Saturday, August 20, 2022

திருமகள் தரிசனம்

 திருமகள் தரிசனம்!*

நன்றி குங்குமம் ஆன்மீகம்

ராம்பாக்கம்

கருவறையில் பிரதான நாயகர் லட்சுமி நாராயணப் பெருமாள் எனும் திருநாமத்தோடு கம்பீரமாக வீற்றிருக்கிறார். ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் லட்சுமி தேவியை மடியில் அமர்த்தி, வலது கையில் சக்கரம், இடது கையில் திருச்சங்கும் இன்னொரு கரத்தால் வரத ஹஸ்தத்தோடு, மற்றுமொரு புறமுள்ள திருக்கரத்தால் லட்சுமியை அணைத்தவாறு காட்சி தருகிறார். பெருமாளும், அவர் தம் திருவடியும் தாமரைப்பீடத்திலேயே அமைந்துள்ளன. ராம்பாக்கம் எனும் இத்தலம் கடலூர்-விழுப்புரம் பாதையில் மடுகரையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. புதுச்சேரியிலிருந்து மடுகரைக்குப் பேருந்து வசதிகள் உள்ளன.

லால்குடி - இடையாற்று மங்கலம்

இத்தலத்தின் கருவறையில் லட்சுமி நாராயணன் எனும் திருநாமத்தோடு கிழக்குத் திசை நோக்கி அருள் பாலிக்கிறார். தாயாரை இடது திருத் தொடையில் அமர்த்தி சேவை சாதிக்கும் அழகை இத்தலத்தில்தான் காண வேண்டும். மேலும், கணவன் மனைவிக் கிடையேயுள்ள பிரச்னைகள் நீங்க இத்தல பெருமாளை சுற்றிலுமுள்ள ஊர்களிலிருந்து வந்து வணங்கிச் செல்கின்றனர். திருச்சி & லால்குடிக்கு அருகேயே இத்தலமும் அமைந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றுக்கும் அய்யன் வாய்க்காலுக்கும் இடையே இவ்வூர் அமைந்ததால் இடையாற்று மங்கலம் என்றழைக்கின்றனர்.

கீழையூர்

அமைதி தவழும் அழகிய கிராமம். பஞ்சரங்க ேக்ஷத்ரங்கள் என்று ஐந்து அரங்கனின் ஆலயங்களில் இதுவும் ஒன்று. அதுபோல இத்தலம் கிழக்கு அரங்கமாகும். அதுவே கீழையூர் என்றாயிற்று.

கோயிலை கீழரங்கம் என்கிறார்கள். ஸ்ரீரங்கத்தின் அபிமான தலம் இது. கோயிலின் மகாமண்டபத்தை தாண்டி வரும்போது வலப்புறம் தாயார் சந்நதி உள்ளது. தாயாரின் திருநாமம் ரங்கநாயகி. இக்கோயிலின் வடக்கே உள்ள பத்மதடாகம் எனும் புஷ்கரணியில் எம்பெருமானை மணந்துகொள்ள தாயார் தவம்செய்தார். இவ்வூரிலிருந்து 1 கி.மீ. தூரமுள்ள திருமணங்குடி எனும் ஊரில் பெருமாளை திருமணம் செய்து கொண்டார். நாகப் பட்டினத்திலிருந்து - திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மாமாகுடி

ஸ்ரீமகாலட்சுமி அவதரித்த தலமாக இதைத்தான் குறிப்பிடுகின்றனர். திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு வடக்கிலும், ஆக்கூருக்கு அருகேயும் இத்தலம் அமைந்துள்ளது. ஆதிகாலத்தில் இத்தலத்தை லட்சுமிபுரம், திருமால்மாகுடி என்றெல்லாம் அழைத்தனர். மிகவும் அரிய ஆலயமாக இருப்பதால் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது.

உத்தமர்கோயில்

பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவன் கொய்ததால் ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அவருடைய தோஷத்தை காசியிலுள்ள அன்னபூரணி நீக்கினாள். அதே தலவரலாறு உத்தமர் கோயிலிலும் சொல்லப்படுகிறது. உத்தமர்கோயிலிலுள்ள மகாலட்சுமித் தாயாரிடம்தான் ஈசன் பிட்சையை ஏற்றார். இவ்வாறு திருமகளே பிட்சையிட்டதால் இத்தல தாயாருக்கு பூரண வல்லித் தாயார் என்கிற திருநாமம் ஏற்பட்டது. அதாவது, சிவனது பாத்திரம் பூரணமாகிவிட்டதால் பூரணியாக, பூரணவல்லித் தாயார் என்றும் அழைத்தனர்.

No comments:

Post a Comment