Tuesday, August 30, 2022

ஶ்ரீ பூமிதேவி சமேத ஶ்ரீ ஒப்பிலியப்பன் கோவில்

 பொது.

#தினம்_ஒரு_கோவில்_1

மத்யமார் fbல் பத்மா ராகவன் எழுதியது 


கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ பூமிதேவி சமேத ஶ்ரீ ஒப்பிலியப்பன் கோவில் பற்றி எனக்குத் தெரிந்தவை.

ஶ்ரீ மன் நாராயணனிடம் கோபம் கொண்ட ஶ்ரீ மகாலெட்சுமி (கடவுளர்களுக்குள் கோபமெல்லாம் கிடையாது. பல தத்துவங்களை மனிதர்களுக்கு உணர்த்த அவர்கள் போடும் நாடகம். வாயால் சொல்வதைவிட செய்தே காட்டும் எந்த விஷயமும் டக் என்று மனதில் ஒட்டுமல்லவா) இந்த பூலோகத்தில் அவதரித்தாள். ஒரு துளசி வனத்தில் மார்க்கண்டேய மகரிஷியின் கரங்களில் குழந்தையாய் கிடைத்தாள்.

முனிவரும், குழந்தை பூமியிலிருந்து கிடைத்ததால் பூமா தேவி என ப்பெயரிட்டு மிக மிக செல்லமாக, செல்வமாக வளர்த்துவந்தார். அவருக்கு மகாலெட்சுமிதான் தனக்கு மகளாகக் கிடைத்திருக்கிறாள் என்றெல்லாம் தெரியாது.

மகா லெட்சுமி தன்னைப்பிரிந்ததைப் பொறுக்க முடியாமல் பகவான் பூலோகத்துக்குத் தேடிவந்தார். மகாலெட்சுமி பூமாதேவியாக மார்க்கண்டேயரிடம் வளர்வதை அறிந்து, தன் விளையாட்டை ஆரம்பித்தார். 

தன்னை ஒரு வயோதிகன் போல் மாற்றிக்கொண்டு, ரிஷியின் ஆஸ்ரமத்தை அடைந்தார்.

யாரோ சுத்தமான ஆச்சாரமான வைணவப் பெருந்தகையைக் கண்டதும் மார்க்கண்டேயர்சந்தோஷத்துடன் பலவிதமான கைங்கர்யம் உபசாரம் அனைத்தும் அவருக்கு சமர்ப்பித்தார். நன்கு ஆசுவாசப்படுத்திக்கொண்டபின் பகவான் அவரிடம், "நீங்கள் எனக்கு இவ்வளவு உபசாரங்கள் செய்து மகிழ்வித்தீர்கள். இன்னும் ஒன்று பாக்கி இருக்கிறது" என்றதும்

"என்ன வென்று சொல்லுங்கள். என் ஆஸ்ரமத்துக்கு வந்தவர் யாரும் குறையுடன் திரும்பக்கூடாது" என வினவினார் ரிஷி.

"மாட்டேன், மறுதளிக்கமாட்டேன் என வாக்குறுதி கொடுங்கள்" என பகவான் கேட்கவும்,

"அபச்சாரம். அந்த மாதிரி ஒரு நாளும் இங்கு நடக்காது" என வாக்குக்கொடுத்தார் ரிஷி.

"அது வேறு ஒன்றுமில்லை. என்னை உமது மாப்பிள்ளை ஆக்கிக்கொள்ள வேண்டும்"

கேட்டதும் துள்ளிக்குதித்து, "என்னது. என்ன ஆசை உமக்கு? அபத்தமாக இருக்கிறதே. உமது வயசென்ன? அந்தக்குழந்தையை மணம் செய்ய ஆசைப்படுகிறீர்களே. என்ன நியாயம்"என்று எகிறிக்குதித்தார் ரிஷி.

"அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் ஆசைப்பட்டுவிட்டேன். நீரும் வாக்குக் கொடுத்துவிட்டீர். ஏற்பாடுகள் நடக்கட்டும்" என தன் வாதத்தில் உறுதியாக இருந்தார் பகவான்.

"ஐயோ இந்தக்கொடுமையை எங்கு போய் சொல்வேன். பச்சிளம் குழந்தையை இந்த வயோதிகனுக்கு கன்னிகாதானம் செய்விப்பதா? ,மாபாதகச்செயல்லவா? இந்த வயோதிகனுக்கு வந்த ஆசையைப் பார். போனால் போகிறது. ஏதோ நாடோடி. தேசாந்திரம் வந்தவர். என நினைத்து உபசரித்தால் இப்படி அடாவடித்தனம் செய்கிறாரே" எனப் புலம்பிக் கொட்டினார்.

"யோவ் தாத்தா. அவளுக்கு சமயல் செய்யக்கூடத்தெரியாது. சமயலில் ருசி கூட்ட உப்பு சேர்க்கணும் என்று கூடத் தெரியாதுப்பா. அவளை மணந்தால் நீ வாழ்நாள் பூரா பட்டிணிதான்" என்று பயமுறுத்தினார்.

பகவானா விடுவார். அவர் பிடிவாதம் சிறு குழந்தையின் பிடிவாதம்போல் அதிகரிக்கிறது. திண்ணையில் நீட்டமாகச்சயனித்து, "அவ்வளவுதானே. எப்படிச்சமைத்தாலும் சாப்பிடறேன். ஏன். இன்றுமுதல் அவளுக்காக என் சாப்பாட்டில் உப்பே சேர்த்துக்கொள்ளமாட்டேன். எனக்கு எப்படியாவது உங்க பெண்ணை மண முடித்துக் கொடுங்கள். அவள் இல்லையென்றால் என் உயிர் என் வசம் இருக்காது" என சத்யாக்ரகம் செய்தார்.

செய்வதறியாது திகைக்கிறார் ரிஷி. "அய்யோ. ஆராயாமல் வாக்குக் கொடுத்து விட்டேனே. இந்த வயோதிகருக்கும் என் பெண்ணுக்கும் கொஞ்சம்கூடப் பொருத்தமில்லையே. ஶ்ரீ மன் நாராயணா. இதற்கொரு தீர்மானத்தை எனக்கு சொல்லமாட்டாயா" என்று பூஜை அறையில் பகவான் சிலைமுன் அமர்ந்து கண்ணீர் விட்டார்..

பகவான்தான் நமுட்டு சிரிப்பு சிரித்தபடி திண்ணையில் கிடக்கிறாரே.

கடைசியில் வேறு வழியில்லாமல், கண்ணீர் பெருக, தன் செல்ல மகளுக்குத்தானளித்த வாக்கே சத்ருவானதை நினைத்து மனம் வெந்து, கன்னிகாதானம் செய்துதர ஏற்பாடுகள் செய்கிறார். கல்யாண பட்சணங்கள்,சமையல் எதிலும் உப்பு சேர்க்க வேண்டாம் என மாப்பிள்ளை ஆணை இடுகிறார். "எனக்கு வேறு மலர் மாலைகள் வேண்டாம். எனக்கு வரப்போகும் மனைவி துளசி வனத்தில் கிடைத்தவள். துளசி மணத்துடன் இருப்பவள். அவளுக்கு மரியாதை தரும் விதமாக,  என் மார்பில் அந்தத் துளசிதான் மாலையாக இருக்கணும். நான் எப்போதும் அந்த மணத்தை நுகர்ந்தபடி இருக்கணும்" என்று மாப்பிள்ளை சொன்னதைக்கேட்ட ரிஷி, "சரியான பைத்தியக்காரன் போல இருக்கு" எனத்தலையில் அடித்து, அவர் கேட்டவாறே அனைத்தும் செய்து முடித்தார்.

திருமண விருந்தைஅனைவருக்கும் பரிமாறும்போது, மாப்பிள்ளையின் ஆணையை எடுத்துச்சொல்லி, உப்பில்லா விருந்து அளிப்பதற்காக மன்னிப்பை வேண்டினார்.

 சாப்பிட்டவர்களுக்கோ அது உப்பில்லாததாகவே தோணலை. தேவாமிர்தமாக ருசித்தது. அனைவரும் வியப்புடன் உண்டு முடித்தனர்.

அடுத்து பெண்ணை, அவள் கணவருடன் அனுப்பிவைக்கும் நேரம். "என் பெண் அறியாக்குழந்தை. அவள் ஏதேனும் தவறுசெய்தால் தண்டிக்காமல் மன்னித்து விடுங்கள்' என்று வேண்டிய ரிஷியிடம்,  "மார்க்கண்டேயரே. எங்களை நன்கு பாருங்கள். இன்னுமா நாங்கள் யார் என்பது புரியவில்லை" ஏன்றதும் கண்களை மறைத்த கண்ணீரைத்துடைத்துப் பார்க்கிறார்ர்.

 "ஆகாகா. சங்கு சக்ர தாரியாக, துளசி மணம் கமழ, பக்கத்தில் மகா லெட்சுமியை அணைத்தபடி அவர் வணங்கும் ஶ்ரீ மன் நாராயணன் அல்லவா காட்சி தருகிறார். அப்படியானால் பகவானே என் மாப்பிள்ளையா? உலகுக்கே தாயானவள் எனக்கு மகளாக வந்தாளா? என்ன மடமை. தெரியாமல் இருந்துவிட்டேனே. எத்தனை ஜன்ம புண்ணியம் எனக்கு பகவானும் தாயாரும் பெண் மாப்பிள்ளையாகக் கிடைக்க? இதை உணராமல் இருந்து விட்டேனே"

 மார்க்கண்டேயரின் தவிப்பும் புலம்பலும் ஓயவில்லை . கண்ணீர் பெருக்கெடுக்கிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.

"எங்களுக்கே மணம் செய்துவைத்த பாக்யசாலியான உமக்கு வேண்டும் வரத்தைக்கேளுங்கள்..தரத்தயாராக இருக்கிறோம்" என்ற பகவானிடம்

"கன்னிகாதானக்கோலத்துடன் நீங்கள் இருவரும் (அதே வயதான ஆண், சிறு பெண் வடிவில்) இங்கு நிரந்தரமாக இருந்து அருள் புரியணும். உங்களுக்கருகில், உங்களை விட்டகலாமல் நானும் இங்கு உங்களுடன் இருக்கணும். இங்கு வந்து, உங்களுக்குப்பிடித்தமான துளசிமாலை சார்த்தி, உங்களை வழிபடுவோருக்கு சகல சௌபாக்யங்களையும் அருளணும். உன்னை சேவிக்கும் திருமணமாகதவர்களுக்குத் திருமணம் கைகூட அருளணும். பிணக்கு, மனஸ்தாபம் உள்ள தம்பதியர் உன்னை வணங்கினால், அவர்கள் பிணக்கு நீங்கி என்றென்றும் ஒற்றுமையாக இருக்க வாழ்த்தணும். எப்போதும் உப்பில்லாத நைவேத்யத்தையே ஏற்கணும். ஆது உண்பவர்களுக்கு அமிர்தமாக இருக்கணும். இதுவே பூலோக சொர்க்கமாக இருக்க அருள் புரியணும்"

மார்க்கண்டேய மகரிஷி கேட்டுக்கொண்ட அனைத்தையும் இன்றளவும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் ஶ்ரீஒப்பிலியப்பனான ஶ்ரீமன் நாராயணன். யாருக்கும் உவமைப் படுத்தமுடியாதஒப்புயர்வற்றவராதலால் ஒப்பில்லா அப்பன், ஒப்பிலியப்பன் எனவும், உப்பை நீக்கியதால் ஶ்ரீஉப்பில்லா (உப்பிலி) யப்பன் எனவும் பக்தர்களால் செல்லமாக அழைக்கப் படுகிறார்.

ஶ்ரீ ஆண்டாள் சரித்திரத்தில், பகவானிடம் கொண்ட காதல் விளக்கப்படுகிறது. ஆனால் இங்கு பகவான் திருமகளிடம் கொண்ட காதல் வெளிப்படுகிறது. எல்லாமே பகவான் நடத்தும் லீலை எனினும், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல், மனைவிக்கு மதிப்பளித்தல் போன்றவற்றை உலகுக்கு எடுத்துறைக்கவே இப்படி நாடகம் ஆடியிருக்கிறார் பகவான்.

No comments:

Post a Comment