Wednesday, August 17, 2022

இரவு நடைப்பயிற்சி

 இரவு உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி... சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்துமா?* 💚❤️

இந்தியாவில் 2014-ம் ஆண்டு 42 கோடியாக இருந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது பல கோடிகளைத் தாண்டியிருக்கும். 2045-ம் ஆண்டு 134 மில்லியன் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சில கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மரபு வழியாகப் பரவுவது, முறையற்ற உணவுப்பழக்கம், அதிகப்படியான மன அழுத்தம், ஹார்மோன் மாற்றம், உடல் பருமன் என பல காரணங்களால் ஒருவருக்கு சர்க்கரைநோய் பாதிப்பு ஏற்படலாம். உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டு, உணவுக் கட்டுப்பாடுடன் இருந்தால் சர்க்கரைநோய் தாக்கம் பெரிய அளவில் இல்லாமல், நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இரவு உணவுக்குப் பின் நடைப்பயிற்சி செய்தால், ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு குறையும் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உண்மையில் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வருமா...குறைந்தது எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற தகவல்களை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த சர்க்கரைநோய் சிறப்பு மருத்துவர் வி. மோகன்.

" சர்க்கரைநோயை டைப் - 1, டைப் - 2 , என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். டைப் - 1 என்பது, உடல் இன்சுலினை முற்றிலும் சுரக்காத நிலை. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கே ஏற்படும். பெரும்பாலானோர் பாதிக்கப்படுவது டைப் - 2 சர்க்கரை நோயில் தான். உடலானது இன்சுலினை உற்பத்தி செய்யும். ஆனால் அது குறைந்த அளவாகவோ, தேவையான ஆற்றல் இல்லாததாகவோ இருக்கும்.

இரண்டு வகையான சர்க்கரை நோய் பாதிப்பிற்கும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வது, உணவுக்கட்டுப்பாடு போன்றவை அவசியமென்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். சர்க்கரைநோய் குறித்து தொடர்ந்து நிறைய ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுவாக ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை செய்வார்கள். ஆனால் இப்போது நொடிக்கு நொடி ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கண்டறியும் சி. ஜி. எம் என்று சொல்லக்கூடிய Continuous Glucose Monitoring கருவியைப் பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தக் கருவியின் மூலம் சோதிக்கும்போது எந்த உணவுகள், ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன, என்னென்ன செயல்பாடுகள் சர்க்கரை அளவைக் குறைக்கின்றன என்பதையெல்லாம் தெளிவாகக் கண்டறிய முடியும். அதன்படி ஒருவர் சாப்பிட்ட உடன், நடந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இனி இது எப்படி சாத்தியம் என்று பார்ப்போம்.

சாப்பிட்ட உடன் தூங்கச் செல்லும்போதோ, அல்லது வேலை செய்யாமல் இருக்கும் போதோ, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். சாப்பிட்ட பிறகு நடப்பதால் தசை, செல்கள் செயல்படும். அதற்கு குளுக்கோஸ் தேவைப்படும். உணவிலிருந்து நம் உடலுக்கு கிடைத்த குளுக்கோஸ் உடல் உறுப்புகளுக்குச் செல்வதால் ரத்தத்தில் சேரும் குளுக்கோஸ் அளவு குறைவாக இருக்கும். எனவேதான் சாப்பிட்ட பின் நடைப்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

எனவே குறைந்தது 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதே நேரம் இதயநோய் இருப்பவர்கள் நடைப்பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது" என்று விளக்கமாகக் கூறினார்.

No comments:

Post a Comment