Thursday, August 18, 2022

ரகோபதேஸம்(தொடர்ச்சி)_18

 #ரகோபதேஸம்(தொடர்ச்சி)

ரகோபதேஸம்(தொடர்ச்சி)_18

by பாஸ்கர் சத்யா

'என்ன பாஸு, ஆரம்பிக்கலாமோன்னோ?

'தாராளமா மாமா' இப்படி சொல்லிவிட்டு அவசரம் அவசரமாக என்னுடைய பலகையில் உட்காருகிறேன்.

'நான் சொன்னதை எல்லாம் கிரஹிச்சிண்டு வரியா?  bபோர் அடிக்கலையே சொல்லிக் கொடுக்கறதல்லாம்?'

'என்ன மாமா இப்படி கேட்டுட்டேள்.  நீங்க சொல்லிக் கொடுக்க சொல்லிக் கொடுக்க ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருக்கு.'

'ஸ்கூல் பாடங்களையும் படிச்சிண்டு இவைகள் எல்லாத்தையும் முழுசா தெரிஞ்சுக்கறது எவ்வளவு தூரம் நோக்கு சாத்தியம்னு நேக்கு தெரியல.  விளையாட்டு குழந்தை வேற.  இருந்தாலும் என்னிக்காவது ஒரு நாள் என்ன நெனச்சிண்டு நீ முழுசா கத்துக்க முயற்சி செய்ய மாட்டியா என்ன?  அந்த நம்பிக்கை நேக்கு இருக்கு.   நோக்கு இப்ப இருக்குற ஆர்வம் தொலைஞ்சு போகாம பத்திரமா பாத்துக்கோ'

'சிக்ஷா வல்லியோட ஆரம்ப பாடங்கள பத்தி பேசிண்டிருந்தோம்.  மனச கட்டுப்பட வைக்கிறது எவ்வளவு அவசியம் அப்படிங்கறத பத்தியும் பேசினோம்.  உபநிஷத்துல இந்த மனச கட்டுப்படுத்த பிரத்தியேகப் பாடங்கள் இருக்கு.'

'சிதறி கிடக்கிற மனச ஒருங்கிணைக்க ஏதுவாக அஞ்சு விதமான சிந்தனைகள பத்தி சொல்லியிருக்கா.'

பஞ்சஸ்வதிகரணேஷு அதிலோகமதிஜ்யௌதிஷ-

மதிவித்யமதிப்ரஜமத்யாத்மம் தா மஹாஸக்ம்ஹிதா

இத்யாசக்ஷதே

பஞ்சஸு - ஐந்துவிதமான; அதிகரணேஷு - விஷயங்கள் உடையது; 

அதிலோகம் - பிரபஞ்சம் ; அதிஜ்யௌதிஷம் - ஒளிப்பொருள்; 

அதிவித்யம் - கல்வி; 

அதிப்ரஜம் - உயிர்களின் உற்பத்தி; 

அத்யாத்மம் - உடலில் இருக்கும் ஆத்மா; 

தா: - அவை;

மஹாஸம்ஹிதா: - முக்கியமான சேர்க்கை; 

இதி - என்று; 

ஆசக்ஷதே -கூறப்படுகிறது.

சேர்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் பயிற்சி ஐந்து விதமாக விளக்கப்படுகிறது. அதாவது பிரபஞ்சம், ஒளிப்பொருள், கல்வி, உயிர்களின்

உற்பத்தி, உடம்பு இவைகளை ஆழ்ந்து சிந்திப்பதே அந்த ஐந்து முக்கியமான பயிற்சிகள்.'

'சாதாரணமா நாம ஜெபம் பண்றதுக்கோ த்யானம் பண்றதுக்கோ உட்கார்ந்தா சட்டுனு நமக்கு ஒரு உண்மை புரிஞ்சுடும்.  மனசு சிதறுகிற விஷயம் தான் அது.  அதாவது மனசு ஒரு நிலையில வைக்கிறது அவ்வளவு சுலபம் இல்லை அப்படிங்கற அடிப்படை உண்மைதான்.'

'நாம் தொடர்பு கொண்ட பொருள்களிலும் மனிதர்களிலும் இடங்களிலும் சுத்தி திரிகிற மனசை ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் கொண்டுவர சித்த நேரத்துக்கு முன்னாடி சொன்ன இந்த அஞ்சு வகையான சிந்தனைகள் துணையா இருக்கு.  இவைகள் எல்லாம் ரிஷிகளுடைய அனுபவங்கள் மூலமாக உபநிஷத்துக்கள் சொல்லி இருக்கிறதால இந்த அஞ்சு வகையான சிந்தனைகளை பயிற்சிகளோட முதல் படியாகவே ஏத்துக்கலாம்.'

'ஒரு பொருள் அல்லது கருத்தை எடுத்துண்டு அதன் பல்வேறு அம்சங்களைத் தொடர்ந்து சிந்திக்கும்போது, மனம் ஒரு புள்ளியில் குவிக்கப்படவில்லை என்றாலும் ஒரு வட்டத்திற்குள் சுழலுமாறு செய்யப்படுகிறது. இதன் மூலம் மனம் ஒருங்கிணைக்கப்படறது.

'இப்ப பிரபஞ்ச சிந்தனையை எடுத்துப்போம்.  அதாவது அஞ்சுல ஒண்ணா சொல்லப்பட்ட பிரபஞ்சம் பற்றிய சிந்தனை.'

அதாதிலோகம் ப்ருதிவீ பூர்வரூபம் த்யௌருத்தர

ரூபம் ஆகாச: ஸந்தி; வாயு; ஸந்தானம் இத்யதிலோகம்

அத - இனி: 

அதி லோகம் - பிரபஞ்சத்தைப்பற்றி;

ப்ருதிவீ - பூமி; 

பூர்வரூபம் - கீழ்ப் பகுதி; த்யௌ: - வானம் மேற்பகுதி; ஆகாச: - வெளி; 

ஸந்தி: - சந்திப்பு; 

வாயு - காற்று; 

ஸந்தானம் - சேர்க்கை; 

இதி - இவ்வாறு; 

அதிலோகம் பிரபஞ்ச சிந்தனை.

'இப்ப பதவுரையை சேர்த்து ஒண்ணா சொல்றேன்.'

'இனி பிரபஞ்ச சிந்தனையைப் பார்ப்போம் இதில் பூமி கீழ்ப்பகுதி, வானம் மேற்பகுதி; இரண்டும்

இணைகின்ற இடம் வெளி.  இரண்டையும் இணைப்பது காற்று. இவ்வாறு பிரபஞ்ச சிந்தனை செய்ய வேண்டும்.'

'ஸந்தி: சந்திப்புன்னு சொல்லும்போது இன்னொண்ணும் ஞாபகத்துக்கு வர்றது.

இரவும் பகலும் சந்திக்கும் நேரம் அதிகாலை. பகலும் இரவும் சந்திக்கும் நேரம் அந்தி நேரம். இந்நேரங்களில் சூரியனையும் அருணனையும் வந்தனம் செய்யறதால் சந்தியாவந்தனம் அப்படிங்கறோம் இல்லையா?'

'ஆமா இது தான் எனக்கு தெரியுமே.  நீங்க சந்தியாவந்தன வகுப்புகள் எடுக்கும் போது சொன்னதா ஞாபகம் கூட இருக்கு.'

'ஞாபகம் இருக்கா?  ஒன்னோட ஞாபக சக்தி அசாத்யம்டா பாஸு.'

'லௌகீக வாழ்க்கைல படிப்பு உத்தியோகம் நண்பர்கள், உறவுக்காரா, அலுவலகம் இப்படி நம்மில் பலரது வாழ்க்கையும் நான், எனது என்ற வட்டங்களுக்குள் சுருங்கி போயிடறது.  இதிலிருந்து நாம வெளியே வந்து தான் ஆகணும்.  அப்போதுதான் வாழ்க்கையே முழுமையா ரசிக்க முடியும்.  லௌகீக வாழ்க்கையை கூட இன்னும் சிறப்பா இன்னும் மகிழ்ச்சியா ரசிச்சு வாழ முடியும்.  உங்க பள்ளிக்கூடத்துல கூட இதனோட அடிப்படையில தான் சுற்றுலா ஸ்தலங்களுக்கு அழைச்சிண்டு போறா.  மலைகள் பனிமூட்டங்கள் ரம்யமான காற்று பிரம்மாண்டமான மரங்கள் போன்றவைகளை குழந்தைகள் பார்க்கும் போது அந்த இயற்கையை அவர்களே ரசிக்க கத்துக்கறா அவாளோட ஆழ் மனசுல.   நம்மைச் சுற்றி பிரபஞ்சம்னு ஒண்ணு எல்லையற்ற அழகுடனும் இனிமையுடனும் விரிஞ்சு கிடக்கு.  அதைக் காண வேண்டும். அதைப்பற்றி சிந்திக்க வேண்டும். அதனையே இந்த மந்திரம் சொல்றது.'

'தொடுவானம் அப்படிங்கறத கேள்விப் பட்டிருக்கியா?'

'என்ன மாமா அப்படி கேட்டுட்டேள்.  ஆத்தங்கரைல கார்த்தால குளிக்கறச்சே சித்த நாழி அதையே பார்த்துண்டிருப்பேன்.  ரொம்ப பிடிக்கும் மாமா.  நிறைய கேள்விகள் கூட மனசுல விழும்.  வானமும் பூமியும் நெஜமாவே ஒண்ணுக்கொண்ணு தொட்டுக்கறதா அப்படிங்கற ஆராய்ச்சி எல்லாம் கூட மனசுக்குள்ள பண்ணுவேன்.'

'பேஷ் பேஷ்.  நான் ஏதோ நீ தோட்டத்துச் செடிகளோட தான் பேசுவேன்னு நெனச்சேன்.  ஒண்ணு சொல்லட்டுமா?  பிரபஞ்சத்தை இயற்கை காட்சிகளை ரசிக்கரவா எல்லாருமே த்யானத்துக்கு தயாராயிண்டு வரான்னு தான் அர்த்தம்.'

சொல்லிவிட்டு அவர் சிரிக்க நானும் அவர் சிரிப்பில் இணைந்து கொள்கிறேன்.

'உபநிஷத் மந்திரங்கள் கூட இந்த தொடு வானத்தை ரொம்ப ஸ்லாகிக்கிறது.  மேலே வானம், கீழே பூமி, இரண்டும் வெளியில் சந்திக்கின்றன. இயற்கையின் அழகுகளுக்கு ஓர் உன்னத எடுத்துக்காட்டு இது. இயற்கையையும் உலகையும் வெறுத்து ஒதுக்கத் தேவையில்லை. அதன் மகிமையைச் சிந்திப்பதும் ஓர் ஆன்மீக சாதனையே அப்படின்னு கூட சொல்லியிருக்கு வலியுறுத்துகிறது இந்த மந்திரங்கள்.'

'இந்தப் பிரபஞ்சம் எப்படி படைக்கப்பட்டது என்பதை இந்த உபநிஷதம் பின்னால் வரக்கூடிய ஸ்லோகங்கள்ல சொல்றது.  இங்கே அதன் ஆரம்பப் படிகளுள் ஒன்றான தொடுவானம் சுட்டிக்காட்டப்படுகிறது. வெளியிலிருந்து காற்று தோன்றுகிறது. அதுபற்றி இங்கே கூறப்படுகிறது. படைப்புபற்றி சிந்திக்கச் சொல்கின்ற பகுதியாகவும் கத்துக்கலாம்.'

'சரிடா பாஸூ.  மீதிய அடுத்த கிளாஸ்ல வச்சுப்போமா?

'அஞ்சு மிதமான சிந்தனைகள்ல பிரபஞ்ச சிந்தனையை மட்டும் இன்னைக்கு பேசி இருக்கோம்.  நாளைக்கு அடுத்தத பாப்போம்.  சரியா?'

அவரை நமஸ்கரித்து விட்டு ஆசிகள் பெற்றுக் கொண்டு ஆத்தங்கரை பக்கம் ஓடுகிறேன்.  அங்கு சென்று சில நிமிடங்கள் தொடுவானத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  அன்றைய தினம் எனக்கு அது உபநிஷத்து தொடுவானமாக தெரிந்தது.  

அந்த ரசனை சேர்ப்பை இணைத்துக் கொண்டே இல்லம் வருகிறேன்.

தொடரும்.

No comments:

Post a Comment