Sunday, June 21, 2020

இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 26

இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 26 
( Sujatha &Venkatesan 6381369319)

குரு ஷேத்திரம்...கிருஷ்ணன் பொறந்து வளர்ந்த மதுரா கோகுலம் பார்த்துட்டோம். அரசாண்ட த்வாரகாவும் தரிசனம் பண்ணியாச்சு. அவர் இந்து மதத்துக்கு வழங்கின பெரும் கொடையான பகவத்கீதை பிறந்த புண்ய பூமிய தரிசிக்கனும்னு ரொம்ப நாள் ஆசை...

இது 2012 ஆம் ஆண்டு. ஆத்துக்காரருடன் முதன்முதலில் பத்ரி நாத் யாத்திரையை முடித்து ஹரித்வார் இறங்கிட்டோம். ஆக்ரால ட்ரெய்ன் ஏற 3 நாள் அவகாசம் இருந்தது. அதனால குருஷேத்தரத்த தரிசனம் பண்ண முடிவு செஞ்சோம். ஹரித்வார்ல கார்த்தால ஏறின பஸ் லொங்கு லொங்குன்னு மத்யானம் ஒரு மணிக்கு குருஷேத்திரம் வந்தது. 

குருக்ஷேத்திர நகரம் முழுவதும் பல தங்கும் விடுதிகள், சத்திரங்கள் என பரவியிருக்கு.  அதுவும் சிறிய விடுதிகள்இல்லை. , பெரிய பெரிய விடுதிகள். ஒரே இடத்தில் 200-300 அறைகள் கொண்ட விடுதிகள் கூட உண்டு. கொடுக்கும் காசுக்கேற்ப அறைகள் கிடைக்கும் – 300 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை அறைகள் இருக்கின்றன.  ”ஜாட் மஹா சபா” என்ற ஒரு அமைப்பு இப்படி ஒரு மிகப் பெரிய தங்கும் விடுதியைக் கட்டி வைத்திருக்கிறது. பிரம்ம சரோவருக்கு மிக அருகிலேயே இருப்பதால் இங்கே தங்கலாம்னு இவர் சொல்றார். 

ரிக்‌ஷாவாலாகிட்ட தர்ம சத்ரம்னு  சொன்னதுல நல்ல வேளையா பிர்லா தர்மசாலாவில கொண்டு விட்டான். கொஞ்சம் வெய்ட் பண்ணி புக் பண்ணதில 300/-க்கு அருமையான ரூம். ஏற்கனவே பிரம்ம குண்டம் பற்றி கேள்விப்பட்டதால அங்க போய் குளிக்கலாம்னு முடிவு பண்ணோம். 

நாங்கள் முதலில் எங்களுக்கு எதிரே இருந்த ஆஸ்ரமத்திற்கு உள்ளே சென்று பார்க்க முடிவு செய்தோம். அங்கு இருந்தது பசுபதிநாத் என்னும் சிவன் ஆலயம்.  அதைத்தவிர ஒரு வேதபாட சாலையும் இயங்கறது. . மேலும் சிறு மியூசியம் ஒன்றும் இருந்தது.  அழகான பூக்கள் பூத்துக் குலுங்கும், நன்கு பராமரிக்கப்படும் நந்தவனம் எல்லாம் இருந்தது.

செம்பருத்தி பூ தான், சற்று பெரிசா, சிவப்பாக இல்லாமல் பின்கிஷ் ஆக இருந்தது பயண அலுப்பு தீர நிம்மதியா தீர்த்த மாடினோம். பக்கத்துல ஒரு தமிழ் பேமிலி. ரெண்டு வாண்டு பசங்களோட.பாஷை தெரியாத .வெளியூரில நம்மடவாள பாத்தா வர வாஞ்சையோட பேசிண்டோம். 
பத்து நாள் பயண களைப்பு தீர முங்கி முங்கி தீர்த்தமாடிண்டே அவாள்ட்ட இவர் எங்கேயோ படிச்சதை எடுத்து விடறார்.  பிரம்மா இந்த குளத்திலேர்ந்துதான் இந்த பிரபஞ்சத்தையே படைச்சாராம்..

இக்குளத்தில் இருக்கும் தண்ணீர் சரஸ்வதி நதியிலிருந்து உருவாக்கப்பட்டது என்ற கதையும் உண்டு. இப்ப நவீன வசதிகளோட 3300 அடி நீளம், 1500 அடி அகலத்துடன் செவ்வக வடிவில் புதுப்பிச்சிருக்கா…

எந்த நேரத்திலும் இங்கே குளித்தபடி இருக்கிறார்கள். நாங்கள் சென்ற காலையிலும் நிறைய மக்கள் – குளத்தினைச் சுற்றிலும் படித்துறைகள் இருப்பதால் நிதானமாக குளிக்கலாம். என்ன கொஞ்சம் கவனமாக இறங்க வேண்டும் – படிகள் முழுவதும் பாசி. ஆங்காங்கே வழுக்கி விழும் ஆபத்து இருக்கிறது என எழுதி வைத்திருக்கிறார்கள். தண்ணீரில் இறங்கும்போது மே மாத கோடையிலும் தண்ணீர் ஜில்லென்று சுகமாக இருக்கிறது. சுகமான ஒரு குளியல்.....  காவேரி நதியில் குளித்த அனுபவம் நினைவுக்கு வந்தது. அகண்ட காவேரி தற்போது வறண்ட காவேரியாக மாறி இருப்பதை நினைத்து வருத்தம் தான் மிஞ்சியது.

கோவில் வெளியிலும், பிரம்ம சரோவர் சுற்றி அமைத்திருக்கும் பாதையிலும் நிறைய காவி வேட்டி கட்டிய சாமியார்களையும், யாசகம் கேட்பவர்களையும் பார்க்க முடிகிறது. குளிக்கும்போது கரையில் வைத்திருக்கும் பொருட்களையும் ஒரு கண் பார்த்துக் கொண்டே குளிப்பது அவசியம். இல்லையெனில் நொடியில் காணாமல் போய் விடுகிறது. எங்களுடன் வந்த ஒருவரின் பேண்ட் இப்படித்தான் காணாமல் போனது! நல்ல வேளை வேறு வேட்டி இருந்தது!

கூடவே யாசகம் கேட்பவர்கள் கொஞ்சம் அசிங்கமாகவும் நடந்து கொள்கிறார்கள். ஒரு ஆள் இப்படித்தான் வந்து ஒரு பெரியவரிடம் காசு கேட்க, அவர் ”முதல்ல குளிக்கவிடுப்பா” என்று சொல்ல, அவரை கன்னா பின்னாவென திட்டியபடிச் சென்றார். திட்டிச் சென்ற மொழி ஹிந்தி என நீங்கள் நினைத்து விடாதீர்கள்! சுத்தமாய் தமிழில் திட்டிச் சென்றார்!  காலம் காலமாக குருக்ஷேத்திராவிலேயே தங்கி விட்ட தமிழ்காரர்! இத்தனைக்கும் அந்த பெரியவர் குளித்தபின் தருகிறேன் எனச் சொன்னபிறகும் இப்படி திட்டு கிடைத்தது!

அவைகளை பார்த்து விட்டு, பிரும்ம சரோவரின் மத்தியில் அமைந்திருக்கும் சிவன் கோவிலுக்கு போனோம் . சிருஷ்டியின் ஆரம்பத்தில் பிரும்மா தன் தபோ பலத்தால் உருவாக்கியதால் பிரும்ம சரோவர் என அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணத்தன்று இதில் நீராடுவது சிறப்பு என்கிறார்கள். பாரதப்போரின் இறுதியில் துரியோதனன் ஒளிந்து கொண்ட மடு இதுதான் என்கிறார்கள்.

இதை நான் இன்னிக்கு எழுதும்போது சூரிய க்ரகணம். படிக்கற உங்களுக்கும் பிரம்ம சரோவர்ல தீர்த்தமாடின புண்யம் கெடைக்கட்டும்
      

பக்பத்தில் இருக்கும் சிவன் கோவிலில் தரிசனம் முடித்துக் கொண்டு கீதோபதேச ரதத்தை காணச்சென்றோம். அதற்கு ஒரு பாலத்தை கடக்க வேண்டும். வெய்யில் சுட்டெரித்தது.  கையில் ஒரு சிறிய குடை, அல்லது தலைக்கு ஒரு தொப்பி கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது.

கீதா ரதம் 
பாலத்தை கடந்தால் ஒரு  புல்வெளி, அதைத்தாண்டி ஒரு பெரிய மைதானம். புல்வெளியில் இரும்பினால் ஆன கீதோபதேச ரதம், முப்பத்தைந்து டன் எடையாம். நிச்சயம் இருக்கும். ஏனென்றால் அந்த ரதமும் சரி, அதில் பூட்டப்பட்டிருக்கும் குதிரைகளும் சரி, க்ரிஷ்ணார்ஜுனர்களும் சரி அசல் பரிமாணத்தில் உள்ளன. 

அங்கிருந்து கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்த ஜ்யோதிசர் என்று வழங்கப்படும் இடத்திற்குச் சென்றோம். அங்கு இரண்டு பெரிய ஆல மரங்கள் உள்ளன. அதில் ஒன்று இருக்கும் இடம்தான் கீதை பிறந்த இடம் என்கிறார்கள். ஒரு மேடையின் மீது இருக்கும் இதன் கீழ் ராதா கிருஷ்ண விக்ரஹம் இருக்கிறது. அதை ஒட்டி வைக்கப்பட்டிருக்கும் கீதோபதேச சிலை காஞ்சி காமகோடி மடத்தால் நிறுவப்பட்டது என்கிறது கல்வெட்டு. 

நல்லா தீர்த்தமாடி ரெண்டு மணி நேரம் சுத்தினதுல கபகபன்னு பசி. வெளியே சுமாரான ஓட்டல். சாப்ட்டுட்டு ரூம்ல வந்து நல்ல தூக்கம் சாயந்தரம் ரண பூமி போனோம். பார்த்த அனுபவம் நாளை...
(திருமதி சுபஶ்ரீ எழுதும் கைலாஷ் பயண அனுபவம் புதன் கிழமை முதல்..பின்னர் அடியோங்களின் மலை நாட்டு திருப்பதி ,முக்தி நாத்....,என தொடரும்)
படங்கள். (பிரம்ம சரோவர் காட்சிகள்)



No comments:

Post a Comment