Tuesday, August 23, 2022

ரகோபதேஸம் தொடர்ச்சி_23

 #ரகோபதேஸம்தொடர்ச்சி

ரகோபதேஸம் தொடர்ச்சி_23

by பாஸ்கர் சத்யா

வழக்கம் போல பாடம் கற்க மடத்துக்கு வருகிறேன்.  அன்றைய வருடம் ஆவணி அவிட்டத்திற்கு இன்னும் சில தினங்களே இருந்த நிலையில் அவர் பிஸியாக இருந்தார் என்றாலும் எனக்காக எப்படியாவது என் சௌகர்யத்திற்கு ஏற்றவாறு நேரத்தை ஒதுக்கி விடுவார்.

'மாமா நீங்க ரொம்ப பிஸியா இருக்கேளே?  வேணும்னா ஆவணி அவிட்டம் கழிஞ்சே க்ளாஸ் வெச்சுக்கலாமா மாமா?'

'எனக்கு முடியாதுன்னு தோணித்துன்னா பாக்கலாம்.  நீதான் நான் சொன்ன நேரத்திற்கு டாண்ணு வந்துடறயே?  எனக்கு ஒன்னால சிரமம் இல்ல.  சில பேர் ஆத்துக்கு வான்னு சொல்றா சில பேர் மடத்துக்கு வந்து பூணல் போட்டுக்கறேன்னு சொல்றா.  ஒருத்தர் ஒரு டைம் சொல்றா.  இன்னொருத்தர் அதே டைம் வேணுங்கறா.  இப்படி எல்லாரையும் அனுசரிச்சு போகறதுதான் கஷ்டமா இருக்கு.  முடிஞ்சவரை சமாளிச்சுதான ஆகணும்?'

'மடத்துல எத்தனை மணிக்கு மாமா ஆரம்பம்?'

'ஆத்துல போட்டுக்குறவா விவரங்கள் தெரிஞ்சா தானே இங்கே எத்தனை மணிக்குன்னு  தீர்மானம் பண்ண முடியும்?  சரி அதெல்லாம் நான் பாத்துக்கறேன்.  நாம இப்போ நம்ம வேலைய பாப்போம்.  ஆவணி அவிட்டம் அன்னிக்கி நேக்கு கூட மாட ஒத்தாசைக்கு வந்துடு.'

'கண்டிப்பா மாமா.  நீங்க கவலையே படாதீங்கோ.  எத்தனை மணிக்கு சொல்றேளோ டாண்ணு அத்தனை மணிக்கு இங்க இருப்பேன்.'

'சமத்து.  இது ஒண்ணே போதும்டா.  சரி, இருக்கைகள ரெடி பண்ணு.  க்ளாஸ ஆரம்பிச்சுடுடுவோம்.'

வழக்கமானவைகள் முடிந்து வகுப்பு துவங்குகிறது.

'உபநிஷத்துக்கள் பத்தி மேலோட்டமா பார்த்தோம்.  கொஞ்சம் நாலு விதமான வேதங்களை பத்தியும் தெரிஞ்சுண்டோம்.  வேதாந்தங்கள் இது மாதிரியான சில விஷயங்களையும் பார்த்தோம்.  உபநிஷத்துல இருக்கக்கூடிய முக்கியமான பகுதிகளான சிக்ஷா வல்லி, பிரம்மானந்த வல்லி, ப்ருகு வல்லி இவைகளைப் பத்தி ஆரம்பிச்சு சிக்ஷா வல்லியில துவக்கமாக இருக்கிற பிரார்த்தனை மந்திரங்களையும் அப்யாஸியோட பயிற்சிகளையும் சுருக்கமா பாத்தோம்.  அதோட மாத்திரம் இல்ல ...  உபநிஷத்துல வரக்கூடிய 'மாத்ருதேவோ பவ' அப்படின்னு துவங்கற ஸ்லோகத்திலும் 'ஸத்யம் வத தர்மம் சர' அப்படிங்கற வார்த்தைகள்ல இருக்கக்கூடிய ஹிந்து கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் நாம புரிஞ்சுகிண்டோம்.  தர்மம், தானம்  இவைகள்ல இருக்கக்கூடிய பேதத்தையும் நாம தெளிவுபடுத்திண்டோம்.'

'இப்ப நாம ப்ருகு வல்லி பத்தி தெரிஞ்சுப்போம்.'

'அப்ப ஆனந்த வல்லி மாமா?'

'அவசரப்படாதே.  ப்ருகு வல்லிய முடிச்சுட்டு அதுக்கு வரலாம்.  ஞாயமா ஆனந்தவல்லி தான் ஆரம்பிக்கணும்.  பரவால்ல, ப்ரகு வல்லியை முடிச்சுட்டே அதுக்கு போவோம்.'i

'ப்ருகு வல்லி பாடங்கள்ல இருக்கக்கூடிய அடிப்படை ஆதார விஷயம் ப்ரம்ஹம்.  பிரம்மம்னா பரமாத்மா அப்படிங்கறது நமக்கு எளிதுல  புரியற விஷயம்.  பரமாத்மா நம்ம மனசுக்குள்ள நம்ம ஹ்ருதயத்துக்குள்ள உட்கார்ந்து நம்மளோட ஆத்மாவை இயக்குகிறவர் அப்படிங்கறது நம்மோட அசைக்க முடியாத நம்பிக்கை.  இன்னும் ஒரு படி மேலே போய் சொல்லணும்னா ஆத்மா தான் பரம் பொருள்.'

'இங்க நோக்கு ஒரு சந்தேகம் வரலாம்.  ஆத்மாவை இயக்கறது பரம்பொருள் அப்படின்னா பிரபஞ்சத்தை இயக்குறதும் பரம்பொருள் தானே?  

'ப்ரஹ்மம் என்றால் அது ஆத்மாதான்.  சந்தேகமில்லை.  சின்ன ஜீவனுக்கு மூலம் என்னன்னு பாக்கும்போது ஆத்மான்னு சொல்றோம்.  அதுவே பெரிய ஜகத்துக்கு மூலம் என்னன்னு பாக்கும்போது ப்ரஹ்மம்னு சொல்றோம். ஜீவ மூலமும் ஜகத் மூலமும் ஒண்ணுதான்.  அடிப்படையில பார்க்கும்போது ஒன்றிலிருந்தேதான் ஜீவ – ஜகத்துக்கள் தோன்றியிருக்கு. ஜீவ மூலமான ஆத்மாவுக்கு அந்நியமாக எதுவுமில்லை என்று சொன்னதுக்கு பிற்பாடு ப்ரஹ்மம் மட்டும் அதற்கு வேறாக இருக்கமுடியுமா? ஆத்மாவும் ப்ரஹ்மமும் ஒண்ணேதான்.'

'இன்னொரு தடவ சொல்றேன்.  நன்னா கேட்டுக்கோ.  ஒரே ஸத்ய வஸ்துவான ஜீவன மட்டும் குறிச்சதா சொல்லும் போது ஆத்மாங்கறோம். எத்தனையோ லக்ஷக்கணக்கான ஜீவராசிகளும் கோடானு கோடி வஸ்துக்கள் கொண்டதான ப்ரபஞ்சமும் அடங்கிய ஜகத்தைக் குறித்ததாகச் சொல்லும் போது ப்ரஹ்மம்னு சொல்றோம்.'

'பரப்பிரம்மத்தோட இலக்கணத்த ப்ருகுவல்லி அற்புதமா சொல்லியிருக்கு.'

'எந்தப் பரப்பிரம்மத்திலிருந்து இந்த உயிர்கள் தோன்றுகின்றதோ, எந்த பரப்பிரம்மத்தின் தயவால் இந்த உயிர்கள் உலகினில் நிலை பெறுகின்றனவோ, அந்தப் பரப்பிரம்மத்தினிடமே இந்த உயிர்கள் அனைத்தும் சென்று அடைகின்றன'

'மாமா சித்த நிறுத்துங்கோளேன்.  எனக்கு ஒரு கேள்வி கேட்கணும்.  இதுக்கு ஏன் ப்ருகு வல்லின்னு பேர் வெச்சுருக்கா?  ப்ருகுன்னா என்ன?'

'ஓ ....  அத முதல்ல சொல்லிட்டு ஆரம்பிச்சுருக்கணுமோ?  சரி, இப்ப சொல்றேன் கேட்டுக்கோ.'

'சப்த ரிஷிகள்ல ஒரு ரிஷி தான் ப்ருகு.  அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தான் இவருடைய இறை ஞான அனுபவங்களை பாடமாக கொண்ட இந்த உபநிஷத் பகுதிகளுக்கு ப்ருகு வல்லின்னு பெயர் வெச்சிருக்கா.  இந்த ப்ருகுங்கற ரிஷியோட பெயரை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா, பாஸு? ஒரு மந்திரத்திலேயே வரும்.  ஞாபகப்படுத்திப் பாரு பாப்போம்?'

யோசிக்கிறேன் யோசிக்கிறேன்.  காலம் சற்று எடுத்துக்கொண்டு யோசிக்கிறேன்.

'வேணும்னா ஒரு க்ளூ தரட்டுமா?  சந்தியா வந்தன உத்தரபாகத்தில் பிரணவ ஜபத்துக்கு முன்னாடி வரும்.'

'ஐ gகாட் இட்' உணர்வு இதை அவர் சொன்னவுடன்.  உடனே அவர் நினைவு கூர்ந்த மந்திரத்தை உச்ச ஸ்தாயியில் சொல்ல ஆரம்பிக்கிறேன்.

ப்ரணவஸ்ய ரிஷி ப்ருஹ்ம: தேவி காயத்ரி சந்தஹ பரமாத்மா தேவதா

பூராதி ஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரி ப்ருகு குத்ஸ வஸிஷ்ட கெளதம காச்யப ஆங்கீரஸா: ரிஷய:

'ரெண்டாவது பேரா வர்றதே ப்ருகு.  அந்த ரிஷியா மாமா?'

'பேஷ் பேஷ்.  பரவாயில்லையே சட்டுனு'' புடிச்சிட்டியே?'

அத்ரி, ப்ருகு, குத்த, வஸிஷ்ட, கௌதம, காச்யப, ஆங்கிரஸ .... என்ற சப்த ரிஷிகளில் இரண்டாவதாக வருபவரான ப்ருகு ரிஷியே தான்.  இவர் என்ன பண்ணினார்?  சதுர் புஜன்கலான மனம், சித்தி,புத்தி, அகங்காரம் இவைகள ஆளுகின்ற திருமாலை  பிரதானப் படுத்தி ஞான தத்துவங்கள் அமைச்சார்.  அது மாத்திரம் அல்ல.  ஜோதிட சாஸ்த்ரத்தின் குருவாக இருந்தவர்.  தமிழ்ல ப்ருகு நாடி அல்லது ப்ருகு நந்தி நாடின்னு சொல்லுவா அந்த ஜோதிட சாஸ்திரத்தை.  வட மொழியில இந்த ஜோதிட சாஸ்திரம் 'ப்ருகு சம்ஹிதை" அப்படிங்கற பேர்ல ரொம்ப பிரபலமானது.'

'சுமார் அஞ்சு லட்சம் ஜாதகங்கள இவர் கணிச்சதாகவும் நாலந்தா பல்கலைக்கழகத்துல பத்திரமா வெச்சிருந்த அவைகளை முகலாயர் படையெடுப்புல அழிஞ்சு போனதா கூட சொல்றா.  அதுல சில கணிப்புகள் ராஜஸ்தான் பஞ்சாப் மாநிலங்கள்ல கிடைச்சிருக்கிறதா சொல்றா.'

'ப்ருகு முனி ப்ரம்ம ஞானம் பெறுவதற்காக வருணனை நோக்கி தபஸ் செஞ்சவர்.  அந்த முயற்சியில அவருக்கும் வருண தேவருக்கும் நடந்த சம்பாஷணைகள் தான் இந்த ப்ருகு வல்லில பாடமா வந்திருக்கு.  இந்த உபநிஷத்துல  அஞ்சு அனுவாகம் ப்ருகு முனி பிரம்மத்தை அடைய எடுத்த முயற்சிகளையும் அடைந்த ஞானத்தையும் விவரிக்கறது.  என்ன விதமான முயற்சிங்கறத இப்ப பாப்போம்.'

'வருணனுக்கும் ப்ருகு முனிவருக்கும் நடந்த சம்பாஷணை பகுதிகள் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்.  படிக்க படிக்க நமக்கும் ஞானம் தேடும் முயற்சியில இறங்கணும்னு தோணும்.  அப்படியான தேன் சமாச்சாரங்கள் இதுல இருக்கு.'

'ப்ருகு வருணனை அணுகி "எனக்கு பிரமத்தை போதியுங்கள்" என வேண்டுகிறார்.  அதற்கு வருணன் அன்னம் அதிலும் குறிப்பாக உணவிலிருந்து ஆவி ரூபமாக உள்ள  சுக்கிலம், காணுதல்,  கேட்டல், மனம்,  வாக்கு" ஆகியவைகளை கூறுகிறார். அதன் பிறகு எங்கிருந்து எல்லா ஜீவன்கள் வந்தது? எங்கே வசிக்கிறது, எங்கே  மறுபடியும் சென்றடைகிறது இவைகளை அறிந்தால் அதுவே பிரம்மம்னு சொல்றார்.  ஆரம்பத்திலேயே கூட இதப்பத்தி சொன்னேனே?'

வருணன் சொன்னத கேட்டுட்டு அவர் சொன்ன விஷயங்களுக்குள்ள எது பிரம்மம் அப்படின்னு கண்டுபிடிக்கணும்னு முயற்சியில இறங்கறார்.'

'கடும் தபஸ்ல ஆழ்ந்து பின் அன்னமே பிரம்மம் என்ற முடிவுக்கு வறார் பிருகு முனி.'

'ஆனாலும் ஒரு கன்ஃப்யூஷன் அவருக்கு வருகிறது.  அன்னம் தான் பிரம்மம் என்றாலும், எல்லா ஜீவன்களும் அதை சார்ந்து இருந்தாலும் அதற்கும் ஒரு ஆரம்பமும், முடிவும் இருக்கே.  அதனால அது பிரம்மாக இருக்க வாய்ப்பில்லை என்று உணர்ந்து மறுபடியும் வருணன் கிட்ட உபதேசம் கேட்கிறார். அதற்கு வருணனோ தவம் இயற்றி பிரம்மத்தை அறிந்து கொள்ள சொல்கிறார்.'

'தவத்திற்கு பிறகு பிராணன் தான் முக்கியம்.  அதாவது மூச்சை அடக்கி ஒழுங்குபடுத்தி வைக்கிறச்சே தானே தபஸ் சாத்தியம் ஆகும்?  அதனால பிராணன் தான் பிரம்மம் அப்படின்னு நினைக்கிறார்.  வருணன் கிட்ட போய் இதை சொன்னோண்ண வருணன் அவரை மீண்டும் தியானம் செய்ய சொல்கிறார்.'

'ப்ருகு முனி இப்போது மனசு தான் பிராணனை உணர காரணமா இருக்குன்னு முடிவு செய்கிறார். மனம் என்று ஒன்று இல்லாவிட்டால் பிராணனை எப்படி உணர முடியும். ஆகையால் மனசு தான் பிரம்மம் என்று நினைத்து வருணன் கிட்டக்க போய் சொல்றார்.  வருணன் அவர் சொன்னதை கேட்டு சிரிச்சிட்டு திரும்பவும் தபஸ் பண்ண சொல்றார்.'

'திரும்பவும் தபஸ்.  திரும்பவும் மனசுக்குள்ள ஒரு தேடுதல்.  கடைசியா புத்தியாத் தான் இருக்கும்னு தீர்மானித்து வருணன் கிட்ட சொல்ல அவர் திரும்பவும் தபஸ் பண்ண சொல்றார்.'

'முதல்ல அன்னம்.  அடுத்து பிராணன்.  பிறகு மனசு.  கடைசியாக புத்தி.  இருந்தாலும் வருணன் சொன்னதால மீண்டும் கடும் தபஸை ஆரம்பிக்கிறார்.'

'இப்போது ஆழ்ந்த த்யானத்தில் பேரானந்த நிலையை அடைந்து சுகிக்கிறார் . அகம் அன்னம் என்று பாடல்கள் தொடர்கின்றது. அதில் பேரானந்த நிலையை "ஹா வூ, ஹா வூ " என்று யோகின் இன்பம் தெரிகிறது. பின் அந்த ஆனந்த ஜ்யோதியை கண்டேன் என்பதையும் தெளிவாக கூறுகிறார்.'

'உபநிஷத்திலே ” அஹம் அன்னம் ” அஹம் அன்னம் ” என்று வருகிறது. பகவானுக்கு நமது ஆத்மாவை அன்னமாகப் படைக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள்.'

புளியோதரை, வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல்,சுண்டல், தத்யோன்னம் எல்லாம் பகவானுக்கு நிவேதனம் பண்றோம்.

இவைகளெல்லாம் பகவானிடம் இல்லாத வஸ்துக்களா? அவற்றை நாம் கொடுத்துத் தான் அவனோட பசி போகணுமா என்ன?

இந்த நிவேதனம் என்கிற கார்யம் நமக்குத் தெரியணும் அப்படிங்கறதுக்காகவே இதைப் பண்றோம்.  இதை விடப் பெரிய நிவேதனம் நாம பண்ணனும்.அது தான் ஆத்ம நிவேதனம்.'

'அதை பழகிக்கறதுக்காக தான் இந்த நிவேதனத்தை பகவானுக்கு நாம் பண்ணணும்னு நம்முடைய ஆசார்யர்கள் கொண்டு வந்தா.'

'இந்த ஆத்ம நிவேதனத்திற்கு அஞ்சு அங்கங்கள்‌ இருக்கு.  வேதத்திற்கு அங்கங்கள் எப்படி இருக்கோ அதே மாதிரி அன்னத்திற்கும் அஞ்சு அங்கங்கள் உண்டு.'

(1) ஆநுகூல்ய ஸங்கல்பம்
(2) ப்ராதிகூல்ய வர்ஜநம்
(3) மஹாவிச்வாஸம்
(4)கோப்த்ருத்வ வரணம்
(5) கார்ப்பண்யம் என்பன.

'பயப்படாதே.  ஒவ்வொண்ணுக்கும் விளக்கம் சொல்றேன்.  அப்ப நன்றாக புரியும்.'

(1) ஆநுகூல்ய ஸங்கல்பம் –

எம்பெருமான் திருவுள்ளத்திற்கு உகந்தவற்றையே செய்வதாய் உறுதி எடுத்துக்கறது.

(2) ப்ராதிகூல்ய வர்ஜநம் –

எம்பெருமான் திருவுள்ளத்திற்கு விபரீதமானவற்றைச் செய்யாதிருக்க உறுதி கொள்ளல்; அல்லது அவற்றைப் புரிய எண்ணங் கொள்ளாமை; அல்லது அவற்றைச் செய்யாது விடுதல்…

(3) மஹாவிச்வாஸம் –

எம்பெருமான் நம்மைக் காக்க வல்லவன் என்று தேறித் தவறாது நம்மை ரக்ஷிப்பான் என்று திடமாக நம்புதல்..

(4)கோப்த்ருத்வ வரணம் –

பக்தியோகம் முதலிய உபாயங்களை அநுஷ்டிக்க சக்தியற்ற நம் விஷயத்தில் அருள் புரிந்து அப்படிப்பட்ட உபாயங்களின் ஸ்தாநத்தில் நின்று பலன் கொடுக்கு மாறு அவனை வேண்டுதல்..

(5)கார்ப்பண்யம் –

பக்தியோகம் முதலிய உபாயங்களில் நமக்கு அதிகாரமின்மையும், எம்பெருமானைத் தவிர வேறு தெய்வத்திடமோ,

மோக்ஷத்தைத் தவிர வேறு பலனிலோ பற்றில்லாமையும் அநுஸந்தித்தல்;

அல்லது இவ்வநுஸந்தாநத்தால் நமக்கிருந்த கர்வம் ஒழியப் பெறுதல்;

அல்லது எம்பெருமானது கருணை நம்மீது வளர்ந்து ஓங்கும்படி தாழ்ந்து நின்று அஞ்ஜலி நமஸ்காரம் முதலியவற்றைச் செய்தல்..

'பிச்சு உதறுரேள் மாமா.  நைவேத்தியத்தில் இவ்வளவு விஷயமா?'

'நிவேதனத்தோட நோக்கமே பகவானுடைய கடாக்ஷம் நம்ம மேல பரிபூரணமா விழணும் அப்படிங்கறதுதான்.'

'ப்ருகு ரிஷியோட தேடுதல்ல அன்னமானது பிரம்மம்னு புரிஞ்சாலும் ஒன்னோட தேடுதல் அங்கேயே நின்னுடக் கூடாது.  அன்னம், பிராணன், மனஸ் இப்படி தேடுதல் எது நீண்டாலும் எதுவும் முடிவானதில்லை. எதுவும் தப்பு என்பதும் இல்லை என்பது தான் விசேஷம்.'

'இன்னைக்கு இதோட போதுமோன்னோ?  நிவேதனம் பத்தின கிளாஸா போயிடுத்து.  ரொம்ப சாப்ட கூடாதோன்னோ?  இத்தோட நிறுத்திப்போம்.'

நமஸ்காரம் ஆசிர்வாதம் முடிந்து கிளம்புகிறேன் மடத்திலிருந்து.

தொடரும்

No comments:

Post a Comment