#ரகோபதேஸம்தொடர்ச்சி
ரகோபதேஸம்தொடர்ச்சி_24
by பாஸ்கர் சத்யா
ப்ருகுவல்லி வகுப்பை அவர் எடுத்ததிலிருந்து எனக்கு சற்று தியானத்தில் ஈடுபாடு வந்தது. என் இல்லத்தில் அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டேன். முயற்சி என்றால் கண்ணை மூடிக்கொள்வேன் அமைதியாக இருப்பேன். இந்த இரண்டுமே என்னால் சிறிதளவு கூட இயலாததாகவே இருந்தன. 'இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுப்பா' என்பதே நான் ஒவ்வொரு முயற்சியிலும் திரும்பத் திரும்ப எனக்குள் சிரித்துக் கொண்டே சொன்ன வாசகங்கள்.
மறுநாள் வழக்கம் போல வகுப்புக்காக மடத்திற்கு செல்கிறேன். நான் சென்ற போது ஆசான் தோட்டத்திலிருந்து பூக்கூடையோடு திரும்பிக் கொண்டிருந்தார்.
'வாடா பாஸு. ப்ருகு வல்லி புடிச்சிருந்ததா? நான் சொன்னதெல்லாம் மனசுக்குள்ள போட்டுண்டியா?'
'மாமா அத ஏன் கேக்கறேள்?' என்று ஆரம்பித்து என் தியான முயற்சிகளை அவரிடம் சொல்லிவிட்டு சிரிக்கிறேன்.
'எப்படித்தான் இந்த ரிஷிகள்லாம் தபஸ் செஞ்சாளோ? ஒரு நிமிஷம் கூட கண்ண மூடிண்டு என்னால ஒரு இடத்துல உட்கார முடியல.'
'ஏண்டா உடனே எல்லாம் வந்துடுமா? முயற்சிகளை கைவிடாம பண்ணிட்டே இருந்தா உன்னாலேயும் முடியும்? ஸ்கூல்ல ஒரு பாடத்தை திரும்பத் திரும்ப படிச்சா தானே நெட்ரு ஆகறது? த்யானம் செய்யறது கூட ஆரம்ப கட்டத்துல ஒரு ஆசிரியர் முன்னாடி ட்ரெயினிங் எடுத்துக்கணும். அதுக்கு சில ஆஸன பயிற்சிகளும் தேவைப்படும்.'
'உங்களுக்கு ஆசனம் தியானம் இதெல்லாம் தெரியுமா மாமா?'
'ஆஸனம் ஒரளவு பண்ணுவேன். த்யானம் தினமும் ஒரு மணி நேரம். அவ்வளவுதான். வைதீக காரியங்களெல்லாம் வேற இருக்கே.'
'பாஸு, பலகைகளை போடு. மேற்கொண்டு பாடத்த நாம ஆரம்பிப்போம்.'
இருக்கைகள். நமஸ்காரங்கள். அபிவாதனம். ஆசானின் ஆசிர்வாதங்கள். வகுப்பு துவங்குகிறது.
'இந்த சிக்ஷா வல்லி, ஆனந்தவல்லி, ப்ருகு வல்லி மூணுமே குருகுல பாடங்களா உபநிஷத்தில் சேர்க்கப்பட்டிருக்கு. ஏற்கனவே சொல்லி இருக்கேன். இருந்தாலும் இன்னொரு தடவை சொல்றேன்.'
'இரண்டாவதா இருக்கற பிரம்மானந்த வல்லி ஒழுக்கம் பத்தினது. சொன்ன பிரகாரம் செய்வது பத்தி சொல்லித்தரும் விஷயங்கள் கொண்டது. பிரம்மத்தை விளக்குகிறது இந்த பிரம்மானந்த வல்லி. எது சத்தியமாகவும், ஞானமாகவும், எல்லையற்றதாகவும் இருக்கோ அதுவே பிரம்மம். அந்த பிரம்மத்தை நம்ம மனசுக்குள்ள தேடணும் தேடி அறியணும். அப்படி பிரம்மத்த அறிஞ்சவன் பிரம்மமாகவே இருந்து அனைத்தையும் அடைகிறான் என்பதை விளக்கமா சொல்றது இந்த பிரம்மானந்த வல்லி. சுருக்கி ஆனந்த வல்லி அப்படின்னும் இத சொல்றா.'
'இந்த சிக்ஷா வல்லி பிரம்மானந்த வல்லி ப்ருகு வல்லி இந்த மூணையும் பாடங்களோட மூணு ஸ்டேஜஸா வெச்சுக்கலாம். நீ அஞ்சாங்கிளாஸ் வரைக்கும் மணிமேகலை ஆரம்ப பள்ளியில் படிச்சே இல்லையா? அதுக்கப்புறம் ஆறாம் கிளாஸ்லேந்து மேல்நிலைப்பள்ளி. இந்த படிப்பு அந்த ஸ்கூல்ல முடிஞ்ச உடனே மேல் படிப்புக்கு காலேஜுக்கு போவ தானே. இந்த மூணு விதமான ஸ்டேஜ்கள் தான் இந்த மூன்று விதமான வல்லிகள்லேயும் இருக்கு.'
'சிக்ஷாவல்லி ஒரு ஆரம்ப நிலை கல்வி. பிரார்த்தனைகள் பிரபஞ்சங்கள் சிந்தனைகள் இப்படி சொல்லிக் கொடுக்கறது. ஆனந்த வல்லியானது ஒழுக்கம் மனுஷாளோட இயல்புகள் குணங்கள் அவனுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் உண்டான தொடர்புகள் இந்த மாதிரியான விஷயங்களை சொல்லிட்டு அவனை ஆனந்த நிலைக்கு அழைத்துச் செல்கிற பாடங்கள கொண்டதா இருக்கு. மூன்றாவதான ப்ருகு வல்லிய ஒரு ஆய்வுக் கல்வி அப்படின்னு கூட சொல்லாம். இது சீடனின் சுய முயற்சிகள தூண்டி, அவனை அவனோட அனுபவங்கள் மூலமாவே கத்துக்க செய்வது. நேத்திக்கு பார்த்தோமே ப்ருகு ரிஷியோட ப்ரம்மம் தேடற முயற்சிகளையும் அவர் அனுபவத்தால் உணர்ந்த விஷயங்களையும். இப்படிப்பட்ட பாடங்களை உள்ளடக்கியது தான் இந்த ப்ருகு வல்லி.'
'இந்த பிரம்மானந்தவல்லியும் ஓம் என்கிற பிரணவத்த சொல்லிட்டு ஒரு பிரார்த்தனை ஸ்லோகத்தோட தான் ஆரம்பிக்கிறது.
ஓம் ஸஹ நாவவது | ஸஹ நௌ புனக்து| ஸஹ வீர்யம் கரவாவஹை|
தேஜஸ்வி நாவதீதமஸ்து| மா வித்விஷாவஹை||
'இப்போ இதற்கான அர்த்தத்தை சொல்றேன் பார்.'
'ஓம் என்ற அந்த ஆதார ஒலி நம் இருவரையும் காக்கட்டும், ஊக்குவிக்கட்டும். நம் இருவரின் சக்தி உறுதியாக செயல்படட்டும். நம் அறிவு ஒளி பெருகி நிலைக்கட்டும். நாம் (நம் சாதனைப் பாதையில்) வெறுப்படையாதிருப்போமாக.'
குருவும் சீடனும் சேர்ந்து பிரார்த்திக்கறதா இந்த ஸ்லோகம் அமஞ்சிருக்கு.'
'இதுக்கப்புறம் இருக்கும் பாடங்கள் சீடனுக்கு ஒரு ஆராய்ச்சிப் பாதையாக அமச்சு வெச்சிருக்கா. பிரபஞ்சுத்தல மனுஷன் எப்படி வந்தான்? அவனுக்கும் இயற்கைச் சக்திகளான பஞ்ச பூதங்களுக்கும் என்ன தொடர்பு? தன்னியல்பான ஆனந்தத்தை ஏன் மனிதனால் அனுபவிக்க முடியல? இது போன்ற பல கேள்விகளுக்கு நுட்பமாக பதிலைத் தேடறது இந்த பகுதி.'
தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன் ஆகாஷஸ்ஸம்பூத: | ஆகாஷாத் வாயு: | வாயோரக்னி: |அக்னோராப: | அதப்ய ப்ருத்வீ | பிருதிவ்யா ஓஷதய: | ஓஷதீப்யோऽன்னம் | அன்னாத் புருஷ: ||
பிரபஞ்சத் தோற்றத்தை – படைப்பின் வரிசையை - இந்த சூக்தம் முக்கியமான சில உன்மைகளை வெளிப்படுத்துகிறது.
முதல்ல சொல்லப்படற விஷயம் படைப்பின் வரிசை. மனுஷன் என்பவன் ஏதோ இறைவனின் பிரத்யேகப் படைப்பு அல்ல. படைப்பின் வரிசையில் அவனும் ஒன்றுதான் அப்படிங்கறத அழுத்தி சொல்றது.
அடுத்தாப்பல பஞ்ச பூதத் தொடர்பு. இயற்கை சக்திகளான நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்ற அஞ்சு மூல சக்திகளோட கலவை தான் மனிதன். நம்ம உடம்புல ஜலம் இயற்கையாவே. காற்றும் இருக்கு. எரிசக்தி இருக்கு. இப்படியாக பஞ்ச பூதங்கள் கலவையா இந்த உடம்பு இருக்கு அப்படிங்கறத சொல்லித்தறது இந்த பகுதிகள். இயற்கை சீர்குலைந்தால் மனிதனும் சீர்குலைவான். மனிதத்தன்மை சீர்குலைந்தால் இயற்கை சீற்றமடையும் அப்படிங்கறத மனத் தேடுதல் உணர்த்தி இயற்கையை எப்போதும் பாதுகாக்கணும் அப்படிங்கிற அறிவுரையையும் தெளிவா சொல்லப்பட்டிருக்கு.
'உணவே மருந்து அப்படிங்கிற விஷயத்தை போதிக்கறது அடுத்தபடியாக. தாவரங்களை குறிக்க ‘ஓஷதீய’ அதாவது தமிழ்ல மூலிகைகள் - என்ற சொல் பயன்படுத்தப் பட்டிருப்பதால் உணவே மருந்து என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது. உடலே ஆதாரம். உணவிலிருந்து வந்தவனே மனிதன் என்பதன் மூலம் ‘உணவினால் பலம் பெற்ற உடலே ஆத்ம சாதனைகளுக்கு ஆதாரம்’. சுவரை வெச்சு தான சித்திரம் வரைய முடியும்? சுருக்கமா சொன்னா ஆகாரம் உடலுக்கு ஆதாரம். உடல் ஆத்ம ஞானத்துக்கு ஆதாரம் அப்படிங்கிற அடிப்படை விஷயத்தை நன்னா விளக்கியிருக்கு இந்தப் பகுதிகள்.'
'மனுஷன் ஆனந்தமயமானவன்: இறைவன் அல்லது ஆத்மாவில் தொடங்கிப் படிப்படியாக வந்து கடைசியில் வருபவன் மனிதன். இதனால் மனிதன் என்பவன் இறைவனின் அல்லது இறைத்தன்மையின் ஒரு பகுதியே என்பது ஆனந்தவல்லி பாடங்கள் மூலம் உணர்த்தப்படறது.'
'இறைத்தன்மையான ‘ஆனந்தம்’ மனிதனோட இயல்பும் இல்லையா? மனிதன் ஆனந்தமயமானவன் என்கிறது இந்த சூக்தம். வாழ்க்கை ஆனந்தமயமானது என்கின்றனர் ஞானியர். ஆனால், நிதர்சனம் அப்படியா இருக்கு? துக்கம் கஷ்டம் சோர்வு ஏமாற்றமும் கொடுமை போன்ற விஷயங்களும் சேர்ந்துதான மனுஷாளோட வாழ்க்கையாக இருக்கு?'
'இந்த நிலைக்கு என்ன காரனம் என்பதை இதில் சொல்லப்பட்டிருக்கும் சூக்தங்கள் ஆராய்ச்சி வடிவில் இருக்கின்றன. இந்தக் கேள்விகள், மனுஷா தோன்றிய காலம் தொட்டே இருந்திண்டிருந்தாலும் ஆழ்ந்து ஆராய்ந்து, கிடைத்த விடைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றன இந்த ஆனந்த வல்லி பகுதியில் வருகிற உபநிஷத்துக்கள்.
'ஒரு ஜீவனின் உடல் அஞ்சு கோசங்களாக பிரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு கோசத்தை நீக்கும்பொழுது அந்த கோசத்துடன் சேர்ந்து இவ்வுலகமும் நீக்கப்படுகிறது. உதாரணமாக அன்னமய கோசமான இந்த ஜட உடல் ஆத்மா அல்ல என்று அன்னமய கோசத்தை நீக்கும்பொழுது இந்த ஜட உலகமும் நீக்கப்படுகிறது.
இந்த மாதிரி அஞ்சு கோசஙகளும் நீக்கப்படும் பொழுது அனைத்துப் படைப்புகளும் உண்மையல்ல என்று உணர்த்தப்பட்டு, ஆனந்த வடிவாகவும், ஆத்மவாகவும் உள்ள பிரம்ம தத்துவம் விளக்கப்படறது. '
'ஈஸ்வரனே மாயையின் துணைகொண்டு இப்படைப்பிற்கு உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருப்பது விளக்கப்படுகிறது. பிரம்மம் அறியப்படாத பொழுது பயத்திற்கும், அறியப்படும் பொழுது பயமின்மைகக்கு இருப்பிடமா இருக்கு. இறுதியில் ஞானி பிரம்மத்தை அடைகிறான். ஆனால் அஞ்ஞானியோ பிரம்மத்தை அடைவதில்லை. இந்த விசாரணைக்கு ஆனந்த மீமாம்ஸைனு பெயர்.
'அன்னதானம் வலியுறுத்தப்பட்டு, உணவை நாம் எவ்விதம் கொடுக்கிறோமோ அவ்விதமே நமக்கும் கிடைக்கிறது என்ற நியதி கூறப்படுகிறது. இறுதியாக ஜீவ – பிரம்மம ஐக்கியம் பத்தி கூறி இந்த ஆத்ம ஞானம் அடைந்தவன் ஆனந்தத்தில் களிக்கிறான் என்பதுடன் இந்த உபநிடதம் முடிகிறது.'
'மேலோட்டமான கருத்துக்களைத்தான் நான் இப்ப நோக்கு சொல்லி இருக்கேன். இந்த உபநிஷத்துக்குள்ள போனாலே நம்மள ஆனந்தம் ஸ்வீகரித்துக் கொள்ளும் என்கிற அளவுக்கு அற்புதமான விளக்கங்கள் தரப்பட்டிருக்கு.'
'இந்த சிக்ஷாவல்லி ஆனந்தவல்லி மற்றும் ப்ருகு வல்லி பாடங்கள் ஒரு மாணாக்கனுக்கு காணக் கிடைக்காத பொக்கிஷம். எத்தனை தத்துவம் இருக்கு? எத்தனை அறிவுரைகள்? எத்தனை ஆராய்ச்சிகள்? சொல்லிண்டே போகலாம் பாஸூ.'
'நன்னா சம்பாதிச்சு நன்னா குடும்பம் நடத்தி ரிட்டயர் ஆகி அப்பாடான்னு ஈஸி ச்சேர்ல உட்காரச்சேயாவது இந்த மூணு வல்லிகளை அக்ஷரம் பிசகாம படிக்க முயற்சிக்கணும். இப்ப நான் நோக்கு சொல்லித் தராப்போல அடுத்த சந்ததியர்களுக்கு அவைகள எடுத்து சொல்லணும்.'
'ராமாயணம் மகாபாரதம் இது மாதிரியான விஷயங்கள் ஏதோ ஒரு சொற் பொழிவிலேயோ கதா காலட்சேபத்துலேயோ நமக்கு காதுகள்ல விழக்கூடிய பாக்கியம் கெடைச்சுடறது. ஆனா இந்த உபநிஷத்துகளோ அல்லது இவைகள்ல இருக்கிற சாராம்சங்களையோ தெரிஞ்சிக்கிற பாக்கியம் அவ்வளவு லேசுல யாருக்கும் கிடைச்சுடறது இல்ல. அந்த அளவுக்கு என்னோட பாஸூ புண்ணியம் பண்ணியிருக்கான் அப்படின்னு தான் நேக்கு தோணறது.'
'உன் மனசுல ஆர்வம் அழியாம பாத்துக்கோ. அது எப்படின்னு கேக்கறியா? அடிக்கடி நாம ரெண்டு பேரும் பேசிண்டு இருக்கறத நினைச்சுக்கோ. எங்கேயும் ஆர்வம் போய்டாது. என்னிக்காவது ஒரு நாள் பகவத் ஸங்கல்பத்துல இவைகள பத்தி இன்னும் ஆழமாக தெரிஞ்சுக்க வாய்ப்பு நோக்கு கிட்டும்.'
அவர் எனக்கு ஆசீர்வாதங்களாக அளித்த ஊக்கங்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தன.
'பாஸு, ஆவணி அவிட்டம் எல்லாம் முடிஞ்சு இனிமே நீ வந்தா போதும். அதுவரைக்கும் மாமாவும் ரொம்ப பிஸி. நான் சொல்லிக் கொடுத்ததை எல்லாம் மறக்காம மனசுல வச்சுக்கோ.'
அன்றைய வகுப்பு முடிந்ததாக அவருடைய கடைசி வாசகங்கள் எனக்கு உணர்த்தின.
பரிபூரண சாஷ்டாங்க நமஸ்காரத்தை அவரிடம் செலுத்தி விட்டு மடத்தை விட்டு கிளம்புகிறேன்.
(இத்துடன் ரகோபதேஸம் தொடர்ச்சி நிறைவு பெறுகிறது. ஆண்டவன் கட்டளை இட்டால் இன்னும் சில விஷயங்களோடு சில நாட்களுக்கு பிறகு தொடர்கிறேன்)
அன்புடன்
பாஸ்கர் சத்யா
No comments:
Post a Comment