34. ஆசீர்வாதம் (1 of 2) (சிசீ6) #ganeshamarkalam
இப்பெல்லாம் ஒரு கல்யாணம் விடாம போயிடுவேன். சாப்பாட்டுக்கு அலையரான்னு சொல்லுவேள். அப்படி இல்லை. நிறைய விழயங்களை தவிர்க்க ஆரம்பிச்சாச்சு. எடை குறையணும்னுட்டு கொஞ்சமா சாப்டாரது. ரெண்டு வேளை காபி, ரெண்டு வேளை ஆகாரம். அதுலேயே ஒரு வேளை டிப்பன். அப்ப ஏன் கல்யாணத்துக்கு போணம்?
நல்ல கேள்வி. நம்பளால் நன்னா சாப்பிட முடியலைன்னா எதுக்கு ஒரு பெரீய இலை மின்னாடி உக்காந்துண்டு அழைப்பு கொடுத்தவளுக்கு வேட்டு வைக்கணும்னு தோணும். சிலது கல்யாண சாப்பாட்டில்தான் கிடைக்கும். தினப்படி சமைப்பதில்லை. அந்த நப்பாசைன்னு வச்சுக்கலாம். காய்கறிகளை இன்னும் போடுங்கோன்னு கேட்டு வாங்கி சாப்டூட்டு பலதை வேண்டாம்னு சொல்லிட்டு நிறைவா எழுந்து வந்துடலாம். அதைத்தான் செய்யறது. ஆனா விசேஷங்களுக்கு போவதால் கூப்பிட்டவாளுக்கு மரியாதை. மனுஷாளப் பாத்துப் பழக, பெச அவகாசம் ஏற்படுத்திக்கரம். இதெல்லாமும் முக்கியம். சாப்பாடு பிரதானம் கிடையாது.
தெரிஞ்சவா கல்யாணம்னா மின்னாடி கூட்டிண்டு போய் உக்கார வச்சுடரா. பல கல்யாணங்களில் நாம வந்தமா சாப்டமான்னு கண்டுக்கரதில்லை. நாமளா அழைச்சவா கிட்டக்கே போய் “கங்க்ராட்ஸ்” சொல்லி, மாட்டுப்பொண் வந்துட்டாளா, இல்லை பேரனுக்கு உபநயனம் ஆச்சானு எதுக்கு வந்தம்னு ஞாபகம் வச்சிண்டு கேட்டுட்டு அப்பரமா உக்காந்துப்பதை வழக்கம். இப்பெல்லாம் சொந்தங்களும், நட்புகளும் பலநாள் பாக்காமலே போனிலும், வாட்ஸ்ப்பிலும் கழியரதுனாலே நேரில் போய் கை குலுக்கரச்சே இன்னார்தான் நான்னு அறிமுகப் படுத்திக்க வேண்டியிருக்கு.
கோயமுத்தூரில் என் ஷட்டகர் பொண் கல்யாணத்துக்கு போனேன். எனக்கு 5 மச்சினன், 3 மச்சினி. சில மச்சினன்களை பாத்து வருஷங்களாச்சு. நடப்பதோ ஷட்டகராத்து கல்யாணம். எல்லாரும் வருவா. “சத்திரத்தில் போய் டேரா போடேண்டாம், பெரீய ஹோட்டலா தங்கிக்கலாம், நீங்க மட்டும் வெளீநாடெல்லாம் போனா தங்கிக்கரேள்?” வனஜா ஆத்தில் ஆர்ப்பாட்டம். அது மட்டுமா? “இன்னைக்கு கார்த்தாலே ஃப்ளைட்லதான் வந்தம், அவிநாசி ரோடில் ரெசிடென்சி டவர்ஸில் ஜாகை.” மண்டபத்தில் சொல்லிக்கலாம். செக்கின் செஞ்சதும் “தங்கையும் மாப்பிள்ளையும் விரதத்துக்கே வந்துடுன்னா. நான் சீக்கிரம் கிளம்பிப் போரேன் நீங்க மொள்ள 4 மணிக்கா வந்தாப் போதும், மாப்பிள்ளை அழைப்புக்கு.” இவள் 10 மணிக்கே ஏர்போர்ட்டுலேந்து வந்த கார்லே போயாச்சு.
எதுக்குச் சொல்ல வரேன்னா, சாயங்காலம் நான் தனியாப் போய் நுழையரச்சே யாருக்கும் என்னை அடையாளம் தெரியலை. இவளோட போயிருந்தாலாவது அக்காளோட வரது அத்திம்பேராத்தான் இருக்கும்னு நம்பளையும் சௌக்கியமான்னு கேட்டிருப்பா. சேர் போட்டிருக்கு, ஒண்ணில் உக்காந்திண்டு பக்கத்தில் கிடந்த ந்யூஸ் பேப்பரை மேயரேன். வனஜாதான் என்னை பாத்துட்டு “பார்டா அத்திம்பேர் வந்திருக்கர்!” மாடி பால்கனீலேந்து கத்த எல்லாரும் வந்து குசலம் விசாரிச்சா. கடைசீ மச்சினன் “நீங்களா இருக்குமோன்னு நினைச்சேன்.” அதுக்கப்பரம் கேக்கணுமா, ஆத்துக்கு மூத்த மாப்பிள்ளையாச்சே! என்னைச் சுத்தி கட்டம் கட்டிட்டா.
என் மாமியாரும் மாமனாரும் கரெக்டா டயத்துக்கு வரவே அவாளப் போய் கைத்தாங்கலா அழைச்சிண்டு வந்து உக்கார வச்சேன். அவாளோ அத்தனை வயசுலேயும் என் உபசரணையா என்னென்ன செய்யணுமோ அதெல்லாத்தையும். பையனைக் கூப்பிட்டு அத்திம்பேருக்கு ஜூஸ், காபி, ஒரு தட்டில் சூடா வாழைக்கா பஜ்ஜீன்னெல்லாம் ஆர்டெர் செஞ்சிண்டு. ஒவ்வொரு ஐடத்தையும் என்னோட சேர்ந்து அவாளும் சாப்டூண்டு அதகளம்தான்.
பக்கத்தில் இருக்கும் கோவில்லேந்து மாப்பிள்ளை அழைச்சிண்டு வந்தம். அப்பரம் ரிசெப்ஷண், டின்னர்னு நாங்க ஹோட்டலுக்கு திரும்பச்சே மணி 11. “எங்க கூடவே இருடீ!” தங்கைகள் சொன்னாளாம். “இத்தனை காசு போட்டு ரூமெடுத்துட்டு தங்கலைன்னா? அதான் வந்துட்டேன்.”. இவனை தனியா விட்டா எதாவது எஞ்சாய் செஞ்சுடப் போரானேன்னும் இருக்கும். அதைத் தவிற பெரீசா ஃபிலிப்ஸ் ஹேர் ட்ரையெர் பாத்ரூமில் பாத்திருக்கா. கார்த்தால தலைக்கு குளிச்சுட்டு அதை ட்ரை செய்யணும்னும். இவள் கண்ணப் பாத்தாலெ எல்லாம் விளங்கும். ரெம்ப நாழி பாத்திண்டிருந்தா அதாலேயே மாய்மாலம் செய்வா. “கார்த்தாலே சிக்கிரமே போணம், செர்ந்தே போவம்.” சொல்லிட்டு என்னை சீக்கரம் தூங்கப் பண்ணிட்டா.
நன்னாதான் இருக்கு இத்தனை பெரீய படுக்கையில், கிங்க் சைஸ்னு கேட்டு வாங்கினேன். சார்ஜும் கூடத்தான். நாளைக்கு முஹூர்த்தம் ஆனதும் கொட்டிண்டு கிளம்பி வந்துடணும். மத்தாநா கார்த்தாலே ஏர்போர்ட்டுக்கு போணம். இன்னொருநா ராத்திரி இங்கே தங்கரோம்னு நிம்மதியா தூக்கம் வந்தது.
இந்த கல்யாணம் கார்த்தீன்னு ஜோடியாக் கிளம்பிப் போனா நமக்கு நடந்தது ஞாபகத்துக்கு வந்து ஹிம்சை செய்யும். என் கல்யாணம் ராஜா ஸ்ட்ரீட் சங்கர மடத்தில். என்னை எந்த கோவில்ல வச்சு அழைச்சான்னு மறந்தே போச்சு. இவளைக் கேக்கலாம்னா அசந்து தூங்கரா. ஆனா அன்னைக்கு பரிஜாரகன் போட்ட பருப்புசிலி நன்னா ஞாபகம் இருக்கு. இப்பல்லாம் பால்போளி, பானிபூரீ, சன்னா படூரா, நூடிள்ஸ்னு வைக்கரா. தனியா சாட் ஸ்டாலாம். 8 வகை பான். 24/7 ஃபில்டர் காபி. கம்பேர் செய்யப்பிடாது. துக்கமா இருக்கும்.
கார்த்தாலே கரெக்ட்டா போயாச்சு. ஹோட்டலில் புஃபே மிஸ், ஆனா அங்கே நிறைய கிடெச்சது. ஒவ்வொண்ணுலேயும் லைட் டச், வடை மேட்டரில் பூந்து பூறப்பட்டு, திரும்ப வெண் பொங்கலுக்கு வந்து, ரெம்ப யோசிச்சு வேண்டாமேன்னு விட்டூட்டு அப்பரமா ஆபத்துக்கு பாபமில்லைன்னு 4 பூரி, பைனாப்பிள் கெசரி தொட்டுண்டு. எழுந்து மொள்ள மேடைக்கு மின்னாடி வந்து சௌரியமா இடம் பாத்து உக்காந்தாச்சு. என்னைப் பாத்துட்டு மாமனாரும் கிட்டக்க உக்காந்திண்டர். வீடியோ கேமரா திரும்பினா நாங்கதான் விழுவம். வனஜாதான் உக்காராம இப்படியும் அப்படியுமா தெரிஞ்சவா தெரியாதவான்னு பாகுபாட்டில்லாம ஓடிப் போய் கட்டிப் பிடிச்சிண்டு. ரெம்பநா கழிச்சு சந்திச்சுக்கராளாம்!
உன்னிப்பா கவனிச்சுப் பாத்தா ரகஸியம் கண்டுபிடிச்சுடலாம். இவள் கட்டிப் பிடிச்சிண்டவா எல்லாரும் வைர அட்டிகை போட்டிண்டு, பளிச்சுன்னு புடவை. அப்படி மினுக்கிண்டு வரவா பக்கமா வீடியோக்காரன் ஃபோகஸ் பண்ரான்னும் தெரிஞ்சே அப்படி செய்யரா. சிலரை கை பிடிச்சு குலுக்கரா. அவாள்லாம் நன்னா தெரிஞ்சவா, ஆனா சிம்பிளா ட்ரெஸ். அப்பரமா சொன்னா, “முஹூர்த்தம் முடிஞ்சு விருந்து சாப்டூட்டு போரப்போ தாம்பூலப் பை கொடுக்கரச்சே, ஸ்பெஷல் தாம்பூலம் எடுத்துத் தர என்னைத்தான் இன்சார்ஜா போட்டிருக்கா.” “அதில் என்ன இருக்கு?” “3 இன்சுக்கு 2 இன்ச் டுப்பர்வேர் டப்பா”, நினைச்சிண்டேன். ஷட்டகர் ஏன் இத்தனை தாம் தூம்னு சிலவு செய்யணும்? ப்ளாஸ்டிக் குங்கும சிமிழ் போராதோ? ஆத்துக்கு போய் தொறந்து பாத்ததும் எடுத்து தந்தவளுக்கு சாபம் நிச்சயம். இந்த மாதிரி இன்சார்ஜ் வேலையெல்லாம் ஒத்துக்கப் பிடாது. சொன்னா வனஜா கேக்க மாட்டா. ஏதோ UN அப்பாயின்ட்ம்ன்ட் கிடெச்சாப்போல் ஃபீல் வுட்டுண்டு.
அது என்னமோ தெரியலை மாங்கல்யதாரணம் ஆனதும் அக்ஷதை போட்டதும் பாதாம் பால், அல்லது ஜ்யூஸ் கொடுப்பாளே அதை எடுத்துண்டு யாராவது நம்ப பக்கமா வராளான்னு கண் அலையரது. மாமனார் சொல்ரர், “கவலைப் படாதீங்கோ மாப்பிள்ளை நம்ம ரெண்டு பேருக்கும் தனியா எவர்சில்வர் டம்ப்ளரில் எடுத்துண்டு வந்து தரச் சொல்லியிருக்கேன்.” “சம்பந்திப்பேரை கவனிக்கேண்டாமா?” “அதுகள் மேடையில் வீடியோக்கு போஸ் கொடுக்கரா பாருங்கோ. இப்பத்தைக்கு அவாளை கண்டுக்கவே வேண்டாம். பொண் கிடச்சு அவாத்து பிள்ளைக்கு கல்யாணம்னு ஒண்ணு ஆச்சே, அதுவே பெரீய விஷயம். சாயங்காலம் ஆமைவடை உங்களுக்கு கிடையாதுன்னு சொல்லிட்டாலும் சரீன்னுடுவா”.
ஒண்ணு இப்ப சொல்லியாணம். எனக்கும் என் மாமனாருக்கும் உள்ள சிநேகிதம் எங்களுக்கு மட்டுமே புரியும். எனக்கு கல்யாணம் ஆன அன்னைலேந்தே இனம் புரியாத ஒரு அன்னியோன்யம் எங்களுக்குள் பரவி ரெண்டு பேரையும் ஆட்கொண்டதை புரிஞ்சிண்டோம். வனஜாவ நான் கல்யாணம் செஞ்சுக்கலைன்னாலும், இவரை மீட் செஞ்சிருந்தா அப்படித்தான் ஆகியிருக்கும். இப்ப அவாத்து மாப்பிள்ளையா வேற ஆய்ட்டேன். வெள்ளைச் சட்டைதான் போட்டுப்பர். அப்பப்போ நல்லதா ஒண்ணு வாங்கிண்டு போயிடுவேன். அவரும் ஏதாவது அபூர்வமான விஷயங்களை வாங்கிண்டு வருவர். எனக்கு உபயோகப் படாத விஷயங்களும் அதுலே சேர்த்தி. ஆனா பாதுகாத்து வச்சுக்க வேண்டிய பொக்கிஷங்கள் அவை. இன்னைக்கு வேஷ்டீக்கு மேல் கட்டிண்டு வந்திருக்கேனே அதுவும் அப்படி ஒண்ணு. இவர் வருவர், இவருக்கு காமிக்கணும்னு மாட்டிண்டு வந்தேன்.
4 பர்ஸ் வச்ச 5இன்ச் அகல பெல்ட். என்னதுன்னு தெரியாதவா சட்டுன்னு பாத்துட்டு சம்பல் கொள்ளைக்காரா புல்லெட் மாட்டி வச்சிருக்கும் விஷயம்னு கிலிபிடிச்சு ஓடிப்போவா. ஒருக்கா தில்லீலே நான் இருந்தப்போ வந்தர். ஆசையா ஒரு புது சுமீத் மிக்ஸீயோட. நிஜாமுத்தீன் ஸ்டேஷன்லேந்து மயூர் விஹாருக்கு டேக்ஸீலே போரப்போ “வாழ்க்கை எப்படி போயிண்டிருக்கு மாப்பிள்ளை, வனஜா சமுத்தா இருக்காளா? இப்பவே சொல்லிடுங்கோ, ஆத்துக்கு போனதும் மனம் விட்டு பெச முடியாது.” அப்ப கல்யாணம் நடந்து 3 வருஷம்தான் ஆகியிருந்தது. குழந்தை இப்ப வேண்டாம்னு தள்ளிப் போட்டிருந்தம். அந்த கவலையும் அவருக்கு. தள்ளிப் போட்டது உங்க பொண்தான்னு எப்படி சொல்ல? வனஜா சமுத்தா இருக்காளான்னா? அவாத்தில் அழிச்சாட்டியம் செய்வளோ? பல அர்த்தத்தில் மாப்பிள்ளை கிட்டே என்னத்தை எப்படி கேக்கணும்னு நாசூக்கு தெரிஞ்சு வச்சிண்டு. புரிஞ்சிண்டு இவனா விவரம் சொல்லட்டும்னு. எமகாதகர்.
நான் மட்டும் லேசுப்பட்டவனா? “வாழ்க்கை நன்னா போயிண்டிருக்கு மாமா. எல்லாம் உங்க ஆசீர்வாதம்.” இவள் சமுத்தா இல்லையா, ஸ்மூத்தா போரதா, இல்லை கரடு முரடா அல்லாடரதான்னு இவரே கணிச்சுக்கட்டும், எதுவானாலும் அதுக்கு நீர்தான் காரணம்னு அர்த்தம் பண்ணிக்கட்டும்னு. “இந்த ஆசீர்வாதம் இருக்கே ரெம்ப பெரீய மேட்டர் மாப்பிள்ளை. ஒருநா நேரம் கிடைக்கரச்சே விவரமா பேசுவம்.”
இவர் தில்லி வரத்துக்கு 1 வாரம் மின்னாடி எங்கப்பாவும் அம்மாவும் வந்திருந்துட்டு சென்னைக்கு திரும்பிப் போனா. இவர் சொல்ரர், “உங்கப்பா இன்னும் ஒருவாரம் தங்கிட்டு போயிருக்கலாம், ஜாலியா பொழுது போயிருக்கும்.” “ஆமாம் மாமா. ஆனா பாருங்கோ ரெண்டு ரூம்தான், கீக்கிடம். வாடகை கொடுத்து மாளலை”. “ஆட்ஜெஸ்ட் பண்ணிண்டு இருந்துக்கலாமே.” எங்கப்பா மூக்குபொடி போடுவர். இவருக்கும் கொடுப்பர். அது இல்லாமப் போச்சுன்னு கவலை.
இதெல்லாம் அன்னைக்கு கல்யாண மேடை மின்னாடி உக்காந்துண்டு ஞாபகத்தில். வைபவம் நன்னா முடிஞ்சு, குழந்தைகள் ஆசீர்வாதம் வாங்கிக்க கையில் தேங்காயோட எழுந்து வரா. மாப்பிள்ளையாத்துப் பக்கம் பெரியவா நிறைய. ஒவ்வொருத்தருக்கா சாஷ்டாங்கமா நமஸ்காரம் செஞ்சுட்டு எங்க கிட்டேயும் வந்திண்டிருக்கா. “ஆசீர்வாதம் செய்ய தயாராகிக்கோங்கோ மாப்பிள்ளை!”
என்னன்னு சொல்லி ஆசீர்வாதம் பண்ண? ஆனா பாருங்கோ மணமக்கள் கிட்டக்க வரவர சட்டுன்னு சொல்லணும்னு வச்சிண்டது மறந்து போச்சு. சும்மா கையக் கும்டுண்டு அக்ஷதை போட்டுட்டா? பிடாது. அவா காது கேக்க நல்லதா எதையாவது சொன்னாத்தான். இவர் என்ன சொல்ராரோ அதையே சொல்லிடுவம்.
(நாளை நிறைவுபெறும்)
No comments:
Post a Comment