Friday, June 19, 2020

மதயானையிடமிருந்து பக்தரைக் காத்த மகாபெரியவா!""

மதயானையிடமிருந்து பக்தரைக் காத்த மகாபெரியவா!""

மகாபெரியவர் தன்னை நேரில் வந்து தரிசித்து வேண்டுவோருக்கு மட்டுமல்லாமல், இருந்த இடத்தில் இருந்தே தன்னை நினைத்துப் பிரார்த்திப்பவர்களுக்கும் கூட அனுகிரஹம் செய்யத் தவறுவதில்லை. 

பலகாலத்துக்கு முன் சிதம்பரத்தில் பிரபலமான ஆடிட்டராக இருந்தார், பாலசுப்ரமணியம் என்பவர். தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் பரம்பரையில் வந்தவர். அவருக்கு, காஞ்சி மகாபெரியவர் மீது, இயல்பாகவே மிகுந்த பக்தி இருந்தது.

அடிக்கடி காஞ்சிபுரத்துக்குச் சென்று மகானை தரிசிக்க அவருக்கு நேரம் இல்லாவிட்டாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவசியம் காஞ்சி சென்று மகானை தரிசித்து விடுவார் அவர். ஒவ்வொரு நாளின் விடியலும் மகாபெரியவா படத்தின் முன் நின்று சிறிதுநேரம் 'சந்திரசேகரா ஈசா' என்று காஞ்சி மகானின் திருப்பெயரைச் சொல்லி பிரார்த்திப்பதில்தான் தொடங்கும். அதுபோலவே தினமும் தூங்கச் செல்வதற்கு முன்பும்  மகாபெரியவா திருநாமத்தைச் சொல்லிக் கும்பிட்டுவிட்டே உறங்கச் செல்வார். 

அதுமட்டுமல்ல, மகாபெரியவரை சாட்சாத் ஈஸ்வரனாகவே கருதிய அவர், எந்த ஒரு செயலையும் செய்யத் தொடங்கும் முன், 'சந்திரசேகரா ஈசா!' என்று சொல்லிவிட்டே தொடங்குவார். வீடோ, அலுவலகமோ, வெளியிடமோ  அவருடைய இந்த பக்தி எல்லோருக்குமே தெரியும்.

ஒரு சமயம் சிதம்பரம் திருக்கோயிலில் நடந்த உற்சவம் ஒன்றில் கலந்து கொண்டு, நடராஜப் பெருமாளை  தரிசிப்பதற்காகச் சென்றார், அவர். இப்போது போல பெரிய மனிதர்கள், செல்வந்தர்கள் என்றெல்லாம் எந்தச் சலுகையும் அப்போதெல்லாம் கோயில்களில் கிடையாது. சிறப்பு தரிசனம், கட்டண தரிசனம் என்றெல்லாமும் இல்லை. எல்லோரும் சுவாமி முன் ஒருவர்தான்.

அன்றைய தினம் அவர், ஆலயத்துக்குச் சென்ற நேரம் அங்கே ஒரே பரபரப்பாக இருந்தது. பக்தர்கள் பலரும் இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருந்தார்கள்.  ஆனை...ஆனை..என்ற அலறல் வேறு கேட்டது.

ஆடிட்டர், என்ன  ஏதென்று புரிந்துகொள்வதற்குள்,  கோயில் யானை ஆவேசத்தோடு பிளறியபடி இங்கும் அங்கும் ஓடுவதும் மக்கள் பயந்து அலறியபடி சிதறி ஓடுவதும் காட்சியாகவே தெரிந்தது அவருக்கு,

கோயில் யானைக்கு மதம் பிடித்துவிட்டது என்பதை அவர் யூகித்துப் புரிந்து கொண்ட விநாடியில் அந்த விபரீதம் நடந்தது. 

ஆமாம்...மதம் பிடித்து ஓடி வந்து கொண்டிருந்த யானை சட்டென்று துதிக்கையை நீட்டி, அவரைத் தூக்கியது. அப்படியே தலைக்கு மேலே உயர்த்தியது. லேசாக சுழற்றத் தொடங்கியது. அந்த நொடியில் அவரது கண்ணுக்கு உலகமே  சுழல்வதுபோல் இருந்தது.

ஓடிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் அடுத்து ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று அச்சத்தோடு பார்க்க, யானைப் பாகன் கையில் இருந்த அங்குசத்தைக் காட்டி மிரட்டத் தொடங்க அந்த அதிபயங்கர இக்கட்டான சூழலில் ஆடிட்டரின் வாய் தான் வழக்கமாகச் சொல்லும் மகாமந்திரத்தை அனிச்சையாகச் சொன்னது 'சந்திரசேகரா ஈசா!'

முதலை வாய் சிக்கிய ஆனை 'ஆதிமூலமே' என்று அழைத்தது போன்ற ஈனஸ்வரத்தில் ....குழறலாக அவர் அந்த வார்த்தைகளைச் சொன்னபோதும், ஏதோ குறிப்பறிந்து செயல்படுவதுபோல சட்டென்று நின்றது யானை. ஆடிட்டரை உயர்த்திப் பிடித்துச் சுழற்றிக் கொண்டிருந்த துதிக்கையை டக்கென்று கீழிறக்கியது. உரத்த குரலில் பிளறியது. துதிக்கையை மீண்டும் உயர்த்தி ஆசிர்வதிப்பது போல அவரது உச்சந்தலையைத் தொட்டுவிட்டு, அமைதியாக நின்றது. 

அதிசயித்துப் போனார்கள் எல்லோரும்! மகாபெரியவரின் பெயரைச் சொன்னதும் யானையிடம் நடந்த மாற்றத்தைச் சொல்லிச் சொல்லி வியந்தார்கள். சில விநாடிகள் செய்வது அறியாமல் நின்ற ஆடிட்டர், பின் தெளிவடைந்து உள்ளே சென்று நடராஜ தரிசனம் செய்தார். உடனடியாக மகானை தரிசிக்கத் தீர்மானித்து, ஸ்ரீமடத்துக்குச் சென்றார். 

பக்தர் கூட்ட வரிசையில் நின்று தனது முறை வந்ததும் வார்த்தைகளால் எதுவும் பேசாமல், கண்களில் நீர் வழிய மகானின் திருவடியில் விழுந்து பணிந்தார். 

"என்ன  பிள்ளையாரோட அனுகிரஹத்தை நேரடியா வாங்கிண்டு வந்திருக்கே போல இருக்கு?!" மென்மையாகக் கேட்டுச் சிரித்தார், மகாபெரியவா.

ஆனையிடம் சிக்கி அபயம் கேட்ட உன்னை அங்கே வந்து காத்தது நான்தான் என்று சொல்லாமல்  உணர்த்துவதுபோல் மகான் கேட்ட அந்தக் கேள்வியால் உடல் சிலிர்த்து, மனம் குளிர்ந்தது ஆடிட்டருக்கு.

இப்போதும் அவர் வாய் அனிச்சையாய்ச் சொன்னது, 'சந்திரசேகரா...ஈசா!'.

ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!

No comments:

Post a Comment