Sunday, August 21, 2022

நாற்காலி

 நாற்காலி(சிறுகதை)

எங்கவீட்டுல ஒரு மரநாற்காலி இருந்துச்சு. ரெண்டுபக்கமும் கைவச்சி நல்ல மரத்துல செஞ்சி இருக்கும் அது. ஓசில கெடைச்ச சிமெண்ட் கலர் பெயிண்ட் அடிச்சி ருக்கும் அதுல பெயிண்ட்டு அங்க அங்க போய் உள்ளாற இருக்குற வெள்ளக்கலரு தெரியும் ஒருவேளை அதுக்கு முன்னாடி வெள்ளை பெயிண்ட் அடிச்சிருந்ததோ என்னமோ.. எங்க வீட்டுல நாற்காலின்னா அது ஒண்ணுதான். நான் படிக்கிறதுக்கு அதுக்கு கைவைக்கிற எடத்துல குறுக்கால பலகை போட்டு புத்தகம் வைச்சிப் படிப்பேன் வீட்டுக்கு ஆராவது விருந்தாளிகள் வந்துட்டா அது அவங்களுக்குப் போடுறதுக்காக என்கிட்ட இருந்து புடிங்கிடுவாங்க. எப்படா அவங்க போவாங்கன்னு பாத்துக்கிட்டு மனசுக்குள்ள திட்டிக்கிட்டே இருப்பேன் ஏன்னா அதுல ஒக்காந்து படிச்சாத்தான் தூக்கம் வராதுன்றது என்னோட நம்பிக்கை. தரையில ஒக்காந்து படிச்சா கொஞ்ச நேரத்துல தூங்கிடுவேன்

இது வரைக்கும் சரி. ஆனா அந்த நாற்காலிக்கு இன்னோரு பயன்பாடு இருந்துச்சி. அதுதான் சிக்கல்

அப்பயெல்லாம் பிளாஸ்ட்டிக் சேர் கெடையாது. யாராவது போய்சேந்துட்டா அவங்களை சாத்திவைக்க இதுமாதிரி நாற்காலிலதான் வைப்பாங்க. இதுல சோதனை என்னான்னா அந்த தெருவுக்கே இந்த ஒரு நாற்காலிதான் அதுக்கு சரியா இருக்கும்ன்னு சனங்க நெனச்சதுதான்

மத்தவீடுகள்ல இருந்து தரலியா இல்ல யாருகேட்டாலும் தாராளப்பிரபுவா கொடுக்குற எங்க அப்பாவோட குணாதிசயமான்னு தெரியல. யாரு வீட்டுல துக்கம் நடந்தாலும் மொதவேலையா வாரது இந்த நாற்காலிய எடுக்கத்தான். அப்பயெல்லாம் ரெண்டுநாளாகும் . எடுக்க அதுவரைக்கும் அதுலயேதான் வைச்சிருப்பாக. கொண்டாந்து திருப்பிக்குடுத்தபின்னாடியும் ஒரு வாரம் அந்த வாடை செண்டுவாடையோ இல்ல என்னமோ ஒரு வாடை அதுல இருக்கும் ஒக்காரவே சங்கட்டமா இருக்கும். ஆனாலும் என்ன பழகிப்போச்சு. தரமாட்டேன்னு சொன்னாலும் அப்பா புடுங்கி குடுத்துருவாரு போன உசுறுக்குப் புண்ணியமாப்போகும் இது குடுப்பினைடா. புண்ணியம்ன்னு சொல்லுவாரு.

இப்புடி இருக்கையில பக்கத்துவீட்டு பாட்டி ஒண்ணு நெஞ்சுக்கும் மூக்குக்குமா இழுத்துக்கிட்டு இருந்துச்சு. அம்மாசை ராத்திரிதாங்காதுன்னு பேசிக்கிட்டு இருந்தாக. இதுமாதிரி நேரங்கல்ல ஐடியாகுடுக்குறதுக்குன்னு ஒருத்தர் இருப்பாரு. அவரு சொன்னாரு மொதல்ல அவுக வீட்டுலபோய் நாற்காலி வாங்கிட்டு வாங்கப்பான்னு. ஒடனே ஒருத்தர் ஓடியாந்தாரு எங்க வீட்டுக்கு அந்த நாற்காலியக்குடுங்கன்னு. நல்ல வேளையா அன்னிக்கி எங்க அப்பா வீட்டுல இல்ல. அந்தவீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் கொஞ்சம் சண்டை வேற அதுனால நான் முடியாது ன்னு சொல்லிட்டேன் அம்மாவும் சப்போட் பண்ணுனாங்க, வந்தவரு சோகமாப் போயிட்டாரு. எனக்கு சந்தோசம் நாற்காலி தப்பிச்சிருச்சுன்னு.

ஆனா சந்தோசம் ரொம்பநேரம் நீடிக்கல சொந்தகார மாமா வந்தாரு. அவரு கொஞ்சம் வெவரமான ஆளு, அவர் என்கிட்ட வந்து கொஞ்சம் நாற்க்காலிக்குடுப்பா. இது அதுக்கில்ல நாளுபேரு வருவாகல்ல அவுக ஒக்காற வேணாமா. வாசல்ல போடுறதுக்குத்தான். சொன்ன வன்ன அம்மா அவரை சப்போட் பண்ணிட்டாங்க

சரி குடு நாளைக்கி காலையில வந்துரும்ந்னு சொன்னாங்க. நானும் அரை மனசாக்குடுத்துட்டேன்

அன்னிக்கி ராத்திரி தூங்கியும் போயிட்டேன்

மறுநாளு காலையில தூங்கி எந்திரிச்சா பக்க்த்துவீட்டுல கூட்டம் அழுக. பாட்டிபோய்சேந்துருச்சு ஆளுக எல்லாம் வந்துட்டாக. நான் மொதல்ல தேடுனது நாற்காலியத்தான். அது வெளில காணோம். புரிஞ்சிடுச்சு. வீட்டுக்குள்ள எட்டிப்பாத்தா பாட்டி அந்த நாற்காலில .... எனக்கு அந்த மாமாமேல ஒரே கோவம். அவரைத்தேடினேன் . காணோம் . கொஞ்சநேரத்துல அவர் வந்தாரு. அவர்கிட்டகோவத்தோட கேட்டேன் என்னா இப்புடிப்பண்ணிப்புட்டீங்க. ஆளுக ஒக்காருறதுக்குன்னுதான வாங்கிட்டுப்போனீக. இப்ப பழைய கதையாப்போச்சுன்னு அழுதுக்கிட்டே சொன்னேன். அவர் அடாடா நான் இல்லாதநேரத்துல யாரோ இப்புடிப் பண்ணிட்டாங்களேன்னு வருத்தப் பட்டமாதிரி சொன்னது நடிப்பாத்தெரிஞ்சது எனக்கு. ஆனா வேறஒண்ணும் செய்ய முடியல. அதுக்குள்ள அந்த வீட்டுக்கார அண்ணன் சொன்னாரு கவலப்படாத நல்லா சுத்தம் பண்ணிக்குடுத்துருறோம்ன்னு சொன்னாரு. இம்புட்டுக்கும் அவங்க வீட்டுக்குள்ள இதுமாதிரி இருந்த நாற்காலி வெளியதான் கெடந்துச்சு. அதுல வந்தவுக ஒக்காந்துருந்தாக. அதைப்பாத்துட்டு நான் கேட்டேன் ஒங்க வீட்டுல இருந்த நாற்காலில வைச்சிருக்கலாமுள்லன்னு அதுக்கு அவர் சொன்னாரு. அந்த நாற்காலிதான் ராசியானதுன்னு சொன்னாரு பாருங்க கடுப்பாயிடுச்சு.

ஒருவழியா எல்லாம் முடிஞ்சது. நாற்காலி திரும்ப வந்துச்சு. ஆனா பழைய அந்த வாடையோட. எவ்வளவு சுத்தம் பண்ணியும் வாடைபோகல. கடுப்புல அதை கீழ தள்ளுனதுல ஒருகாலு ஒடஞ்சிபோச்சி

ஒக்காந்தா ஆடுது. ஆனா செங்கக்கல்லு வைச்சா ஆடாது. கொஞ்சநாளைக்கி அப்புறம் வழக்கம்போல ஒக்காந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுக்குள்ள இன்னோரு வீட்டுல துக்கமாயிப்போச்சு. வழக்கம்போலநாற்காலி கேட்டு வந்தவுக தூக்கும்போது ஆடுச்சு. அப்ப அவரு சொன்னாரு இது சரிப்படாது. கீழ விழுந்துடுச்சுன்னா பிரச்சனையாகிடும் வேறபாக்கலாமுன்னு சொன்னாரு. அப்ப நான் நான் சொன்னேன் பக்கத்துவீட்டுல இதேமாதிரி நாற்காலி ஒண்ணு இருக்குன்னு

அவரு அங்க போனப்ப ஆளுக ஆருமில்ல அவர் நேர உரிமையாப்போய் தூக்கிட்டுப்போயிட்டாரு. தப்பிச்சது எங்கநாற்காலி...கொஞ்சநேரத்துல பக்கத்துவீட்டு அண்ணன் என்னப்பாத்து மொறைச்சிட்டுப்போனாரு.....

அவரு சும்மா இருக்காம எங்க அப்பாகிட்ட இந்த நாற்காலிய ஆசாரியக்கூப்புட்டு ரிப்பேர் பண்ணி வையுங்க. பையன் படிக்கும்போது கீழ விழுந்துடப்போறான்னு கரிசனமாச்சொன்னாரு. அப்ப நான் அப்பாகிட்ட சொன்னேன் வேணாம்பா செங்கல் வைச்சாலே ஆடாது எதுக்கு வீண்செலவு இதுஇப்புடியே இருக்கட்டும் அதுதான் நல்லதுன்னு........

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்

No comments:

Post a Comment