சிவன் சாருக்குக் கொடுத்த அப்பளம் வீண் போகுமா?!
( காஞ்சி மகா பெரியவாளின் இளைய சகோதரர்)
தகவல் உதவி: எஸ்.கணேச சர்மா, சிவராமன்
சாச்சு. பிரம்மஸ்ரீ சதாசிவ சாஸ்திரிகளின் செல்லப் பெயர் இது. ஆனால், இன்னொரு பெயரும் அவருக்கு உண்டு. அது… ‘சிவன் சார்’!
ஆசார- அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தில் பிறந்தவர். எனவே, உரிய வயதில், எல்லாச் சடங்குகளும் நடந்தேறின.
கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் கல்வி; பதினோராம் வகுப்பு முடிந்ததும் அய்யன் தெருவில் கலை- கைவினைக் கல்விப் பள்ளியில், சித்திரப் பயிற்சி எடுத்துக் கொண்டார். புகைப்படக் கலையில் திறன் கொண்டார்; கும்பகோணத்தில், ‘சிவன் ஆர்ட்ஸ் அண்ட் ஃபோட்டோ ஸ்டூடியோ’ வைத்தார்.
சாச்சுவுக்கு மண வாழ்வில் விருப்பமில்லை. எனினும், குடும்பத்தாரின் விருப்பத்துக்கு இணங்க வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில், அனைத்தையும் துறந்து, தனிமையை நாடினார்.
காஞ்சி மகாபெரியவாளின் அபூர்வமான பல படங்களை எடுத்தவர், சாச்சுதான்! கும்பகோணம் டபீர் படித் துறையில், மகாபெரியவா காவிரியில் குளித்துவிட்டு, படியில் காவிரியை வடக்குமுகமாகப் பார்த்தபடி அமர்ந்திருக்க, பின்னே சுமார் நூறு பேர் படிகளில் சுற்றி நிற்பார்கள். இந்தப் படத்தை எடுப்பதற்கு மகா பெரியவா உத்தரவிட, உடனே சிவன் சார், காவிரியில் இறங்கி நின்றுகொண்டு, அதனை அப்படியே படமெடுத்தார்! பிறகு, இதுபற்றிக் குறிப்பிடும்போது, ”பெரியவா எனக்கு வைத்த டெஸ்ட் இது’‘ என்பார், சிவன் சார்! சிதம்பரம் கோயிலை, அதன் 4 கோபுரங்களும் தெரியும்படி புகைப்படம் எடுத்து அசத்தியதும் அவர்தான்.
ஒருகட்டத்தில், போட்டோ ஸ்டூடியோவை, தன் மீது மிகப்பெரிய பக்தி கொண்டிருந்த வெங்டேஸ்வரா ஸ்டூடியோ பெரியசாமியிடம் ஒப்படைத்தார். ‘கேன்வாஸ் போர்ட்ரைட்’ வரைவதில் தேர்ந்தவர் சிவன் சார். இவர் வரைந்த மகாபெரியவாளின் படம், முடிகொண் டான் வாஞ்சிநாதன் என்பவரது வீட்டில் இன்றும் உள்ளதாம்!
திருவண்ணாமலை தேயு!
தன்னைப் பற்றிக் குறிப்பிடும்போது, தனது தேகத்தைக் காட்டி, ‘இது, நெருப்பும் சூடும் கொண்டது; திருவண்ணாமலை தேயு’ என்பாராம் சிவன் சார்.
ஒரு முறை, பஸ் பயணத்தின்போது, சிவன் சார் சீட்டை விட்டு எழுந்துகொள்ள, அருகில் நின்றிருந்தவர் அதில் அமர்ந்தார். அவ்வளவுதான் நெருப்பின்மீது உட்கார்ந்து விட்டதுபோல துள்ளி எழுந்துவிட்டாராம் அந்த நபர்! சிவன் சாரின் உடம்புச் சூடு அந்த அளவுக்குத் தகித்தது!
இன்னும் வேறு பாரம் தேவையா?
நல்லி செட்டியார் சிவன் சாரின் பரமபக்தர். இவர், ’நாலு கிரவுண்டில் ஒரு வீடு கட்டி, ஆசாரமான ஒரு சமையற்காரரையும் ஏற்பாடு செய்கிறேன்’ என்றாராம். ஆனால், சிவன் சார் மறுத்துவிட்டார்.
நாதன்ஸ் கஃபே நாதன், அமெரிக்க நண்பர் ஒருவருடன் சிவன் சாரை சந்திக்கச் சென்றார். அவரை நமஸ்கரித்தவர், பெரிய தொகைக்கு செக் ஒன்றை சமர்ப்பித்தார். அப்போது, தான் உடுத்தியிருந்த துண்டைக் காண்பித்து, ”இதுவே எனக்குப் பாரமாக உள்ளது. வேறு பாரம் தேவையா?” என்று ஏற்க மறுத்துவிட்டாராம்.
காமாட்சிப் பாட்டி தந்த அப்பளம்!
தினம் பொழுது விடிந்தால், குளித்து மடியாக உளுந்து அரைத்து, அப்பளம் இட்டு உலர்த்தி, மாலையில் அதை குமுட்டி அடுப்பில் சுட்டு, மேலே நெய்யைத் தடவி அன்புடன் எடுத்து வருவார் காமாட்சிப் பாட்டி. அதில் பாதியோ, கால் பங்கோ சிவன் சார் வயிற்றை அடையும். இப்படியே 15 வருடங்கள் தொடர்ந்தது!
ஒருநாள், காமாட்சிப் பாட்டியை பாம்பு கடித்துவிட்டது. டாக்டர்கள் கைவிரித்து விட்ட நிலையில், அவருக்கு வாழைப் பட்டை சாறு கொடுத்தனர். பிறகென்ன… 20 வருஷம் உயிரோடு இருந்தார் பாட்டி. சிவன் சாருக்குக் கொடுத்த அப்பளம் வீண் போகுமா?!
Jaya Jaya shankara hare hare shankara
No comments:
Post a Comment