சங்கராம்ருதம் - 249
பிரபலமான டிரஸ்டுகளை ஸ்ரீ பெரியவா குறிப்பிட்டுவிட்டு பின்னால் “அவாள்லாம் புஸ்தகம் போட்டா நன்னாத்தான் இருக்கும். ஆனா பத்திரமா அந்த புஸ்தகத்தை எல்லாம் கண்ணாடி அலமாரியிலே கொண்டு போய் வைச்சுடுவா. அதைவிட வானதி திருநாவுக்கரசே தேவலை. விஷயம் எல்லா ஜனங்கள்கிட்டேயும் போய் சேருமோல்லியோ” என்றாராம்.
ஸ்ரீ பெரியவாளின் அன்றைய இப்பேற்பட்ட அரிய அருள்வாக்கினால் தெய்வத்தின் குரல் நூல்களை வெளியிடும் பாக்யம் கிட்டியதற்கு வாழ்நாளில் என்றைக்கும் ஸ்ரீ பெரியவாளெனும் தெய்வத்தின் கருணையை மறக்க முடியாதென இவர் உருகுகிறார்.
இப்போது தெய்வத்தின் குரல் ஏழு தொகுதிகளாக வெளியிடப்பட்டிருப்பது பிரமிப்பாக இருப்பதாகவும் கூறுகிறார்.
1976 ஆம் ஆண்டு சுமார் ஆயிரம் பக்கம் அளவில் உருவாக்கிய முதல் தொகுதியை ஸ்ரீ பெரியவாளிடம் சமர்ப்பித்த போது,
“இத்தனை பெரிசா போட்டிருக்கியே….எத்தனை காபி போட்டே” என்று விசாரித்துவிட்டு புன்முறுவல் தவழ ஸ்ரீ பெரியவா ஆசிர்வதித்தார். ஸ்ரீ பெரியவாளின் அருளாசியால் இப்போது அந்த முதல் தொகுதியே பதினேழு முறை பதிப்புகளாக வெயிடப்பட்டுள்ளதை திருநாவுக்கரசு நன்றியுடன் நினைவு கூறுகிறார்.
தெய்வத்தின் குரல் மூன்றாம் தொகுதி வெளியான போது நடந்த சம்பவம் ஒன்றை இவர் கூறுகிறார்.
அப்போது ஆந்திர மாநிலம் கர்நூலில் ஸ்ரீ பெரியவா முகாமிட்டிருந்தார். புத்தகத்தின் முதல் பிரதியை எடுத்துக் கொண்டு தன் குடும்பத்தாருடன் கர்நூல் சென்ற திருநாவுக்கரசு அவர்களுக்கு புத்தகத்திற்கு அருளாசி கேட்பதோடு மற்றொரு குறையையும் ஸ்ரீ பெரியவாளிடம் முறையிட வேண்டுமென்று தோன்றியது.
இதுவரை மகானிடம் தனக்கு இது வேண்டும் என்று கேட்காதவர். தன் மூன்றாவது மகளான வானதியின் திருமணம் தாமதமாகிப் போவதால் இதைக் கேட்டுத்தான ஆகவேண்டுமென தோன்றியது.
“மகளுக்கு ஏனோ கல்யாணம் தடைப்பட்டுட்டே இருக்கு சுவாமிகள் அருள்பாலிக்கணும்” என்று வணங்கினார்.
ஸ்ரீ பெரியவா இவருடைய வேண்டுகோளை ஏற்றவிதம் ஒரு புதிராக இருந்தது” என்ன பணத்தாலே தடையா ? வரதட்சணையா நிறைய பணம் கேட்கிறாளோ? புஸ்தகம் போட்டதுலே பணம் முடங்கிப் போச்சா? பொஸ்தகங்களை மடத்துக்கு அனுப்பிச்சுடு. பணம் தரச் சொல்றேன்” என்று ஸ்ரீ பெரியவா சொன்னபோது இவருக்கு வியர்த்துவிட்டது.
“பணப் பிரச்சனையே இல்லை, என்னமோ வேற காரணம்” என்று சொல்லிவிட்டு புஸ்தகங்கள் அமோகமாக விற்பனையாவதாயும் இவர் கூறினார். அதன் பின் யார்யார் எந்த வயதுக் காரார்கள், எந்த ஊர்க்காரார்கள் புத்தக்கங்களை வாங்குகிறார்கள் என்ற விபரத்தை ஸ்ரீ பெரியவா கேட்டுத் தெரிந்துக் கொண்டார்.
வானதியை அழைத்து பழம்,புஷ்பம், எடுத்துக்கச் சொல்லிக் கொடுத்து ஆசிர்வதித்தனுப்பினார்.
அற்புதங்கள் எப்படி எப்போது நிகழும் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை என்று திருநாவுக்கரசு கர்நூலிலிருந்து திரும்பிய அடுத்தவாரமே மகள் வானதியின் திருமணம் நிச்சியமானதைக் குறிப்பிடுகிறார்.
மேலும் மகளுடைய திருமணத்திற்காக ஸ்ரீ பெரியவாளிடம் வேண்டியபோது அதற்கு ஆசிர்வதித்ததோடு நிற்காமல் உனக்கு பணமுடையா, புத்தகங்களை மடத்துக்கு கொடுத்துவிடு நான் பணம் தர சொல்றேன், என்று சூட்சமமாக ஸ்ரீ பெரியவாளின் திருவாக்காக வெளிப்பட்டதில், தெய்வத்தின் குரல் ஏழு தொகுதிகள் வெளியாகி ஒவ்வொன்றும் பல பதிப்புக்களை கண்டது. புத்தக விற்பனையும் அமோகமாக இருந்தது.
இந்த தெய்வப் பணியை தனக்கு பாக்யமாக்கி அருளிய நடமாடும் தெய்வத்தின் கருணையை திருநாவுக்கரசு சிலாகித்துச் சொல்கிறார். வேதம், வேதாந்தம், புராணம், அரசியல், பண்பாடு, வரலாறு, கணிதம், சாஸ்திரம், நவீன அறிவியல் என்று ஸ்ரீ பெரியவாளுக்கு எட்டாத எதுவும் இல்லை என்பது போல தோன்றும் இந்நூலை படித்து விட்டால் உலகில் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வேறு விஷயமே இல்லை என்பதாக நூலின் அருமையை விளக்கும் திருநாவுக்கரசு இப்பேற்பட்ட தெய்வத்தின் குரலை நூல் வடிவில் வெளியிட்டது தன் பிறவிபெரும் பயன் என்றும் உணர்வதாக கூறுகிறார்.
இக்கருணைத் தெய்வத்தை நாமும் பற்றிக் கொண்டு வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும் சர்வ மங்களங்களையும் பெற்று ஆனந்தமாகவும் மன அமைதியோடும் வாழ்வோமாக!
No comments:
Post a Comment