"ஏன் கவலைப்படறே? நன்னா பேசுவா….!"
பெரியவாளிடம் இந்த வைஷ்ணவ பக்தருக்கு அப்படியொரு பக்தி, விஸ்வாசம்.
அவருடைய ரெண்டாவது பெண் குழந்தைக்கு, மூணு வயஸ் ஆகியும் பேச்சு வரவில்லை.
“இது…. Genetically Predetermined case…. பிறவிக்கோளாறு ஸார்! ஒண்ணுமே பண்ண முடியாது…”
பெரிய பெரிய specialists-களும் கைவிரித்து விட்டார்கள்.
மனசு நொந்து போன நிலையில் பெற்றவர்கள் மனஸில் நீர் வார்த்து, பசமையிட்டது….. ஒரே ஒரு நம்பிக்கை!….
“பிறவியையே வேரறுக்கும் நம்மளோட மஹா வைத்யநாதஸ்வாமி இருக்கறச்சே, பிறவிக் கோளாறு ஒரு பெரிய விஷயமாக்கும்? … அவர் பாத்துக்க மாட்டாரா என்ன?”
மனைவி நம்பிக்கையை இன்னும் ஆழப்படுத்தியதும், குடும்பத்துடன் பெரியவாளை தர்ஶனம் பண்ணப் போனார்.
அன்று என்னவோ அதிஸயமாக ஶ்ரீமடத்தில் கூட்டமே இல்லை. குழந்தையுடன் நமஸ்காரம் பண்ணிவிட்டு நின்றார்கள்.
ஸ்ரீ மூக கவியை பேச வைத்த காமாக்ஷி, இங்கே கரும்பு வில்லுக்கு பதில் தண்டத்தை வைத்துக் கொண்டு, பற்றற்ற ஸன்யாஸத் திருக்கோலத்தில், தன் ஸ்வரூபத்தை முற்றிலும் மறைப்பதாக காட்டிக் கொண்டாலும், அவளையும் மீறி, அவளுடைய கருணை நயனங்கள்….”இதோ! இதோ! இவளேதான்!” என்று, அவளைக் காட்டிக் கொடுத்துவிடும். இல்லையா?
இதோ! பெரியவாளுடைய கருணைவிழிகள் அந்தக் குழந்தையை பார்த்தன……
“கொழந்த யாரு?”
“அடியேனோட கொழந்தை…. இன்னும் பேச்சு வரல! மூணு வயஸாறது… டாக்டர்கள்ளாம் பொறவிலேயே அப்டி…ங்கறதுனால ஒண்ணும் பண்ண முடியாதுன்னுட்டா….! என்னோட ஆத்துக்காரி பெரியவாகிட்ட ப்ரார்த்தனை பண்ணிக்கச் சொன்னா….”
“ஏன்? ஒனக்கு அந்த ஆசை இல்லியோ?”
கிண்டலாக சிரித்தார்.
பதில் சொல்ல முடியாமல், அசடு வழிந்தார்.
திருக்கரங்களை தூக்கி ஆஶீர்வதித்தார்….
“ஏன் கவலைப்படறே? கொழந்த…. நன்னா பேசுவா…. நெறைய பேசுவா….. போ!”
ஆஹா! இதைவிட வேறு உத்தரவாதம் என்ன வேண்டும்?
ஶ்ரீமடத்துக்குப் போய்விட்டு வீடு திரும்புவதற்கு கிட்டத்தட்ட மூணு-நாலு மணிநேரம் ஆகியிருக்கும். பாவம், குழந்தைக்கோ நல்ல பசி!
பெரியவாளுடைய அருட்கடாக்ஷத்துக்காக, ஆஜ்ஞைக்காக மட்டுமே காத்திருந்ததுபோல், வீடு வந்ததும் ஒரே ஓட்டமாக ஸமையல்கட்டுக்குச் சென்று, ஸாப்பாட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு வந்தாள் அந்தக் குழந்தை.
அடுத்த க்ஷணம்…. பெற்றவர்களையும், மற்றவர்களையும் மயக்கம் போட வைத்தாள்…. தன் மதுரக் குரலால்…..
“அம்மா! பசிக்கறது…. மம்மு போடும்மா….!” ………
முதல் முதலாக பேசப் பழகும் திக்கல் திணறல் எதுவுமில்லாமல், ஸ்பஷ்டமாக குழந்தை குரல் குடுத்தாளோ, இல்லையோ அவ்வளவுதான்!……குழல், யாழ்… இன்னும் என்னென்னவெல்லாம் மதுரமானதோ, அத்தனையும் ஒரு சேர உள்ளே வார்த்ததுபோல் திகட்டாமல் இனித்தது பெற்றவர்களுக்கு!
காஞ்சீ இருந்த திக்கை நோக்கி நன்றியோடு நமஸ்கரித்தனர்.
மறுநாளே ஓடிப்போய் பெரியவாளிடம் பேசமுடியாமல், கண்களில் நீர்மல்க, பெற்றவர்கள் இருவரும் ஊமைகளானார்கள்!
எதுவும் பேசாமல், சிரித்தபடி அவர்களை யதார்த்த நிலைக்கு பெரியவா கொண்டு வந்ததும், குழந்தை பேசிவிட்டதைச் சொல்லி சொல்லி மாய்ந்து போனார்கள்.
ஆம்! கஷ்டத்தைக் கூட தாங்கிக் கொள்ளலாம், ஆனால் மஹான்களின் கருணையை மட்டும் தாங்கிக் கொள்ளவே முடியாது! எண்ணி எண்ணி மாளாது!
பகவானின் பேரன்பு, ஊமைகளை பேசவும் வைக்கும்; பேசுபவர்களை ஊமையாகவும் வைக்கும். ஏனென்றால், அந்த அவ்யாஜ காருண்யத்தை பற்றி பேச முடியுமா? பேசித்தான் முடியுமா?
அழகாக சிரித்துக் கொண்டே ப்ரஸாதம் குடுத்தார்…..
“நன்னாப் பேசுவா! நன்னா இருப்பா….. ஸெரி….. நீ ஒரு கார்யம் பண்ணனும்….”
“காத்துண்டு இருக்கேன் பெரியவா…..”
“காமாக்ஷி கோவில்ல நவராத்ரிக்கு ஜானகி ராமையாவும், டாக்டர் ராஜப்பாவும் ஸங்கீத கச்சேரிகள் ஏற்பாடு பண்ணிண்டு வரா….. ராஜப்பாக்கு கண்ணு ஸெரியாத் தெரியல…. நீ… ரேடியோலதான…. வேலை பண்ற? ஸங்கீத வித்வான்களுக்கு, ஸம்பாவனையை விட, உபசாரம்தான் ரொம்ப முக்யம்! நவராத்ரி ஸமயம்… நீ எங்க இருந்தாலும்…. லீவு போட்டுட்டு அம்பாள் ஸன்னதில… நவராத்ரி கச்சேரிகளைப் பாத்துக்கணும் ..”
“அடியேன்… தாஸன்…. பரம பாக்யமா பண்றேன்… பெரியவா…”
கண்களில் பெருகும் கண்ணீரை துடைத்து மாளவில்லை! மஹாகுருவின் கைங்கர்யத்தை இன்றளவும் ஆனந்தமாகப் பண்ணிவருகிறார் அந்த வைஷ்ணவ பக்தர்..
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர.
No comments:
Post a Comment