Thursday, June 18, 2020

ஆறுபடை முருகன்

பெரியவா சரணம்

முருக பக்தர் சாண்டோ சின்னப்ப தேவர்'தெய்வம்' என்னும் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டிருந்தார்..

புராணத் திரைப்படங்களை ரிலீஸ் செய்யும் காலம் அது.. 'தெய்வம்' படம் ஊரெல்லாம் சக்கைப்போடு போட்டது..

அறுபடை வீட்டு முருகன் கோவில்களில் நடக்கும் திருவிழா, முருகனின் திருவிளையாடல்கள், மற்றும் அறுபடை வீடுகளிலுள்ள தெய்வத் திருமேனிகளை தத்ரூபமாக வடிவமைத்துப் படமாக்கியிருந்தார் தேவர்..

படத்தைப் பார்த்தவர்கள் பக்திப் பரவசம் கொண்டனர்.. முருகன் திரையில் தோன்றும் போதெல்லாம், கண்கள் பனிக்க கன்னத்தில் இட்டுக் கொண்டனர்.. சிலர் கற்பூரம் காட்டி ஆராதித்தனர்..

இந்தத் தகவல்கள் பெரியவா காதுக்கும் போகவே, படத்தைப் பார்த்த பக்தர்களை அழைத்து விபரம் அறிந்தார்..

அவரது மனதில் ஓர் எண்ணம் உதித்தது..

அது ஒரு ஐப்பசி மாத கந்தசஷ்டி விரதக்காலம்..

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் சஷ்டி விழா தொடங்கியது..

காஞ்சிபுரம் பக்தர்கள் ஆறுபடை முருகன் கோவிலுக்கு போயிருப்பார்களா என்ன? இவர்களில் எத்தனை பேர் ஏழைகளாக இருப்பார்கள்... அவர்களுக்கு குமரக் கோட்டம் குமரன் தான் எல்லாம்!

எனவே, கந்த சஷ்டிக்கு குமரக் கோட்டம் முருகனைத் தரிசிக்க வருவோருக்கு ஆனந்த அதிர்ச்சி தர வேண்டும் எனத் தீர்மானித்தார்..

எப்படித் தெரியுமா? 'தெய்வம்' படத்தில் உலா வந்த அறுபடை வீட்டு முருகனின் திருமேனிகளை எடுத்து வந்து அலங்காரமாக அமைக்க விரும்பினார்..

சின்னப்ப தேவரை சந்திக்க சென்னைக்கு ஆள் அனுப்பினார்.. மருத மலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த தேவர் மடத்தின் ஊழியரைக் கண்டு மனம் பூரித்தார்..

கைகளை கூப்பி காஞ்சிப் பெரியவரை வழிபட்டு, "நான் என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டார்.. எல்லாவற்றையும் விரிவாக எடுத்துச் சொன்னார் ஊழியர்..

"தெய்வமே எனக்கு அளித்த பேறு இது! வாகினி ஸ்டூடியோவில் தான் முருகன் சிலைகள் உள்ளன.. உடனே ஆள் அனுப்பி லாரியில் காஞ்சிபுரம் அனுப்பறேன்" என மனம் நெகிழ்ந்தார் தேவர்..

தன் மேற்பார்வையில் எல்லாம் சிறப்பாக நடக்கும் என சொன்னதோடு, தன் பணியாளர்களை அனுப்பி விஷயத்தை தெரிவித்தார்..

வாகினி ஸ்டூடியோ புறப்பட்ட அவர்கள், சிலைகளை ஜாக்கிரதையாக எடுத்துக் கொண்டு காஞ்சிபுரம் பயணித்தனர்..

பிறகென்ன... படத்தில் எப்படி அமைத்தார்களோ, அது போல முருகன் சன்னதிகளை தத்ரூபமாக அமைத்தனர்..

கந்தசஷ்டியன்று குமரக் கோட்டத்தில் அறுபடை வீட்டு முருகனையும் பரவசத்துடன் தரிசித்த பக்தர்கள் மனம் நெகிழ்ந்தனர்.. காணிக்கைகளை வாரி வழங்கினர்..

அப் பணத்தில் அன்னதானம் அளிக்க உத்தரவிட்டார் பெரியவா..

 காருண்ய மூர்த்தி!

No comments:

Post a Comment