சர்க்கரை
==========
சந்தோஷமான , மனதுக்குப் பிடித்த விஷயங்களுக்கு சர்க்கரை metaphor ஆகிறது.
யாரேனும் வந்து நம்மிடம் 'ஸ்வீட் எடுத்துக்கங்க ஜீ' என்றால் ஏதேனும் நல்ல சமாச்சாரம் சொல்லப்போகிறார் என்று அர்த்தம்.
'வாழ்க்கை இனிக்கிறது , இனிய பயணம் ' என்றெல்லாம் சொல்கிறோம்.
இதற்குப் பயாலாஜிக்கல் காரணம் சர்க்கரை உண்மையிலேயே மகிழ்ச்சியைத் தூண்டுகிறது.
சர்க்கரை (குளுக்கோஸ்) உள்ளே போனதும் மூளை 'நான் சந்தோஷமாய் இருக்கிறேன்' என்பதற்கு அறிகுறியான டோபமைன் சேர்மத்தைச் சுரக்கிறது.
உண்மையில் சர்க்கரை தான் நமக்கெல்லாம் பெட்ரோல்.
நாம் சாப்பிடும் உணவு குளுக்கோஸாக மாற்றப்பட்டு செல்களுக்கு சக்தி அளிக்கிறது.
இந்த ஆற்றலில் 20% டை திருவாளர். மூளையே எடுத்துக் கொள்கிறார்..
மூளையில் குளுக்கோஸை சேமித்து வைக்கும் வசதி இல்லை.
எனவே அது எப்போதும் energy hungry யாக இருக்கிறது.
குளுக்கோஸ் அளவு குறைந்தால் ஒரேயடியாகப் படுத்துவிடவும் செய்கிறது.
மூளை சோர்வடைந்தால் இனிப்பாக ஏதேனும் குடித்து விட்டு வேலையைத் தொடருங்கள்.
கவிதை எழுத உட்காரும் முன் ஒரு டம்பளர் சர்க்கரையை விழுங்குங்கள்.
ஹிஹி சும்மா சொன்னேன்.
சர்க்கரை சாப்பிட்டால் தேவதச்சன் மாதிரி கவிதை எழுத வரும் என்றில்லை.
நாம் எழுதும் மொக்கைக் கவிதையையே முகுந்த் நாகராஜன் ரேஞ்சுக்கு நினைத்துக் கொள்ள வைத்துவிடும் டோபமைன்.
உடலில் எக்கச்சக்கமாக fluid loss ஆகி நினைவு தப்பி ஆஸ்பத்திரிக்குப் போனால் குளுக்கோஸ் drips ஏற்றுவார்கள். (உண்மையில் இறக்குவார்கள் !)
இது.. நம் வாய், வயிறு, கல்லீரல் , இதயம் எல்லாவற்றையும் பைபாஸ் செய்து நேரடியாக செல்களுக்கு இந்தாடாப்பா என்று குளுக்கோஸை வழங்கி கில்மா கொடுக்கும்.
செல்கள் செம ஆக்டிவ் ஆகிவிடும்.
வீட்டில் காய்கறி வாங்கி சமைத்து சாப்பிடுவதற்கும் swiggy யில் ஆர்டர் செய்வதற்கும் உள்ள வேறுபாடு போல!
சர்க்கரை என்ற சொல் 'சர்க்கரா' என்ற சம்ஸ்கிருத மூலத்தில் இருந்து வருகிறது.
இந்திய மொழிகள் பலவற்றில் , ஏன் உலக மொழிகளில் கூட இந்த வேர்ச்சொல் மாறாமல் உள்ளது.
கரும்பின் அறிவியல் பெயரே Saccharum officinarum தான்.
நாம் சிலசமயம் சீனி என்றும் அஸ்கா என்றும் அழைக்கிறோம்.
உடம்பு இப்படி சர்க்கரையால் இயங்கினாலும் சர்க்கரை கெடுதல் என்று சிலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.
ஜாங்கிரியைப் பார்த்ததும் ஏங்கிரியாகி ஓடுபவர்கள் இருக்கிறார்கள்.
'அரை கப் காபி, சர்க்கரை சேர்க்காம ' என்று பாவமாக சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
'That which nourishes you, kills you' என்ற தத்துவம் தான் இங்கேயும்.
நம் உடம்பில் குளுக்கோஸ் லெவல் ஒரு மட்டத்தில் எப்போதும் maintain செய்யப்படுகிறது.
இதை செய்வது இன்சுலின் என்னும் ஹார்மோன்.
இது குளுக்கோஸை செல்களில் பத்திரமாக சிந்தாமல் சிதறாமல் பட்டுவாடா செய்து ஆக்ஸீகரணம் அடைய உதவுகிறது.
ஹோட்டல் சர்வருடன் இதை ஒப்பிடலாம்.
ஹோட்டலில் இஷ்டத்துக்கு எல்லாரும் கிச்சனில் புகுந்து எடுத்துத் தின்னலாம் என்றால் எப்படி இருக்கும்?
சிலருக்கு எல்லாம் கிடைக்கும்.
சிலருக்கு ஒன்றுமே கிடைக்காது!
மேலும் அதிகப்படியான குளுக்கோஸை 'நாளைக்கு வேணுமப்பா' என்று கல்லீரலில் சேர்த்தும் வைக்கிறது.
இன்னும் அதிகமானால் வயிற்றில் , பிருஷ்டத்தில் தாராளமாக கொழுப்பாக சேர்த்து வைக்கிறது.
பட்டினி கிடக்க நேரிடும் போது, ஆள் எதையும் உள்ளே அனுப்பவில்லை என்றால்...
உடல் கொழுப்பை எரிக்கத் தொடங்கும்.
தன்னைத் தானே தின்னுதல் ! Cannibalism !
இதனால் தான் உணவு உண்ணாமல் செத்துப் போக பல நாளாகும்.
இந்த சமர்த்தான process இயற்கையாக நொதிக்கும் சர்க்கரைக்கும் , பழம் , காய்கறி, அரிசி இவைகளில் இருக்கும் சர்க்கரைக்கும் மட்டுமே பொருந்தும்.
நாம் தினம் காபி, டீ , கோக், பெப்சி, ஐஸ்கிரீம், சாக்லேட் இவைகள் மூலம் ஏராளமான சர்க்கரையை உள்ளே கொட்டுகிறோம் .
இதனால் இன்சுலின் OT செய்ய ஆரம்பிக்கும்.
அதுவும் இல்லாமல் ஏராளமான கெமிக்கல் சேர்த்து refine செய்து கிடைக்கும் சக்கையான வெள்ளைச் சர்க்கரை, உடம்பில் உபாதைகளை சேர்க்க ஆரம்பிக்கும்.
கொழுப்பு படியும்.
பற்கள் வலுவிழக்கும்.
இயற்கை சர்க்கரை பெரும்பாலும் ஸ்டார்ச் -களாகக் கிடைக்கிறது.
இவை குளுக்கோஸின் நீண்ட நெடிய கார்பன் சங்கிலிகள்.
இதை உடைத்து குளுக்கோஸை செல்களுக்குத் தள்ள உடம்பு கொஞ்சம் வேலை செய்கிறது.
செயற்கை சர்க்கரை இப்படி சங்கிலிகள் இன்றி எளிய மூலக்கூறுகளாகக் கிடைக்கிறது.
வாழைப்பழ சோம்பேறிக்கு பழத்தை உரித்துத் தருவது போல .
இந்த சர்க்கரை உடனே செல்களுக்குப்
போய் விடுகிறது.
instant எப்போதும் ஆபத்து தான்.
இன்சுலின் என்னடா சர்க்கரை எகிறுகிறதே என்று விழித்து வேலை செய்ய ஆரம்பிக்கிறது.
excess சர்க்கரையைப் பிடுங்கி எதிர்காலத்துக்காக சேர்த்து வைக்கிறது.
இதனால் ஸ்வீட் சாப்பிட்டவுடன் பசிப்பது போலவும், களைப்பாகவும் உணர்கிறோம்.
எனவே மீண்டும் அதிகமாக சாப்பிடுகிறோம்.
ஸ்வீட்-டை சாப்பாட்டின் இறுதியில் சாப்பிடுவதே நல்லது.
இன்னொரு விஷயம் .
மாற்றுச் சர்க்கரை , ஸ்வீட்ட்னர் , சுகர் ப்ரீ இவைகளின் பக்கமும் போய் விடாதீர்கள்.
எல்லாம் ஏமாற்றுவேலை தான்.
(வெள்ளையில் இருந்து நாட்டுச் சர்க்கரை, தேன் என்று மாறி பின்னர் அதையும் நிறுத்தி விடுவது நல்லது.)
ரத்தத்தில் கொழுப்பு சேர ஆரம்பித்தால் இன்சுலினின் வேலை தடைபடுகிறது.
வருடக்கணக்கில் எக்ஸ்ட்ரா வேலை பார்த்த இன்சுலின், ஒருநாள்..
'நீயாச்சு, உன் உடம்பாச்சு, இனி ஐம் அவுட் ' என்று சுரப்பதை நிறுத்திக் கொள்கிறது.
கங்கிராட்ஸ் , நீங்கள் 'சர்க்கரை நோயாளி ' ஆகி விட்டீர்கள்.
இனிமேல் வெள்ளை சர்க்கரையை இன்னொரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளும் முன் உங்கள் கல்லீரலின் மேல் சற்று கருணை கொண்டு அதை அப்படியே டப்பாவில் திரும்பப் போட்டு விடுங்கள்.
நன்றிகளும்
பிரியங்களும்.
No comments:
Post a Comment