இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 5..
(Sujatha &Venkatesan 6381369319)
இனி அவள் பார்வையில்….
ரெண்டு நாளா மூட்டை முடிச்சு கவலை இல்லாம இருந்தோம்..இப்ப மறுபடியும் bag தூக்கிண்டு கெளம்பியாச்சு...இராமா கிருஷ்ணான்னு ஆத்துல இருந்தவளை அவாளோட எடத்துக்கோ கூட்டிண்டு போறேன்னு அழைச்சுண்டு வந்துருக்கார். பஸ்ஸ்டாண்ட்ல நைனிடாலுக்கு நேர் பஸ் கெடையாதாம். ஹல்த்வானியோ அத்வானியோ அங்க போய் பஸ் மாறனுமாம். எப்ப போய் சேருவோம்னு தெரியாது எதையாவது வயத்துல போட்டுத்தொலைன்னு சொல்லி ஈ மொய்ச்சிண்டிருக்கற ஓட்டலுக்கு அழைச்சிண்டு போறார். நீங்க என்னவோ பண்ணிக்குங்கன்னு சொல்லி ரெண்டு பழம் வாங்கி வச்சுக்கறேன். அவரும் சாப்டாம கோச்சுண்டு ஹல்தவானி பஸ்ஸில ஏறச்சொல்றார். 120/- டிக்கட்டாம்..அப்ப நாலு மணி நேரம் ஆகுமே..
நல்ல வேளை பஸ் 1 மணிக்கு சுமாரான ஓட்டல்ல நிக்கறது. 30/- க்கு சாப்பாடும் 20 க்கு லஸ்ஸியும் வயறு ரொம்பறது. இவர் ஒரு ஹரியானா பிள்ளையான்டானை ஃப்ரெண்டு பிடிச்சு பேச்சு கொடுத்ததில் நைனிடால் போறதை விட வழியில் பீம்தால்ங்கற ஊர்ல cheap ஆ லாட்ஜும் கெடைக்கும் பார்க்கவும் நெறைய இருக்குன்ன உடனே இவருக்கு ஏக குஷி … ஹல்த்வானில ஒரு vanல ஏறி 50/- கொடுத்து பீம்தால்ல எறங்கறோம். அந்த பிள்ளையாண்டான் சொன்ன குமாவோன் லாட்ஜ் 200/- க்கு ரூம் பரவால்லே..மானேஜர் தோடா தமிழ் பேசறார். நல்ல டிபனும் கெடைச்சது.
ராத்திரி ஆயிடுத்து..புது ஊர் ..வாக்கிங் போலாம் வான்னு கூட்டுண்டு போனார். ஊட்டி மாதிரி மே மாசத்துலயும் நல்ல குளிர்...கால் போன போக்குல நடக்கறோம். மேடும் பள்ளமுமா போற ரோடு திடீர்னு இருட்டுல ஒரு பாறை நுனியில கொண்டு விடறது. பயந்து போய் திரும்பினா வந்த வழி மட்டும் இல்ல ஓட்டல் பேரும் மறந்துடுச்சு..
வழியில மனுஷாலும் இல்லை..இவர் அசட்டுத்தனத்தை நெனச்சு ஆத்தரமா வர்ரது..நல்ல வேளை ஒரு கார் வர கைகாட்டறோம்..அவா கிட்ட இங்லீஷும் இந்தி தமிழ் கலந்து என்னவோ சொல்றோம். நல்லவாளா இருந்து லிஃப்ட் தந்து பஜார்ல எறக்கி விடறா..அரை மணி சுத்தி குமாவோன் பேர் நெனவு வந்து போய்சேர்றோம்…
அடுத்த நாள் பீம்தால் சுத்தி பார்க்க கிளம்பும் போதே நான் விசிட்டிங்கார்ட் வாங்கி வச்சுக்கறேன்….
இனி அவர் பார்வையில்…
பெயரில் “பீம்”இருக்கிறதே, இந்த இடத்திற்கும் மஹாபாரத பீமனுக்கு ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் உங்களுக்கு வந்திருந்தால், உங்கள் தோள்களை நீங்களே தட்டிக் கொள்ளுங்கள்! கொஞ்சம் மெதுவாக! பீமனைப் போலவே தட்டிக் கொண்டால் வலிக்குமே!
பீம்தால் – கடல் மட்ட்த்திலிருந்து 1370 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஒரு சிறிய ஊர். ஊரின் முக்கியமான இடம் ஊரில் இருக்கும் பீம்தால் எனும் ஏரி. ஏரியின் நடுவே ஒரு சிறிய தீவு. அமைதியான சூழல் உங்களுக்கு மன அமைதியைத் தரவல்லது. பீம்தால் இருக்கும் இடத்தில் ஏரிக்கரையில் ஒரு சிறிய மேடை. அங்கே சில வாத்துகள் இருக்க, அவற்றை புகைப்படம் எடுத்தோம். நாங்கள் புகைப்படங்கள் எடுப்பதைப் பார்த்த சில வாத்துகள், சூரியன் பட கவுண்டமணி ”காந்தக் கண்ணழகி, இங்கே பூசு, தோ பார் இங்கே பூசு!” என்று சொல்வாரே அந்த மாதிரி நிறைய விதமாக போஸ் கொடுத்தன. ஒரு சில வாத்துகள் கால்களை கவ்விப் பிடிக்க வந்தன!
ஏரிக்கரையில் பீமேஸ்வர மஹாதேவ் கோவில் என்று ஒரு சிவன் கோவில் உண்டு. மஹாபாரத பீமன் தனது சகோதரர்களுடன் ஒரு வருட வன வாசத்தில் இருக்கும்போது இங்கே வந்ததாகவும், இங்கே இருந்த சிவன் கோவிலில் வழிபட்டதாகவும் நம்புகிறார்கள். சிறிய கோவில் தான். சிவபெருமானுக்கு ஒரு வணக்கத்தினைப் போட்டு அங்கிருந்து வெளியே வந்தோம்.
ஏரியை சுத்தி குதிரை சவாரி உண்டு அதில் ஏறி வலம் வந்தோம்.
இந்த பீம்தாலிலும் சில தங்குமிடங்கள் உண்டு. அங்கேயிருந்து பக்கத்தில் இருக்கும் நளதமயந்தி தால் [நளன் இங்கே மூழ்கியதாக சொல்கிறார்கள்!], சாத்தால் [ஏழு ஏரிகள்], ஹிடிம்பா மலை [இந்த ஹிடிம்பனின் மகளான இடும்பியை பீமன் திருமணம் புரிந்து கொண்டதாகவும் கதை உண்டு], கார்கோடகன் மலை [கார்கோடன் என்பது ஒரு நாகம், நாக பஞ்சமி சமயத்தில் இங்கே மிகச் சிறப்பான விழா நடக்கும் என எங்கள் ஓட்டுனர் தெரிவித்தார்] போன்ற இடங்களைப் பார்க்கலாம். நேரப் பற்றாக்குறை காரணத்தினால் நாங்கள் இந்த இடங்களைப் பார்க்க வில்லை. ஒரு வேன் பிடித்து நைனிடால் சென்றோம். (22 கிமீ)
(நண்பர் செல்வத்துடன் போன பயணக்கட்டுரையில் நைனிடால் பற்றி சொல்லி இருந்தாலும் சொல்லாத பகுதி அடுத்து….தொடரும்
No comments:
Post a Comment