தினம் ஒரு திருத்தலம்... 🛕*_
*இந்த கோயில் எங்கு உள்ளது?*
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி என்னும் ஊரில் அருள்மிகு ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
*இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?*
திருநெல்வேலியில் இருந்து சுமார் 38 கி.மீ தொலைவில் கல்லிடைக்குறிச்சி என்னும் ஊர் உள்ளது. கல்லிடைக்குறிச்சி பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
*இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?*
அருள்மிகு ஆதிவராகர் திருக்கோயிலில் மூலவரான பெருமாள், வராக மூர்த்தியாக பூமாதேவியை மடியில் அமர்த்தியபடி பத்ம பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இத்தல மூலவருக்கு தாமிரபரணி தீர்த்தத்தால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்படுவது சிறப்பு. இதற்காக தினமும் காலையில் சுவாமிக்கு பூஜை செய்ய மேளதாளம் முழங்க தாமிரபரணி நதிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருகின்றனர்.
எப்போதும் மூலவர் தாயாருடன் சேர்ந்து காட்சி தருவதால் இவருக்கு 'நித்ய கல்யாணப்பெருமாள்" என்றும், இத்தலத்திற்கு 'கல்யாணபுரி" என்றும் பெயர் உண்டு.
மூலவர் சன்னதியின் விமானத்தில் சயனப்பெருமாள் சன்னதி உள்ளது. இவரின் அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, நாபியில் பிரம்மா, பிருகு மற்றும் மார்க்கண்டேய மகரிஷி ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.
*வேறென்ன சிறப்பு?*
பொதுவாக பெருமாள் கோயில்களில் ஆண்டாள்தான் தனிச்சன்னதியில் இருப்பார்.
ஆனால் இக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் தனித்தனி சன்னதிகளில் அருள்புரிகின்றனர்.
பிரகாரத்தில் மடியில் லட்சுமியுடன் லட்சுமிநாராயணர், விஷ்வக்ஷேனர், ஆழ்வார்கள் ஆகியோரின் சன்னதிகள் அமைந்துள்ளது.
பெருமாளின் தசாவதார வடிவங்கள், சுவாமி சன்னதிக்கு பின்புறம் சிலா ரூபமாக இருக்கிறது.
இத்தலத்தில் பீட வடிவில் யானையும், குதிரை வாகனங்களுடன் சாஸ்தாவும் அருள்பாலிக்கின்றனர்.
*என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?*
சித்திரையில் பிரம்மோற்சவம், ஆடிப்பூரத்தை ஒட்டி ஊஞ்சல் உற்சவம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி ஆகியவை இத்தலத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
*எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?*
நிலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும், செல்வம் பெருகவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல உற்சவருக்கு திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்தால் விரைவில் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.
*இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு சர்க்கரை பொங்கல் படைத்தும், விசேஷ திருமஞ்சனம் செய்தும், சுவாமியை கருட வாகனத்தில் எழுந்தருள செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
🌷🌷
No comments:
Post a Comment