படித்ததில் பிடித்தது.
தேவப்ரசன்னத்தின் தன்மையை உணர ஓர் உண்மை சம்பவம் தமிழக கேரளா எல்லையில் உள்ள ஒரு பிரபல கோவிலில் விசித்திரமான விஷயம் நடந்து கொண்டிருந்தது. அங்கே திருவிழாவிற்கு முன் கொடி ஏற்றம் நடைபெறும் சமயம் கொடி ஏற்றுபவர் சுருண்டு விழுந்து இறந்துவிடுவார்...!
இதனால் திருவிழா நடக்காமல் தடைபடும். அடுத்த சிலவருடம் கழித்து மீண்டும் முயற்சி செய்வார்கள். அவ்வாறே கொடி ஏற்றுபவர் இறந்துவிடுவார். ஒன்று அல்ல இரண்டு அல்ல நான்கு மரணம் பார்த்த பிறகு அந்த கோவிலுக்குள் செல்லவே அனைவரும் பயந்து ஒதுங்கினார்கள்.
பதினைந்து வருடங்களுக்கு பிறகு அந்த ஊர் மக்கள் மீண்டும் திருவிழா கொண்டாட முன் வந்தார்கள். அதற்கு முன் சிலரின் வழிகாட்டுதலில் தேவப்பிரசன்னம் பார்த்துவிடுவது நல்லது என முடிவு செய்தார்கள். தெய்வம் தங்கள் மேல் கோபமாக இருக்கிறது போல என நினைத்து அதற்கு பிராயச்சித்தம் என்ன என தெரிந்துகொள்ளவும் ஆர்வமாய் இருந்தார்கள்.
தேவப்பிரசன்னம் பார்க்கும் நாளும் வந்தது. தேவப்பிரசன்னம் பார்த்து விட்டு அந்த ஜோதிடர்கள் குழு தலைவர் சொன்னார் “ அடுத்த மாதம் திருவிழா வைக்கலாம். நானே கொடி ஏற்றுகிறேன்..!”
கிராம மக்கள் திகைத்தார்கள். கொடியேற்றும் தருணம் வந்தது. மேழம் உச்ச நிலையில் வாசிக்கப்பட்டது. கொடிமரத்தையும் கொடியையும் ஜோதிடர் விழுந்து வணங்கினார்.
வணங்கி எழுந்தவர் கொடியேற்றாமல் திடிரென செண்டை மேழம் வாசிக்கும் குழுவில் இருந்த ஒரு முதியவரின் இரு கைகளை பிடித்துக் கொண்டார். மங்கள ஒலியுடன் இருந்த கோவில் திடீரென நிசப்தமாகியது.
என்ன நடக்கிறது என மக்கள் புரியாமல் பார்க்க.. ஜோதிடர் அந்த முதியவரை பார்த்து கேட்டார், “ஏன் இப்படி செய்கிறீகள்? இறைவன் சன்னிதிக்கு முன் ஏன் இந்த விபரீதம்? உண்மையை இறைவன் முன்னால் கூறுங்கள்”
இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த முதியவர் பெருங்குரல் எடுத்து அழுதார். சில நிமிடங்களுக்கு பிறகு அந்த முதியவர் உண்மையை கூறத் துவங்கினார்.
“இக்கோவிலில் சிறுவயது முதல் நான் மேழம் வாசிக்கிறேன். என் பன்னிரெண்டு வயது முதல் செண்டை மேழம் கற்று வந்தேன். செண்டை தாளத்தில் ஒருவிதான வாசிப்பு முறையை என் குருவிடம் கற்றேன். . செண்டை வாசிக்கும் பொழுது எந்த நிகழ்ச்சிக்கு வாசிக்கிறோமோ அந்த நிகழ்ச்சியின் தலைவருக்கு (கர்த்தா) இரத்த நாளங்களில் ஒருவித தாளம் ஏற்பட்டு இறுக்கம் அடைந்து முடிவில் இருதயம் செயல் இழந்து இறந்து விடுவார். இசையின் மூலம் தற்காப்பு கலையை ரகசிய பயிற்சியாக கற்றுக்கொண்டேன். என் சிறிய வயதில் அதை சோதிக்க எண்ணி இக்கோவில் கொடியேற்றத்தில் பயன்படுத்தினேன். என் வாசிப்பால் ஒரு விளைவு ஏற்படுவதை கண்டு எனக்குள் ஒருவித பெருமிதம் அடைந்தேன்.
யாரும் இதை கண்டு பிடிக்க முடியாது என்ற எண்ணத்தில் மீண்டும் மீண்டும் இங்கே செய்து பார்த்தேன். என் வாசிப்பே பலரது மரணத்திற்கு காரணமாக இருந்தது. இனி இதுபோல செய்ய மாட்டேன், இனிவரும் காலத்தில் யாருக்கும் இம்முறையை கற்றுக்கொடுக்க மாட்டேன். இறைவனும் ஊர்மக்களும் என்னை மன்னிக்க வேண்டும். ” எனக் கூறு ஊர் மக்கள் முன்னிலையில் தரையில் விழுந்து வணங்கினார்.
அவரை தவிர்த்து பிறர் வாசிக்க, கொடியேற்றப்பட்டது. திருவிழா துவங்கியது. ஜோதிடரின் திறமையை அனைவரும் பாராட்டினார்கள். இது எப்படி சாத்தியம் என வியப்புடன் ஜோதிடரிடம் கேட்டார்கள்.
“தேவப்பிரசன்னம் வைக்கும் பொழுது சத்ருஸ்தானம் மற்றும் அபஸ்தானம் என்னும் இடத்தில் மாந்தியுடன் சனி என்ற கிரகம் அமர்ந்து கேடு பலனை அளித்து வந்தது. சனி அமர்ந்த ராசி காற்று ராசி இவைகளை முடிவு செய்து பார்க்கும் பொழுது முதிய வயதுடைய(சனி) மேழம்(காற்று-ஒலி) வாசிக்கும் ஒருவரால் அமங்கலம் ஏற்படுகிறது என்பதை கண்டுகொண்டேன். உதய லக்னத்திற்கு சனி நான்காம் இடத்தில் இருந்தது என்பதையும் குறித்துக் கொண்டேன்.
கொடியேற்றும் நாளில் பலிபீடத்தின் அருகே நின்று வாசித்தவர்களில் ஒரு முதியவர் நான்காவது நபராக நின்று வாசித்துக் கொண்டிருந்தார். அவர் இச்செயலுக்கு காரணம் என பிரசன்ன ரீதியாக முடிவு செய்து கண்டறிந்தேன்” என்றார்.
பதினைந்து வருடத்திற்கு பிறகு ஊர்மக்கள் மகிழ்ச்சியுடன் திருவிழாவை கொண்டாடினார்கள்.
தேவப்பிரசன்னம் என்பது ஒரே ஒரு ஜோதிடர் மட்டும் பார்க்கப்படும் ஜோதிடம் அல்ல. குறைந்தபட்சம் ஐந்து ஜோதிடர்களாவது இருப்பார்கள். மேலும் அந்த ஜோதிடர்கள் எல்லாம் மிகப்பெரிய ஜோதிடர்களாகவும் சாஸ்திரம் நன்கு கற்றவர்களாகவும் இருப்பார்கள். இக்குழு ஜோதிடர்கள் தவிர அவர்களுக்கு உதவியாளர்கள், அவ்வுதவியாளர்களுக்கு உதவியாளர்கள் என ஜோதிட பட்டாளமே இணைந்து ஒரு கோவிலுக்கு தேவப்பிரசன்னம் பார்க்கும்.
இக்குழுவுக்கு ஒருவரை தலைவராக தேர்ந்தெடுத்து அவர் முன்னிலையில் பிரசன்ன ஜாதகத்தில் கண்ட விஷயங்களை நான்கு நாட்கள் விவாதிப்பார்கள் பிறகே கருத்துக்களை வெளியிடுவார்கள்
By Swamy Omkar
No comments:
Post a Comment