Tuesday, August 16, 2022

நெமிலி பாலா திருப்புரசுந்தரி அம்மன்

 இன்று நாம் காண இருப்பது நெமிலி பாலா திருப்புரசுந்தரி அம்மன்.

பாலா பீடம் அமைந்திருக்கும் நெமிலி என்று சிற்றூர் காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு காஞ்சி காமாட்சியாக, மதுரை மீனாட்சி ஆக இருப்பது எல்லாமே பாலா தான். இது கோவில் அல்ல பாலாவின் இல்லம். 

யாரும் நினைத்து மாத்திரத்தில் இவளை வந்து பார்த்துவிட முடியாது. ஆனால் யாரை பார்க்க வேண்டும் என்று அவள் நினைக்கிறாளோ அவர்களுக்கு நேரம் கொடுத்து அவளே அழைத்து விடுவாள்.

அப்படி அவளால் அழைக்கப்படுபவர்கள் இங்கு வந்து வைக்கும் வேண்டுதல்களை அவளே நிறைவேற்றி விடுவாள்.

எக்காரணம் கொண்டும் என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுத்தால் 'நான் இதைச் செய்கிறேன் அதைச் செய்கிறேன் 'என்று வேண்டிக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் பாலா திரிபர சுந்தரி கோயிலில் உண்டியல் கூட அதனால் தான் வைக்கவில்லை. பாலா யாரிடமும் யாசகம் கேட்க மாட்டாள். 

காஞ்சி மகா பெரியவாள், திருமுருக கிருபானந்த வாரியார், பரமஹம்ச புவனேஸ்வரி சுவாமிகள் போன்ற மகான்கள் அனைவரும் இங்கு வந்து பாலாவை தரிசனம் செய்துள்ளனர். பாலா பீட இல்லத்தின் மையத்தில் பாலா வீற்றிருக்கிறாள். இங்கு சாக்லேட் தான் பிரசாதம்.

 நவராத்திரி சமயத்தில் நலம் பயக்க நாடி வந்தவள் என்பதால் நவராத்திரிஉற்சவம் இங்கு விமர்சையாக கொண்டாடப் படுகிறது. அந்த வைபவத்தில் கலைமகள், அலைமகள், மலைமகள் என நித்தம் ஒரு அவதாரத்தில் பாலா காட்சி அளிக்கிறாள். மகிஷாசுர வதம் காண லட்சக்கணக்கில் மக்கள் கூடுகின்றனர்.

 திருமணத்தடை நீக்குவதிலும், குழந்தை வரம் தருவதிலும், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்வதிலும் பிரத்யட்ச தெய்வமாக பாலா விளங்குகிறாள்.

பாலாவின் அருள் வாக்கு:

நான் பார்க்க நினைப்பவர்கள் தான் என்னை பார்க்க வருவார்கள். என்னைப் பார்க்க நினைப்பவர்கள் கோயிலுக்கு தான் செல்வார்கள். கோயிலுக்குச் செல்ல அழைப்பு தேவையில்லை நினைப்பே போதும்.  ஆனால் என்னை பார்க்க நினைப்பு மட்டும் போதாது அழைப்பு தான் வேண்டும்.

தல வரலாறு:

வேலூர் மாவட்டம் தாங்கி என்னும் சிற்றூரில் வசித்தவர் ராமசாமி ஐயர். வேத விற்பன்னரான அவர் கஷ்ட காலம் வந்தபோது ஊரை விட்டு கிளம்பினார். கால்நடையாகவே வந்த அந்த குடும்பம் நெமிலி கிராமத்தை வந்தடைந்தது. சத்திரம் ஒன்றை கண்ட அவர்கள் அங்கேயே நிரந்தரமாக வசித்து விடலாம் என்று நினைத்தபொழுது அந்த ஊர் மக்கள் அங்கு மோகினி பிசாசு இருக்கிறது என்று அச்சமூட்டுகிறார்கள்.

 இதற்கெல்லாம் ராமசாமி ஐயர் அசர வில்லை. தூசி படிந்து கிடந்த சத்திரத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்து தீபம் ஏற்றினார். அன்று இரவு ராமசாமி ஐயர் மட்டும் தூங்காமல் விடிய விடிய கண் விழித்து வேத மந்திரங்களை பாராயணம் செய்து கொண்டிருந்தார். பொழுது விடிந்து சத்திரத்துக்கு வந்து பார்த்த மக்கள் ராமசாமியும் அவரது  குடும்பமும் நலமுடன் இருந்ததை கண்டார்கள். அவரிடம் ஏதோ ஒரு தெய்வ சக்தி இருப்பதை கண்டு கொண்ட மக்கள் அவர் அங்கேயே தங்கிக் கொள்வதற்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தனர்.

 காலங்கள் கடந்தன. ஒரு நாள் ராமசாமி ஐயரின் இரண்டாவது பையனான பாலசுப்பிரமணியனின் கனவில் ஒன்பது வயது சிறுமி ஒருத்தி காட்சி கொடுத்தாள். 'அன்னை ராஜராஜேஸ்வரி அருளாசைப்படி பாலாவாகிய  நான் கொசஸ்தலை ஆற்றில் மிதந்து வந்து கொண்டிருக்கிறேன். அங்கிருந்து என்னை நீ எடுத்து உன் இல்லத்தில் அமர்த்திக் கொள். நீ தொட்டது அனைத்தும் தொடங்கும்' என்று சொல்லி மறைந்தாள் சிறுமியாய் காட்சியளித்த பாலா.

அன்னை பராசக்தியே தன் இல்லத்தில் அவதரிக்க போகிறார் என்று சுப்பிரமணியன் மனம் மகிழ்ந்தார். விடிந்ததும் விடியாததுமாக சுப்பிரமணியன் கொசஸ் தலை ஆற்றுக்கு ஓடினார். இக்கரைக்கும் அக்கரைக்குமாய் அலை அடித்தது வெள்ளம். அதில் இறங்கி பாலாவை தேடினார் சுப்ரமணியன். வெகு நேரமாகியும் பாலா வரவில்லை.

 சோர்ந்து நின்ற சுப்பிரமணியனை மக்கள் தேற்றினர். மூன்று நாள் இப்படி தேடியும் பாலா அவரது கைக்குகிடைக்கவில்லை .கடைசியாக பாலாவை நினைத்தபடி ஒருமுறை ஆற்றில் மூழ்கி எழுந்தார். அலை வீசி தேடியும் கிடைக்காத பாலா சுப்பிரமணியனின் கையில் வாகாய் வந்து அமர்ந்தாள் என்று சொல்லப்படுகிறது.

விரல் அளவு விக்கிரகத்துடன் வீடு வந்து சேர்ந்தார் சுப்பிரமணியன். நவராத்திரிக்கு சில தினங்களே இருந்த நிலையில் பாலா சுப்பிரமணியத்தின் இல்லத்தில் குடியேறியதை கேள்விப்பட்ட மக்கள் ஆர்வத்துடன் ஓடி வந்து பாலா விக்கிரகத்தை தரிசித்து  மகிழ்ந்தனர். அந்த வருட நவராத்திரி நாயகியானாள் பாலா அந்த நெமிலி கிராமத்தில். தான் குடி கொண்ட நெமிலி கிராமத்தையும் தலை வணங்கிச் சென்ற மக்களையும் செல்வ செழிப்பாக்கினாள் பாலா. இப்படித்தான் சுப்பிரமணிய ஐயரின் இல்லம் பாலா பீடமாகியது .

புத்தாண்டு தினங்கள் ,மாதத்தின் முதல் ஞாயிறு ,தை மற்றும் ஆடி வெள்ளி தினங்களில் நெமிலி பாலாவுக்கு சிறப்பு வழிபாடுகள் உண்டு.

தினமும் காலை 9 மணியிலிருந்து இரண்டு மணி வரையிலும் மாலை நாலு மணியிலிருந்து ஏழு மணி வரையிலும் பாலா பீடம் பக்தர்களுக்காக திறந்திருக்கும். எனினும் பாலா பீட நிர்வாகிகள் அடிக்கடி ஆன்மீக யாத்திரை செய்பவர்கள் என்ற காரணத்தால் அன்பர்கள் 04177 247216 என்று எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை தெரிவித்து விட்டு செல்வது நல்லது.

No comments:

Post a Comment