Thursday, June 18, 2020

இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 23

இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 23
Sujatha &Venkatesan

இனி அவள் பார்வையில் …கோகுலம்  ,பிருந்தாவன் இரண்டையும் திவ்யமா சுத்திக்காட்டினதுல ரொம்ப சந்தோஷம்...மறுபடியும் பஸ் ஏறி மதுரா வர்றோம். க்ருஷ்ணன் பிறந்த க்ருஷ்ண ஜென்ம பூமி கோயில் ராம ஜென்ம பூமி கோயில் மாதிரி போக கடும் கட்டுப்பாடு அதனால முதல்ல ஊரில் பெரிய கோயிலான த்வாரகாதீஷ் கோயில் போறோம்...வழியெல்லாம் நிறைய புடைவை  பொம்மை கடைகள்.window shopping பண்ணallow பண்றார் .லஸ்ஸி சாப்பிடறோம். பானி பூரி வாங்கித்தர்றார். ஊர் சுத்தினதுல உதடு வெடிச்சு போறதுன்னு வாசலின் வாங்கிக்கறேன் 

ராத்திரி வேளையில் கோயில் ஜகஜ்ஜோதியா மின்றது...கண்ணன் வெளையாடின இடத்தையெல்லாம் தரிசனம் பண்ண ப்ரமை இன்னும் நீங்கலை. இவன் கொழந்தையா,தெய்வமான்னு தெரியாம என்ன வேண்டிக்கறதுன்னு புரியாம எல்லாரையும் காப்பாத்தச்சொல்லி வேண்டிக்கறேன். 

கிருஷ்ணர் சமூக ரீதியா மாடுகளையும், கன்றுகளையும், மேய்ச்சு கொண்டு காற்றில் சுற்றி திரிந்த ஒரு யாதவ சமுதாயத்தை ஒன்றா இணைச்சு மேல் தட்டு மக்களே ஆண்டு கொண்டு இருந்த ராஜ்யதை கைபற்றி, ஒரு மாபெரும் நகரத்தை உருவாக்கிய ஒரு புரட்சியாளனாகவே எனக்கு தென்படுறார் 

என் பேரனை கிருஷ்ணர் கதைகள் சொல்லி தூங்க வைப்பது என் வழக்கம். அப்போ சாதாரணமான ஒரு கேள்வியை கேட்டான். பாட்டி கிருஷ்ணர்னா  யாரு”..  நானும் யோசிக்க ஆரம்பிச்சேன்

அவர் ஒரு தத்துவ ஞானியா? சிறந்த போர் வீரனா? ஒரு திறம்பட்ட நிர்வாக ஆளுமையா?அரசியல் சூழ்ச்சியாளானா? ஒரு தேர்ந்த அரசனா? ஒரு கலைஞனா? இரக்கம் இல்லாத கொலை காரனா?ஒரு யாதவ புரட்சி வீரனா?நல்ல காதலனா? ஒரு அழகான குழந்தையா?  பெண்களை பற்றி முற்றிலுமாக அறிந்து அவர்களை பித்துகொள்ள செய்யும்  மன்மதனா?அல்லது அவர் அந்த பிரம்மத்தின் இறை வடிவம் தானா? .

என் மனசு இரண்டு வகையாக கிருஷ்ணரை பார்க்கிறது. ஒன்று ராதையின் வழியாக மற்றொன்று கம்ஸனின் வழியாக. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வண்ணம். ஒரு மனிதனின் மனதிற்கு மிக அணுக்கமாக இருப்பவர்கள் காதலியும் எதிரியும் தான். இன்னும் சொல்ல போனால் காதலியை விட நம்மை அனுக்கமாக கவனிப்பவர்கள் நம் எதிரிகள் தான். பல சமயம் ராதையை விட கம்ஸன் தான் கிருஷ்ணரை அதிகமாக காதலிக்கிறானோ எனவும் தோணும்...

என் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாம சலவைக்கல் கிருஷ்ணன் சிரிக்கிறான். பாட்டும் டான்ஸுமாக வழக்கமான வடக்கத்தி ஜனங்களின் பக்தியை ரசிக்கிறேன். 

கோயில் வரலாற்றை எங்கேயோ படித்து இவர் சொல்றார் ....
துவாரகாதீஷ் கோயில், குவாலியர் எஸ்டேட்டின் பொக்கிஷமாகக் கருதப்படும் சேத் கோகுல் தாஸ் பரிக் என்பவரால் 1814 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.

இக்கோயில், நகரின் கரையோரத்தில் அமைந்துள்ள முக்கியமான மலைத்தொடர்களுள் ஒன்றான விஷ்ரம் மலைத்தொடருக்கு அருகில் உள்ளது. கிருஷ்ண பகவான் “துவாரகாதீஷ்” என்றும் “துவாரகாவின் மன்னர்” என்றும் அழைக்கப்படுவதால் இக்கோயிலுக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்சமயம், இக்கோயில் வல்லபாச்சார்யா பிரிவினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

மதுராவில் யமுனை நதிக்கரையில் குஞ்சகாலி என்ற இடத்தில் துவாரகாதீஷ்' என்றழைக்கப்படும் கிருஷ்ணருக்கு பிரமாண்டமான இந்த கோயில் அமைந்துள்ளது.

கம்சவதம் முடிந்ததும் கிருஷ்ணன் இந்த இடத்திற்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டு பிறகு துவாரகா சென்று ராதையோடு மகிழ்ச்சியுடன் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்கு ஆதாரமாக கோயிலுக்குள் ஓர் ஆலமரத்தின் அடியில் கிருஷ்ணரின் பாதச்சுவடுகள் காணப்படுகிறது. கிருஷ்ணபரமாத்மா இங்கு வந்து சென்றதன் நினைவாகக் கட்டப்பட்ட கோயிலுக்கு பக்தை மீராவம் விஜயம் செய்து கிருஷ்ணரை தரிசித்துப் பல பாடல்களைப் பாடியுள்ளார். மீரா இசைத்த தம்புரா பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 

சீடர்களுடன் இங்கு வந்த மகான் சைதன்ய பிரபு, மதுராவை அழகான நகராக மாற்றி ஜாதி, மதமற்ற சமுதாயத்தை உருவாக்க பிரசாரம் செய்தாராம். அத்வைத தத்துவத்தையும் கிருஷ்ணனின் பெருமையையும் எடுத்துக்கூறி மக்களை நல்வழிப்படுத்தினாராம்.
4ம் நூற்றாண்டில் இங்கு வந்த சீன யாத்ரிகர் மெகஸ்தனிஸ் இப்பகுதியைப் பார்த்துவிட்டு கிருஷ்ண வழிபாட்டுக்குரிய முக்கிய தலம் இது' என்றாராம்.

6ம் நூற்றாண்டில் இப்பகுதியை மயூர மன்னர் ஆண்டு வந்தபோது மதுராவுக்கு அருகில் சொன்க்' என்ற இந்துக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. இவரது ஆட்சியைப் பொற்கால ஆட்சி என்கிறார்கள்.

மொகலாய மன்னன் ஜஹாங்கீர் இங்கு படையெடுத்து வந்தபோது கிருஷ்ணன் கோயில்களையும், அதன் அற்புதத் தோற்றத்தையும் பார்த்து பிரமித்து, இங்கு வாழும் ஒரு சிறு பறவைக்குக்கூட யாரும் தீங்கு செய்யக்கூடாது!' என்று உத்தரவிட்டுவிட்டு போர் செய்யாமலேயே திரும்பிச் சென்று விட்டாராம். ஆண்டு முழுவதும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து பகவத் கீதை படிக்கிறார்கள். சுவரிலும் பகவக்கீதை செதுக்கப்பட்டுள்ளது. கோகுலாஷ்டமி அன்று கிருஷ்ணர் குஞ்சகாலி நகரம் முழுவதும் ஊர்வலமாக வந்து பக்தர்களை ஆசிர்வதிக்கிறார். மாலை வேளையில் கோயிலைச் சுற்றி ஏராளமான தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டு ஆலயம் ஒளிவெள்ளத்தில் மிதக்கும் அன்று நடைபெறும் ஆண், பெண் பக்தர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் காண்போரை வசீகரிக்கும்.

 கண்ணன் ப்ரமையிலிருந்து விடுபடாத மனசு வயிற்றுக்கு எதுவும் கேட்கவில்லை.  கோயில்லேர்ந்து வர வழியில் ராத்திரிக்கு எதையோ கொறிக்கிறோம். மங்களம் லாட்ஜ் இருளோன்னு கிடக்கறது. அந்த ஊரில் எட்டு மணி நேரம் கரண்ட் கட்டாம். மே மாத புழுக்கத்தில், இருட்டில் ,கருப்பு நிற கண்ணனின் நினைவில் புல்லாங்குழல் இசையின் தாலாட்டு கனவா?,நினைவா எனத்தெரியாது ஒலித்து மன அடுக்கின் விளிம்புகளில் பிரபஞ்ச வீதிகளில் கரைந்து குழந்தை கண்ணனை தேடுகிறது,....
படங்கள் 
1)த்வாரகதீஷ் கோயில்..மற்றும் இதர காட்சிகள்



இன்றைய பதிவில் சைதன்யர் அத்வைத தத்துவத்தை கூறியதாக எழுதியிருந்தேன். தவறை சுட்டி விசிஷ்டாத்வைதம் என திருத்திய திரு முகுந்தன் அவர்களுக்கு நன்றி 🙏🏻

No comments:

Post a Comment