#ரகோபதேஸம்தொடர்ச்சி
ரகோபதேஸம் தொடர்ச்சி_19
by பாஸ்கர் சத்யா
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. பாண்டுரங்க மடத்திற்குள் நான் நுழையும்போது மாமா அங்கு இல்லை. மடத்தின் எல்லா கதவுகளும் திறந்திருந்த நிலையில் அவர் இல்லாதது சற்று ஆச்சரியத்தை தந்தது.
'மாமா மாமா மாமா ....'
இப்படி கூப்பிட்டதற்கு எதிர் குரல் கிடைக்காத நிலையில் தோட்டத்திற்கும் சென்று பார்க்கிறேன். அங்கும் அவரை காணவில்லை.
'எங்கே போயிட்டார் கதவு எல்லாத்தையும் தொறந்து வெச்சிட்டு?'
கிளம்பலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கம் முழுவதும் விபூதி தரித்த நிலையில் ஒரு கையில் ஒரு கமண்டலத்திலும் மற்றொரு கையில் பஞ்ச பாத்திர உத்தரணி சஹிதம் மாமணி ஆற்று வாசல் கதவிலிருந்து மாமா உள்ளே நுழைகிறார்.
மகிழ்ச்சி என்னிடத்தில்.
'என்ன மாமா? எங்கே இருந்து வரேள்? உங்கள காணாம நான் பயந்துட்டேன் தெரியுமா?'
'நோக்கா பயம்? படவா! நான் இதை நம்பணமாக்கும்?'
'இல்ல மாமா கதவெல்லாம் தொறந்து வெச்சிட்டு எங்கேயும் போக மாட்டேளே நீங்க. அதான் கொஞ்சம் பயம் கொடுத்துடுத்து.'
'ஒண்ணும் இல்லடா. கொஞ்சம் ஆத்தாங்கர மணல்ல அமைதியா சித்த நேரம் உக்கார்ந்துட்டு மாத்யான்னிஹத்தையும் பண்ணிட்டு திரும்பறேன்.'
'வெய்யிலா இருந்திருக்குமே மாமா?'
'மடத்தோட தோட்டத்த ஒட்டின மரத்து நிழல்ல தான் உக்கார்ந்திருந்தேன். அவ்வளவா ஒண்ணும் சுடல.'
இப்படி எனக்கு பதில் கொடுத்துவிட்டு, 'பாஸு பூஜையையும் முடிச்சுட்டு கிளாஸ்ல உட்காரலாமா? சொல்லிக் கொடுத்துட்டு பண்றதுன்னா எனக்கு ரொம்ப லேட் ஆயிடும். நோக்கு அவசரம் ஒண்ணும் இல்லையோன்னோ?'
'இல்ல மாமா. லீவு நாள் தானே. நான் வேணா அதுவரைக்கும் கொஞ்சம் தோட்டத்துல இருக்கட்டுமா? நீங்க பூஜையை ஆரம்பிங்கோ. ஆரத்தி மணி சத்தம் கேட்டோண்ண வந்துடறேன்.'
'நல்லது டா. ஆனா பூச்சி பட்டு ஜாக்ரதை.'
தோட்டத்திற்கு செல்கிறேன். பூக்களோடும் செடிகளோடும் ஆனந்தமாய் பேச்சை துவக்குகிறேன். செடிகளை குளிப்பாட்டுகிறேன். புதுச் செடிகளுக்காக சில குழிகளையும் ஏற்பாடு செய்கிறேன்.
'பாஆஆஆஆஸு' ஆசானின் குரல் சற்று சத்தமாக. அவசரம் அவசரமாக கை கால்களை சுத்தம் செய்துவிட்டு ஆரத்தி மந்திரங்களில் அவரோடு சேர்ந்து கொள்கிறேன்.
பாண்டுரங்க பூஜை முடிந்தது. வழக்கமான வகுப்பு ஏற்பாடுகளும் முடிந்து அவருடைய உபதேசத்திற்காக காத்திருக்கிறேன்.
'மனச ஒருமைப்படுத்த அஞ்சு விதமான சிந்தனைகளை பத்தி சொல்லிண்டு இருந்தேன். அதுல முதல் விஷயமா பிரபஞ்சத்தை பத்தியும் பேசினோம் இல்லையா?'
'இனி அடுத்ததாக ஒளி பத்தின சிந்தனை. அதிஜ்யௌதிஷம் சமிஸ்கிரதத்துல.'
அதாதிஜ்யௌதிஷம் அக்னி: பூர்வரூபம் ஆதித்ய
உத்தரரூபம் ஆப: ஸந்தி: வைத்யுதஸ்ஸந்தானம் இத்யதி ஜ்யௌதிஷம்
அத - இனி;
அதிஜ்யௌதிஷம் - ஒளிப்பொருள் பற்றி;
அக்னி: - அக்கினி:
பூர்வரூபம் - முற்பகுதி;
ஆதித்ய: - சூரியன்;
உத்தர ரூபம் - பிற்பகுதி; ஆப: - தண்ணீர்;
ஸந்தி: - இணைப்பு;
வைத்யுத: - மின்னல்; ஸந்தானம் - இணைக்கின்ற பொருள்;
இதி - இவ்வாறு: அதிஜ்யௌதிஷம் - ஒளிப்பொருள் சிந்தனை.
'இப்போ சேர்த்து பார்ப்போமா?இனி ஒளிப்பொருள் சிந்தனையைப் பார்ப்
போம். இதில் அக்கினி முற்பகுதி, சூரியன் பிற்பகுதி
இரண்டும் இணைவதால் தண்ணீர் உண்டாகிறது.
இரண்டையும் இணைப்பது மின்னல், ஒளிப்பொருள்
சிந்தனை இவ்வாறு செய்யப்படுகிறது.'
'பிரபஞ்சத்தோட அழகுல மனச ஒருங்கிணைக்கணும்னா முதல்ல அதோட அழகை ரசிக்கணும். அதுல லயிக்கணும். அதற்கு அடிப்படைத் தேவை ஒளி. ஒளி இல்லாம பார்க்க முடியுமோ? இதுல என்ன விசித்திரம் பாரு. ஒளிய நாம நேரடியா பார்க்க முடியாது; ஒளி பட்டு ஒளிர்கின்ற பொருளை மட்டுமே காண முடியும். எனவே அக்னி, சூரியன், மின்னல் போன்ற சில வஸ்துக்கள் இங்கே எடுத்துக் கொள்ளப்படறது. இந்தச் சிந்தனையின் இரண்டு முக்கிய அம்சங்கள்.
'ஒளிர்கின்ற பொருட்கள் தாம் ஒளிர்வதுடன் பிற பொருட்களையும் ஒளிரச் செய்கின்றன; அதாவது, பிற பொருட்களை நாம் காணுமாறு செய்கின்றன. பிறருக்கும் பயன்படற மாதிரி வாழ்க்கைய அமச்சுக்கணும்னு சொல்றதுக்கு இது ஓர் உதாரணமா அமயறது.'
'அக்னியிலிருந்து தண்ணீர் கிடைக்கறது. இது படைப்போட அடுத்த கட்டம். இயற்கையின் நிகரற்ற ஆற்றலுக்கு மின்னல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இயற்கையின் ஆற்றலால் அக்னிலேந்து தண்ணீர் உருவாகிறது.'
'ஒளியைச் சிந்திக்கறது அவ்வளவு சுலபம் இல்லை. அதனால பிரபஞ்ச சிந்தனைய விட சற்று உயர்நிலை சிந்தனைனு இத சொல்றா.'
'அடுத்ததாக பார்த்தோமேயானால் கல்விச் சிந்தனை.
'கல்விபற்றிய சிந்தனைல ஆசிரியர் முற்பகுதி, மாணவன் பிற்பகுதி, இருவரும் கல்வியில் இணைகின்றனர்;
கற்பித்தல் இணைதலுக்குக் காரணமாக உள்ளது,
கல்விச் சிந்தனை இவ்வாறு செய்யப் படுகிறது.'
'இது இன்னும் சற்று உயர்ந்த சிந்தனை. சிந்தனைக்கு ஒரு பொருள எடுத்துக்காம, ஒரு கருத்த எடுத்துக்கறது. கல்வியை, அதாவது கல்வியின் பல்வேறு அம்சங்களைச் சிந்திக்குமாறு இந்தச் சிந்தனை கூறுகிறது.'
'அடுத்த சிந்தனை ஞாபகம் இருக்கா?'
சட்டென்று ஞாபகத்துக்கு வரவில்லை. இருந்தாலும் சவாலாக எடுத்துக்கொண்டு யோசிக்க ஆரம்பிக்கிறேன். அவரும் புன் சிரிப்போடு என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
'உற்பத்தின்னு நீங்க சொன்ன மாதிரி ஞாபகம் மாமா.'
'அட அட அட ... எத்தனை உன்னிப்பா கவனிச்சிருக்க வகுப்ப? நீ தெரியாதுன்னு உதட்டை பிதுக்குவேன்னு நெனைச்சேன்.'
பெருமிதமாக இருந்தது அப்போது எனக்கு.
'சரி. இப்ப அந்த உற்பத்தி சிந்தனைய பத்தி பாப்போம். இதை உயிர்ச் சிந்தனை அப்படின்னும் சொல்லலாம்.'
அதாதிப்ரஜம்
மாதா பூர்வ ரூபம் பிதோத்தரரூபம்ப்ரஜா
ஸந்தி: ப்ரஜனனக்ம் ஸந்தானம் இத்யதிப்ரஜம்
இதி - இவ்வாறு; அதிப்ரஜம் - உயிர்களின் உற்பத்திபற்றிய சிந்தனை.
'இந்த விஷயம் உன் வயசுக்கு ஏத்ததா இல்லாட்டாலும் அடிப்படை விஷயமா தெரிஞ்சுக்கறதுல தப்பில்ல. அம்மா அப்பா சேர்க்கை குழந்தை இதுதான மனுஷாளோட பிறப்புக்கு ஆதாரம்?'
'தாய் முற்பகுதியாவும் தந்தை பிற் பகுதியாவும், இருவரும் இணைவதால் உயிர் பிறக்கிறது. உயிர்களின் உற்பத்தி பற்றிய சிந்தனை இவ்வாறு செய்யப் படுகிறது. ஜீவராசிகள் எல்லாத்துக்குமே இது பொருந்துமே. செடிகள் கூட மகரந்த சேர்க்கை மூலமாக வ்ருத்தி ஆகிறதோன்னோ?'
'வேத கால சமுதாயம் ஒரு சிறந்த ஆரோக்கியமான சமுதாயமாக விளங்கியதற்கான முக்கிய காரணங்கள்ல ஒண்ண இங்க பாக்கறோம். காமம், உடலுறவு போன்றவைகள் தகுந்த ஒருவரால் கற்பிக்கப்படுவது மாத்திரம் இல்லாம, அத பத்தி சிந்திக்குமாறும் இங்கே சொல்லப்படறது. கல்விக்காலம் முடிந்து வெளியேறும்போது ஒருவன் நல்ல மனிதனாக வாழ்வதற்கு இந்தக் கல்வி, இந்தச் சிந்தனை வழி வகுத்தது. வாழ்க்கையின் ஓர் அடிப்படை அம்சமான காமம் பத்தி, உரிய வேளையில், உரிய முறைப்படி, தகுந்த ஒருவர் கற்பிப்பதன்மூலம் நல்ல மனிதன் உருவாகிறான்; நல்ல சமுதாயத்திற்கு அது வழிகோலுகிறது. உயிரை உருவாக்குகின்ற இந்த உறவை கீதை தெய்வீகமா ஸ்லாகிக்கிறது.'
'இதோட முடிச்சுண்டு மேற்கொண்டு அடுத்ததுக்கு போவோம். வாக்கு சிந்தனை:
அதாத்யாத்மம் அதரா ஹனு: பூர்வரூபம் உத்தரா ஹனு
ருத்தர ரூபம் வாக் ஸந்தி: ஜிஹ்வா ஸந்தானம் இத்யத்யாத்மம்//
'உடம்புபற்றிய சிந்தனையை இனி காண்போம். இதில் கீழ்த்தாடை முற்பகுதி, மேல்தாடை பிற்பகுதி, இரண்டும் இணையும்போது வாக்கு பிறக்கிறது. இணைக்கின்ற பொருளாக இருப்பது நாக்கு.
உடம்புபற்றிய சிந்தனை இவ்வாறு செய்யப்படுகிறது.
'உடம்புபற்றிய சிந்தனை அப்படின்னு சொல்லப்பட்டாலும் இது உண்மையில் வாக்கு பற்றிய சிந்தனையாகும். பேச்சுக் கட்டுப்பாடே ஆன்மீக வாழ்வுக்கு முதல் படி.'
'விவேக சூடாமணில ஸ்ரீ சங்கரர் 'யோகஸ்ய ப்ரதம த்வாரம் வாக் நிரோத:' அப்படிங்கறார்.'
'இந்தக் கூற்றுப்படியே வாக்கின் ஆற்றலை கையாள்வதை கர்ம யோகத்தோட அடிப்படை நியதியாகவே வைக்கிறார் ஸ்வாமி விவேகானந்தர். ஒரு நிமிஷம் வாக்கின் ஆற்றலை யோசிச்சு பார்த்தோமானால் நமக்கே புரிஞ்சுடும். அன்றாட வாழ்க்கைல மட்டும் இல்லாம உயர்ந்த தத்துவங்கள்ல கூட வாக்கின் ஆற்றல் மாபெரும் சக்தியா இருக்கு. இந்தச் சக்தியின் இயல்பைத் தெரிஞ்சுக்கறதும் அதைச் சிறப்பா பயன்படுத்தறதும் கூட கர்மயோகத்துல ஒரு பகுதியா இருக்கு.'
'தேவையற்ற பேச்சு சாதாரண வாழ்க்கைக்கு பெரிய தடை. இதனால நமது ஆற்றலில் கணிசமான பகுதி பேச்சுல நாம இழந்துடறோம். எனவே பேச்சுக் கட்டுப்பாட்டைப்பற்றி சிந்திக்கும்படி, கடைப்பிடிக்கும்படி மாணவன் இங்கே இந்த சிக்ஷா வல்லிலே உபதேசிக்ப்படறான்.'
'இது மாதிரி நிறைய விஷயங்கள் சிக்ஷா வல்லில இடம் பெற்றிருக்கு. பிற்காலத்துல நோக்கு யோகம் த்யானம் இதுமாதிரியான பயிற்சிகள்ல ஈடுபாடு ஏற்பட்டதும்போது இந்த அடிப்படை ஆதார விஷயங்கள் உபயோகமா இருக்கலாம். அத மனசுல வச்சுண்டு தான் இந்த அஞ்சு விதமான சிந்தனைகளை பத்தி சொல்லிக் கொடுத்தேன். அடிக்கடி இந்த அஞ்சு விஷயங்களை ஞாபகப்படுத்தி கொண்டே இரு. எங்க இருக்க சொல்லு பாப்போம் எதெது அந்த அஞ்சுன்னு?'
கொஞ்சம் யோசிக்கிறேன்.
'இயற்கை அல்லது பிரபஞ்சம் முதலாவது. சரியா மாமா?'
'சரிதான். ஒவ்வொண்ணுக்கும் என்கிட்ட சரியான்னு கேட்காதே. ஞாபகப்படுத்தி ஞாபகப்படுத்தி ஒண்ணு ஒண்ணா சொல்லு.'
அதுக்கப்புறம் என் தாவன்கட்டையில் விரல்களால் தாளம் அடிக்கிறேன்.
'ம்ம்ம் ... மாமா ஞாபகம் வந்துடுத்து. அடுத்தது ஒளி. அடுத்தது படிப்பு,கல்வி. நாலாவதா உடல் உற்பத்தி. கடைசியா வாக்கு.'
தன் இரு கைகளையும் சேர்த்து தட்டிக் கொண்டே என்னை பாராட்டுகிறார்.
'நீ இந்த மாதிரி நான் சொல்லிக் கொடுத்ததையெல்லாம் ஞாபகப்படுத்தி டாண் டாண்ணு சொல்றதாலத்தான் நோக்கு நிறைய சொல்லிக் கொடுத்துண்டே இருக்கணும் போல இருக்கு. உன்னோட பள்ளிக்கூட பாடங்களையும் இப்படித்தான் ஸ்ரத்தையோட கத்துக்கணும். அங்க நோக்கு கவனிச்சிதறல் அதிகமா இருக்கும். ஏன்னா அங்க எல்லாரோடையும் சேர்ந்து இருக்கியோன்னோ? உன்னோட பிரெண்ட்ஸ்களோட சேட்டைகள் இது மாதிரியெல்லாம் பாக்கும்போது கவனம் சிதறுமோன்னோ? அதுக்கெல்லாம் இடம் கொடுக்கக் கூடாது.'
'இங்கு நான் சொல்லிக் கொடுக்கிறதுக்கெல்லாம் பரீட்சை மார்க் இதெல்லாம் கிடையாது. ஆனால் ஸ்கூல் படிப்புல இதெல்லாம் இருக்கே. அதனால ஆத்துக்கு வந்தோண்ண கத்துண்ட விஷயங்கள் மறக்காமல் இருக்க பயிற்சிகளும் முயற்சிகளும் கூட முக்கியம். புரிஞ்சுதா நான் சொல்றதெல்லாம்?'
மண்டையை ஆட்டி ஆட்டி அவருக்கு உறுதி அளிக்கிறேன்.
'சரிடா பாஸு. ரொம்ப நாழி ஆச்சு இன்னிக்கு. இதோட போதும். சிக்ஷாவல்லில சில விஷயங்கள் கத்துண்ட மாதிரி மத்த ரெண்டு வல்லிகளப் பத்தி நாளைக்கு பேசுவோம். மத்த ரெண்டு வல்லிகள் பெயர்கள் ஞாபகம் இருக்கா?'
'ஆனந்த வல்லி, ப்ருகு வல்லி ... சரியா மாமா?'
'கரக்டுடா கொழந்த. அவைகள் ரெண்டும் என்ன ஏதுங்கற அளவுல சுருக்கமா சொல்லிக் கொடுக்கறேன். அதுக்கு முன்னாடி சிக்ஷா வல்லியில நீ தெரிஞ்சுக்க வேண்டிய முக்யமான ரெண்டு விஷயங்கள் ஸ்லோகங்களா இருக்கு. அத முதல்ல முடிச்சுட்டு ஆனந்த வல்லி ப்ருகு வல்லி ஆரம்பிப்போம்.'
'அந்த ரெண்டு ஸ்லோகங்கள் என்னன்ன மாமா?'
'அதுக்குள்ள அவசரமாக்கும்? அவைகள் 'மாத்ரு தேவோ பவ' அப்படின்னு ஆரம்பிக்கும் ஸ்லோகமும் 'சத்யம் வத தர்மம் சர' அப்படிங்கற உயர்ந்த தத்துவத்த சொல்ற ஸ்லோகமும் தான். நான் மறந்து போனாலும் ஞாபகப் படுத்து.'
'சரி மாமா. நான் நமஸ்காரம் பண்ணிட்டு கிளம்பறேன்.'
வழக்கம் போல என் நமஸ்காரங்களுக்கு பிறகு அவரது ஆசிகளை பெற்றுக்கொண்டு கிளம்புகிறேன்.
தொடரும்
No comments:
Post a Comment