Monday, August 15, 2022

வல்லிய ஜோக் அல்லோ

 வல்லிய  ஜோக் அல்லோ...

--------------------------------------.

 என் நண்பர் ஒருவரின் பெயர் நாகேஸ்வரன். சுருக்கமாக நாகேஷ்.

அவர் சென்னைப் பிரியர்...இன்னும் சொல்லப்போனால் வெறியர்..

சிங்கார சென்னையை விட்டு அவர் வெளியூர் சென்ற தருணங்கள் மிகக் குறைவு. 

 வெய்யிலில் க(உ)ருகினாலும் சரி, வெள்ளம் ( மழையினால்) வந்து மூழ்கினாலும் சரி, என்ட பேரு நாகேஷ், என்ட ஊரு சென்னை.. என்ட சீப் மினிஸ்டர்..... (  பெயரைப் போட்டால் அட்மின் சென்சார் பண்ணிடுவார். அதனால் அவர் அனாமிகாவாக இருக்கட்டும். அது முக்கியமில்லை)  

ஒரு முறை குருவாயூருக்கு காரில் பயணமானார். அந்த ஊருக்குள் நுழைகையில் கைச் செலவுக்கு பணம் தேவை என்பதால் ஒரு ஏ டி எம் முக்கு அருகில் வண்டியை நிறுத்திவிட்டு வெளியே வந்தார்... சுவாமி ஐயப்பனின்  சொந்த  மாநிலம் என்பதாலோ என்னமோ அந்த ஏடிஎம்மை அடைய பதினெட்டு படிகள் ஏற வேண்டிய  நிலைமை. 

முட்டு வலி இருந்த்தால் இவர் என்ன செய்வது என்று யோசித்தபடி இருக்கையில் பக்கத்திலிருந்த கடையில் இருந்து ஒருவர் கைதட்டி ...' மிஸ்டர் நாகேஷ்...'' என்று மலையாள ஆக்சென்டில் ( உச்சரிப்பு) இவரை அழைத்தார். இவருக்கு இன்ப அதிர்ச்சி.  

இதென்ன அதிசயம்...குருவாயூரப்பா...இது உன் விளையாட்டோ....தன் பெயர் அவருக்கு எப்படி தெரிந்தது?  ஒரு வேளை ஜோசியரோ? இல்லை மலையாள மாந்திரிகரோ? அல்லது  தன்னுடன் ஒரு காலத்தில்  வேலை பார்த்த மலையாள பகவதியோ? தானே அறியாத தூரத்து உறவினரோ? 

யாராக இருக்கும். (  மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ வேப்பந்தோட்டத்து குயிலும் நீதானோ) என்ற சினிமாப் பாடல் மெட்டில் பாடவும்)

புரவி மேல் பயணம் செய்யும் வந்திய தேவன் மனதில் எழுவது போல பல சந்தேகங்கள் எழுந்தன அவர் மனதில்...! ( எப்படி நைஸா பொன்னியின் செல்வனை உள்ளே புகுத்திட்டேன் பார்த்தீங்களா மணி ரத்னம்? பிரமோவுக்கான பீஸ் உண்டா....?)

கடைகாரரிடமே சென்று கேட்டுவிட்டார்

'' என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்?''

அவர் மலையாளம் கலந்த தமிழில்  சொன்னார்

( தமிழ் கலந்த மலையாளம்னும் சொல்லலாம். புய்ப்பம் அல்லது புஷ்பம்)

 '' நிண்டே  பேரு எனக்கென்னனே  அறியும்? ஏடிஎம்மில் ' காஷ் இல்லா'  அதாவது ' நோ கேஷ்' அப்படின்னு பறஞ்சது '' என்றாரே பார்க்கலாம். 

ஏ குருவாயுரப்பா.....ஏன் இப்படி சோதிச்சு என்று பெருமூச்சு விட்டபடி வண்டியில் ஏறினார்  நோகேஷ் ஐ மீன் நாகேஷ்......

நன்றி ரகோத்தமன்

No comments:

Post a Comment