Tuesday, June 2, 2020

இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 6

இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 6….Sujatha &Venkatesan 6381369319)

நைனிதால் – ஒன்பது முனை ஏரி

ரம்மியமான சூழல் பார்க்கும்போதே
இங்கே செல்ல ஆசை வருகிறது அல்லவா…..
நோக்குச்சியா தால் – ஹிந்தியில் நோ [ஆங்கில No அல்ல! :)] என்றால் ஒன்பது எனும் எண் – ஏக், தோ, தீன், சார், பாஞ்ச், சே, சாத், ஆட், நோ…. வரிசையில் வரும் நோ! இந்த பெயரில் நோ என்பது இருப்பதால் இது எதோ ஒன்பதாம் எண்ணைக் குறிப்பதாக நினைத்தால் அது தான் சரியான எண்ணம். குச்சியா… என்பது முனைகளைக் குறிக்கும் ஒரு சொல். அதாவது இந்த ஏரிக்கு ஒன்பது முனைகள் – அதனால் நோகுச்சியா தால்!

நைனிதால் நகரிலும், அருகிலுள்ள இடங்களிலும் இருப்பதிலேயே ஆழமான ஏரி இந்த ஒன்பது முனை ஏரி. சுமார் ஒரு மீட்டர் நீளமும் நாற்பது அடி ஆழமும் உள்ள ஏரியாக இதைச் சொல்கிறார்கள். ரொம்பவும் பழமையான ஏரிகளில் இந்த ஏரியும் ஒன்று. பழமையான இடம் என்றாலே அதைச் சுற்றி நிறைய கதைகளும் இருக்கும் அல்லவா – இந்த ஒன்பது முனை ஏரி பற்றியும் நிறைய கதைகள் உண்டு – அவை கட்டுக்கதைகளோ உண்மையோ என்பதை இங்கே ஆராயப் போவதில்லை!

இந்த ஏரியின் அருகே தரையில் நின்றபடியே ஒருவரால் ஏரியின் ஒன்பது முனைகளையும் பார்க்க முடிந்தால் அப்படியே காற்றில் கரைந்து பரமனின் பாதங்களை அடையலாம் என்று சொல்கிறார்கள். இத்தனை பெரிய ஏரியின் ஒன்பது முனைகளையும் நின்ற இடத்தில் இருந்தே பார்ப்பது கடினம் என்பதை இப்படி முடியாத ஒன்றை சமன்படுத்திச் சொல்லி இருக்கிறார்கள் போல!

மிக அழகான ஏரி. சென்ற பகுதியில் பார்த்த பீம்தால் போலவே, இங்கேயும் நிறைய வாத்துகள் சுற்றிக் கொண்டிருந்தன. மாலை நேரம் என்பதால் எங்கெங்கும் ஒரு வித அமைதி – மனதைக் கொள்ளைக் கொண்டது. படகுகள் காத்திருக்க, ஒரு பயணம் செய்ய நினைத்தோம். மாலையும் இரவும் சந்திக்கும் நேரம் என்பதால் சூரியன் மறைய மறைய குளிர் தனது விகார முகத்தினைக் காட்டத் துவங்கி இருந்தது.

கைகளுக்கு கை உறைகள், தலையும் காதும் மூடுவது போன்ற குல்லாய்கள், காலிற்கு காலுறைகள், காலணிகள், குளிருக்கான உடை என்று தயாராக இருந்தாலும் அத்தனையையும் தாண்டி நரம்புகளையும் எலும்புகளையும் தனது வலிமையைக் காட்டித் தாக்கத் துவங்கியது குளிர். ஆனாலும் அது ஒரு அற்புத அனுபவமாகத்தான் இருந்தது. அரை மணி நேரம் அந்த சூழலில் ஏரியில் ஒரு இனிமையான படகுப் பயணம் செய்து வந்தோம்.
கரையிலே நிறைய ஷாப்பிங் கடைகள்..எனது கொள்கைப்படி வெளியூரில் எதுவும் ஷாப்பிங் கூடாது (அனாவசிய லக்கேஜ் சுமையாகி தொடர்ந்த பயணத்திற்கு இடையூறாகும்..மேலும் பணம் இல்லாமல் தவிக்க நேரலாம்)எனினும் அவள் செருப்பு அறுந்து போனதால் 95/- க்கு செருப்பு வாங்கிக்கொள்ள ஒப்புதல் தருகிறேன். ஹல்திராம் ஐஸ்க்ரீம் சாப்பிட கூட ….

தேநீர் கடையில் சில பழங்களும் அடுக்கி வைத்திருந்தது – என்ன பழம் என்று கேட்டால் “பஹாடி நிம்பு” என்றார் கடைக்காரர். அதாவது மலை எலுமிச்சை…. பார்க்க நமது கிடாரங்காய்/நார்த்தங்காய் மாதிரியே இருக்கிறது. வாங்கி ஊறுகாய் போட🙂  நாக்கு ஊறுகிறது. – பார்க்கும்போதே நன்றாகவும் அழகாகவும் இருந்ததால்!

அங்கே சுடச்சுட தேநீர் குடித்து உடம்பிற்குக் கொஞ்சம் சூடேற்றிக் கொண்டபின் எங்கள் பயணம் தொடர்ந்தது. செல்லும் போதே வழியில் ஒரு பெரிய ஹனுமன் சிலையைப் பார்த்திருந்ததால் அங்கே சென்று ஹனுமனுக்கு ஒரு வணக்கம் சொல்ல அங்கே விரைந்தோம்.

பிரதான சாலையிலேயே 52 உயரத்தில் அசால்டாக நிற்கிறார் அனுமந்தலு. ஜம்முவில் உள்ள வைஷ்ணவ் தேவி கோவில் போலவே இங்கே செயற்கையாக குகை அமைத்து சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறார்கள். பொதுவாகவே வட இந்திய கோவில்களுக்குச் செல்லும் போது ஏதோ கண்காட்சி பார்ப்பது போன்ற உணர்வு தான் எனக்குள் தோன்றும். இங்கேயும் அப்படியே! வெளியே நின்றபடியே அனுமனுக்கு ஒரு வணக்கம் செலுத்திவிட்டு பயணத்தினைத் தொடர்ந்தோம்.
நாங்கள் அடுத்ததாய்ச் சென்றது ஒரு கோவிலுக்கு. சரியாக மாலை நடக்கும் ஆரத்தியின் போது தான் அங்கே சென்றோம். மந்திர உச்சாடனம் போன்ற ஆரத்தி பாடல்களை பாடியபடி, பலர் மணிகளை ஒலிக்க அங்கே குடிகொண்டிருக்கும் கடவுளான [G]கோலு தேவதாவிற்கு சிறப்பான ஆரத்தி நடந்து கொண்டிருந்தது.

கும்பலோடு கோவிந்தாவாக நாங்களும் அங்கே நின்று தரிசனம் செய்தோம். ஆரத்தி நடக்கும்போதே இந்த கோவிலின் சிறப்பினைப் பார்த்து விடலாம் வாருங்கள். [G]கோலு தேவதா கோர பைரவ் அதாவது சிவனின் ஒரு அவதாரமாக நம்பப்படும் ஒரு கடவுள். உத்திராகண்ட் மாநிலத்தவர்கள் அனைவருமே இந்த [G]கோலு தேவதா மேல் அபாரமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தங்களுக்கு ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் இவர் நீதி வழங்குவதாக நம்பிக்கை.

நமது நாட்டின் நீதிமன்றங்களில் வழக்குகளில் தீர்ப்பு கிடைக்க பல வருடங்கள் ஆகிறது. ஆனால் இந்த நீதி தேவனான [G]கோலு தேவதாவின் கோவிலில் முறையிட்ட சில தினங்களிலேயே நீதி கிடைப்பதாக இவர்களுக்கு நம்பிக்கை. தங்களது வழக்கினைப் பற்றி முத்திரைத் தாளில் எழுதி [G]கோலு தேவதாவின் கோவிலில் அவர் காலடியில் சமர்ப்பித்து தங்களது வேண்டுகோளை நிறைவேற்றும்படி மனதார வேண்டிக்கொண்டு செல்கிறார்கள். அவர்களது வேண்டுகோள் சரியானதாகவும், நியாயமானதாகவும் இருந்தால் நிச்சயம் அது நிறைவேற்றப்படும் என்பது இவர்களது அசைக்க முடியாத நம்பிக்கை.

வேண்டுகோள்கள் நிறைவேறியதன் அடையாளமாக இந்தக் கோவிலில் மணிகளை கட்டித் தொங்க விடுகிறார்கள். ஆயிரக் கணக்கில் சிறியதும் பெரியதுமாக மணிகள் கட்டித் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது பலரது வேண்டுகோள்கள் ஏற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து மணி சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அங்கே பல அளவுகளில் இருக்கும் மணிகளைப் பார்க்கும்போது நமக்கே ஒரு மணி கட்டத் தோன்றுகிறது!

நாட்டில் நடக்கும் அநீதிகள் பல இருக்கும்போது இந்த [G]கோலு தேவதா கோவிலில் வெண்கல மணிகள் கட்டுவது தொடர்ந்து கொண்டிருக்கும் எனத் தோன்றுகிறது! நல்ல ரம்மியமான சூழல் – மலைப்பகுதியில் அடிக்கும் குளிர் – காலுறை அணிந்திருந்தபோதும் கால்களின் வழியே உச்சி மண்டை வரை ஏறிய குளிர் – அங்கே அதிக நேரம் எங்களை நிற்க விடவில்லை. அங்கே நம்பிக்கையோடு ஆரத்தியை பாடி[?] கொண்டிருந்தவர்களுக்கு குளிர் ஒரு பொருட்டே இல்லை!
                      தொடரும்...

No comments:

Post a Comment