கண்ணா நீ போ ஸ்கூல் வேன் வந்துடும் என்று அவனை சமாளித்து அனுப்பினாள்

இது இன்று நேற்றல்ல திருமணம் முடிந்து இந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் இப்படித்தான் இது பழகிவிட்டது . சாரதாவுக்கு எப்போதும் மறுத்துப் பேசியது இல்லை மாமியார் மட்டும் அங்கலாய்த்துக் கொள்வார்.

இருந்தாலும் மருமகள் பேரன் பேத்திகள் என்றாகி விட்ட போதிலும் இப்படி அவர்கள் முன்னிலையில் அவமானப்படுவது போல் நடந்து கொள்வது மனதை வருத்தியது என்ன செய்ய. எல்லோரும் கிளம்பிவிட தனியாக புலம்பிக் கொண்டிருந்தால் சாரதா.

ஏனோ உடம்பு படுத்தியது படுக்கையைவிட்டு எழுந்திருக்க மனமே இல்லை ரொம்ப அசதியாக இருந்தது. நேரத்தைப் பார்த்தாள் 7:00 மேல் ஆகியிருந்தது. மெல்ல எழுந்து சமையல் அறைக்குள் சென்றாள் போட்டது போட்டபடி இருந்தது தலை சுற்றியது எல்லாவற்றையும் சரி செய்வதற்குள் மகன் அம்மா இன்னுமா டிபன் செய்யலை இன்னைக்கு அவசரமா மீட்டிங் இருக்கு   சீக்கிரமா  கிளம்பணும் நேத்து சொல்லியிருந்தேன் இவ்வளவு நிதானமா எழுந்து வரையே உனக்கு பொறுப்பு இல்லையா அப்பா திட்டுவதில் தவறே இல்லை போலிருக்கு எரிச்சலுடன் பேசிக்கொண்டிருந்த மகனே சோபாவிலிருந்து முறைத்து பார்த்தார் கணவர் சர்குணம்

என்னங்க இன்னுமா டிபன் முடியல சமையலும் ஆரம்பிக்கல போல இருக்கு சீக்கிரம் கெளம்பனும்னு நேற்று இரவே அம்மாகிட்ட சொல்லி இருந்தேன் ஏன் இன்று பார்த்து இவ்வளவு நேரமாகிறது

சரிங்க வழியில் வேணா பார்த்துக்கொள்ளலாம் சீக்கிரம் வாங்க என்று கணவனை துரிதப்படுத்தும் மருமகளை ஆக்ரோஷமாக பார்த்தார் மாமனார் சர்குணம்

ஏய் என்னடா ஆளாளுக்கு அவளை மிரட்ட இருங்க என்னமோ நீங்க வெச்ச ஆள் காரி மாதிரி இல்லை இருக்கு அவ இந்த வீட்டு வேலைக்காரி இல்லை பெற்று வளர்த்த தாய் அது ஞாபகம் இருக்கட்டும் ஏன் சீக்கிரம் கிளம்பணும் என்றால் அம்மா எழுந்திருக்கவில்லை என்று தெரிந்து உன் மனைவியை செய்ய சொல்லக்கூடாதா. அவளை மிரட்டர என்னைக் காச்சும் அவ இப்படி இருந்து பார்த்து இருக்கீங்களா உடம்பு சோர்வாக இருக்கும் போல அவளும் மனுஷி தானே என்னமோ மிரட்டுறாங்க அவள் என் மனைவி அப்புறம்தான் உங்களுக்கு அம்மா ஞாபகம் இருக்கட்டும் மிரட்ட வேலையெல்லாம் வேண்டாம்.

இஷ்டம் இருந்தா இங்கே இருங்க இல்லை தனியா போங்க யாரும் வேணாம்னு சொல்லல ஒரு நாள் உன் பொண்டாட்டி அவளுக்கு ஒத்தாசையா இருக்காளா நினைச்சுப் பாரு லீவு நாளில் கூட எங்கேயாவது சுத்திட்டு வர்ரீங்க. வெளியில பாத்துக்கலாம் போ அதுக்கு எதுக்கு வீடு குடும்பம்னு.

சாரதாவிற்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை தன் கணவரா  இப்படி என்று ஒரு நிமிடம் சந்தேகமாகவே இருந்தது மகனுக்கும் மகளுக்கு மருமகளுக்கும் கூடத்தான். இதுதான் தாம்பத்தியத்தில் இலக்கணமோ.

கணவன் பேசியதில் இருந்த பாசத்தை முதன்முறையாக உணர்ந்த சாரதா கண்ணீருடன் கணவரை பார்க்க அதில் ஆயிரம் அர்த்தங்கள் பதிந்திருந்தது

சாரதா உன்னால முடியலனா  என்ன கொஞ்சம் வந்து உட்காரு அப்புறம் பாத்துக்கலாம் அவன் வெளியே பார்த்துக் கிரானாம். நீ எதுக்கு அல்லாடரே. இது உன் வீடு என்னை தவிர உன்னை யாரும் அதிகாரம் பண்ண முடியாது கவலைப்படாதே நாளைக்கு உனக்கு கூட மாட ஒத்தாசை பண்ண ஒரு வேலைக்காரியை போட்டு விடுவேன் என்றார் அவளை பக்கத்தில் உட்கார வைத்து தோலில்  சாய்த்தபடி அணைத்துக்கொண்டார் இதுதான் தாம்பத்திய வாழ்க்கையின் அர்த்தமோ


முற்றும்

இட்லி/இட்டலி

 #உலகஇட்லிதினம்

இன்று உலக இட்லி/இட்டலி தினம்.  எப்போது தோன்றியது என்று தெரியாத வகையில் தோன்றிய பழமைப் பண்டம் இது.  நொதிக்க வைத்து (fermentation) ஆவியில் வேக வைப்பதால் சத்துக்கள் நிறைந்த எளிதில் செரிக்கக் கூடிய பண்டம் இது.

இட்டு அவிப்பதால் இட்டலி என்று பெயர் வந்தது என்று கூறுவார்கள். தென்னிந்தியாவில் பிரபலமான உணவு.  தமிழ்நாட்டில் தோன்றியது என்றாலும், கர்நாடகாவிலும் இதற்கு உரிமை கொண்டாடுவார்கள்.  

அரிசியும் உழுந்தும் ஊற வைத்து அரைத்து செய்யப்பட்டது என்றாலும், அதன் அளவு வேறுபாடுகள், கூட சேர்க்கும் வெந்தயம், அவல், ஆமணக்கு விதை எல்லாம் இதன் மென்மையை மேம்படுத்த உதவுகிறது.  நடிகை பெயராலும் இது பிரபலமாகி உள்ளது.

மிளகாய் பொடி, தேங்காய், தக்காளி, புதினா சட்டினிகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும் என்றாலும், சாம்பாரும் இட்லியும் பிரிக்க முடியாதவை.

புளிப்பு குறைவாக, கொஞ்சம் இனிப்புச் சுவையுடன் பருப்புகள் (துவரம்பருப்பு + பாசிப்பருப்பு) நன்றாக வெந்து கடையப்பட்ட சாம்பாரே இதற்கு தோதானது.

இதற்கு புளி குறைவாகவும்,  தக்காளி அதிகமாகவும் வேண்டும்.   வெங்காயம் உருத் தெரியாமல் மசித்து இருக்க வேண்டும். கொஞ்சம் வெல்லம் கூட. 

ஒரு நீள்வாட்டமான கப்பில் இரண்டே இரண்டு இட்லிகளைப் போட்டு அதன் தலையில் சுட சுட சாம்பாரை ஊற்ற வேண்டும், கொஞ்சம் நெய் வேண்டுமானால், அதுவும்.  இட்லிகள் மூழ்கும் நிலையில்,  (அதாவது கொஞ்சம் வெள்ளையாக முதுகு மட்டும் தெரியும்  படி) ஸ்பூனால் அதை சிறிது சிறிதாக வெட்ட வேண்டும் (the surface area drastically increases to absorb the sambaar very fast) இப்போது சாம்பார் கிட்டத்தட்ட காணாமல் போயிருக்கும்.  தாராளமாக மேலும் ஒரு கரண்டி சாம்பாரை topup செய்து, ஒரு ஒரு துண்டாக ஸ்பூன் அல்லது fork ஆல் எடுத்து நீங்கள் சுவைக்கலாம்.

  இட்லி சாம்பாரில் மூழ்கி இருக்க வேண்டும்,  அது  முக்கியம்.   கூடவே மெல்லிய வாத்திய இசையும் இருந்தால்...

கிட்டத்தட்ட ஸ்வர்கம்  தான்




தீர்க சுமங்கலி பவா

 தீர்க சுமங்கலி பவா என்றல் என்ன?

தீர்க சுமங்கலி பவா ...! 

என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.

திருமணத்தில் ஒன்று,
60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,
70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,
80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,
96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று!.

இவைகள் பற்றி ஒரு சிறு விளக்கம் :-)

ஷஷ்டியப்த பூர்த்தி, 
பீம ரத சாந்தி, 
சதாபிஷேகம், 
கனகாபிஷேகம் 

போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. 

பெரும் பாக்கியமும், பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது. 

இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன. 

சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன. 

உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.

நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும். 

பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12-ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. 

இந்த 360 பாகைகளையும் கடந்து சென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு:

சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், 
சந்திரனுக்கு ஒரு மாதமும்,
புதனுக்கு ஒரு வருடமும்,
வியாழனுக்கு 12 வருடங்களும்,
வெள்ளிக்கு ஒரு வருடமும்,
சனி பகவானுக்கு 30 வருடங்களும், 
ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், 
கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன. 

இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும். 

மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும். 

ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.

பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும். 

அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது. 

பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும். 

அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன? 

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம். 

இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...✨

அக்னி,
சூரியன்,
சந்திரன்,
வாயு,
வருணன்,
அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,
அமிர்த கடேஸ்வரர்,
நவநாயகர்கள்...

சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம். 

பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு 
அக்னி பகவானும்,
சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு 
சூரிய பகவானும்,
ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு 
சந்திர பகவானும்,
பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு 
வாயு பகவானும்..
அதிபதிகள் ஆவார்கள். 

தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும். 

தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும். 

தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். 

காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும். 

70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும். 

ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.

அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.

இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும் 

இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது...!!!

தீர்க சுமங்கலி பவா ...! 

என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.

நம் முன்னோர்கள் தெரிவித்த நல்ல விஷயத்தை நாம் பின்பற்ற வேண்டும். இனி மணமக்களை தீர்க்க சுமங்கலி பவ என்று வாழ்த்துவோம்...!!!

வாழ்க வளமுடன்

ஈஸி சேர் - 28

 #Easychair_28

எழுதியது பாஸ்கர் சத்யா 

அத்யாயம் : 28 ...  ஈஸி சேர்.

கல்யாணத்திற்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக விடை பெற்றுச் சென்றார்கள்.

நலங்கு முடிந்ததும் பட்டாமணியார் குடும்பம்.  கட்டுசாதக் கூடை வைபவம் முடிந்ததும் கோபாலன் குடும்பம்.  வேதராமன் குடும்பம்.  பூவனூரிலிருந்து வந்தவர்கள், பெண் வீட்டு உறவுகள் என ஒவ்வொருவரும்.

எல்லோரும் திருமண வைபவத்தை நினைவு கூர்ந்தார்கள், ஸ்லாகித்து விடை பெற்றார்கள்.

சிலர் கோபாலனை, சிலர் அப்புவை, சிலர் கும்பகோணம் வேதபாட சாலையிலிருந்து வந்தவர்களை, சிலர் ராஜம் அத்தையை, சிலர் சிவானந்த சித்தப்பாவை, சிலர் மாப்பிள்ளை அழைப்பை, சிலர் காஞ்சியிலிருந்து வந்து குரு ப்ரஸாதத்தை, சிலர் கீதாவை, எல்லோரும் வேதராமன் தம்பதியினரை.  ஒவ்வொருவரும் இந்த வைபவத்தில் சந்தோஷித்த மற்ற நினைவுகளை.  மறக்கமுடியாத ஆனந்தத்தை நினைவுகளை சுமந்து சென்றார்கள்.

தங்கள் சக்திக்கேற்ப அனைவரையும் நினைவுப் பொருட்களோடு வழி அனுப்பி வைத்தனர் விசு வாத்யார் தம்பதியினர் மற்றும் நடராஜ ஐயரும், வைத்தா தம்பதியினரும்.

ஞாயிறு அன்று விசு வாத்யார், நாராயணி, ராஜம் அத்தை, நடராஜ ஐயர், அவர்தம் சகோதரர்கள், வைத்தா தம்பதியினரை அழைத்துக் கொண்டு காஞ்சீபுரம் சென்று பெரியவாளிடம் ஆசி பெற்றுக்கொண்டு பூவனூர் செல்ல ஆயத்தமானார்கள்.

அப்புவுக்கு மரியாதை, நாயனக்காராளுக்கு மரியாதை எல்லாம் மனநிறைவுடன் தந்து மகிழ்ந்தனர்.

எப்பேற்பட்ட வைபவம்.  நினைத்து நினைத்து நமக்கே ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடும்போது, வைதீக பறவைகளுக்கு எப்படி இருந்திருக்கும்.

திட்டமிட்டபடியே எல்லாம் இறைவன் அருளால், குருவின் பரிபூரண கடாக்ஷத்தால், நெஞ்சிலிருந்து நீங்கா உள்ளங்களின் ஒத்துழைப்பால், நடைபெற்ற இந்த திருக்கல்யாணத்தை ஸ்லாகித்து எழுதும் பாக்கியம் நான் பெற்றேன் என்பதே எனக்கு பெருமை.

கோபாலனிடம் திங்கள் காலை சுமார் ஆறு மணிக்கு பூவனூருக்கு மாட்டுப்பொண் பர்வதம் வரும் விவரங்கள் அவன் விடை பெறும்போது சொல்லப் பட்டன.

எல்லோரும் நேரில் சென்று காஞ்சி மாமுனிவரிடம் பரிபூரண ஆசிகளை பெற்றுக் கொண்டு தாம்பரம் ரயில் நிலையம் அடைந்து கும்பகோணம் செல்லும் ரயிலில் ஏறினார்கள்.

பிரயாணம் முழுவதும் பர்வதம் பேச்சுதான், கல்யாண பேச்சுதான்.  இதை சாப்பிடு, அதை சாப்பிடு, பாட்டு ஒண்ணு பாடேன், அப்பாவைப் பத்தி கவலைப் படாதே, அம்மாயில்லையேன்னு வருத்தப் படாதே, நாங்க இருக்கோம், உனக்கு என்ன பிடிக்கும், வைத்தாவுக்கு அது பிடிக்கும், இது பிடிக்கும், பகவானுக்குத்தான் நன்றி சொல்லணும், எப்பேற்பட்ட  மாட்டுப்பொண், பூவனூரில் அவா இருக்கா, இவா இருக்கா எல்லோரும் நல்லவா, .... பாசத்தின் வார்த்தைகள் தேனாக   பெருக கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.

தாயில்லாமல் வளர்ந்த பர்வதத்திற்கு நாராயணியின் ஒவ்வொரு வார்த்தையும் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருந்தன.

கும்பகோணத்தில் விடியற்காலை இறங்கி பஸ் பிடித்து .... இதோ பூவனூர்  வந்தது.

பர்வதம் தன் புகுந்த வீட்டு ஊர் மண்ணை பாதம் பதித்து மகிழ்ந்தாள்.

அதுவரை ஒவ்வொரு பேரூந்தாக ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பத்து பன்னிரெண்டு அக்ரஹாரப் பூக்கள் ஆரவாரத்துடன் அரவணைத்து வரவேற்றன எல்லோரையும்.

பட்டாமணியரிடம் இருந்த வில்லு வண்டியை பாலத்தடிக்கு வரவழைத்திருந்தான் கோபாலன்.  அதில் பயணப் பொருட்களையும் விசு வாத்தியாரையும், நாராயணியையும், நடராஜ ஐயரையும் ஏற்றிவிட்டு இளைஞர் பட்டாளம் புதுமணத் தம்பதியினரோடு நடக்க ஆரம்பித்தனர்.

தொடரும்.....

ஈஸி சேர் - 27

 #Easychair_27

அத்யாயம் : 27 ... ஈஸி சேர்

சப்தபதி முடிந்து, காலை முதல் ஹோம புகையில் இருந்த, விசு வாத்யார் சற்று தன்னை ஆஸ்வாசப் படுத்திக் கொள்ள வாசலுக்கு வந்தார்.

வாசலில் ஒரு கார்.  காரிலிருந்து இறங்கிய நபரை ஆச்சர்யத்துடன் வரவேற்றார்.  வந்தது வேறு யாருமில்லை.  காஞ்சி மடத்திலிருந்து கண்ணனும் மற்றும் இரண்டு மடத்து வேத விற்பன்னர்களும்.

வழியில் கொஞ்சம் ட்ராஃபிக்.  கொஞ்சம் லேட்டாயிடுத்து.  எல்லாம் நல்ல படியா நடந்ததோண்ணோ.  பெரியவா எங்களை அனுப்பிச்சா.

உள்ளே வந்தவுடன், ஆசீர்வாத மந்திரங்களை கணீரென்று ஆரம்பித்து, இருவருக்கும் மங்கல அட்சதை தூவி, கொண்டு வந்த வேஷ்டி, அங்கவஸ்திரம், புடவை, மஞ்சள், குங்குமம், பழம், கற்கண்டு மற்றும் 501ரூபாய் ஸ்வர்ணபுஷ்பத்தோடு அளி்த்தனர்.  அவர்களும் நமஸ்கரித்து வாங்கிக் கொண்டனர்.

பெரியவாளுக்குத்தான் வைதீக குடும்பளிடத்தில் எத்தனை ப்ரேமை.  குடும்பத்தினரோடு அத்தனை பேரும் சிலிர்த்து நின்றனர்.

மடி சமையல் மூவருக்கும் விசு வாத்யாரும் நடராஜ ஐயரும் தங்கள் கையாலேயே பரிமாறி மகிழ்ந்தனர்.  பிறகு விடை பெற்றனர், அவர்களின் இதயம் கனிந்த நன்றிகளோடு.

(சாப்பாட்டு மெனு சொல்ல வில்லை என்றால் முகநூல் நண்பர்கள் கோபிக்கிறார்கள்.  என்ன செய்வது, கல்யாணத்தில் எல்லோரையும் அனுசரித்து போக வேண்டியிருக்கே.  அதுவும் கட்டு கட்டாக ஆசீர்வாத பணங்களை வேறு வைத்திருக்கிறார்களே, விட்டுவிட முடியுமா?)

அப்புவின் முஹூர்த்த சாப்பாடு அட்டகாசம் போங்கள்.

பால் பாயசம், தயிர் பச்சடி, ப்ரூட் மிக்ஸ் பச்சடி, பருப்புசிலி, உருளைக் கிழங்கு கறி, அவரைக்காய் கறி, அவியல், வெத்தக்குழம்பு, கத்திரிக்காய் சாம்பார், முருங்கைக்காய் மோர்க்குழம்பு, பத்தமடை அப்பளம், ஆவக்காய் ஊறுகாய், வடை, கொத்தமல்லி ரசம், கெட்டி மோர், மைசூர்ப்பா ஸ்வீட், பூந்தி....ஆத்மார்த்தமாக செய்திருந்தான்.  ஒரு சிலர் முருங்கக்காய் சாம்பார் எதிர்பார்த்தாலும், மடி சமையலையும் உத்தேசித்து மோர்க்குழம்பில் சேர்த்திருந்தான் சாமர்த்தியமாக.

ஆசீர்வாதம் பண்றவா வாங்கோ, என்ற சபைக் குரல்.  தாராளமாக தங்கள் சக்திகளுக்கு மீறியே உறவினர்களும் ஸ்வர்ண புஷ்பங்களை அள்ளிக் கொடுத்தார்கள் தம்பதியினருக்கு.  ஒவ்வொரு பெரியவர்களையும் தனித்தனியாக நமஸ்கரித்தனர் இருவரும்.

வேதராமன் குடும்பத்தினரின் ஆசீர்வாத்த்திற்கு ஸ்பெஷல் மந்திரங்கள்.  சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.  இந்த ஆலமரத்தின் தெம்பில்தானே இந்த வைதீக வைபவம்!

பெரியவா அட்சதையையே கையில் எடுத்தனர் வேதராமன் தம்பதியினர், ஆசீர்வதிக்க.  பிறகு வெற்றிலை பாக்கு பழத்தட்டோடு தலைக்கு 5000 ரூபாய் பதினாயிரம் கட்டி வராஹனாக கொடுத்தனர் இருவரும்.  கண்ணிலே நீர் தளும்ப வைத்தா நன்றி கூறினான் இருவருக்கும், தம்பதியினரின் நமஸ்காரத்தோடு.

மீனாட்சி நலங்குக்காக இங்கு இருப்பாள், நான் மாத்திரம் சென்று இரவு வருகிறேன் என்றார்.

கிட்டத்தட்ட உறவினர்களை தவிர எல்லோரும் ஒவ்வொருவராக விடை பெற்றனர்.

சாப்பாடு முடித்ததும் அனைவருக்கும் அசதி.  அதிகாலை எழுந்தது, பரபரப்பாய் இருந்தது, எல்லாம் சேர்ந்து, கிடைக்கும் இடங்களில் எல்லாம் நித்திரை கண்டனர்.

மாலை 5 மணிக்கு நலங்குக்கு சம்பிரதாய அழைப்புக்கள் முடிந்து பட்டுப்பாயும் ஜமக்காளமும் விரிக்கப் பட்டன.

பிறகு விளையாடல் சாமான்கள், அப்பளங்கள், அரிசி, பருப்பு, தேங்காய் பந்து, சந்தனம், குங்குமம், சோப்பு, சீப்பு, கண்ணாடி, பூப் பந்துகள்....எல்லாம் தயார்.

வைத்தா பக்கத் தலைவி ராஜம் அத்தை, பர்வதத்தின் பக்கத் தலைவி மீனாட்சி, உப தலைவி கீதா.

ஒவ்வொரு விளையாட்டும் பெருத்த ஆரவாரங்களோடு.   சிலவற்றில் வைத்தா விட்டுக் கொடுத்தான், சிலவற்றில் பர்வதம் நாணத்தால் தோற்றுப் போனாள்.  பார்த்தவர்களுக்கு பேரானந்தம்.  கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் எல்லையே இல்லை.

காலையில் கையைப் பிடித்தான் வைத்தா.  கெட்டியாக பிடி என்று வாத்யார் சொன்னதின் மற்றொரு அர்த்தம் ஆண்மைக் கரத்தை அவளுக்கு உணர்த்து என்பது தானே.

தாம்பத்யத்திற்கு முன் மற்றைய ஸ்பரிசங்கள், நிதானமாக, நாசூக்காக.  பெண்மையை ஆண்மையும், ஆண்மையை பெண்மையையும் ஸ்பரிசங்கள் மூலம் ஒருவருக் கொருவர் உணரத்தானே இந்த நலங்கு வைபவம்.

ஹாரத்தியோடு இனிதே நிறைவு பெற்றது நலங்கு.

ஸ்பரிசம் ஸ்வாசமாயிற்று.  ஸ்வாசம் சுகந்தமாயிற்று.  சுகந்தம் சுகத்தை கொடுத்தது தாம்பத்யத்தில்.  தாம்பத்யம் வாழ்க்கையை கொடுக்கிறது.  வாழ்க்கை எதார்த்தத்தில் நிறுத்துகிறது தம்பதியினரை.

மறுநாள் கட்டுசாதக் கூடையும் முடிந்தது.

தொடரும்....

(பி்கு:  பாஸ்கர் சத்யா ஓதிவிட்ட பண விவரங்களில் அவன் முகநூல் நண்பர்கள் எப்படி வாரி வழங்கியிருக்கிறார்கள் என்று பார்த்தான்.  அவர்கள் வாயாலும் சொல்லிவிட்டால் கணக்கை சரி பார்த்துவிடுவான்.  என்ன சொல்றீங்களா?)

ஈஸி சேர் - 26

 #Easychair_26

அத்யாயம் : 26 ... ஈஸி சேர்

வைத்யநாதன் என்ற மணமகனுக்கும் பர்வதவர்த்தினி என்ற மணப்பெண்ணுக்கும் கன்யாலக்னத்தில் காலை சுமார் 9 மணிக்கு திருமணம்.

காலை மணி நான்கு அன்று.  வில்லிவாக்கம் திருமண இல்லம் பரபரப்பை துவங்கிக் கொண்டிருந்தது.  சிலர் ஸ்நானம், சிலர் காப்பி, சிலர் தூக்கம், சிலர் உடையலங்காரம், சிலர் முற்றிலும் தயாராகி அங்குமிங்கும்.

கோபாலன் குளித்து விட்டு வேட்டி ஜிப்பாவோடு சிவப் பழமாய்.  வைத்தா குளித்துக் கொண்டிருந்தான்.  அப்புவும் இதர சமையல்காரர்களும்  பின்னால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த கோட்டை அடுப்புகளில் படு பிஸி.  சுடுநீர் கொதித்துக் கொண்டிருந்தது.  ஒவ்வொருவராக பக்கெட்டுகளில் எடுத்துக் கொண்டு குளியலறை சென்று கொண்டிருந்தார்கள்.

சற்று தாமதம் நாத கோஷ்டி வரவு அன்று.  கோபாலன் படு டென்ஷன்.  அவர்கள் வரும் திசையையே ஸ்தம்பித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது பட பட என்ற ஆட்டோக்களின் சப்தங்கங்கள்.  ஐந்து ஆட்டோக்கள்.  இறங்கியவர்கள் ஒரு பதினாறு பேர்கள் இருப்பார்கள்.  கட்டு கட்டாய் குடுமிகள் வைத்துக் கொண்டு.  ஆச்சர்யமாக பார்த்தான் கோபாலன்.  இத்தனை பேரா வைதீகத்திற்கு, வித்தியாசமாக இருந்தது.

முதலில் இறங்கியவர் தொந்தியும் தொப்பையுமாக கையில் வாக்கிங் ஸ்டிக்.  'எல்லாரும் இறங்கியாச்சா?' கேள்விதான் கேட்டாரே தவிர பதிலுக்கு காத்திருக்கவில்லை.

வரவேற்றான், வாங்கோ வாங்கோ, வாங்கோ.

வைத்தா இல்ல?

குளிச்சிண்டு இருக்கான்.  நீங்க உள்ள வாங்கோ.  வந்தார்கள்.

அதற்குள் ரெடியான வைத்தா இவர்களைப் பார்த்தவுடன் பரவசமானான்.  'சார், சார், வாங்கோ வாங்கோ.  எல்லாரும் வாங்கோ.

ஒண்ணும் புரியவில்லை கோபாலனுக்கு.  பிறகு வைத்தா அறிமுகம் செய்து வைத்தான்.

இவாள்லாம் நான் படிச்ச கும்பகோணம் வேதபாடசாலை வாத்யார்களும், என்னோட படிச்ச வாளும்.

இதையெல்லாம் சற்று தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தான் அப்பு.

வந்தவர்கள் தமக்கு கிடைத்த மூலையில் பைகளை வைத்து விட்டு குளிக்க தயாரானார்கள்.

சித்த இங்க வரேளாண்ணா, அப்பு கோபாலை கூப்பிட்டான்.

அண்ணா, இவாளெல்லாம் பார்த்தா வேதக்காராளா தெரியறது.  30 மடி சமையல்தான் சொல்லியிருக்கா.  இன்னும் எத்தனை பேர் இப்படி வருவாள்னு தெரியாது.  ஒரே யோசனையா இருக்குண்ணா.

சாமான்கள் வாங்கணுமா, தேவைப் படுமா?

அது கூட சமாளிக்கலாம்.  மடி சமையலுக்கு ஒரு மாமி தான் இருக்கா, இன்னும் ரெண்டு பேர் வேணும்ணா.

கவலை இருவர் முகத்திலும்.  வைத்தாவை கவலைப் படுத்த விரும்பவில்லை கோபால்.

அங்கு அவள் நாத்தநாரோடு பேசிக் கொண்டிருந்த நாராயணியிடம் விஷயத்தை கோபாலன் சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த ராஜம் உடனே 'நான் எட்டு ஊருக்கு சமைப்பேன், கவலையை விடுங்கோ.

கல்யாணத்தை ஆசையா பார்க்க பட்டுப் புடவையோடு ரெடியா இருக்க நீ.  வேற ஏதாவது யோசிக்கலாம்.  ஏண்டா, அவாத்து பக்கம் யாராவது இருக்காளான்னு கேளேன்.

அதெல்லாம் வேண்டாம் மன்னி.  அமையம் சந்தர்ப்பத்துக்கு உதவரதுதான் பெரிசு.  அப்பைக்கப்ப கல்யாணத்தை பார்த்துண்டா போச்சு.

என்ன ஒரு பரந்த உள்ளம்.  பஜகோவிந்தத்தில் ஒரு ஸ்லோகம் வரும் 'நித்சங்கத்வே ஸத்சங்கத்வம்...'. எவ்வளவு பெரிய சத்ஸங்கத்தை வைத்தா வெச்சிருக்கான்.

கட்டிய பட்டுப் புடவையை கழற்றிவிட்டு, ஒரு சொம்பு தலையில் மீண்டும் தண்ணீர் விட்டுக் கொண்டு சாதாரண புடவைக்கு மாறினாள் ராஜம்.

தற்செயலாக இது காதில் விழ பர்வதத்தின் சித்தப்பா சிவானந்தம் தானும் அவர் ஊர்கோவில் மடப்பள்ளியில் வேலை செய்வதாகவும் சொல்லி தானும் உதவ முன்வந்தார்.

அப்புவிடம் என்னென்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருவரும் களம் இறங்கினார்கள்.

இதற்கிடையில் சந்தடி சாக்கில் பூனைபோல் வந்த நாத கோஷ்டியின் ஒலியும் கேட்க ஆரம்பித்தது.

கோபாலன் நிம்மதி அடைந்தான்.

எங்கு திரும்பினாலும் பஞ்சபாத்ர உத்தரிணியோடு சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தார்கள் பலர்.  எங்கு திரும்பினாலும் வைதீகப் பறவைகள் பஞ்சகச்சங்களோடும் மடிசார் புடவைகளோடும்.

வேதராமன் குடும்பத்தினரும் டாண் என்று ஆஜர்.

மாப்பிள்ளை வீட்டாருக்கு பெண் வீட்டாரின் பிரத்யேக சம்பிரதாய உபசார வரவேற்புக்களும் இனிதே முடிந்தது.

இனி என்ன, காசியாத்திரை, மாலை மாற்றுதல், ஊஞ்சல் பிறகு மணமேடை அமர்தல், இத்யாதி இத்யாதிகள்.

நடராஜ ஐயருக்கு பாரியாள் இல்லாததால் அவர் அண்ணா மன்னியே கன்னிகாதானம் செய்வர்.  இரு நாட்களாக அவர்களே நடத்திக் கொண்டு வந்தனர்.  சற்று வருத்தம் தான் செய்து கொடுக்க முடியவில்லையே என்று அவருக்கு. ஆனாலும் எதார்த்தத்திற்கு மாறித்தானே ஆகவேண்டும்.  இது ஏற்கனவே அவர் அறிந்ததுதானே.

காசி யாத்திரை முடிந்து மாலை மாற்றும் வைபவும் முடிந்து தற்போது ஊஞ்சலில் அமர்த்தப் பட்டனர் இருவரும்.

இடைவெளியில்லா அந்த ஸ்வாச ஸ்பரிசம் இனம் புரியா ஆனந்தத்தை கொடுத்துக் கொண்டிருந்தது இருவருக்கும்.

ஊஞ்சலின் இதமான ஆட்டம் மெய்மறக்கச் செய்தது இருவரையும்.

இருப்பு கொள்ளாது என்ன நடக்கிறது என்று வாஞ்சையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் ராஜம் அத்தை.  அவள் நிலைமையை புரிந்து கொண்டு, சிவானந்த சித்தப்பா, நீங்க வேணும்னா ஊஞ்சலை பார்த்துட்டு வாங்கோ, நான் கொஞ்சம் சமாளிக்கறேன். அப்படியே செய்தாள்.

தழுதழுத்த குரலில் வயதில் மூத்த பெண்டிர் கண்ணூஞ்சல் பாட்டை ஆரம்பிக்க இளசுகள் கணீர் குரலில் சேர்ந்து பாட, இருவருக்கும் ரம்மியத்தை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தது.  ஆச்சு, பச்சபுடி சுத்தியாச்சு.  எல்லா திசைகளில் பறந்த திருஷ்டி பந்துகள் பதார்த்தத்தில்.  ஹாரத்தியம் முடிந்தது.

குளத்து மணி மந்திரம் சொல்லி இருவர் கைகளையும் இணைத்தார்.  என்ன ஒரு ஆனந்த மின்சார பாய்ச்சல்.  முதல் ஸ்பரிசம், முகத்தில் ப்ரஹாசம்.

மெல்ல மெல்ல அடியெடுத்து இருவரும் மணமேடைக்கு வந்தனர்.

வேதபாட சாலை வாத்யார்களும் வைதீகத்தில் கலந்து கொள்ள மந்திர ஒலிகள் விண்ணை பிளக்கத் துவங்கின.

வாத்யார்கள் ஒரு சிலரே டிஃபன் அருந்தினர்.  மீதிப் பேர் கோதுமைக் கஞ்சி அல்லது பால் சாப்பிட்டார்கள்.

எல்லோரும் இதர வைபவ நிகழ்ச்சிகளுக்கு முன் சிற்றுண்டியை சுவைத்தார்கள்.  இட்டிலி, பொங்கல், வடை, தேங்காய் சேவை, சிறிதளவு சேமியா அல்வா.

ஒவ்வொரு வைதீக தர்மங்களும் சம்பிரதாயங்களும் கடைப்பிடிக்கப் பட்டு வந்தன.

இதோ மாங்கல்ய தாரணம்.  வேதராமன் கொடுத்த கூரைப் புடவையை உடுத்திக் கொண்டு மெல்ல மெல்ல அடியெடுத்து மணமேடை வந்தாள்.  சிறிது மந்திரங்களுக்குப் பிறகு பெரியப்பாவின் மடியில் அமர்ந்தாள்.  வேதராமன் கொடுத்த மாங்கல்யம் பிரகாசித்தது.  மந்திரங்கள் தொடர எதிரே வைத்தா சபையோரிடம் மாங்கல்யத்தை காண்பித்து விட்டு பர்வதத்தின் கழுத்தில் ஒரு முடிச்சோடு கட்டினான்.  மீதி இரண்டு நாத்தனார் முடிச்சுகளை கோபாலன் மனைவி நிறைவேற்றினாள்.

மங்கல அட்சதைகள் மழை பொழிந்தன.  கெட்டிமேள ஒலி.  பூக்களின் சாரல்.  எல்லோர் கண்களிலும் அடக்கி வைத்திருந்த ஆனந்தம் கண்ணீரால் சாட்சியானது.

மாட்டுப்பொண் வந்தாளா?  நாராயணிக்கும் விசு வாத்தியாருக்கும்.

அதேபோல நடராஜ ஐயர் மற்றும் அவருடைய சகோதர குடும்பத்தினருக்கு, மாப்பிள்ளை வந்தாரா?

பர்வதத்தின் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர்.  கட்டுப் படுத்த முடியவில்லை.  தாயில்லாமல் வளர்ந்த அவளுக்கு இத்திருமணம் மூலம் எத்தனை தாய் உள்ளங்கள்.

ஒருகணம் நிலைகுலைந்து அழுதுகொண்டிருந்தார் நடராஜ ஐயர்.  அம்மாடி, ஒன் பொண்ணுக்கு என் கடமையை செஞ்சுட்டேண்டி, நீதான் பார்க்க கொடுத்துவைக்கல.  மனதோடு மனைவியிடம் பேசினார்.

வேதராமன், மீனாட்சி, கோபால், அப்பு எல்லோரும் பக்கத்தில் வந்து நெருங்கிய சொந்தங்களை வாழ்த்தினர்.  விருந்தினர்கள் எல்லோரும் பகவானை பிரார்த்தித்து தம்பதிகளை வாழ்த்தினர், ஆசீர்வதித்தனர்.

வைதீக ஹோமங்கள் தர்மங்கள் தொடர்ந்தனர்.  விவாஹ வைபவத்தின் கடைசி நிகழ்வான சப்தபதி.  ஏழுமுறை அக்னி வலம் வந்த அற்புதக் காட்சி.  ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு மந்திரம்.

(ஏழடிகள் நீ என்னுடன் நடந்ததனால் இன்று முதல் நீ என் தோழி,

நான் வானம் என்றால் நீ பூமி
நான் மனம் என்றால் நீ வாக்கு
எல்லோருடனும் அன்பு பூண்டு இல்லறத்தை இனிதாக்குவாயாக"

என்று அவன் கூறி அவளை தோழியாக ஏற்பதன் மூலம் மனையாளாகவும் ஏற்கிறான் என்பதே சப்தபதியின் உட்கருத்து.

உணவு நிறைவதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
உடல் வலிமை பெறுவதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
சுகத்தை அளிப்பதற்காக விஷ்ணு நம்மோடு வரட்டும்
பசுக்களையும் செல்வத்தையும் அளிப்பதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
நாட்டில் நல்ல பருவங்கள் தவறாது இருப்பதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
யாகங்களை செய்து வைக்கும் வாய்ப்பு கிட்டுவதற்காக விஷ்ணு நம்மோடு வரட்டும்

என்பது ஒவ்வொரு அடியிலும் சொல்லும் மந்திரங்களின் பொருள்.

அதற்கு பின் வரும் சம்பிரதாயங்கள் "அம்மி மிதிப்பதும் அருந்ததி பார்ப்பதும்". 

நேர காலங்கள் சரியாக அமையாது துன்பம் நேரும் போதும் அம்மியைப் போல் கலங்காது அவள் உடன் வரவேண்டும் என்பது அம்மி மிதப்பதன் அர்த்தம்.

அருந்ததி என்பவள் நட்சத்திரம். துருவனைப் போல் என்று அழியாது சிரஞ்ஜீவியாக திகழ்பவள். பதிவ்ரதா தர்மத்தை வழுவாது கடைபிடித்தவள். பத்தினிகளில் எல்லாம் உயர்ந்தவள். வசிஷ்டரின் மனைவி. சப்தரிஷிகளின் பத்தினிகளில் இவள் கொள்ளப்பட்டிருக்கிறாள். "வசிஷ்டரின் மனைவி அருந்ததி எப்படி பதிவ்ரதையோ அப்படியே  ராமனை விட்டு பிரியாமல் இருபேன்" என்று சீதை கூறினாள். அருந்ததியை தரிசனம் செய்து 'இவளைப் போல் நீயும் இருப்பாயாக' என்று மணமகளுக்கு சொல்வது போன்ற நியாயம்.)

வாங்க சாப்பிடப் போகலாம்....

தொடரும்.

ஈஸி சேர் - 25

 #Easychair_25

எழுதியது பாஸ்கர் சத்யா 

அத்யாயம் : 25 ..  ஈஸி சேர்

இதோ வைதீகப் பறவைகளும் சுற்றங்களும் கோவிலில் சங்கமித்தன.  சிலர் சந்நிதிகளில், சிலர் ப்ரஹாரத்தில், சிலர் ப்ரதக்ஷணங்களில், சிலர் அமைதியாக, விரிக்கப்பட்ட ஜமக்காளங்களில்.  இரண்டு பெட்ரோமாக்ஸ் லைட்டுகள் பிரகாஸிக்க காத்திருந்தன.  கோவில் வாசலில் அலங்கரிக்கப்பட்ட கார் மாப்பிள்ளை அழைப்புக்காக.  உள்ளே கடைசியாக இன்னொரு முறை நடைபெறும் நிச்சயதார்த்த வைபவத்திற்கு இசைபாட தன்னை தயாரித்துக் கொண்டிருந்த மேள வாத்ய கோஷ்டி.

இதமான காற்று தெய்வீகம் கலந்து அனைவரையும் சுகமாக்கிக் கொண்டிருந்தது அனைத்து உள்ளங்களையும்.  சிறியவர்களின் ப்ரஹார விளையாட்டுக்கள், ஓடிக் கொண்டும், தூண்களில் ஒளிந்து கொண்டும்.

பளிச்சென்ற திருவிளக்கு, பூவைத் தலையிலும் கழுத்தில் எண்ணெயையும் சுமந்து கொண்டு ஐந்து முகங்களுக்கும் திரியோடு தயாராய் கம்பீரமாக நின்று கொண்டிருந்த அற்புதம்.

பெண்டிர் சுமந்து வந்த மங்கல தட்டுக்கள் சற்றே கீழே இறங்கி பூமியில் இளைப்பாறிக் கொண்டிருந்தன.  பருப்பு தேங்காய் கூடுகள் இரண்டு பூவைச் சுற்றிக் கொண்டு விளக்குக்குப் பக்கத்தில் ராஜ மிடுக்கோடு அடுக்கி வைத்த மங்கல பொருட்களுக்கு சாட்சியாக நின்று கொண்டிருந்தது.

இதோ விசு வாத்யார் நாராயணி, இதோ நடராஜ ஐயர் தன் அண்ணா தம்பி குடும்பத்தினரோடு, இதோ வேதராமன். இதோ இரண்டு நாட்களாக இந்த திருமணத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் ஆத்மார்த்த உணர்வுடன் உறவுகள்.

பட்டுப்பாய் நடுவில்.  இருவீட்டார் அமர்ந்து தாம்பூலத் தட்டை மாற்றிக் கொள்ள.

குளத்துமணி வாத்யாரும் ஆஜர்.  கடைசியாக வந்த வைத்தாவும் மாப்பிள்ளைத் தோழன் கோபாலனும் இணைந்து விட்டார்கள்.

பெட்ரோமாக்ஸ் வெளிச்சம் பிரகாசமாயிற்று.  உறவுகள் ஜொலித்தார்கள்.  சிக்னல் கிடைத்தவுடன் சிறிது மேளமும் நாதஸ்வர ஓசையும் இசைக்கத் துவங்க, கோவிலில் அங்குமிங்கும் இருந்த உறவுகள் நடையை துரிதப் படுத்தி சேர்ந்து கொண்டன.

ஆரம்பிக்கலாமா?  குளத்து மணியின் அறிவுப்புக் கேள்வி.

எல்லாரும் வந்தாச்சோனோ, ஆரம்பிக்கலாமோன்னோ? இது நடராஜ ஐயரின் சபைக் கேள்வி, அதிலேயே ஆரம்பிக்கலாம் என்ற பதிலும்.

வாத்யத்திற்கு சற்று ஓய்வு.  வைதீகத்திற்கு முன்னுரிமை.

சுக்கலாம் பரதரம்.... ஆரம்பம்

கணேச பூஜையிலிருந்து. பட்டுப்பாயில் அம்மா அப்பாவோடு வைத்தா ஒரு புறம்.  நடராஜ ஐயர் தன் சகோதர குடும்பங்களுடன் மறுபுறம்.

மாப்பிள்ளைக்கு மயில்கண் வேஷ்டி மற்றும் ரெடிமேட் ஷர்ட் ஆரஞ்சு கலரில், பெரியோர் ஆசிகளுடன் கொடுக்கப் பட்டது.  வாங்கிக் கொண்டு ஒரு சந்நிதியின் பின்புறம் உள்ள இருட்டுப் பகுதியில் கோபாலன் மட்டும் அருகில் இருக்க சற்று ஒப்பனை செய்து கொண்டு சபைக்கு வருகிறான் வைத்தா.

மாப்பிள்ளைக்கு யார் மாலையிடுவது?  பொதுவாக மணப்பெண்ணின் சகோதரர்.  கோபால், கோபால் என்று குரல்கள்.

எல்லோரும் க்ஷமிக்கணும்.  இந்த கல்யாணத்துக்கு

 ஒத்தாசையாக வேதராமன் சார் தான் தகுதியானவர் என்பது என் அபிப்ராயம், என கோபாலன் சொல்ல, அவனை ஓரிருவர் முதுகில் தட்டிக் கொடுத்தனர்.

வேதராமனே பெண்ணின் தமையனானார், தற்போது.  அட, தற்போது என்ன, இனி எப்போதும்.  இதுவரை வைத்தாவை தன் தமையனாக நினைத்தவர், நொடிப் பொழுதில் மைத்துனர் ஆகிவிட்டார்.

மாலை அணிவித்து பூச்செண்டு கொடுத்தார்.  அதற்கு முன் அவரே சந்தனம் குங்குமத்தை நெற்றியில் இட்டார் வைத்தாவிற்கு.

லக்ன முஹூர்த்தப் பத்திரிக்கை சபையோர் முன் வாசிக்கப் பட்டு இதர வைதீக முறைகளும் இனிதே நிறைவேறி, மாப்பிள்ளை வலதுகாலை எடுத்து வைத்து காரில் ஏறினான்.  காருக்கு முன் வேத விற்பன்னர்களும் விருந்தினர்களும் நாத குழுவோடு. காருக்குப் பின். பெண்டிர் குழு, அதே மங்கல தட்டுக்களுடன்.  சௌந்தர்ய லகரியை ஒருவர் துவங்க, மற்றோரும் இணைய, களை கட்டத் துவங்கியது மாப்பிள்ளை அழைப்பு.

முன்னே ஒரு பெட்ரோமாக்ஸ் லைட், பின் ஒன்று.  நாதஸ்வர குழு அவர்கள் கற்ற வித்தையளவில், வாதாபி கணபதிம், அலைபாயுதே, ..  என்று அசத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு கிலோமீட்டருக்கு உட்பட்ட தூரம்.  தெருவில் வசிப்போர் வாத்திய சப்தங்களாலும், வேத மந்திர உச்சரிப்புகளாலும், பெண்டிரின் இனிய குரலில் வரும் ஸ்தோத்திரங்களாலும் உந்தப்பட்டு வெளியே கட்டுக் குடுமியோடு ஜொலித்த மாப்பிள்ளையை வந்து வேடிக்கை பார்க்கின்றனர்.  அவரவர் வீட்டை கடந்தபின் மனதார வாழ்த்திவிட்டு உள்ளே செல்கின்றனர்.

திருமண இல்லம் வந்தது.  மேளச் சந்தம் இல்லத்தில் கேட்குமுன்னர் மீனாட்சி பர்வதத்தை ஒரு ஜன்னலுக்குப் பக்கத்தில் ஒரு நாற்காலியில் உட்கார வைத்து விட்டாள்.  மாப்பிள்ளை பெண்ணின் கந்தர்வப் பார்வைகள் பேசுவதற்கு ஏதுவாக.

காரைவிட்டு இறங்கினான்.  பெரியோர்கள் ஹாரத்தி எடுப்பதற்கு முன் கோபாலுக்கு செய்தி சென்றது, பர்வதத்தின் கண்கள் வைத்தாவின் பார்வைக்கு ஏங்குகிறது என்று.  ஹாரத்தியை சற்று தாமதப் படுத்தினான்.

உள்ளே ஹோ, ஹோ என்று பெண்களின் சிரிப்பொலிகள்.  வெட்கித்த பர்வதத்தின் தலையை தாடையை உயர்த்தி வைத்தா பக்கம் திருப்பி திருப்பி கேலிகள்.

இங்கு மாத்திரம் சும்மா விடுவார்களா?

வைத்தா, ஜன்னல் பக்கமே பார்க்கிறாயே, எங்களையும் பாருப்பா.  எங்கும் சிரிப்பொலிகள்.

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினான், என்ற எதார்த்த வைபவம், வைதீகத்திற்கு சவால் விட்டது என்றே கூறலாம்.

ஹாரத்தி எடுத்து, பெண் வீட்டார் குடும்பம் அனைவரையும் வணங்கி வரவேற்றது.

இரவு உணவு.  எல்லோரும் திருப்தியாக உண்டு களித்தனர்.

இனம் புரியா இன்ப வெள்ளத்தில் உறங்க ஆறம்பித்தனர்.

கோபாலன் அப்புவிடம் சற்று ஆலோசித்தான் நாளை ஏற்பாடுகள் குறித்து.

இதற்கிடையில் வேதராமன் மறுநாள் அதிகாலை ஐந்து மணி அளவில் வருவதாக சொல்லிவிட்டு காரில் மடிப்பாக்கம் திரும்பினார்.

விடிஞ்சா கல்யாணம்... (அவசியம் எல்லோரும் வந்திடுங்கோ).

தொடரும்....

Tuesday, March 29, 2022

நவதிருப்பதி திருத்தலங்கள்

 நவதிருப்பதி திருத்தலங்கள்

தசாவதாரமும் நவகிரகங்களும்:

பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம். 

வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.

ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர

என்ற ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டு,

ஸ்ரீ ராமாவதாரம் - சூரியன்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - சந்திரன்
ஸ்ரீ நரசிம்மவதாரம் - செவ்வாய்
ஸ்ரீ கல்கியவதாரம் - புதன்
ஸ்ரீ வாமனவதாரம் - குரு
ஸ்ரீ பரசுராமாவதாரம் - சுக்ரன்
ஸ்ரீ கூர்மவதாரம் - சனி
ஸ்ரீ மச்சாவதாரம் - கேது
ஸ்ரீ வராகவதாரம் - ராகு
ஸ்ரீ பலராமவதாரம் - குளிகன்

என்று, பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது.

அதுபோலவே, சோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை,

ஸ்ரீவைகுண்டம் - சூரிய ஸ்தலம்
வரகுணமங்கை (நத்தம்) - சந்திரன் ஸ்தலம்
திருக்கோளூர் - செவ்வாய் ஸ்தலம்
திருப்புளியங்குடி - புதன் ஸ்தலம்
ஆழ்வார்திருநகரி - குரு ஸ்தலம்
தென்திருப்பேரை - சுக்ரன் ஸ்தலம்
பெருங்குளம் - சனி ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) - ராகு ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) - கேது ஸ்தலம்

கள்ளபிரான் சுவாமி திருக்கோயில்:

சூரிய ஸ்தலமான இத்திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 1 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 30 km தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. 

தல மூர்த்தி: கள்ளபிரான் (ஸ்ரீ வைகுண்டநாதர்)
தல இறைவி: வைகுந்த நாயகி (கள்ளர்பிரான் நாச்சியார், சோரநாத நாயகி)
தல தீர்த்தம்: தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
கிரகம்: சூரிய ஸ்தலம் 

விஜயாசன பெருமாள் திருக்கோயில் (வரகுணமங்கை):

சந்திர ஸ்தலமான இத்திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும் அமைந்துள்ளது. 

தல மூர்த்தி: விஜயாசனர் (வெற்றிருக்கைப் பெருமாள்)
தல இறைவி: வரகுணவல்லி, வரகுணமங்கை
தல தீர்த்தம்: தேவபுஷ்கரணி, அக்னி தீர்த்தம்
கிரகம்: சந்திரன் ஸ்தலம் 

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில்:

செவ்வாய் தலமாக விளங்கும் இந்த திருக்கோளூர் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து சுமார் 36 km தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 34 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் சாலையில் 3 km வந்து பின்னர் கிளைச் சாலையில் சுமார் 2 km சென்றால், இந்த திருக்கோளூர் திருத்தலத்தை அடையலாம். 

தல மூர்த்தி: வைத்தமாநிதி பெருமாள் (நிஷேபவித்தன்), புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)

தல இறைவி: கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார்
தல தீர்த்தம்: குபேர தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: ஸ்ரீகரவிமானம்
கிரகம்: செவ்வாய் ஸ்தலம் 

திருப்புளியங்குடி காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோயில்:

புதன் ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும், திருவரகுணமங்கையில் இருந்து 1 km தொலைவிலும் அமைந்துள்ளது. 

தல இறைவன்: காய்சினவேந்தப் பெருமாள், புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: எம் இடர் களைவான்)

தல இறைவி: மலர்மகள், திருமகள் (உற்சவத் தாயார்: புளியங்குடிவல்லி)
தல தீர்த்தம்: வருணநீருதி தீர்த்தம்
விமானம்: வதசார விமானம்
கிரகம்: புதன் ஸ்தலம் 

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்:

குரு ஸ்தலமான இத்திருக்கோயில் மற்றொரு நவதிருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 km தொலைவிலும், திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியில் இருந்து 35 km தொலைவிலும் அமைந்துள்ளது. 

தல இறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் (நின்ற திருக்கோலம்) (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)

தல இறைவி: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி (தாயார்களுக்கு தனித் தனி சன்னதி)
தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை
விமானம்: கோவிந்த விமானம்
கிரகம்: குரு ஸ்தலம்
தல விருட்சம்: உறங்காப்புளி 

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோயில்:

சுக்ரன் ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருசெந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருக்கோளூரில் இருந்து சுமார் 3 km தூரத்திலும் அமைந்துள்ளது. 

தல இறைவன்: மகரநெடுங்குழைக்காதர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: நிகரில் முகில் வண்ணன்)

தல இறைவி: குழைக்காதவல்லி, திருப்பேரை நாச்சியார்
தல தீர்த்தம்: சுக்கிர புஷ்கரணி, சங்கு தீர்த்தம்
விமானம்: பத்ர விமானம்
கிரகம்: சுக்ரன் ஸ்தலம் 

திருக்குளந்தை வேங்கடவானன் திருக்கோயில்:

சனி ஸ்தலமாக விளங்கும் இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 38 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருப்புளியங்குடியில் இருந்து 5 km தொலைவிலும், இன்னொரு நவதிருப்பதியான ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து 7 km தொலைவிலும் அமைந்துள்ளது. 

தல இறைவன்: வேங்கடவானன் (உற்சவர்: மாயக்கூத்தன்), (நின்ற திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)

தல இறைவி: குளந்தைவல்லி, அலமேலுமங்கை
தல தீர்த்தம்: பெருங்குளம்
விமானம்: ஆனந்த நிலையம்
கிரகம்: சனி ஸ்தலம் 

திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோயில் (இரட்டை திருப்பதி):

ராகு ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது. 

தல இறைவன்: தேவர்பிரான் (நின்ற திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)

தல இறைவி: உபய நாச்சியார்கள்
தல தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
கிரகம்: ராகு ஸ்தலம் 

திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் திருக்கோயில் (இரட்டை திருப்பதி):

கேது ஸ்தலமான இத்திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது. 

தல இறைவன்: அரவிந்த லோசனர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: செந்தாமரைக்கண்ணன்)
தல இறைவி: கருத்தடங்கண்ணி
தல தீர்த்தம்: வருணை தீர்த்தம், தாமிரபரணி
விமானம்: குமுத விமானம்
க்ரகம்: கேது ஸ்தலம் 

நவதிருப்பதி ஆலயங்களை: ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, நத்தம், திருக்கோளூர், திருப்புளியங்குடி என நவக்ரகங்களின் வரிசைப்படி தரிசனம் செய்வது முறையாக இருந்தாலும், இந்த நவதிருப்பதி ஸ்தலங்களை ஒரே நாளில் தரிசனம் செய்யும் வாய்ப்பு, அந்தந்த திருக்கோயில்கள் நடை திறந்திருக்கும் நேரத்தை பொறுத்து, காலையில் 7:30 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், தேன்திருப்பேரை, பெருங்குளம், இரட்டை திருப்பதி, திருப்புளியங்குடி, நத்தம் என்ற வரிசையில் ஆலய தரிசனம், அனைத்து கோயில்களையும் தரிசித்த மனநிறைவு கிடைக்கும்.

இதுபோல, நவதிருப்பதி தலங்கள் திருநெல்வேலிக்கு அருகில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமல்ல, நமது பெருமைமிகு கோயில் நகரமான கும்பகோணத்தைச் சுற்றிலும் நவதிருப்பதி தலங்கள் அமைந்துள்ளன. அவை,

திருக்குடந்தை சாரங்கபாணி திருக்கோயில் - சூரியன்
நந்திபுர விண்ணகரம் (ஸ்ரீ நாதன் கோவில்) - சந்திரன்
நாச்சியார்கோவில் - செவ்வாய்
திருப்புள்ளம் பூதங்குடி - புதன்
திருஆதனூர் - குரு
திருவெள்ளியங்குடி - சுக்கிரன்
ஒப்பிலியப்பன் கோயில் - சனி
கபிஸ்தலம் - ராகு
ஆடுதுறை பெருமாள் கோயில் - கேது

இவை அனைத்தும் ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசங்களாகவும் விளங்குகின்றன.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடுவதோடு , பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம்.

அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் , மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம். தினமும் ஜபிக்கும்போது, துளசியும் ' சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும்.

24 திருநாமங்கள்

ஓம் கேசவாய நமஹ :
ஓம் சங்கர்ஷனாய நமஹ :
ஓம் நாராயணாய. நமஹ :
ஓம் வாசுதேவாய. நமஹ :
ஓம் மாதவாய. நமஹ
ஓம் ப்ரத்யும்னாய. நமஹ :
ஓம் கோவிந்தாய. நமஹ :
ஓம் அனிருத்தாய. நமஹ :
ஓம் விஷ்ணவே நமஹ
ஓம் புருஷோத்தமாய. நமஹ:
ஓம் மதுசூதனாய. நமஹ :
ஓம் அதோக்ஷஜாய. நமஹ :
ஓம் த்ரிவிக்ரமாய. நமஹ :
ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய. நமஹ :
ஓம் வாமனாய. நமஹ :
ஓம் அச்சுதாய. நமஹ :
ஓம் ஸ்ரீதராய. நமஹ :
ஓம் ஜனார்தனாய நமஹ :
ஓம் ஹ்ரிஷீகேசாய. நமஹ :
ஓம் உபேந்த்ராய. நமஹ :
ஓம் பத்மநாபாய. நமஹ :
ஓம் ஹரயே நமஹ :

ஓம் தாமோதராய. நமஹ :

ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ.



பெரியப்பா

 பெரியப்பா 

"செப்பு குடுவையோடு விட்டுவிடுங்கள்" என்று என் கணவனிடம் சொல்லியபடி கடலை  வணங்கி நிற்கிறேன்.

அதில் இருப்பது காலபைரவர் ப்ரசாதம். வந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிவிட்டது. இருங்கள்... விபரமாகச் சொல்கிறேன். யாராவது தவறிப்போனால், சரியாக காரியங்கள் செய்ய முடியவில்லை என்றால் ஒரு அதிருப்தி வருகிறது. அதேபோல் கொரோனா  காரணமாக திதி கொடுக்க முடியாவிட்டாலும். அப்போது ஆறுதலாக வருவது லிங்க பைரவியும், காலபைரவரும் தான்! இறந்தவரின் போட்டோ, உபயோகப்படுத்திய உடையின் சிறு துண்டு, பெற்றோர் மற்றும் இறந்த- பிறந்த தகவல் அனுப்பினால் அங்கிருக்கும் ஒரு தம்பதி நம் சார்பாக அந்த ஜீவனுக்கு அமைதி தரும் காரியங்களை செய்கிறார்கள். இதைத்தான் பெரியப்பாவுக்கு நாங்கள் செய்ய நேர்ந்தது. மகன் மருத்துவமனையில் இருக்கும் போது பெரியப்பா தவறிவிட்டார். மகன் வந்து சேர சில வாரங்கள் ஆகும். நாங்கள் இருப்பது வேறு ஊர். லாக் டெளன் வேறு. எனவே ஒரு ஆறுதலுக்காக பெரியப்பா போட்டோ மட்டும் ஆன்லைனில் அனுப்பி காலபைரவர் கர்மா செய்ய முடியுமா என்று கேட்டோம். "நிச்சயம் முடியும்!" நம்பிக்கை கொடுத்தார்கள். கொரோனா காலம் என்பதால் உடுத்திய உடைகளை அவர்கள் கொரியரில் பெற விரும்பவில்லயோ... என்னவோ...நான் அதிகம் நோண்டவில்லை. ப்ரசாதம் அனுப்பினால் அண்ணன்(பெரியப்பா மகன்) என் கணவரை கோபிக்கலாம், "நீ யாரடா என் தந்தைக்குச் செய்ய" என்று...எனவே "ப்ரசாதம் அனுப்ப வேண்டாம். காலபரவர் அருகில் இருக்கும் குளத்தில் நீங்களே கரைத்துவிடுங்கள்" என்று ஈ மெயில் அனுப்பினேன். அங்கு எப்போதும் செயலில் ஒரு நேர்த்தி இருக்கும். ஆனால் இம்முறை எப்படி இப்படி!? இரண்டு மாதம் கழித்து ப்ரசாதம் அனுப்பிவிட்டார்கள். அதை ஓராண்டு வரை நெற்றியில் இட்டு கொள்ளவேண்டும். பின் நீர்நிலையில் கரைக்கவேண்டும். அதை என்றால், 'சாம்பலை எண்ணெயில் குழைத்த' ப்ரசாதத்தை! இது என்னடா சோதனை....! அண்ணனிடம் சேர்க்கலாம் என்றால் கோபிப்பாரே என்று அப்படியே வைத்துவிட்டோம். 

இப்போது அவரிடம் இருந்து வாட்ஸப் தகவல் வருகிறது. தந்தை இறந்து ஓராண்டு ஆகிவிட்டது. அடுத்த மாதம்  வருஷாப்திகம் என்று.... 

இப்போது அந்த கொரியரை திறந்தால், ஒரு ருத்திராக்‌ஷம், ஒரு செப்புக் குடுவை, ஒரு காப்பு கயிறு.

குடுவையை மட்டும் எடுத்துக் கொண்டு காலையில் வேகவேகமாக சென்று, பீச்சில் கரைக்க இருவரும் நிற்கிறோம்.  

குடுவையைத் திறந்தால்......

ஒன்லி விபூதி!😄😄

ஆக்கம்: ஸ்ரீப்ரியா

ஈஸி சேர் - 24

 #Easychair_24

எழுதியது பாஸ்கர் சத்யா 

அத்யாயம் : 24 ... ஈஸி சேர்

முஹூர்த்தத்திற்கு முதல் நாள்.  என்ன தவம் செய்திருக்க வேண்டும் இந்த வைபவங்களை உங்கள் கண்முன் கொண்டு செல்ல.  நடுத்தர மற்றும் ஏழை வர்க்க குடும்பங்களின் வைபவங்களில் ஒரு தனி சுகம் உண்டு. இங்கு இருக்கும் உறவுகளின் கண்களிலிருந்து வரும் ஆனந்த ப்ரவாஹத்திற்கு கங்கையின் சுவை உண்டு.

வழக்கம்போல மேள நாதஸ்வர கோஷம் நான்கரை மணிக்கே துவக்கம்.  அதே காப்பி வாளி டம்ளர்கள்.  ஒவ்வொருவராக குளித்து விட்டு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

மணமகன் வீட்டாருக்கு தனி அறை இருந்தாலும் உறவுத் தேனீக்கள் பர்வதத்தின் அறையையே வட்டமடித்துக் கொண்டிருந்தது.

மன்னி, இதைப் போட்டுக்கோங்கோ.  இது உங்களுக்கு எடுப்பா இருக்கும்.

உறவுகள் தாங்கள் அணிந்திருந்த நகைகளை அவளுக்குப் போட்டு அழகு பார்த்தன.

அக்கா, மருதாணி எப்படி பத்திருக்கு, காண்பிங்கோ.

திக்குமுக்காடினாள் பர்வதம்.

விரதம் முடியருதுக்குள்ள பசிக்கும் மாமி.  கொஞ்சம் பாலாவது சாப்பிடுங்கோ.  அப்பாவின் வாஞ்சை உபசாரங்களை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு ஒவ்வொரு உறவின் உபசரிப்பும் இதத்தை கொடுத்துக் கொண்டிருந்தது அவளுக்கு.

சாய்ந்து சாய்ந்து அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த நாராயணியை அழைத்தாள் பர்வதம்.  அம்மா இந்த சேரில் ஒரு இடத்தில் உட்காருங்கோ, அம்மா.

உறவுகளின் சீண்டல்கள்.  பாருங்கோ இங்க, வைத்தா அம்மா, மாட்டுப் பெண் சொன்னோண்ண உடனே உட்கார்ந்துட்டாள்.  இனி இப்படித்தான் நிலைமை.

போங்கடி போக்கத்தவங்களே.  அவ என் பொண்ணாக்கும்.

சிரிப்பொலி கொல்லென்று.  அந்த ஒலி அங்குமிங்கும் இருந்த ஆண்களையும் ஈர்த்தது.

ஏண்டி, எனக்கு இந்த மாம்பழ கலர் புடவை நன்னா இருக்கோ?

ரொம்ப நன்னா இருக்கும்மா, இது பர்வதம்.

ரெண்டு மாசம் முன்னாடி பட்டாமணியாராத்து சுமங்கலி ப்ராரத்தனையில் கொடுத்தா.  நான்தான் போட்டுக்காம வைத்தா கல்யாணத்துக்காக வெச்சுண்டிருந்தேன்.

ஏழைகள் தன் இயலாமையை கூட எப்படித்தான் சந்தோஷமாக்கிக் கொள்கிறார்களோ?

வேத கான கோஷ்டிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.  விரத, ஹோம, ஜபங்கள் உச்சஸ்தாயியில் ஒலிக்கத் துவங்கியது.

கிட்டத்தட்ட அழைக்கப் பட்ட சொந்தங்கள் அனைத்தும் வந்துவிட்டன.  எங்கும் பேச்சொலிகள், எங்கும் சிரிப்பொலிகள், எங்கும் ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடும் ப்ரவாஹ காட்சிகள்.

ஹோமப் புகைகளுக்கு ஈடு கொடுக்க முடியாது நடுவுக்கும் வாசலுக்கும் அலை பாய்ந்த நெஞ்சங்கள்.  நடு நடவே சற்று இருமல் தும்மல்கள்,  அந்த ஒலிகள் கேட்காத வண்ணம் பார்த்துக் கொண்ட மேள வாத்ய ஓசைகள்.

நடு நடுவே, டிஃபன் ரெடியா என்று கேட்டுக் கொண்டிருந்த ஏக்கங்கள்.

டிஃபன் ரெடியாவதற்குள் ஏடு இலைகளை தாங்களே போட்டுக் கொண்டு காத்திருந்தனர் ஒரு சிலர்.  இதோ அப்புவும் கோபாலனும் கிளம்பி விட்டார்கள் பரிமாறுவதற்கு.

முதலில் நெய் மணம் வீசும் சர்க்கரைப் பொங்கல், பூரி மற்றும் கிச்சடி வகையறாக்கள்.  ஊதி ஊதி சாப்பிட்டு பூரித்துப் போன உறவுகள்.  இன்னும் கொஞ்சம் கிச்சடி மாமா, இன்னொரு பூரி போடுங்களேன்.  சர்க்கரைப் பொங்கல் இன்னும் கொஞ்சம் இருக்குமா?

பர்வதம் ஹரித கோத்திரத்திலிருந்து கௌண்டின்ய கோத்திரத்திற்கு மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருந்தாள்.

வைதீக தர்மங்கள் முடிவதற்கும் சாப்பாடு தயாராவதற்கும் சரியாக இருந்தன.

சேமியா பாயசம், வெள்ளரிக்காய் போட்டு தயிர் பச்சடி, ஃப்ரூட் மிக்ஸ் ஸ்வீட் பச்சடி, கொத்தவரை கறி, வெண்டைக்காய் கறி, அவியல், பொரித்த அப்பளம், சேனை வறுவல், வெண் பூசணி சாம்பார், தக்காளி ரசம், இத்யாதி இத்யாதிகள், சுமார் ஐம்பது பேருக்கு.  இவைகளில் பல மடிக்காரர்களுக்கு கிடையாது.  ஏக்கம்தான், என்ன செய்வது.  அந்த முப்பது பேர் மற்றவர்கள் ஸ்லாகித்ததை மனதால் ரசித்தார்கள்.

பலருக்கு ஏப்ப உறக்கம் சிறிது.  சிலருக்கு அரைத்தூக்கப் பேச்சு.  மற்றும் ஒரு சிலர் குரட்டைக்கே சென்றுவிட்டார்கள்.

வேதராமன், மீனாட்சி மற்றும் குழந்தை சுமதியோடு ஆஜர்.  விரத வைபவங்களுக்கு வரமுடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார்.  தனித்தனியாக வைத்தா, பர்வதம் ஆசி வேண்டி நமஸ்கரித்தனர்.  எல்லோருடைய உபசரிப்புகளோடு தன் குடும்பத்தினருடன் உணவருந்தினர். சற்று சூடு குறைந்திருந்தாலும் சுவையாக இருந்ததற்கு தன் பாராட்டை அப்புவுக்கு சொன்னார்.

பிறகு வைத்தா, கோபால் மற்றும் அப்புவுடன் நீண்ட ஆலோசனை.  எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்ததை மெச்சினாலும் அறிவுறைகளை வழங்கினார்.

சிறிது ஓய்வு எல்லோருக்கும்.  பிறகு பரபரப்பு.  மாப்பிள்ளை அழைப்புக்கு ஒவ்வொருவராக தயார்.  இடையே விருப்பமுள்ளவர்களுக்கு அப்பு ஒரு பால் கேக்கும் மிக்ஸர் காப்பி கொடுத்தான்.

மேள வாத்திய கோஷ்டியை கோவிலுக்கு செல்ல பணித்தனர்.  ஒவ்வொரு பெண்டிரும் ஒரு மங்கள தட்டுக்களை எடுத்துக் கொண்டனர்.  பர்வதம், மீனாட்சி கீதா மற்றும் ஒருசில ஆண்களைத் தவிர அநேகமாக எல்லோரும் கிளம்பிவிட்டார்கள் கோவிலுக்கு.  மீனாட்சியின் அலங்காரத்தில் ஜொலித்தாள் பர்வதம்.  இடையிடையே கீதாவின் சீண்டல்கள்.

வைத்தா முதன் முறையாக ஜிப்பாவில் காட்சி அளித்தான்.  கிளம்புமுன் சற்று தன்னை பர்வதம் பார்க்க மாட்டாளா என்ற ஏக்கம்.  வேண்டுமென்றே மணப்பெண் அறை அருகில் சென்று அம்மா இருக்காளா என்ற பொய்க் கேள்வி.  அவன் நிலையை புரிந்து கொண்டு மீனாட்சி கதவைத் திறந்து பர்வதம் அவனை பார்க்கும்படி செய்து விட்டு, அப்பவே கிளம்பியாச்சே என்றாள்.  பர்வதம் நாணத்தில் சிரித்தாள்.  இவன் பொய்க் கேள்வி அவர்களுக்கு தெரியாதா என்ன?

கோபாலின் உரத்த குரல்.  வா, வா வைத்தா, சீக்கிரம்.  எல்லோரும் கோவிலுக்கு போயாச்சு, சீக்கிரம்.

அவசரமாக கிளம்பினர் இருவரும்.

கோவிலில் சந்திப்போம்...

தொடரும்.

ஈஸி சேர் - 23

 #Easychair_23

எழுதியது பாஸ்கர் சத்யா 

ஈஸி சேர் : 23. ..  ஈஸி சேர்.

இரண்டாம் நாள் திருமண வைபவம்.  பெரிய மாற்றம் இல்லை.  எல்லாம் முதல் நாள் போலவே.  என்ன, இன்னும் கொஞ்சம் சொந்தங்கள் இணைந்து சந்தோஷங்களுக்கு ஸ்ருதி சேர்த்தன.

அப்புவும் மடிக்காராளுக்கு பொங்கலுக்கு பதில் அரிசி உப்மாவையும் மற்றவர்களுக்கு இட்லிக்கு பதில் தோசையையும் சிறிது மாற்றம் செய்தான்.

வாத்ய கோஷ்டி துவங்கி வைக்க வைதீக கோஷங்கள் சற்று தூக்கலாக ஆரம்பித்தது.  பெரியவர்கள் வைதீகத்தைச் சுற்றி அமர்ந்தனர்.

வைதீகம் முடிந்து மதிய உணவுக்கு ஒரு சிறு அளவு ஜாங்கிரி ஸ்வீட் ஆனது. ஒரு பச்சடி, கடலைப் பருப்பு கோசுமல்லி, வாழைக்காய் கறி, சாம்பார், ரசம், மோர், மாங்காய் இஞ்சி என்று கொஞ்சம் மெனுவை மிகைப் படுத்தியிருந்தான்.  வாயார உண்டு வாழ்த்தினர் வந்தவர்கள்.

மறுநாள் மாப்பிள்ளை அழைப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய கோபால் வைத்தாவை கேட்டுக் கொண்டு பக்கத்தில் உள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலையம் வந்தான்.  ஆலயத்தை பார்த்தவுடன் அசந்துவிட்டான்.  என்ன ரம்யமான கோயில்!  ஸ்வர்ணாம்பிகா சமேத அகஸ்தீஸ்வரின் அற்புத தரிசனம் அவனை மெய்சிலிர்க்க வைத்தது.

ஸ்தல புராணமும் அவனை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.  ஏனெனில் அந்த ஸ்தலத்தில் அங்காரகனுக்கு இருந்த தோஷத்தை ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் நீக்கியதாக கேள்வியுற்றான்.  ரகசியமாக வைத்துக் கொள்ளும்படி ஏற்கனவே வைத்தா இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட மனப் பொருத்த திருமணம் என்று.  இப்போதுதான் புரிகிறது, அங்காரக தோஷங்கள் அவர்களுக்குள் ஏதாவது இருந்திருந்தால் அதை போக்குவதற்காகத்தானோ என்னவோ இந்த திருத்தலத்தில் ஒப்புதல் பெறப்படுகிறது என்று ஆச்சர்யப் பட்டான்.

அகத்திய முனிவருக்கு உடல் முழுவதும் ஆபரணங்கள் அணிந்து வந்த பார்வதியும் பரமேஸ்வரனும் காட்சி கொடுத்த திருத்தலம்.  காட்சி கொடுத்த சிவபெருமான் அகஸ்தீஸ்வரர் ஆனார்.  அபரணங்கள் ஜொலிக்க வந்ததால் பார்வதி ஸ்வர்ணாம்பிகை ஆனாள்.  அம்மனுக்கு எதிரில் ஸ்ரீமஹாலக்ஷ்மியும் சரஸ்வதி தேவியும் கொலு வீற்றிருக்கும் அற்புதக் காட்சியை கண்டான் கோபாலன்.  ஐநூறு வருடத்திற்கு மேல் ஸ்தாபிக்கப் பட்ட கோவில்.

நண்பனுக்கு இப்படி ஒரு பெரும் பாக்கியம் இவர்கள் அருளோடு சேர்ந்து கிடைப்பதை நினைத்து அவன் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.  கோவில் நிர்வாகியிடம் பேசிவிட்டு வைத்தாவிடம் சொல்லி சொல்லி மாஞ்சி போனான்.

வந்தவர்கள் சிலரிடமும் கோவிலைப் பற்றி ஸ்லாகிக்க அனைவரும் படையெடுத்தனர் தரிசனத்திற்கு.

சந்தோஷத்துடன் திரும்பியவர்கள் வரனையும் வடுவையும் மனதார ஆஸிர்வதித்தனர்.  கோவில்  வராதவர்களுக்கு பிரசாதங்களை கொடுத்தனர்.

இரவு ரவா கேஸரியும் அடை மோர்க் குழம்பும் பரிமாரப் பட்டன.

கலகலப்புடனுடனும் ஆனந்த பரிமாற்றங்களுடனும் உறவுகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

வைத்தாவும் பர்வதமும் மருதாணி இட்டுக் கொண்டார்கள்.  அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் கலகலப்பூட்டிக் கொண்டும் சூழ்ந்திருந்தன உறவுகள்.

தங்கள் ஊர்களில் நடந்த கதைகள் கூத்துக்கள், ளவிழாக்கள் தத்தம் வட்டத்தில் நடந்த நிகழ்வுகளை ஒருவொருக் கொருவர் பேசிக் கொண்டே உறக்கம் கண்டனர்.

தொடரும்.....

ஈஸி சேர் - 22

 #Easychair_22

எழுதியது பாஸ்கர் சத்யா 

அத்யாயம் : 22 ..  ஈஸி சேர்

திருமண வைபவத்தின் முதல் நாள்.  சொன்னபடியே குளத்துமணி வாத்யார் நான்கு மணிக்கே வந்து விட்டார்.  வைத்தா மற்றும் பர்வதம் தயாராக இருந்தார்கள்.  கணபதி ஹோமம் துவங்க வேண்டுமே.  அவரை நடராஜ ஐயர் விசு வாத்யாருக்கு அறிமுகப் படுத்தினார்.  வரவேற்றனர் அவரை.  ஏற்பாடுகளை உடனே துவங்கிவிட்டார்.

ஐந்து மணிக்கு லோக்கல் நாமகிரிப் பேட்டை கிருஷ்ணன் தன் பரிவாரங்களுடன் ஐந்து மணிக்கு ஒரு டெஸ்ட் செக் ஊதல், ப்பிப் பீ, ப்பிப் பீ, அவ்வளவுதான்.  டக் டக் என்று மெதுவாக ஆரம்பித்த மேளத்தின் ஸ்ருதி கூடியது.  அந்த வாத்ய கோஷத்தில் யாராவது தூங்க முடியுமா என்ன?

கால்தூக்கம், அரைத்தூக்கம், முழுத்தூக்கம் ஒவ்வொன்றாக கலையத் துவங்கின.  வந்திருந்த குழந்தைகள் பாதித் தூக்கத்தில் எழுந்து என்ன செய்வது என்று தெரியாமல், சிலதுகள் உட்காரந்திருக்கும் உறவுகளின் மடியில், சிலதுகளுக்கு அழுகையும் சமாதானங்களும், சிலதுகள் சீண்டல் ஒன்றாக கொண்டு, சின்ன சின்ன கோபங்கள், உறவுகளின் செல்ல கண்டிப்புகள்.

இதோ அப்பு வாளியுடனும் டம்ளர்களுடனும்.  "காஃபி" என்ற கணீர் குரல்.  இந்தக் குரலுக்காக ஏங்கிக் கொண்டிருந்த உறவுகள் தான் மாத்திரம் சாப்பிட்டதோடு இல்லாமல் மற்ற சொந்தங்களுக்கும் கொண்டு சென்றன.  அவனை எழுப்பி காப்பி கொடு, இவளை எழுப்பி கொடு என்ற உறவுகளின் வாஞ்சைக் குரல்கள்,  நீங்க சாப்பிட்டாச்சா?  மாமா நீங்க, சித்தப்பா நீங்க, அத்தை உங்களுக்கு?

சங்கமித்த உறவுகளின் சந்தோஷக் களிப்பு இருக்கிறதே, சொல்லி மாளாதய்யா.

இதோ கணபதி ஹோமம் ஆரம்பம். விக்னம் இல்லாமல் நல்லபடியாக எல்லாம் செல்லவேண்டும் என்று விக்னராஜனை ப்ரார்த்தித்தனர்.  பிறகு பந்தக்கால் முஹூர்த்தம், வைதீக சம்ரதாயங்கள் படி அனைத்தும் ஒவ்வொன்றாக.

அப்புவின் குரல் மீண்டும்.  டிஃபன் சாப்பிடுறவா சாப்பிடுங்கோ.  மீண்டும் உறவுகளின் பரபரப்பு.  நீ வறயா, நானும் வறேன், அவாள்ளாம் அப்புறம் சாப்பிடறாளாம், நேக்கு பசிக்குது வந்தா வாங்கோ, நான் போறேன்.

மடிக்காராளுக்கு பொங்கல், சட்டினி கொத்ஸு, மற்றவர்களுக்கு இட்டிலி வடை பொங்கல்.  வெறும் சர்க்கரை தான் அன்றைய காலை ஸ்வீட்.  ஏழை வீடுகளின் ரெடிமேட் ஸ்வீட் அதுதானே?  இன்னும் இருக்கே நாட்கள், மாப்பிள்ளை அழைப்புக்கும் முஹூர்த்தத்திற்கும் போட்டு அசத்திட மாட்டோம்!!

வீட்டில் திருமணம் என்பதால் டேபிள் சர்வீஸ் இல்லை, ஒரு வரிசையா உட்காரவேண்டும்.  தங்களை இந்த உறவுகள் நிலைமை தெரிந்து அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார்கள்?  உறவுகளின் சந்தோஷமே விட்டுக் கொடுத்தல் தானே.  தான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று காட்டிக் கொள்கிறார்கள் திருமணங்களில்.

கோபால் குடும்பத்தினர் சென்னையை சுற்றிப் பார்க்க கிளம்பி விட்டனர்.  சிலர் அருகில் உள்ள கோவிலுக்கு.  இருப்பவர்கள் அரட்டை.  ஒருவர் செய்தித்தாளை வாங்கிக் கொண்டு வர, அவர் படிக்கும் முன்னரே இன்னொருவர் படிக்க, இன்னொருவர் படிச்சாச்சா என்று கேட்க,அவர் விசாரிப்புகள்,  பிறகு படித்த செய்திகளை வைத்து அரசியல் வாதங்கள், அது இது என்று அமர்க்களம்தான் போங்கள்.

இன்னும் சில உறவுகள் ஒவ்வொன்றாக வரத் துவங்கினர்.

பல நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக சந்தர்ப்ப சூழலால் பார்த்துக் கொள்ளாத உறவுகள்.  அந்த உறவுகள் தங்களுக்குள் குசலம் விசாரித்துக் கொள்ளும் அழகே தனி.

வாங்கோ, வாங்கோ, வாங்கோ

சித்தி எப்படி இருக்க்கேள், சித்தப்பா வந்திர்ருக்காரா, எப்படி இருக்கார்.

ஏண்டி, இவதான் ஒன் புது மாட்டுப் பொண்ணா?

பெரியவன் என்ன பண்றான்?  என்ன வேலை?  நன்னா சம்பளம் வர்றதோ இல்லையோ, போறது.

என்னோட சின்ன பையனுக்கு வேலை இருந்தா சொல்லேன்.

நல்ல வரனா இருந்தா சொல்லேன்.  எங்க ஊரில ஒரு நல்ல பொண்ணு இருக்கா.

என்ன நான் இருக்கறதை கூட கவனிக்காம போற.  சாரி மாமி, நான் கவனிக்கலை.

அடுக்கிக் கொண்டே போனாலும் அந்த உறவுகள் அடக்கி வைத்திருந்து வெளிப்பட்ட விசாரிப்புகள் நமக்கு திகட்டவே திகட்டாது.  ஆச்சு, கல்யாணம் முடிந்து அவரவர் செல்வதற்குள் அத்தனையும் உறவுகளோடு நெஞ்சார பேசித் தீர்த்துவிட வேண்டும

அந்த உறவுகளுக்குள் மனஸ்தாபங்கள், கோப தாபங்கள் இருக்கத்தான் செய்கின்றன.  இருந்தாலும், எப்படி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றன?  எப்படி தன் ப்ரேமையை வெளிப் படுத்துகின்றன?  தன் வாஞ்சைகளை கொட்டித் தீர்க்கின்றன.

அன்று மதிய உணவுக்கு பெரிய மெனு இல்லை.  கலத்து சர்க்கரை, முட்டை கோஸ் கறி, சாம்பார், ரசம், மோர், பிசிறின மாங்காய்.  ருசி மட்டும் அலாதியாக இருந்தது.  அப்பு மாமா, சமையல் சூப்பர்.  வாழ்த்து மழை தூரலாக முதல் நாள் ஆரம்பித்தது அவனுக்கு.

தொடரும்....

ஈஸி சேர் - 21

 #Easychair_21

எழுதியது பாஸ்கர் சத்யா 

அத்யாயம் : 21 ... ஈஸி சேர்

(இதற்கு முதல் அத்யாயத்தில் திருமணத்தில் நடந்த வைதீக விஷயங்களை நடத்தினோம்.  ஆனாலும் நமக்குள் அவைகள் மாத்திரம் சந்தோஷங்களை கொடுத்து விடுமா என்ன?  அதற்கு இணையாக நடந்த சிறு சிறு சந்தோஷங்களை நாம் நினைத்து சந்தோஷிக்க வேண்டாமா?  அதற்காக ஒரிரு பதிவுகள்).

திருமணம் ஐந்து நாட்கள், கட்டு சாதக்கூடை உட்பட.  

திங்கள், செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளி.  வியாழன் மகூர்த்தம்.

ஞாயிறு காலை பூவனூரிலிருந்து விசு வாத்யார் தம்பதியினர், வெங்கனகர் அத்தை ராஜம் மற்றும் அவள் கடைசி பையன் சீனு, பூவனூரிலிருந்து பட்டாமணியார் சதாசிவத்தின் மனைவி லக்ஷ்மி, கோபாலன், கோபாலன் மனைவி கமலம், மற்றும் அவன் குழந்தை ஸ்ரீராம், மூட்டை முடிச்சுகளோடு மைலாப்பூர் வந்தடைந்தனர்.

அதேபோல நடராஐ ஐயர் மைத்துனி கற்பகம் குடும்பத்தினர், பர்வதத்தின் பெரியப்பா, சித்தப்பா குடும்பத்தினர் நங்கநல்லூர் வந்தடைந்தனர்.

இரு குடும்ப உறவுகளின் ஆனந்த உணர்வுகளுக்கு ஸமுத்திரமே எல்லை.

சாப்பாடு, இளைப்பாறுதல் முடித்து விட்டு வில்லிவாக்கம் வந்தடைந்தனர் இரு வீட்டு உறவுகளும் மதியம் மூன்று மணி சுமாருக்கு.

கோபாலன் நேராக சமையல் கட்டில் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த அப்புவிடம் சமையல் சம்மந்தமான மெனு மற்றும் ஸ்டாக் வகையறாக்களை பற்றி கேட்டறிந்து விட்டு உறவுகளுடன் கலந்தான்.

அவன் பையன் ஓடிவந்தான் அவனிடம்.  அப்பா, அப்பா, பக்கத்தில நாதமுனி தியேட்டர் இருக்காம்பா, எல்லாரும் போகலாம்பா.

நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு உறவுகள் தயாராகின.

ஆறரை மணிக்கு ஷோ.  கமலம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் பர்வதத்திடம், அவளும் வரவேண்டும் என்று, அவளும் மறுத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது வேதராமன், மீனாக்ஷி, குட்டிப்பெண் சுமதி காரில் இறங்கினர்.  வேதராமன் புதிப்பித்த வீட்டை பார்வையிட்டு அவர்களின் உடனடி தேவைகளை கேட்டறியவே அங்கு வந்தார்.

சினிமா சமாச்சாரம் நடராஜ ஐயர் காதில் விழ தைய்யா தக்கா என்று குதித்துக் கொண்டிருந்தார், பர்வதத்தை அனுப்புவதற்கு.

என்ன நடக்கிறது என்று புரியாமல் அங்குமிங்கும் விவரங்களுக்காக அலை பாய்ந்து கொண்டிருந்தாள் நாராயணி.

மீனாக்ஷியும் களத்தில் குதித்து எல்லோரையும் சம்மதிக்க வைத்து பர்வதம் செல்ல அனுமதி கிடைத்தது.  வேதராமன் வைத்தா மனதிற்குள் விரும்பினாலும் சிரித்துக் கொண்டே மழுப்பிக் கொண்டிருந்தனர்.

நாளை முதல் தானே வைதீக வைபவங்கள்.  இந்த உறவுகள் ஒன்று சேர்ந்து பர்வதத்துடன் சினிமா பார்த்ததை எத்தனை ஆண்டுகள் சொல்லிக் கொண்டிருக்கலாம் என்ற மீனாட்சியின் வேண்டுகோளே வென்றது.

வேதராமன் குடும்பத்தினர் விடை பெற்றனர்,  புதன் அன்று மதியம் வருவதாக சொல்லி விட்டு.  கிளம்பு முன் அப்புவிடம் ஒரு குறை இல்லாமல் பார்த்துக் கொள்,பணம் காசெல்லாம் பார்த்துக் கொள்ளலாம், என்று கூற தலையசைத்தான் அப்பு.

பர்வதம், கீதா, கோபாலன் குடும்பத்தினர், கற்பகம் குடும்பத்தினர் எல்லோரும் நாதமுனி தியேட்டர் நோக்கி நடந்தனர்.  ஏதோ ஒரு படம், என்ன படமா இருந்தால் என்ன?  உறவுகள் குதூகலிக்க வேண்டும்.  நடந்து கொண்டே சிறு சிறு கிண்டல்கள் கேலிகள்.  பர்வதம் ஒரு வழி ஆகிவிட்டாள் தியேட்டர் வருவதற்குள்.

இத்தனை உறவுகளும் மொத்தமாக ஒரே நாளில் சங்கமித்த பூரிப்பு.  நாடி, நரம்பு, உடல், மனம் எல்லாம் அவள் ஆனந்தத்திற்கு மெருகூட்டின.

கோபாலன் மனைவி அவளுக்கு அக்காவானாள்.  கோபால் அத்திம்பேரானான்.  கீதா தங்கையானாள், இதர சிறு வயது உறவுகளுக்கு இவள் மன்னியானாள்.

தியேட்டரில் நல்ல வேளை கூட்டம் அவ்வளவாக இல்லை.  வாசலில் போர்டு இருந்தது காணவிருக்கும் படத்தை சித்தரித்து.

காத்திருந்த கண்கள்...இது படம்.

படம் மட்டும் தானா, பரவதத்தின் கண்களும் அதுதானே!!

மீண்டும் கிண்டல் கேலிகள் அதை வைத்து, பர்வதத்திடம்.  வெட்கத்துடன் அன்புச் சிறையில் அவள்.

ஸ்ரீராமனுக்கு மாத்திரம் கோபம், பழைய படம் என்று.  இருந்தாலும் கோபித்து கொண்டதால் ஐஸ்க்ரீம் உத்தரவாதம்.  சமாதானமாகி விட்டான்.  அவன் அழுகைக்கு பர்வதம் அணைப்பு சுகம் கொடுத்து சாந்தமளித்தது.

படத்தோடு விட்டதா சந்தோஷங்கள். திரும்புய பின்னரும் தொடர்ந்தது.  படத்தின் பாடல்கள் நடிப்பு அது இது என்று சொந்தங்கள் ஸ்லாகித்தன இரவு பனிரெண்டு வரை.  இடையிடையே வைத்தாவிடமும் சீண்டல்கள்.

வைதீகப் பறவைகளின் கானங்களை உறக்கமே ரசித்தது.

தொடரும்...

மாசித் தாத்தா - 1

 (மாசித் தாத்தா..)

(பகுதி −1..)

(எழுத்துத் தூண்டுதல் :− 

திரு. Srinivasa Sarma அவர்கள்..)

....இத்தனை நாட்களாய் இல்லாத விதமாய்,

சற்று நேரமாகத் தனது கடந்த காலத்தை அசைபோட்டவாறு,  அந்த நைந்து போயிருந்த கட்டிலில் அமர்ந்திருந்தார் "மாசி"த் தாத்தா...

கண்முன்னே நிழற்படமாய் ஓடிய அவரது கடந்த காலம், அவருக்குள் ஒரு ப்ரமிப்பை ஏற்படுத்தியது!..

கடந்து வந்திருந்த பாதையில் கஷ்டங்களை மட்டுமே அனுபவமாகப் பெற்றிருந்த படியால்,

இதுநாள் வரையில் வலுக்கட்டாயமாக அதைப் பற்றி நினைக்காமலேயே தவிர்த்துவிட்டிருந்தார்...

ஆனால் இன்று நடந்த ஒரு நிகழ்வு அவரை அவரது கடந்த காலத்திற்குள் கடத்தி விட்டிருந்தது...

...இமயமலைச் சாரல்களுக்கு அருகிலுள்ள ஒரு சிற்றூரிலிருந்து வருவதாகச் சொல்லிக் கொண்டு, நான்கு நாட்களுக்கு முன், ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க அடியவர்,

மாசித் தாத்தாவின் குடிலுக்கு முன் வந்து நின்ற போது, பொழுது மாலையைக் கடந்து இரவை நெருங்கிவிட்டிருந்தது..

"என்ன வேணும்?" என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காமல், வந்தவரின் கைபிடித்து தன் குடிலுக்குள் அழைத்துச் சென்றார் மாசித் தாத்தா...

வந்திருந்த அடியவருக்கு அந்நேரத் தேவை பசியாற்ற ஒரு கவளம் உணவும், படுக்க ஒரு துளி இடமும் என்பதைத் தாத்தா உணர்ந்தே இருந்தார்...

தாத்தாவுடைய ஸ்வாதீனம், வடக்கத்திய அடியாரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தது..

தாத்தா கொடுத்த பழங்களையும், கொஞ்சம் பாலையும் கொண்டு, தனது பசியை ஆற்றிக் கொண்டவர்,

அவர் காட்டிய சௌகர்யமான சிறிய இடத்திலே, அப்படியே தன்னைக் கிடத்திக் கொண்டார்..

காவிரிக் கரையோரம் இருந்த குடிசை ஆதலால், காற்று சில்லென்று வீசியதில்,

பயணக் களைப்பும் சேர்ந்து கொள்ள, 

வந்த அடியவர் அப்படியே கண்ணயர்ந்தும் போனார்....

காலையில் பறவைகளின் ரம்யமான சப்தத்தில், அவர் கண்விழித்த போது, மாசித்தாத்தா குடிலில் இல்லை...

"எங்கே போயிருப்பார்?.." என்ற கேள்வியோடு வெளியே எழுந்து வந்தவர், சுற்றுமுற்றும் நோட்டம் விட்டார்..

அந்த மெல்லிய வெளிச்சத்தில், குடில் மிக நேர்த்தியோடு பராமரிக்கப் பட்டிருப்பதும்,

சற்று தூரத்திலேயே "ஹோ" என்ற சப்தத்துடன் காவிரி, இரு கை விரித்து அழகாக ஓடிக் கொண்டிருப்பதும் தெரிந்தது..

"சரி... காவிரி ஸ்நானம் பண்ணுவோம்..." என்ற தீர்மானத்தோடு தாம் கொண்டு வந்திருந்த மூட்டையைச் சுமந்துகொண்டு அவர் நடந்து சென்ற போது,

எதிரில், நீராடி முடித்து மாசித் தாத்தா வந்து கொண்டிருப்பது தெரிந்தது...

நன்றியோடு அவரைப் பார்த்துப் புன்னகைத்த வடக்கத்தியர், தாம் நீராடி வருவதாகத் தாமறிந்த அரைகுறை தமிழிலே சொல்லி, காவிரியை நோக்கி மெதுவாக முன்னேறினார்...

(வளரும்..)

Sunday, March 27, 2022

திருவிற்குடி வீரட்டானேஸ்வரர்

 l: இன்றைய கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம்மிகவும் பழமையான தலம் திருவடி பணிந்து கோடி ஜென்ம வினைகள் தீர வேண்டிய நின்றேன்

 தர்மத்தின் வழி நடப்பவர்களுக்கு என்றும் ஸ்வாமி துணை நிற்பார் 🙏

137. திருவிற்குடி வீரட்டம்

சிவஸ்தலம் பெயர்
திருவிற்குடி
இறைவன் பெயர்
வீரட்டானேஸ்வரர்
இறைவி பெயர்
ஏலவார்குழலி, பரிமளாம்பிகை
தேவாரப் பாடல்கள்
சம்பந்தர்
வடிகொள் மேனியர் வானமா மதியினர்

எப்படிப் போவது

(1) திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் (SH23) வெட்டாறு தாண்டி, கங்களாஞ்சேரிக்குப் பிரியும் வலப்புறப் பாதையில் திரும்பி கங்களாஞ்சேரி அடைந்து, நாகப்பட்டினம், நாகூர் செல்லும் சாலையில் (SH148) வலதுபுறம் திரும்பி விற்குடி ரயில் பாதையைக் கடந்து விற்குடியை அடைந்து, "விற்குடி வீரட்டேசம்" என்னும் பெயர்ப் பலகை காட்டும் பாதையில் இடப்புறமாகத் திரும்பி 2 கி.மீ. சென்று, இடப்புறமாகப் பிரியும் (வளப்பாறு பாலத்தைக் கடந்து) சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.

(2) நாகப்பட்டினத்திலிருந்து காரைக்கால் வழியாகத் திருவாரூருக்குச் செல்லும் பேருந்தில் வந்து, விற்குடியில் கூட்டு ரோடில் இறங்கி 1 கி.மீ. சென்றும் கோயிலை அடையலாம். கோயில் வரை பேருந்து, கார் செல்லும். திருவாரூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

ஆலய முகவரி

நிர்வாக அதிகாரி
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்
திருவிற்குடி
திருவிற்குடி அஞ்சல்
வழி கங்களாஞ்சேரி
நாகப்பட்டிணம் வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 610101
தொடர்புக்கு: 94439 21146

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

இறைவன், சலந்தரனைச் சங்கரித்த தலம்.

இறைவன் அருளால், சலந்தரனின் மனைவியைத் திருமால் துளசியாக ஏற்ற தலம். எனவே இத் தலமரம் துளசியாகும்.

சிவபெருமான் எட்டு வீரச் செயல்கள் நிகழ்த்திய அட்ட வீரட்டத்தலங்களில் திருவிற்குடியும் ஒன்றாகும். சலந்தாசுரன் என்பவன் பிரம்மாவை நோக்கி கடும் தவம் செய்து சாகாவரம் கேட்டான். பிரம்மா அவ்வாறு சாகாவரம் தர இயலாது என்று கூற, சலந்தாசுரன் "தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும்" என வரம் வாங்கி விட்டான். தனது வரத்தின் பலத்தாலும், உடல் வலிமையாலும் செருக்குற்று தேவர்களுக்கு தொல்லைகள் பல கொடுத்தான். தேவர்கள் கயிலை மலையை அடைந்து சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். சலந்தாசுரன் போர்க்கோலம் பூண்டு கயிலை மலையை அடைந்தான். சிவபெருமான் ஒரு கிழ அந்தணர் வேடத்தில் சலந்தாசுரன் முன்பு தோன்றினார். அதற்கு முனபு திருமாலை சலந்தாசுரன் போல் வடிவெடுத்து அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில், மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது. இத்தருணத்தில் சலந்தாசுரனிடம் தான் கூறும் ஒரு சிறிய செயலை அவனால் செய்ய முடியுமா என்று சிவபெருமான் கேட்டார். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று செருக்குடன் சலந்தாசுரன் கூறினான். சிவபெருமன் தனது காற் பெருவிரல்லால் மண்ணில் ஒரு வட்டமிட்டு, அந்த வட்டத்தைப் பெயர்த்து உன் தலை மேல் தாங்கி நில் என்று சலந்தாசுரனிடம் கூறினார். அவனும் பெரு முயற்சிக்குப் பின் அந்த வட்டத்தைப் பெயர்த்தெடுத்து தன் தலை மேல் தாங்கினான். மனைவி பிருந்தையின் மனம் சிறிது நேரம் களங்கப்பட்டதால், அந்த வட்டச் சக்கரம் சலந்தாசுரன் உடலை இருகூறாகப் பிளந்துவிட்டு இறைவனின் கரத்தில் அமர்கிறது. சலந்தாசுரன் என்பவனை சக்கரத்தால் சிவபெருமான் அழித்த இத்தலம் அஷ்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

சலந்தாசுரன் மனைவி தன் கணவர் இறக்கக் காரணமாக இருந்த மகாவிஷ்ணுவைப் பார்த்து "நான் கணவனை இழந்து வருந்துவது போல, நீயும் உன் மனைவியை இழந்து வருந்த வேண்டும்" என சாபம் கொடுத்து விட்டு தீக்குளித்தாள். இதனால் தான், விஷ்ணு ராமாவதாரம் எடுக்க வேண்டி வந்து, மனைவியைப் பிரிந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. பிருந்தையின் சாபத்தினால் விஷ்ணுவுக்கு பித்து பிடித்தது. பித்தை தெளிவிக்க பிருந்தை தீகுளித்த இடத்தில் சிவன் ஒரு விதை போட்டார். இந்த விதை விழுந்த இடத்தில் துளசி செடி வளர்ந்தது. இந்த துளசியால் மாலை தொடுத்து திருமாலுக்கு சாற்ற அவரின் பித்து விலகுகிறது. துளசி தான் இங்கு தல விருட்சம் என்பது குறிப்பிடத் தக்கது.

இத்தலத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளை உடையது. கோவிலுக்கு எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது. நல்லபடித்துறைகளும் சுற்றுச்சுவரும் கொண்ட பெரிய குளம். குளத்தின் கரையில் விநாயகர் கோயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும், எதிரில் வலப்புறமாக உள்ள முதல் தூணில் நாகலிங்கச் சிற்பம் அழகாகவுள்ளது. வெளிப்பிராகாரத்தில் பிருந்தையை, திருமாலுக்காக இறைவன் துளசியாக எழுப்பிய இடமும், திருமால் வழிபட்ட சிவாலயமும் உள்ளன. உள் பிராகாரத்தில் வலமாக வரும்போது மகாலட்சுமி, வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் பள்ளியறை, பைரவர், சனிபகவான், தனிக் கோயில் கொண்டுள்ள பைரவர், நவக்கிரகங்கள், சூரியன் சந்நிதி, ஞானதீர்த்தமென்னும் கிணறு, பிடாரி, மாரி முதலிய சந்நிதிகள் உள்ளன. சலந்தரனைச் சம்ஹரித்த மூர்த்தியின் உற்சவத்திருமேனி தரிசித்து மகிழ வேண்டிய ஒன்று. வலது உள்ளங்கையில் சக்கரம் ஏந்தியுள்ளார். ஏனையகரங்களில் மான்மழு ஏந்தி, ஒருகை ஆயுத முத்திரை தாங்கியுள்ளது. அழகான ஐம்பொன் திருமேனி - வலமாக வந்து துவார பாலகரைத் தொழுது, துவார கணபதி, சுப்பிரமணியரை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சதுர ஆவுடையார் மீதுள்ள மூர்த்தியின் பாணம் உருண்டையாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக, பிரம்மா, மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர் ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது.

முன்னால் இடப்புறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். அம்பாள் சந்நிதியின் எதிரில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரு ராசிகளும் உரிய கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. அபிஷேக நீர் வெளிவரும் கோமுகம், ஒரு பெண் தாங்குவது போன்ற அமைப்பில் உள்ளது. மண்டபத்தின் இடதுபுறம் நடராச சபையும், எதிரில் தெற்கு வாயிலும் சாளரமும் உள்ளன. பக்கத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இத்தலத்தின் தீர்த்தங்கள் இரண்டு. சக்கரதீர்த்தம் கோயிலின் முன்னாலும், சங்குதீர்த்தம் கோயிலின் பின்புறமும் உள்ளது.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் உள்ள முருகன் ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்து தன்னுடைய இரு தேவியருடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

சிறப்புகள்

திருமால் வழிபட்ட இலிங்கத் திருமேனி தனிக் கோவிலாக உள்ளது.

கோயில் கட்டுமலையில் இருக்கின்றது.

உற்சவ மூர்த்தி கையில் சக்கரத்துடன் உள்ளார்.

தொடரும்

🙏திருச்சிற்றம்பலம்🙏

தொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் செல்வ வளத்தையும் தரும் திருவிற்குடி #பைரவர் வழிபாடு!!!

நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி,உங்களுக்கு எப்பேர்ப்பட்ட கஷ்டகாலம் தற்போது இருந்தாலும் சரி ;நீங்கள் 

இந்தப் பதிவில் உள்ளபடி பைரவர் வழிபாடு செய்துவிட்டால் பின்வரும் நன்மைகளை நீங்கள் அனுபவிப்பீர்கள்.இது சத்தியம்.

அப்படி வழிபாடு செய்யும்முன்பாக நீங்கள் செய்ய வேண்டிய சில கட்டுப்பாடுகளையும் கூறிவிடுவது எனது கடமை! 

இந்த கட்டுப்பாடுகளுடன் இந்த பைரவர் வழிபாட்டைச் செய்தால் மட்டுமே நீங்கள் நினைக்கும் நன்மைகளில் ஏதாவது ஒன்று உங்களுக்கு கிடைக்கும்.

அதென்ன நன்மைகள்?

1.தொழிலில் எப்பேர்ப்பட்ட வீழ்ச்சியை நீங்கள் அடைந்திருந்தாலும் சரி! அதிலிருந்து மீண்டு பழைய நிலையை எட்டிவிடுவீர்கள்.

2.இன்று உங்களுடைய பொருளாதார நிலை எப்பேர்ப்பட்ட தாழ்ந்த/சராசரியான/மிகவும் கஷ்டமான நிலையில் இருந்தாலும் சரி.அந்த சூழ்நிலை அடியோடு மாறி பெரும் செல்வச் செழிப்பை எட்டிவிடுவது சர்வ நிச்சயம்.

நீங்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள்:

1.அசைவம் நிரந்தரமாக சாப்பிடக்கூடாது;(முட்டை,புரோட்டாவையும் மறந்துவிட வேண்டும்)

ஏனெனில்,இந்த வழிபாடு செய்தபின்னர்,சில குறிப்பிட்ட மாதங்களில் அதற்குரிய பலன்கள் உங்களைத் தேடி வரும்.

அப்படி வரும்போது,நீங்கள் அசைவம் சாப்பிடத் துவங்கியிருந்தால், பைரவ வழிபாட்டுப்பலன்கள் உங்களை வந்துசேராது.

2.மதுவை(போதைப்பொருட்கள் அனைத்தையும்;இதில் சிகரெட் அடங்காது) நிரந்தரமாக மறந்துவிட வேண்டும்.

ஏனெனில்,நீங்கள் போதைப்பொருட்கள் உபயோகபடுத்தி வந்தால் சிந்திக்கும் திறனையும்,எதையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியத்தையும் இழந்துவிடுகிறீர்கள்.

இதனால்,தினசரி உங்கள் வாழ்வில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களை நீங்கள் சரியாக புரியாமல் போய்விடும்.

3.எந்த நாளில் இந்த வழிபாட்டைச் செய்யச் சொல்லுகிறோமோ,அந்த நாளும்,அதற்கு முந்தய நாளும் தாம்பத்தியம்/காமச் செயல்களில் ஈடுபடக்கூடாது.

4.இதற்காக நான் இந்த கோவிலுக்குப் போய்,இப்படிச் செய்யப் போகிறேன் என்று தம்பட்டம் அடிக்கக்கூடாது.

சரி,அடுத்து என்ன? 

திருவாரூரிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் திருப்பயந்தங்குடி என்னும் ஊர் வரும்.

அந்த ஊரை அடைந்ததும்,அங்கே திருவிற்குடிக்கு எப்படிச் செல்வது? என்பதை விசாரிக்க வேண்டும்.

திருப்பயந்தங்குடியிலிருந்து 2 கி.மீ.தூரத்தில் திருவிற்குடி இருக்கிறது.

இங்கே காலபைரவர் ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி என்ற பெயரில் சிவபெருமானாக இருந்து அருள்பாலிக்கிறார்.

அது மட்டுமல்ல:

இங்கேதான் செல்வத்தின் அதிபதியான மஹாவிஷ்ணு துளசியால் இறைவனாகிய பைரவருக்கு அர்ச்சனை செய்து தனது சின்னமான சக்கரத்தை பெற்றார்.

எனவே,அட்டவீரட்டானங்களில் திருவிற்குடி மிகமுக்கியமான கோவிலாக இருக்கிறது.

இங்கே நாம் செய்ய வேண்டியது என்ன?

விநாயகர்,மூலவராகிய அருள்மிகு ஜலந்தராசுரவத மூர்த்தி,அம்பாள்,இலக்குமி ஆகியோருக்கு அர்ச்சனை செய்துவிட்டு, இங்கிருக்கும் பைரவருக்கு செவ்வரளிமாலை, சந்தனாதித்தைலம்,அத்தர், புனுகு,ஜவ்வாது போன்றவைகளைக்கொண்டு அபிஷேகம்  செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமை காலை  10.30 முதல் 12 மணிக்குள் பைரவரைத் தவிர,மேற்கூறிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்துவிட்டு,இந்த நேரத்தில் அபிஷேகம் செய்ய வேண்டும்.

இவ்வாறு 16 வெள்ளிக்கிழமைகளுக்குத் தொடர்ச்சியாக இந்த ஆலயத்திற்கு சென்று இந்த வழிபாட்டினை செய்து வர வேண்டும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அபிஷேகம் முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும்/வேறு எவரது வீட்டுக்குச் செல்லாமலும் அவரவருடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

இவ்வாறு 16 வெள்ளிக்கிழமைகள் வழிபாடு முடித்த 100 நாட்களுக்குள் வீழ்ச்சிநிலையில் இருக்கும் தொழில் மறுமலர்ச்சி அடையத் துவங்கும்.

அல்லது உங்களது பொருளாதார நெருக்கடி நிலை நீங்கி மிகப்பெரிய செல்வ வளத்தை அடையத் துவங்கும்.

திருவிற்குடி பைரவர் படம் கீழே!👇🏻👇🏻

 திருவிற்குடி 610101
இறைவன் - வீரட்டானேஸ்வரர்.
     
இறைவி - ஏலவார் குழலி, பரிமள நாயகி.
     
தலமரம் - துளசி.
     
தீர்த்தம் - 1) சக்கரதீர்த்தம் (கோயிலின் முன்னால் உள்ளது.)
             
2) சங்குதீர்த்தம் (கோயிலின் பின்புறம் உள்ளது.)
     
சம்பந்தர் பாடல் பெற்றது.
சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

அட்ட வீரட்டத்தலங்களுள் ஒன்று. சலந்தரனை சம்ஹரித்ததலம்.

சலந்தரனின் மனைவியான பிருந்தையை திருமால் துளசியாக ஏற்ற தலம்.🙏

 திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

இரண்டாம் திருமுறை

பதிகம் - 108

தலம் - திருவிற்குடிவீரட்டம்

பண் - நட்டராகம்

          திருச்சிற்றம்பலம்

வடிகொள் மேனியர் வானமா மதியினர்
  நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர்
  உடைபுலி யதளார்ப்பர்
விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை
  விற்குடி வீரட்டம்
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை
  அருவினை யடையாவே. 


களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங்
  கடிகமழ் சடைக்கேற்றி
உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர்
  பொருகரி யுரிபோர்த்து
விளங்கு மேனியர் எம்பெரு மானுறை
  விற்குடி வீரட்டம்
வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார்
  வருத்தம தறியாரே. 


கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி
  மார்பினர் வலங்கையில்
எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத்
  தாடிய வேடத்தர்
விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி
  விற்குடி வீரட்டம்
பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப்
  பேணுவ ருலகத்தே. 


பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர்
  பொலிதர நலமார்ந்த
பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு
  கடலெழு விடமுண்டார்
வேத மோதிய நாவுடை யானிடம்
  விற்குடி வீரட்டஞ்
சேரும் நெஞ்சினர்க் கல்லதுண் டோ பிணி
  தீவினை கெடுமாறே. 


கடிய ஏற்றினர் கனலன மேனியர்
  அனலெழ வூர்மூன்றும்
இடிய மால்வரை கால்வளைத் தான்றன
  தடியவர் மேலுள்ள
வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை
  விற்குடி வீரட்டம்
படிய தாகவே பரவுமின் பரவினாற்
  பற்றறும் அருநோயே. 


பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக்
  கையினர் மெய்யார்ந்த
அண்ண லன்புசெய் வாரவர்க் கெளியவர்
  அரியவர் அல்லார்க்கு
விண்ணி லார்பொழில் மல்கிய மலர்விரி
  விற்குடி வீரட்டம்
எண்ணி லாவிய சிந்தையி னார்தமக்
  கிடர்கள்வந் தடையாவே. 

(இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று).

இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்றனை
  யிகலழி தரவூன்று
திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு
  பொருளினன் இருளார்ந்த
விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி
  விற்குடி வீரட்டந்
தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத்
  துன்பநோ யடையாவே. 


செங்கண் மாலொடு நான்முகன் தேடியுந்
  திருவடி யறியாமை
எங்கு மாரெரி யாகிய இறைவனை
  யறைபுனல் முடியார்ந்த
வெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன்
  விற்குடி வீரட்டந்
தங்கை யாற்றொழு தேத்தவல் லாரவர்
  தவமல்கு குணத்தாரே. 


பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ
  ராடைய ரவர்வார்த்தை
பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின்
  பரிவுறு வீர்கேண்மின்
விண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில்
  விற்குடி வீரட்டங்
கண்டு கொண்டடி காதல்செய் வாரவர்
கருத்துறுங் குணத்தாரே. 


விலங்க லேசிலை யிடமென வுடையவன்
  விற்குடி வீரட்டத்
திலங்கு சோதியை எம்பெரு மான்றனை
  யெழில்திகழ் கழல்பேணி
நலங்கொள் வாழ்பொழிற் காழியுள் ஞானசம்
  பந்தனற் றமிழ்மாலை
வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால்
  மற்றது வரமாமே.



Didn't you see the light there

 "Didn't you see the light there?" -- 

ஒரு வெள்ளைக்காரர் தொண்டர்களைப் பார்த்து

"எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரருக்கு அனுக்ரஹம் செய்கிறீர்கள். எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லையே? அந்த ஞானம் வரவில்லையே?"- தொண்டர்கள்- பெரியவாளைப் பார்த்து.

"நீங்கள் எல்லோரும் ஞானியாகிவிட்டால், எனக்கு யார் ஸ்நானம் பண்ணி வைப்பார்கள்? யார் சாதம் போடுவார்கள்? ஆகவே, உங்களுக்கு இப்போது எதுவும் தெரிய வேண்டாம்"- பெரியவா புன்னகையுடன். 

ஸ்ரீ பெரியவாள் ஓரிக்கையில் இருந்தபோது, ஒரு வெள்ளைக்காரர் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார். அவர் டெல்லியிலிருந்து மும்பை போவதற்குப் பிளேனில் டிக்கெட் கேட்டார். கிடைக்கவில்லை. உடனே சென்னைக்குச் செல்லும் விமானத்தைப் பிடித்தார். மீனம்பாக்கம் வந்து சேர்ந்தார். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும்,  'எங்கே போவது' என்று கேள்விக்குறி எழுந்தது.

அங்கிருந்த டாக்ஸி டிரைவரிடம், "இங்கு யாராவது ரிலீஜியஸ் லீடர் (மதத் தலைவர்) இருக்கிறாரா?" என்று கேட்டார்.

"காஞ்சிபுரத்தில் சங்கராசார்ய ஸ்வாமிகள் இருக்கிறார்" என்று பதில் வந்தது.

"உடனே என்னைக் காஞ்சீபுரத்தில் கொண்டு போய் விடு" என்று சொன்ன வெள்ளைக்காரர், காரிலேயே காஞ்சீபுரம் வந்து விட்டார்.

ஸ்ரீ பெரியவாள் அந்தச் சமயம் ஓரிக்கை என்ற இடத்தில், ஒரு கீத்துக் கொட்டகையில் பிட்சை செய்து விட்டு விச்ராந்தி பண்ணிக் கொண்டு இருந்தார்கள்.

அங்கு வந்த வெளிநாட்டுக்காரர், ஸ்ரீ பெரியவாளைப் பார்க்க ரொம்ப ஆவலாய் இருந்தார்.

நாங்கள் (அணுக்கத் தொண்டர்கள்) அவரிடம்,"Please wait for some time, Swamiji is taking rest" என்று சொன்னோம்.

சிறிது நேரம் கழித்துப் பெரியவாள் எழுந்து ஆசமனம் செய்தார்கள். விபூதி தரித்துக் கொண்டார்கள். "அவர் வந்து விட்டாரா?" என்று பலமுறை கேட்டார்கள். அப்போது அவ்விடத்தில் நாகலட்சுமி என்ற பக்தையும் இன்னும் சில பெண்களும் தான் இருந்தார்கள்; வேறு யாரும் இல்லை.

நாங்கள் பெரியவாளிடம், "நாகலட்சுமி வகையறா உட்கார்ந்து இருக்கிறார்கள். வேறு புதியவர்கள் யாரும் இல்லை" என்றோம்.

பெரியவாள் மறுபடியும், "அவர் வந்து விட்டாரா?" என்றார்கள்.

"ஒரு வெள்ளைக்காரர் வந்து இருக்கார்".

"ஆமாம்! அவரைத் தான் கேட்டேன்" என்றார்கள் பெரியவாள்.

அந்த வெள்ளைக்காரரைப் பெரியவாளிடம் அழைத்து வந்தோம். அவருக்குத்தான் என்ன பக்தி! என்ன சந்தோஷம்! ரொம்பவும் பிரியமாகவும், அன்புடனும் பெரியவளின் பக்கத்தில்; ரொம்ப பக்கத்தில் - வந்து உட்கார்ந்து கொண்டார். "அப்படி செய்யக் கூடாது' என்று அவரிடம் சொல்வதற்காக நாங்கள் அவரை நெருங்கினோம்.

அப்போது பெரியவாள், "அங்கேயே உட்காரட்டும். ஒன்றும் சொல்ல வேன்டாம்" என்று ஜாடை காட்டி எங்களைத் தடுத்து விட்டார்கள்.

வெள்ளைக்காரர் மிகவும் சாந்தமாகவும், ஆனந்தமாகவும், பெரியவாளின் முகத்தையே பார்த்துக் கொண்டு புளகாங்கிதம் அடைந்தார்.

"ஏன் இவ்வளவு ஆனந்தப்படுகிறீர்கள்?" என்று அந்த வெள்ளைக்காரரைக் கேட்டோம்.--- (தொண்டர்கள்)

"Didn't you see the light there? (பெரியவாளின் முகத்தில் உள்ள பிரகாசத்தைப் பார்க்கவில்லையா?") என்று கேட்ட , வெள்ளைக்காரர் தொடர்ந்து, "Is it the Sankaracharya referred by Paul Brunton? My god! My god!" என்று சொல்லிப் பேரானந்தப்பட்டார்.

ஸ்ரீ பெரியவாள் சுமார் 15 நிமிடங்கள் வெள்ளைக்காரருக்கு காட்சி கொடுத்தார்கள்.

"The purpose for which you came to India is over. Your goal is over. Get love" என்று பெரியவா, அவரிடம் சொல்லச் சொன்னார்கள். சொன்னோம் அவரிடம்.

அந்த வெள்ளைக்காரரோ, பெரியவாளின் தரிசனத்தில் மயங்கிப் போய் விட்டார். " நான் சில தினங்கள் இங்கு இருக்கணும்" என்று அனுமதி கேட்டார் பெரியவாளிடம்.

பெரியவாளோ, "அதெல்லாம் வேண்டாம். ஸ்டார்ட் இம்மீடியட்லி" என்று சொல்லி ஒரு ஆரஞ்சுப் பழத்தைக் கொடுத்து அவரை அனுப்பி விட்டார்கள்.

அவர் சென்ற பிறகு நாங்கள் பெரியவாளைக் கேட்டோம்;

"எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரருக்கு அனுக்ரஹம் செய்கிறீர்கள். அவரும் பெரியவாளைப் பார்த்ததுமே கடவுளைப் பார்த்த மாதிரி ஆனந்தப்படுகிறார். ஆனால், பக்கத்தில் உள்ள எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லையே? அந்த ஞானம் வரவில்லையே?"--- தொண்டர்கள்.

பெரியவாள் சொல்கிறார்கள்;

"நீங்கள் எல்லோரும் ஞானியாகி விட்டால், எனக்கு யார் ஸ்நானம் பண்ணி வைப்பார்கள்? யார் சாதம் போடுவார்கள்? ஆகவே, உங்களுக்கு இப்போது எதுவும் தெரிய வேண்டாம்" என்று புன்னகையுடன் சொன்னார்கள்.

பல ஜன்மங்களில் புண்ணியம் செய்து இருந்தால் தான், நம்மால் பெரியவாளைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும். "எங்கிருந்தோ வந்த வெளிநாட்டார் செய்த புண்ணியத்தில், ஆயிரத்தில் ஒரு பங்கு கூட நாம் செய்யவில்லை?"-- என்று அணுக்கத் தொண்டர்களான நாங்கள் ஆதங்கப்பட்டுப் பேசிக் கொண்டோம்.