தினம் ஒரு திருத்தலம்.. 🛕*_
*இந்த கோயில் எங்கு உள்ளது?*
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் என்னும் ஊரில் அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில் அமைந்துள்ளது.
*இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?*
காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 28 கி.மீ தொலைவில் உத்திரமேரூர் என்னும் ஊர் உள்ளது.
உத்திரமேரூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
*இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?*
கருவறையில் முருகப்பெருமான் பாலசுப்ரமணியன் என்ற திருநாமத்தோடு சுமார் ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார்.
அவர் முன்புறம் வேலும், சேவற் கொடியும் இருக்க பாதத்தினருகே மயில் வாகனம் அமைந்துள்ளது.
வடமேற்கு மூலையில் தனிச்சன்னதியில் முருகப்பெருமான் ஊன்றிய வேலை சிலை வடிவில் தரிசிக்கலாம். இந்த வேல் எவ்வளவு ஆழத்தில் பதிந்துள்ளது என்பது இன்றுவரை அறியப்படாத தகவல்.
இக்கோயிலில் வடகிழக்கு மூலையில் முருகப்பெருமான் தரிசிக்கும் வண்ணமாக சிவலிங்க மூர்த்தியாக கடம்பநாதர் எழுந்தருளியுள்ளார்.
இத்தலத்தில் சிவாலயங்களில் காணப்படும் சண்டிகேஸ்வரரை போலன்றி சுமித்திரை சண்டிகேஸ்வர் சன்னதி அமைந்திருப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
கிழக்கு நோக்கிய ஐந்து நிலைகளையுடைய ராஜ கோபுரமும், வெளிப்பிரகாரத்தில் இடதுபுறம் ஊஞ்சல் மண்டபமும், வலதுபுறம் வசந்த மண்டபமும் அமைந்துள்ளது.
சுவரின் மேற்புறத்தில் முருகப்பெருமான் மலையன், மாகறனுடன் போரிடும் காட்சிகளை வரைந்து வைத்துள்ளார்கள்.
*வேறென்ன சிறப்பு?*
முருகனுக்கு இடதுபுறமாக கஜவள்ளி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. முருகனின் இருதுணைவியரும் இணைந்து ஒரு வடிவாகி கஜவள்ளி அம்மனாக காட்சியளிப்பது அபூர்வ காட்சியாகும்.
உள்பிரகாரத்தில் ஏகாம்பரநாதர், பெருதண்டமுடையார், திரிபுரசுந்தரி, காசி விஸ்வநாதர், சந்தான கணபதி ஆகியோரும் காட்சி தருகின்றனர்.
கோயிலின் நடுவில் பலிபீடமும், கொடிமரமும் அமைந்திருக்க, அதை தாண்டி இந்திரன் தந்த ஐராவதத்தை முருகன் வாகனமாக்கிக் கொண்டதை உறுதிப்படுத்தும் விதமாக யானை வாகனமும் அமைந்துள்ளது.
கோயிலின் உள்மண்டப முகப்பில் முருகனின் அழகிய திருக்கல்யாணக் காட்சி மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
கருவறைக்கு முன்பாக உள்ள தரிசன மண்டபத்தின் உட்புற சுவரில் பித்தளைத் தகடுகள் பதிக்கப்பெற்று அதில் சித்தர்கள் பலரின் வடிவம் அமைந்திருக்கிறது.
*என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?*
ஐப்பசி அன்னாபிஷேகம், கிருத்திகை, கந்தசஷ்டி ஆகியவை இக்கோயிலில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
*எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?*
அனைத்து விதமான வேண்டுதல்களும் நிறைவேற இங்குள்ள முருகனை பிரார்த்தனை செய்கின்றனர்.
*இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?*
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
🌷🌷
No comments:
Post a Comment