Sunday, August 28, 2022

இஞ்சி பூண்டு சட்னி

 நாவிற்கு சுவை தரும் உரைப்பான ஆரோக்கியம் காக்கும் இஞ்சி பூண்டு சட்னி இப்படி வச்சு பாருங்க, 10 இட்லி கொடுத்தா கூட சலிக்காமல் சாப்பிடலாம்!

இஞ்சி, பூண்டு ஜீரண சக்திக்கு மற்றும் உடலில் இருக்கும் உள்ளுறுப்புகள் பராமரிப்பதற்கு ரொம்பவே உதவி செய்யக்கூடிய அற்புதமான பொருட்கள் ஆகும். அடிக்கடி இஞ்சி மற்றும் பூண்டை உணவில் சேர்ப்பதன் மூலம் பல்வேறு நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்! இந்த இஞ்சி பூண்டை சட்னி அரைத்தால் ரொம்பவும் சுவையாக உரப்பாக இருக்கும். இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சாதத்துடனும் பிசைந்து சாப்பிட கெட்டியாக அரைத்துக் கொள்ளலாம். சுவையான இஞ்சி பூண்டு சட்னி எளிதாக எப்படி அரைப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இஞ்சி பூண்டு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், வர மிளகாய் – 10, பூண்டு பற்கள் – ஒரு கைப்பிடி, நறுக்கிய இஞ்சி – அரை கைப்பிடி, சின்ன வெங்காயம் – 15, பழுத்த பெரிய தக்காளி பழங்கள் – மூன்று, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், உளுந்து – 1/4 ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

இஞ்சி பூண்டு சட்னி செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு கைப்பிடி அளவிற்கு அதாவது ஒரு கப் அளவிற்கு 100 கிராம் இருக்குமாறு பூண்டு பற்களை தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த சட்னிக்கு பூண்டு எந்த அளவிற்கு சேர்க்கிறோமோ, அதில் பாதி அளவிற்கு இஞ்சியை சேர்க்க வேண்டும். இஞ்சியை தோல் நீக்கி நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் காரத்திற்கு 10 வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து நன்கு வாசம் வர வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் சேர்த்து ஆற விட்டு விடுங்கள். பின்னர் அதே வாணலியில் மீதம் இருக்கும் எண்ணெயில் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும். பூண்டு பற்களுடன் இஞ்சி மற்றும் தோல் உரித்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பூண்டு, இஞ்சி, வெங்காயம் ஆகியவை ஒரே சீரான முறையில் நன்கு பொன்னிறமாக சுருள வதக்க வேண்டும். இவை வதங்கி வரும் பொழுது பழுத்த தக்காளி பழங்களை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி விடுங்கள். இவை மசிய வதங்க வேண்டும். இதனுடன் புளிப்பு சுவைக்கு கொஞ்சம் சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை உருட்டி எடுத்து சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். இவைகள் மசிய வதங்குவதற்கு கொஞ்சம் போல் உப்பு சேர்த்து வதக்குங்கள். நன்கு திரண்டு வதங்கி வரும் பொழுது அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

பின்னர் மிக்ஸியில் இருக்கும் மிளகாயுடன் கல் உப்பு கொஞ்சமாக தேவைக்கு ஏற்ப சேர்த்து முதலில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மற்ற பொருட்களையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இதற்கு இப்போது ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். கடுகு பொரிந்து, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து கொட்டினால் செம டேஸ்டாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க.

No comments:

Post a Comment