திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள்
திருக்கண்ணபுரம் மிக உயரமான ஏழு மதில்களால்சூழப்பட்ட திவ்ய தேசமாகும்! இவ்வெம்பெருமானை ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்! நம்மாழ்வார், திருவாய்மொழியில் 11 பாசுரங்கள் இவ்வெம்பெருமான் மீது பாடியுள்ளார்! அதில் 7 பாசுரங்கள் இக்கோயில் மதில்நலம் பேசப்படுகிறது!
குலசேகராழ்வார், "கன்னிநன் மாமதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே" - அழிவற்ற, அழகான, பெரிய மதிள்களால் நான்கு புறமும் சூழப்பட்ட திருக்கண்ணபுரம் என்கிறார்!
திருமங்கையாழ்வார், பெரியதிருமொழியில், "கன்னி மாமதிள்சூழ் கண்டபுரத்து அம்மான்" என்றும் "அணிமுத்தம் தெண்திரைகள் வரத்திரட்டும் திருக்கண்ணபுரம்" என்றும் பாடியுள்ளார்! அலைகள் முத்துக்களை கரை சேர்க்கும் அலைகள் சேர் கண்ணபுரமாம்!
ஆண்டாள், "காட்டில் வேங்கடம், கண்ணபுர நகர், வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்" என்கிறாள் நாச்சியார் திருமொழியில்! காடுகள் சூழ்ந்துள்ள திருவேங்கடத்திலும், நகரங்கள் சூழ்ந்துள்ள கண்ணபுரத்திலும் எந்த குறையுமின்றி, மகிழ்ந்து உறையும் வாமனன் என்கிறாள்!
இங்குள்ள குளத்திற்கு நித்யபுஷ்கரணி என்ற சிறப்பு பெயர் உண்டு! பல்வேறு புஷ்கரணிகளில் கிரஹண காலம் தவிர, நீராடுவதற்கு கால நியமம் உண்டு. ஆனால் இங்குள்ள புஷ்கரணியில் எல்லா நாட்களிலும், எல்லா வேலைகளிலும் நீராடலாம். சகல பாவங்களையும் போக்கவல்லது. இதனாலேயே இதற்கு நித்யபுஷ்கரணி என்னும் பெயர் பெயர் வந்தது - இது பிரம்மா, சத்யலோகத்தில் மற்ற நதிகளிடம் சொன்ன வார்த்தை.
திருமங்கையாழ்வார், பெரியதிருமொழியில் (8-9), இநதப் பெருமாளிடம் சரணடைந்து பிறவிப்பேறு பெற்றதை, ஒவ்வொரு பாசுரத்தின் இறுதியிலும் பெருமாளை அடைந்து உய்ந்து போனேனே என்று பறைசாற்றுகிறார்!!
No comments:
Post a Comment