#தினம்_ஒரு_கோவில்_3
கரும்பாயிரம் பிள்ளையார் கோவில், கும்பகோணம்.
மத்யமர் fbல் பத்மா ராகவன் எழுதியது
நாளை பிள்ளையார் சதுர்த்தி. அவரவர்களுக்கு பூஜை, வழிபாடு, விருந்தினர் வருகை, கோவிலுக்குச் செல்லுதல் போன்ற பலவகை வேலைகள் இருக்கும். எனக்கும் அப்படியே. பதிவிடவோ, பதிவுகளை நிதானமாகப் படிக்கவோ நேரம் கிடைப்பது சற்று கஷ்டமே. இதை மனதில் கொண்டு நாளைய பதிவை இன்றே பதிவிடுகிறேன்.
பிள்ளையார் சதுர்த்தி தினத்திற்கு பொருத்தமாக இன்று நாம் பார்க்கப்போகும் கோவில் கரும்பாயிரம் பிள்ளையார் கோவில்.
கோவில் நகரமாம் கும்பகோணத்தில், ப்ரசித்திபெற்ற ஶ்ரீகும்பேஸ்வரர் கோவில் திருமஞ்சன வீதியில் அமைந்துள்ளது இக்கோவில். எல்லா க்கோவில்களுக்கும் முன்னதாக உருவான மிகப் பழமையான கோவில்.
உள்ளே இருக்கும் மூர்த்தி மிக சக்தி வாய்ந்தவர். வரப்ரசாதி. நாங்கள் சிறுவயதில் பரீட்சைக்குச் செல்லுமுன் அவரை வேண்டிக் கொண்டு செல்வோம். பரீட்சை சுலபமாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை. கோவிலினுள் எல்லா கடவுளர்களின் சன்னதிகளும் இருக்கும்.
சிறுவயதில் பாட்டி ஒரு கதை சொல்வார். ஒரு ஏழை, பசிதாளாமல் கரும்புத் தோட்டத்திலிருந்துஒரு கரும்பை எடூத்துத் தின்றுவிட்டானாம். தோட்டத்தின் சொந்தக்காரர் கொடுத்த புகாரின் பேரில் அரசர், அந்த ஏழையை ஆயிரம் கரும்புகளுடன் ஒரு அறையில் அடைத்து, காலை விடிவதற்குள் அனைத்தையும் தின்று முடிப்பதுதான் அவனுக்குத் தான் தரும் தண்டனை..என தீர்ப்பளித்தாராம்.
செய்வதறியாது திகைத்த அந்த ஏழை, விநாயகரை வேண்டினானாம். அவர் இந்த ஏழை மேல் இரக்கப்பட்டு யானை உருவில் வந்து, இரவோடு இரவாக அனைத்தையும் தின்று, அந்த பக்தனைக் காப்பாற்றினாராம். அன்றுமுதல் கரும்பாயிரம் பிள்ளையார் என அழைக்கப்பட்டாராம். ஆகையால் அவரை மனமார வேண்டினால் அவர் அருள் கிடைக்கும் என்ற பாட்டி கொடுத்த அறிவுரைதான் எங்கள் நம்பிக்கையின் அஸ்திவாரம்.
ஆனால் பெரியவர்களானதும் அந்தக்கதை பொய். பாட்டியின் சொந்த சரக்கு என்றறிந்து, உண்மை பெயர்க்காரணத்தை தெரிந்துகொண்டோம். இதோ உங்களுக்காக.
ஆதி காலத்தில் அரக்கன் பூமியை பாதாளத்தில் ஒளித்து வைத்ததும், ஶ்ரீமகாவிஷ்ணு, வராஹ அவதாரம் எடுத்து மீட்டதும் நாமறிந்த கதை. இந்தக் கும்பகோணம் வராஹ க்ஷேத்ரம் என அழைக்கப்பட்டதாம். மகாவிஷ்ணு பாதாளத்துக்குள் நுழையுமுன் களி மண்ணால் பிள்ளையார் செய்து வழிபட்டு, குளக்கரையில் ப்ரதிஷ்டை செய்து சென்றாராம். அந்தக் குளமே வராஹ தீர்த்தம். இன்றும் உள்ளது. இந்தப் பிள்ளையார்தான் மகாவிஷ்ணு செய்த ஆதிகாலப் பிள்ளையார். இக்கோவிலருகில் வராஹப்பெருமாள் கோவிலும் உள்ளது.
முதலில் வராஹ கணபதி என அழைக்கப் பட்ட இவர், கரும்பாயிரம் பிள்ளையாராக அழைக்க, அதற்கும் காரணம் உள்ளது.
கரும்புத்தோட்டக்காரர் ஒருவர், ஆயிரம் கரும்புகளை வண்டியில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது, விநாயகர் ஒரு சிறுவன் வேடத்தில் தனக்கொரு கரும்பு கேட்டாராம். மகா கஞ்சப்ரபுவான வண்டிக்காரன் தர மறுத்ததும், வண்டியிலிருந்த ஒரு கரும்பை பையன் இழுத்தானாம். கோவம் கொண்ட வண்டிக் காரன் பையனை அடிக்கத் துரத்திக் கொண்டு ஓடியபோது, அந்தப் பையன் அங்கிருந்த பிள்ளையார் கோவிலுள் நுழைந்து மறைந்துவிட்டான். எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.
கோபத்துடன் வண்டியை ஓட்டிக்கொண்டு மார்க்கெட்டுக்கு வந்தால், வண்டியில் இருந்த கரும்பெல்லாம் சக்கையாக, வெறும் நாணலாக மாறி இருந்ததாம்.
பலவித புலம்பல்களுக்குப்பின் தன் தவறை சுட்டிக்காட்ட, பிள்ளையார் தான் இந்த விளையாட்டு விளையாடியிருக்கிறார் எனப் புரிந்து கொண்டு, கோவிலுக்கு வந்து மன்னிப்புக்கேட்டானாம். கடவுளும் மனமிறங்கி, கரும்புகளுக்கு இனிப்பை வழங்கினாராம். அன்று முதல் அவர் கரும்பாயிரம் பிள்ளையார் என அழைக்கப் படுகிறார்.
இக்கோவிலில் ஆகம விதிகளின்படி மூன்று வேளையும் சிறப்பாக பூஜைகள் நடக்கின்றன. சங்கட ஹர சதுர்த்தி, பிள்ளையார் சதுர்த்தி சமயங்களில் ப்ரமாதமான பூஜை நடக்கும். பொங்கல் சமயத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த கரும்புகளை முதலில் விநாயகப் பெருமானுக்கு படைப்பது வழக்கம். கோவிலில் அக்கரும்புகளைக்கொண்டு பந்தல் அமைப்பர். ஆனால் அவ்வளவு நாள் அந்த ஊரில் இருந்தும் நான் ஒருமுறைகூட கரும்புப் பந்தலை பார்த்ததில்லை.
இவரை வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் குறைகளைத் தீர்த்து, வாழ்வில் இனிப்பை வழங்கும் வள்ளல் இந்தப் பிள்ளையார்.
பிள்ளையார் சதுர்த்தி நன்நாளில் நாம் அனைவரும் அவரை வழிபட்டு நம் வாழ்வை கரும்புபோல் இனிக்கச்செய்வோம்.
ஓம் கணபதியே நம:
PC. Google.
No comments:
Post a Comment