Monday, June 22, 2020

நோய் தீர்க்கும் மந்திரம்...

நோய் தீர்க்கும் மந்திரம்...

தமிழகத்தில் அவதரித்த சித்தர்களும் முனிவர்களும் ஞானியரும் அருளிய இறைத் தத்துவங்கள் எண்ணிலடங்காதவை. தமிழுக்கு, தமிழருக்கு அவர்கள் அளித்த கொடை அவை.  அந்தக் கொடைகளில் குறிப்பிடத்தக்கது மருத்துவம். அகத்தியர் முதலானவர்கள் அதைத் தனியானதாக மட்டுமன்றி பக்தி வாயிலாகவும் அருளியுள்ளனர். அப்படிப் பக்தி வாயிலாக அருணகிரி நாதர் அருளிய நோய் தீர்க்கும் மருந்துதொன்றைக் (மந்திரம்) காணலாம்

அந்தாதி, விருத்தம், ஆற்றுப்படை, அகவல் போன்றவற்றை அவர் அளித்துள்ளபோதிலும் அவற்றிலும் மேலாகத் திகழ்வது திருப்புகழே. முருகன் மீது அவர் பாடியதே திருப்புகழ். திருத்தணி முருகன் மீது அவர் பாடியதே மந்திரத் திருப்புகழ், நோய் தீர்க்கும் மந்திரம் எனப்படுகிறது. அந்த மந்திரத்தை அறிவோமா.

"இருமல் உரோகம் முயலகன் வாதம்
எரிகுண நாசி விடமே நீர்
இழிவு விடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே
பெருவயிறு ஈளை எரிகுலை சூலை
பெருவலி வேறும் உளநோய்கள்
பிறவிகள் தோறும் எனை நலியாத
படிஉன் தாள்கள் அருள்வாயே
வரும் ஒரு கால வயிரவர் ஆட
வடிசுடர் வேலை விடுவோனே
தருநிழல் மீது உறைமுகில்  ஊர்தி
தரு திரு மாதின் மணவாளா
சலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே"

என்ன சொல்கிறது இப் பாடல்? 
நோய்களைப் பட்டியலிட்டு அவற்றுக்கான மருந்தையும் கூறுகிறது.

இருமல் (Cough), ரோகம் (Tuberculosis), முயலகன் என்னும் வலிப்பு நோய் (Epilepsy), வாதம் (Rheumatoid arthritis & paralysis), எரிக்கும் தன்மை உடைய நாசி (Burning Nose), நீரிழிவு (Diabetes), நீங்காத தலைவலி (Acute headache /
Migraine), இரத்த சோகை (Anemia), எழுகள மாலை எனும் கழுத்தைச் சுற்றி உண்டாகும் புண்கள் (Blisters around the neck) ஆகிய நோய்களுடன்

வயிற்றில் நீர் கோர்த்து வீங்கக் கூடிய பெருவயிறு எனும் நோய்(Edema in stomach), நுரையீரல்களில் கட்டிக்கொள்ளும் கோழை (Congestion in Lungs), நெஞ்சு எரிச்சல்(Heartburn),  சூலை நோய் எனும் கொடிய வயிற்றுவலி (Acute pain in stomach due to various reasons), உடம்பில் உண்டாகும் வலி (Extremely painful diseases) மற்றும் தெரிந்தும் தெரியாமல் இருக்கும் வேறுபல நோய்கள் உள்ளன. 

இவை அனைத்தும் இந்தப் பிறவியிலும் இனி வரும் பிறவிகளிலும் அடியேனை அணுகி வாட்டாதபடி காப்பதற்கு உன் திருவடியைத் தந்து அருள வேண்டும் முருகா.

உன்னை எதிர்த்து வந்த கோடிக்கணக்கான அசுரர்களின் காலாட்படை அழியவும் அநேக வீரப் பாடல்களைப் பாடி வந்த ஒரு கால பைரவர் (சிவபெருமான்) மகிழ்ந்து போரக்களத்தில் ஆடவும் ஒளிமிக்க கூர்மையான வடிவேலைச் செலுத்திய வேலாயுதா, கற்பக விருட்சகத்தின் நிழலில் வசிப்பவனும் மேகத்தை வாகனமாகக் கொண்டவனுமான தேவேந்திரனின் மகளான தேவயானையின் மணாளனே, கடலால் சூழப்பட்ட இப்புவியின் மத்தியில் சிறப்புடன் இலங்கும் திருத்தணிகையில் வாழும் பெருமானே அருள்வாய்
என வேண்டுகிறார் அருணகிரி நாதர்.

சுருக்க உரை !

பல கொடிய நோய்கள் ஒவ்வொரு பிறவியிலும் என்னை வருத்தாத படி உன்னுடைய திருத்தாள்களை உதவி அருள்க. கோடிக் கணக்கான அசுரர் படை இறந்து பட வேலை விடுபவனே. இந்திரனுடைய மகளான தேவசேனையின் மணவாளனே, பூமியின் நடுவில் சிறப்பாக விளங்கும் தணிகை மலையில் வீற்றிருப்பவனே, நோய்கள் நலியாதபாடி உன் தாள்களை அருள்வாய்.

இந்தப் பாடல் நோய் தீர்க்கும் திருமந்திர திருப்புகழ். பாராயணம் செய்வதற்கு உரியது.

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !

No comments:

Post a Comment