Sunday, June 21, 2020

க்ரஹணம் தீட்டு அல்ல அது பீடை

பக்தர்கள் இவற்றை அவஶ்யம் வாசிக்கும்படியாக கேட்டுக்கொள்கிறேன். 

- Dr N.S. பார்த்தஸாரதி பட்டாச்சார், திருவல்லிக்கேணி.

--------------------------------
 க்ரஹணம் தீட்டு அல்ல அது பீடை. 

பீடை என்பதன் மற்ற வார்த்தைகள் துன்பம் கஷ்டம் ஶ்ரமம் ஆர்த்தி. 
ஆம்!
 ஆர்த்தி என்று பசங்களுக்கு பெயர் வைத்து விடாதீர்கள். ஆர்த்தி என்றால் கஷ்டம் என்று அர்த்தம். ப்ரணத ஆர்த்தி ஹரன் - தன்னை ஸேவித்தவர் கஷ்டத்தை தீர்ப்பவன் வரதராஜப்பெருமாள் என்று பொருள்.

பீடை அதாவது கஷ்டம் தரும் காலத்தை புண்யகாலமாக்கி நல்லது செய்கிறோம். அதனால் க்ரஹணம் ஆனதும் பூணூல் மாற்ற அவஶ்யமில்லை

 எட்டு வயது முதல் எண்பது வயது வரை தான் வ்ரதம் கண்டிப்பு என்று விதி. 
க்ரஹணத்தின் போதும் அது முடிந்த பின்னும் ஸ்நானம் சொல்லப்பட்டுள்ளது. அதைச் செய்வோர் வயிறு காலியாக இருப்பதன் பொருட்டு சாப்பிடாமல் இருக்க இயற்கை விதியாக நிர்ணயித்துள்ளது மிகச்சிறந்த நமது இந்து மதம். வேறேதும் காரணமில்லை. மக்கள் இதைச் சொன்னால்  பயபக்தி இன்றி செயல்படக்கூடும்  என்பதால் பல காரணம் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தினர்.

80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் எட்டு வயதுட்பட்ட  குழந்தைகள்  ஆரோக்யம் குறைந்தோர் கர்ப்பிணிகள் சிறுகுழந்தை உடைய பெண்கள் பசி தாங்காதோருக்கு விதிவிலக்கு உண்டு. தாராளமாக காலையில்  பழங்கள் சாப்பிடுங்கள். அல்லது இட்லி உப்புமா போன்றது கூட சக்தியற்றோர் பசியின் தன்மை நீரிழிவு பொறுத்து சாப்பிடலாம். தேகத்தைக் காப்பது  கடமை. அப்போதுதான் அனுஷ்டானம் செய்ய முடியும்.

 கர்ப்பிணிகள் வெளியில் செல்லக்கூடாது  மங்கலான சூரியனை நேரடியாகக் காண்பது எவருக்குமே பெரும் அபாயம். கண்பார்வை பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.  அதனை முன்னிட்டு நம்மால் காக்கப்பட வேண்டிய கர்ப்பிணிகள் வெளிவரத் தடை உள்ளது.

 ஆண்களும் பெண்களும் குளம் நதீ அல்லது கிணற்றில் க்ரஹணம் துவங்கும் போது  ஸ்நானம் செய்ய வேண்டும். அதற்காக வெளிவந்தாக வேண்டும். பிறகு ஜபம் தர்ப்பணம் மீண்டும் ஜபம்  தானம் போன்றன செய்து பிறகு க்ரஹண விமோசன ஸ்நானம் மீண்டும் நதீ குளம் அல்லது கிணற்றில் ஸ்நானம் செய்ய வெளிவர வேண்டும். ஆக எவரும் வெளியே வருவது தவறு என்பது தவறு.  ஆனால் வெளியே வருவோர் சூரியனை நேரடியாக பாராமல் உலா வரவும். சூர்யனைப் பாராமல் கிழக்கு நோக்கி ஸ்நானம் செய்யவும்.  இப்போதெல்லாம் வெளியே வரவே தடை உள்ளதால் எல்லாம் பாத்ரூமிலேயே ஸ்நானம் ஆகிறது. ஸ்நானத்தின்போது அச்யுதா அனந்தா கோவிந்தா நாராயணா ஹரீ என்று சொல்லி பெருமாள் பாத தீர்த்தமான கங்கையில் ஸ்நானம் செய்வதாக எண்ணி ஸ்நானம் செய்யவும்.


காலை எழுந்ததும் வழக்கம் போல அனுஷ்டானம் செய்யவும். தண்ணீர் பாத்ரம் பால் தயிர் மோர் ஊறுகாய் ஆகியவற்றில் தலா இரண்டிரண்டு தர்பம் போடவும். தர்பம் கிடைக்கவில்லை என்றால் காய்ந்த அருகம்புல் கூட போடலாம். துளசி போடலாம். க்ரஹணம் முடிந்ததும் அவற்றை எடுத்துவிடலாம்.

பிறகு க்ரஹணம் துவங்கியதும் ஸ்நானம் செய்து காயத்ரீ ஜபம் செய்யவும். தர்ப்பணம் செய்வோர் தர்ப்பணம் செய்து பிறகு ஜபம் செய்யவும்.

மக்கள் அனைவரும் திருவஷ்டாக்ஷரம் ஓம் நமோ நாராயணாய அல்லது பஞ்சாக்ஷரம் ஓம் நமஶ்ஶிவாய அல்லது இரண்டும் ஜபிக்கலாம். தலா 1008 அனைவரும் ஜபிக்கவும்.

மக்கள் அனைவரும் அவசியம் அகத்தில்  ஸ்வாமி படம் முன் திருவிளக்கு ஏற்றி இரண்டு ஊதுவத்தி தூபம் போட்டு வைத்து ஜபம் பாராயணம் செய்யவும். ஹரிநாம ஸங்கீர்த்தனம் செய்வது மிகவும் சிறப்பு. தற்போது நிலவும் எல்லா சிரமமும் தீரும். இறைவன் அருளட்டும். 

க்ரஹணம் முடிந்ததும் விமோசந ஸ்நானம் செய்து அகம் அலம்பித்தள்ளி புதிதாகத் தளிகை செய்து பெருமாளுக்கு கண்டருளச் செய்து அனைவரும் சாப்பிடவும்.

No comments:

Post a Comment