Friday, August 19, 2022

பிரமோஷன்

 பெரியவா சரணம் 

வங்கிக்   கணக்கர்..   பெரியவாளிடம்  அதீத   பக்தி..  அடிக்கடி  தரிசனத்திற்கு வருவார்..   ஒரு முறை   நமஸ்காரம் செய்து விட்டு   நின்று கொண்டே  இருந்தார். 

பெரியவா   பார்வைப்  பட்டதும்   சொல்லத்  தொடங்கினார்.   "எனக்கு  பிரமோஷன்   கிடைக்க வில்லை. சட்டப்படி   எனக்குக்   கிடைச்சருக்கணும்.  என்  ஜூனியர்கள்   பல பேர்,   அதிகாரிகளாக   உயர்வு   பெற்று  விட்டார்கள்.."  

பின்னர்   நாலைந்து  முறை   தரிசனம்  வந்த   போதும்,  இதே  கம்ப்ளைன்ட்! 

பெரியவாளுக்கே   அலுப்புத்  தட்டி  விட்டதோ    என்னவோ, " உனக்குப்  பிரமோஷன்   வேண்டவே வேண்டாம்.  கிடைக்கிற   சம்பளத்தை   வைத்துக்  கொண்டு   சிக்கனமாய்க்   குடித்தனம் நடத்து "  என்று   சூடாகவே   சொல்லி விட்டார்கள். 

வங்கிக்  கணக்கருக்கும்   ரோஷம்  வந்து  விட்டாற்   போலிருந்தது.  ஒரு  வருஷ   காலம்   தரிசனத்திற்கு  வரவில்லை! 

திடீரென்று   ஒருநாள்,  ஆனந்தமாக  வந்தார்   வங்கிக்  கணக்கர்..  'பிரமோஷன்   கிடைத்திருக்கும்'  என்று   நினைத்துக்   கொண்டார்கள்   மடத்தில் உள்ளவர்கள்... 

அவர்   முறை  வந்ததும்,   பெரியவா முன் சாஷ்டாங்க   நமஸ்காரம்  செய்தார்.. "பெரியவா  தெய்வம்!   பிரமோஷன்  வேண்டாம்   என்று   சொன்னது   சரியாப்   போச்சு..   வங்கியில்   ஏதோ  தில்லு முல்லு ;   கணக்கில்   வராமல்  பணப் பரிமாற்றம் ;  சட்டம்   மீறிய  சலுகைகள்... அப்போதிருந்த    அதிகாரிகளை   சஸ்பெண்ட்   செய்து விட்டார்கள்..   நல்ல வேளை,  நான்  அதிகாரியாகப்    போக வில்லை.  இல்லாவிட்டால்,    நானும்   மாட்டிக் கொண்டிருப்பேன்.... "

இரண்டு, மூன்று   மாதங்களுக்குப்   பின்  சீனியாரிட்டி   அடிப்படையில்   அவருக்குப்    பிரமோஷன்   ஆர்டர்  வந்தது.  ஆர்டருடன்    தரிசனத்திற்கு  வந்தார்.." பிரமோஷனை   ஏற்றுக்   கொள்ளலாமா?   பெரியவா   உத்தரவு  கொடுக்கணும்.. "

" உன்னைத்    தேடி   வந்திருக்கும்   வாய்ப்பு   இது.   உதாசீனப் படுத்தாதே..   ஆனா,   ஒண்ணு,   தப்பு செய்யாமல்    உண்மையா  வேலை   செய்யணும்.  நல்ல    பேர்   எடுக்கணும்..."   பெரியவா  கூற,   " அப்படியே.. "  என்று பணிவுடன் கூறினார்.. 

பெரியவா   தொடர்ந்து   கூறினார்," நீ   தப்பு   பண்ணினா.... (ஒரு   சஸ்பென்ஸ்  கொடுத்து)   எனக்குக்   கெட்ட பெயர்   வந்துடும்! "

வங்கிக்   கணக்கர் , (மன்னிக்கவும்) வங்கி  அதிகாரி    கண்களைத்   துடைத்துக்  கொண்டு,   மறுபடியும் சாஷ்டாங்க  நமஸ்காரம்   செய்தார்.... 

பெரியவா வுக்குத்   தெரியும்..    நமக்கு   எப்பொழுது , என்ன   கிடைக்கும்  என்று...    பெரியவா   பார்த்துப்பார்  என்ற   சரணாகதி   போதும்   நமக்கு...

No comments:

Post a Comment