Friday, June 19, 2020

கழுகு

கழுகு (மனதை தொட்டுவிடும் கதைகள் – 32)
#ganeshamarkalam

கழுகுக்கும் கருடனுக்கும் வித்யாசம் தெரியுமா? தெரிஞ்சுண்டு, கருடனான்னு பாத்துட்டு கன்னத்தில் போட்டுக்கணும். இன்னைக்கு எதிர்பாராம வேலைக்குப்போரச்சே பாத்தேன். கன்னத்தில் போட்டுண்டேன். எங்கிட்டே இருக்கிர நல்ல பழக்கங்களில் அதுவும் ஒண்ணு. அப்புரம் குரங்குக்கு வாழைப்பழம் கொடுப்பேன். கொடுக்கலைன்னா உர்றுங்கும்.

எனக்கு திருகழுக்குன்றத்தில் மலை ஏற, அர்ச்சனை பண்ண சீட்டு விக்கர கவுன்டரில் வேலை. சரியா 9 மணிக்கு தொரக்கணும். கோவிலுக்கு தினம் வர ஒரு 30பேரில் 10 பேர் வைட் பண்ணிண்டிருப்பா. சரியா டயத்துக்கு போயிடுவேன். ஏறுவதுக்கு நபருக்கு 2 ரூபாதான். காமரா கொண்டுபோனா 10. சின்னப்பையன்தானே ஃப்ரீயா அனுமதியில்லையான்னு 2 ரூபாய்க்கு சண்டை போடரவாளும் உண்டு. செல் போனில் காமராவே இல்லைன்னு சொல்லிட்டு அல்லது பான்ட் பாக்கெட்டில் ஒளிச்சு எடுத்துண்டு போரவாளும் உண்டு.

நான் பாக்கிரது என்ன கலேக்டர் உத்யோகமா, எப்படி கிடெச்சதுன்னு கேக்கிரவா ரொம்ப பேர். நான் இங்கே வந்து சேர்ந்தது பெரிய கதை. என் பேர் கோபாலன். சொந்த ஊர் அம்பாசமுத்திரம். பிராமணக்குடும்பம்தான். இல்லைன்ன என் கதையை திண்ணையில் போடமுடியாது. கல்யாணம் ஆகி ஒரு பையன். ஒருநாள் நான் பாத்துண்டிருந்த வேலை போயிடுத்து. நகைக்கடையில் குமாஸ்த்தா. கையாடல் பண்ணிட்டேன்னு. நான் ஒண்ணும் பண்ணலை ஆனா 8 பவுன் கணக்கில் உதைச்சது. ஆத்திலும் வித்யாசமா பாத்தா. 

அதுவும் வாசுகிகிட்டே அவ அப்பாவே, “என்னடி மாப்பிள்ளை இப்படி பண்ணிட்டுவந்து நிக்கரார்”னு புலம்பல். “நல்லவேளை, முதலாளிகிட்டே பேசி போலீஸ் கேஸ் அது இதுன்னு போகாம பாத்துண்டுட்டேன்”னு ஜம்பம் வேர. என் பையன் பலராமன், அப்போ 2 வயசு ஒண்ணும் தெரியாது, ஆசையா அப்பான்னு வந்து மடீலே உக்காந்துண்டான். வெடுக்குன்னு வந்து கையை பிடிச்சு இழுத்துண்டு போயிட்டா வாசுகி. “இனிமேல் அப்பாகிட்டே போனாயானா உதைப்பேன்”.

அன்னைக்கு ராத்திரி எல்லோரும் தூங்கரச்சே வீட்டைவிட்டு கிளம்பி கால் போர போக்கில் நடந்தே திருநெல்வெலி வந்து அங்கேயிருந்து “விதௌட்”டில் விழுப்புரம் வந்தேன். TTR வரச்சே கக்கூஸில். கொஞ்சநாள் விழுப்புரம் கடைகண்ணியில் இதையும் அதையும் செஞ்சுண்டிருந்துட்டு யாரும் அதிகம் போகாத இடமா போயிடணும்னு யோசிச்சு இங்கே. இப்படி அலைஞ்சதில் நான் பாக்க பக்கி மாதிரி ஆயிட்டேன். யாரும் நான் பிராம்ணன்னு சொன்னா நம்ப மாட்டா. இப்போ அது முக்கியம் இல்லைன்னு தோணிடுத்து. 

ஒரு நல்ல மனுஷர் என் கதையை கேட்டு இரக்கப்பட்டு எனக்கு தங்கரத்துக்கும் சாப்பிடரத்துக்கும் ஏற்பாடு பண்ணினார். அப்புரம் நான் BCom வரைக்கும் படிச்சிருக்கேன்னுட்டு கோவிலில் வேலை போட்டுக்கொடுத்தார். பல விஷயங்களை பாத்துக்கரது, அதில் இதுவும் ஒண்ணு.

இங்கே கீழே பக்தவச்சலேஸ்வரர் கோவில், மலைமேலே வேதகிரீஸ்வரர் கொவில். ரெண்டும் விசேஷம். ஆனா அதிக கூட்டமே கிடையாது. கோவில் லக்ஷணமா நன்னா மைன்டைன் பண்ணியிருக்கும். எங்கேயும் இல்லாம இந்த கோவிலில் ஒரு விசேஷமென்னன்னா கோவிலுக்குள்ளேயே நிறைய பேர் நாசூக்கா பிச்சை எடுப்பா. நீட்டா வேஷ்டி சட்டை போட்டுண்டு நான் கோவில்லதான் சிப்பந்தியா இருக்கேன்னு கையை நீட்டுவான். கூட்டிபெறுக்கிர பெண்கள் எல்லாம் கையை நீட்டி காசு கேப்பா, நிம்மதியா பிரதக்ஷணம் செய்யமுடியாது. 

வெளீல இருக்கிர பிச்சைக்காரிகளும் ஒரு தொடப்பத்தை எடுத்துண்டு வந்து இங்கேயே வேலை செய்யராமாதிரு கிட்டெக்க வந்து சட்டையை இழுப்பா. கொஞ்சம் நஞ்சம் கோவிலுக்கு வரவா கூட அசூயைப்பட்டு ஓடிடுவா. பாடல் பெற்ற ஸ்தலம்.

அன்னைக்கு ஒரு மாமி அங்கே இருக்கிர பெரீய போர்டில் திருவாசகம் எழுதியிருந்ததை வாய் விட்டு சத்தமா அழகா பாட்டா படிச்சுண்டிருந்தா. முடிச்சுட்டு திரும்பரா பின்னாடி 8 பேர். காசு வேணும்னு. அப்புரம் ஒரு நாள் ரிஷப வாகனத்துக்கு அடீலே ஒரு தெருநாய் வந்து வெளீலே அடிக்கர வெய்யலுக்கு நிம்மதியா தூங்கிண்டிருந்தது. ஒரு கொரியாக்காரன் தரைல படுத்துண்டு அதை போடோ எடுத்தான்.

கழுகு வர மலைமேலே ஏறி அங்கே இருக்கிர சிவனை தரிசனம் பண்ரது ஒரு சுகானுபவம். 40 வயசானா கம்ப்ளீட் ஹெல்த் செக் பண்ணனும்னு சொல்லுவா. அது தேவையில்லை. இந்த மலையில் ஏறினாப்போரும் உங்க ஹார்ட்டில் அடைப்போ, ரொம்ப கோலஸ்ட்றால் இருந்தாலோ, மூட்டுபிடிப்போ எதுவானாலும் சொல்லிடும். இதமா கொஞ்சமா மட்டும் மூச்சு வாங்கி ஒண்ணும் பிராப்ளம் ஏற்படாம நீங்க மேலே ஏறிப்போயிட்டேள்னா இன்னொரு ரெண்டு வருஷத்துக்கு ஒண்ணும் கவலைப்படவேண்டாம். ஆரோக்யமா இருக்கேள்னு அர்த்தம். அதுக்குன்னு கீழே வந்ததும் பீட்ஜா பர்கர் சாப்பிடக்கூடாது. 

குரங்கு தொல்லை ஜாஸ்த்தி. மொத்தம் 565 படி. 300 தாண்டினதும் குரங்கு வரும். நீங்க அப்போதான் மூச்சு வாங்கிண்டு அக்கடான்னு தேங்காய் பையை கீழே வச்சுட்டு உக்காருவேள். எடுத்துண்ட்டு போயிடும். முறைச்சாலோ அல்லது “சூ”ன்னு சொல்லிப்பாருங்கோ, நாலு வானரம் கட்டம் கட்டி உங்க பையை பிடுங்காம விடாது. திரும்ப கீழே வந்து இன்னொரு பை வாங்கிக்கலாம்தான். ஆனா திரும்ப ஏறணுமே. சிவன் அர்ச்சனை ஆஞ்சனேயருக்கு போச்சுன்னு விட்டுடணும். மேலேந்து பாத்தா கீழே ஊர் அழகா தெரியும்.

நான் சீட்டு விக்கரதுக்கு கொஞ்ச நாழிதான். மத்தநேரம் வரவா போரவாளை பாத்துண்டும், கனகாம்பரம்னு ஒரு பூக்காரி என் கவுன்டருக்கு முன்னாடி கடை, அவளோட பேசிண்டிருப்பதும்தான். அன்னைக்கு ஒரு புதுசா கல்யாணம் பன்ணிண்ட ஜோடி வந்தா. கல்பாக்கமாம், புல்லட்டில் வந்திருக்கா. 10 படிக்கொருதடவை உக்காந்து ஒரு செல்பீ. வழக்கமா மேலே ஏறி ஸ்வாமி தரிசனம் பன்ணிட்டு கீழே வரத்துக்கு 1 மணி நேரம் தான் ஆகும். இவா 9க்கு போனவா 1 மணிக்குத்தான் வந்தா. 

இங்கே கழுகுதான் பிரதானமா இருந்தது. 20 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் ரெண்டு கழுகு கரேக்டா லன்ச் டயத்துக்கு தினம் வந்து மலைக்கோவில் குருக்கள் கொடுக்கிர சாப்பாட்டை அவர் கையிலேந்து வாங்கிச்சாப்டுட்டு போகும். இதைப்பாக்க கூட்டம் சேரும், அந்த டயத்தில் ஊர் வழியா போர வெளியூர் பஸ்ஸும் நின்னுடும், கழுகு வட்டமடிக்கரதை பாக்க. ரெண்டு முனிவர்கள் கழுகு ரூபத்தில் வரான்னு எல்லாரும் சொன்னா. நான் இங்கே வந்து சிலநாள் பாத்திருக்கேன். அப்புரம் காணலை.

நான் என்ன பாவம் பண்ணினேனோ, 62 வயசாரது காலில் கொஞ்சம் வீக்கம். கொஞ்சம் இல்லை, கொஞ்சம் பெரீஸாதான். அதைப்பாத்துட்டு வேலைலேந்து தூக்கிடப்போராளோன்னு ஒரு பயம். வேஷ்டியை இறக்கிவிட்டுண்டே நடப்பேன். பாக்கிரவா கவனத்தை திருப்பரதுக்கு நெத்தியில் நிறைய சந்தனம், பெரீசா கும்குமப்பொட்டு. கட்டிக்கரது காவின்னு ஆயிடுத்து. 

தினம் படுத்துக்கரச்சே பலராமன் பத்தி மட்டும் ஞாபகம் வரும், தொண்டையை அடைக்கும், இப்போ 40-42 வயசிருக்கணும், கல்யாணம் பண்ணிண்டானா, ஒரு நடை போய் தள்ளி இருந்து பாத்துட்டு வரலாமான்னு தோணும். அப்படியே தங்கிடணும்னு தோணியதேயில்லை. செய்யாத குத்தத்துக்கு என்னை தண்டிச்சுட்டா. எல்லாத்தையும் விட என் குழந்தையை, ஆசையா மடீலே உக்காந்ததை வெடுக்குன்னு இழுத்துண்டு போனது இன்னும் ரணமா இருக்கு. ஆறலை. ஆறாது.

அன்னைக்கு கோவில் பெரிய குருக்கள், “கோபாலா, சித்த வந்து பாதிப்படீலே நின்னுண்டு குரங்கு வரவாளை தொந்திரவு பண்ணாம பாத்துக்கோ, இன்னைக்கு தூத்துக்குடி கலெக்டர் குடும்பத்தோட தரிசனத்துக்கு வராளாம்”கிரார். சரின்னுட்டு கவுண்டரை மூடி, டிக்கெட் புஸ்தகத்தை கனகாம்பரத்துக்கிட்டே கொடுத்துட்டு நான் மெல்ல ஏறரேன். என் வயசில் கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் வாரம் ஒரு தடவை ஏறிப்போய் ஸ்வாமி தரிசனம் பண்ணிண்டிருக்கரதுனாலே அவ்வளவு சிரமமா இல்லை. சில குண்டு மாமிகளும் ஒரு தொப்பை விழுந்துடப்போரதோன்னு சொல்லலாம்கிர ஒரு மாமாவும் புஸ் புஸ்னு 50ஆவது படீலே சிரமபரிகாரம் செஞ்சுண்டிருந்தா. இவா மேல வரப்போ உச்சிகால பூஜை அரம்பிச்சுடும்னு நினெச்சுண்டேன். எப்பவும் போல கையில் வெளியே தெரியாம ஒரு கவரில் நிறைய வாழைப்பழம். அப்போதான் குரங்குகளை சமாளிக்கலாம்.

நான் அங்கே போய் ஒருமேடைலே உக்காந்துக்கரேன். இன்னைக்குன்னு குரங்கையே காணும். தூரத்துலெ ஒரு கோஷ்டி ஏறி வந்துண்டுருக்கு. ஒரு மாமா, மாமி, ஒரு வாண்டுப்பயல், கூடவே ஒரு டவாலி கையில் பையோட. அப்போ அந்த கலெக்டராத்தான் இருக்கணும். 

மாமி கையிலே பூ, பழத்தட்டு. அந்த வாண்டு மட்டும் எல்லாருக்கும் முன்னாடி. சரியா அவா எங்கிட்டே வர இன்னும் 10 படி இருக்கும் இத்தனை நாழி எங்கேயிருந்ததுன்னு தெரியலை, 5 குரங்கு, அதில் ஒரு மந்தி ஒரு அம்மா குரங்கு அதன் வயித்தை இறுக்ககட்டிண்டு ஒரு குட்டி. எல்லாம் கூட்டமா வரது. அந்த குழந்தை அதுகளைப் பாத்துட்டு, “ஹையா, மம்மி, ஸீ தேர், மங்கீஸ்”கிரான். நான் என் பையை தொறந்து ஒண்ணொண்ணா வாழைப்பழத்தை காமிக்கரேன், அதுகள் என் கிட்டே வந்து வாங்கிக்கரது. அதுகளோட கவனம் எங்கிட்டேயே வச்சுக்க இன்னும் பழத்தை எடுக்கரேன். வாங்கிண்ட குரங்கு தள்ளிப்போய் மரத்தில் உக்காந்துண்டு அழகா உரிச்சு சாப்பிடரது. கடைசீ குரங்கும் போயிடரது. சரிதான் கலெக்டர் குடும்பத்தை காப்பாத்திட்டோம்னு நினைக்கரச்சே இன்னொரு சின்ன கை எங்கிட்டே நீளரது. அது அந்த வாண்டு. என்ன செய்யரது, குழந்தை கேக்கிரான், ஒரு பழத்தை எடுத்து தரேன்.

4 படி தள்ளி வந்துண்டிருந்த அவன் அம்மா அதைப்பாத்துட்டு வேகமா 2 எட்டில் எங்கிட்டே வரா, பையனின் கையை பிடிச்சு இழுத்து, அவன் கையில் இருந்த பழத்தை பிடுங்கி தூர வீசரா. “ஏண்டா கண்டவா கிட்டெல்லாம் போராய்”ன்னு ஒரு வசவு. கொஞ்ச நேரத்தில் என்னைத் தாண்டி எல்லாரும் போயாச்சு. 

எனக்கு அப்படியே உலகமேநின்னுட்ட மாதிரியும், மரம், செடி கொடியெல்லாம் ஆடரதை நிறுத்திட்ட மாதிரியும் இருக்கு. ஒரே புழுக்கம். நெஞ்சை லேசா வலிக்கரா மாதிரி. அந்த மந்திமட்டும் தன் கிட்ட இருந்த பழத்தோலை வீசிட்டு இன்னொண்ணு கிடைக்குமான்னு என் பையையே பாக்கிரது. பையை தூர வச்சுட்டு அப்படியே சாஞ்சு உக்காந்துக்கரேன். கண் இருண்டுண்டு என்னவோ செய்யரது. தலையை அண்ணாந்துவச்சு மேகங்களை பாக்கிரேன். அப்படியே உயிர் பிரியாதான்னு மனம் வேதகிரீஸ்வரரை வேண்டுகிரது

உயரத்தில் ஒரு கழுகு வட்டம் போடரது தெரியரது. இங்கேந்து அது கருடனா இல்லை கழுகுதானான்னு தெரியலை. கருடனா இருந்தா கன்னத்தில் போட்டுக்கணும்.

No comments:

Post a Comment