நினைவலைகள்.....
திரு. எஸ். வெங்கடசுப்ரமணியன்.
எங்கள் கிராமம் - அன்றும், இன்றும், இனி என்றென்றும்
கிராமம் முழுவதும் காந்தியின் கனவான பஞ்சாயத் ராஜை ஒட்டியே வாழ்ந்தது. வீட்டில் கிணறு. கொட்டிலில் பசுமாடு. தோட்டத்தில் காய்கறி. வயலில் உணவு தானியங்கள். மாவு அறைக்க மிஷின். எண்ணைய்க்கு வாணிய செட்டியார் செக்கு. தேவையான குறைந்த பட்ச மளிகைகள் வாங்க அவர் பையனே வைத்திருந்த மளிகைக்கடை. துணி மணிகள் விற்கும் கீதா மற்றும் மாலா ஜவுளி ஸ்டோர்ஸ். அவற்றின் வாசல் புறத்தில் வயது மூப்பில் போட்டி போடும் இரண்டு கிழ டெய்லர்களும், அவர்களின் பழங்கால சிங்கர் மற்றும் உஷா தையல் மெஷின்களும். மர நாற்காலி போட்ட இரண்டு சலூன் கடைகள், இவை போதாதென்று ஷவரப் பெட்டியுடன் பெரிசுகளின் வீடுகளுக்கே சென்று வபனம் செய்து விடும் சிங்காரம். ஒரு இஸ்திரி கடை மற்றும் அதற்குப் போட்டியாக நடமாடும் அயனிங் வண்டி ஓனர் தண்டபாணி.
அனைத்திற்கும் மேலாக மூன்று மைல் தூரத்தில் உள்ள சிற்றூரில் அரசுப்பள்ளி இருந்தும், ஸ்ரீமான் பக்தவத்சலம் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது உள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. முதல்வரிடம் போராடி பெற்றுத் தந்த அரசு உயர்நிலைப் பள்ளி. அதில் மட்டுமே பயிலும் கிராமத்துக் குழந்தைகள்.
( இந்த தமிழ்வழி பள்ளியில் தன் ஆரம்பகால கல்வியைப் பயின்ற ஒருவர் இன்றைக்கு வடமாநிலம் ஒன்றில் முதுநிலை இந்திய ஆட்சிப் பணியில் இருக்கிறார். மேலும் ஒருவர் உலக அளவில் பேசப்படும் இதயநோய் சிகிச்சை நிபுணராக அமெரிக்க மண்ணில் கொடிகட்டிப் பறக்கிறார். இருவருமே தாம் பிறந்து வளர்ந்த கிராமத்தை மறந்துவிடாமல், ஆராவாரம், ஆடம்பரம் எதுவுமில்லாமல் கிராமத்துக்கான நல்ல பல திட்டங்களை ஊர்ப் பெரியவர்கள் மூலம் இன்றளவும் செய்து வருகிறார்கள்)
இரண்டு வேளையும் மாட்டைக் கறந்துவிட்டு நுரை ததும்பும் பசும்பாலை புழக்கடைப் படிக்கட்டின் உள்புறம் வைத்துச் செல்லும் மாணிக்கம் கோனார், காலை மாலைகளில் மாட்டுக் கொட்டகை மற்றும் வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்துவிட்டுப் போகும் சுந்தரி, கூடவே வரும் அவள் மூன்று வயது பாலகன் மணிகண்டன். வீட்டு ஆண்களால் செய்ய முடியாத அல்லது இன்னுமொரு அனுபவஸ்தனின் பங்களிப்பு தேவைப்படும் வீட்டு பராமரிப்பு பணிகளுக்கு ஓடிவந்து உதவும் சக்கரவர்த்தி, இவர்களைப் போன்றவர்கள் நிறைந்திருக்கும் கிராமம்.
கிராமத்தில் வசித்து வந்த குடும்பங்கள் அனைத்திற்கும்,வசதி வாய்ப்புக்குத் தக்கபடி, 'மூக்கோட்டை ' அளவிற்காவது நஞ்சை அல்லது புஞ்சை நிலங்கள் இருக்கும். முற்பகலில் வயல் வரப்பிற்குப் போய் விவசாயம் பார்த்துத் திரும்பாத ஆண்களே இருக்க மாட்டார்கள்.
வீடுகளில் கூலி வேலைக்கு வந்து உதவி செய்பவர் மற்றும் உதவி பெறுபவர் ஆகிய இருவரிடமுமே எந்தவிதமான காம்ப்ளக்ஸுமில்லாத, உயர்வு தாழ்வு மனப்பான்மை தலைகாட்டாத மகோன்னதமான மனநிலை.
கிராமத்தின் ஒவ்வொரு நபரும் மற்ற குடும்பத்தினர் அனைவரையும் நன்றாக அறிந்து வைத்திருந்ததோடு மட்டுமல்லாமல், தேவைப்படும் சமயங்களில் பணத்தால் முடியாவிட்டாலும், உடலாலும், பொருளாலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்தல், ஒரு வீட்டு நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் அதனை தன் வீட்டு நிகழ்வாகவே நினைத்துக் கொண்டு ஊர் மக்கள் அனைவரும் இழுத்துப் போட்டுக்கொண்டு நடத்துதல், கிராமத்துக் கோவில்களில் நடைபெறும் வருடாந்திர திருவிழாக்களை அடுத்த கிராமத்து மக்கள் பொறாமைப்பட வேண்டும் என்பதற்காகவாவது ஆடம்பரமாக ஊர்கூடி தேர் இழுத்துக் கொண்டாடுதல், பாசனத்திற்குத் தேவையான பொது வாய்க்கால் வரப்புகளை கோடை நாட்களில் முறை வைத்து செத்தி, கொத்தி மராமத்து செய்தல், கிராம மக்களிடம் பொதுவரி வசூல் செய்து அந்த நிதியைக் கொண்டே அதிகம் புழங்கப்படாத சுடு காட்டுப் பாதை, களத்து மேட்டுப் பாதை போன்றவற்றை மேம்படுத்துதல், ஊர் குளத்தை கோடையில் தூர் வாரி அகலம் மற்றும் ஆழப் படுத்துதல் இவையெல்லாமும் கூட கிராமத்தின் வழக்கமான நடவடிக்கைகள்தான்.
***************************
வீட்டுக் கிணறுகள் மறைந்து bore ம், சின்டெக்ஸ் மேல்நிலைத் தொட்டியும் வந்ததில் ஆரம்பித்தது கிராம வாழ்க்கை மாற்றம். இன்றைக்கு கிராமத்து வீடுகளின் வாசல் திண்ணைகளை உள்ளடக்கி கம்பி கிராதி போட்டு இருசக்கர வண்டிகளை நிறுத்துவதற்கான இடமாகப் பண்ணியாயிற்று. வீட்டினையொட்டி அமைந்த மாட்டுக் கொட்டகை கார் அல்லது டிராக்டர் நிறுத்தும் ஷெட்டாக மாறியாயிற்று. வீட்டுத் தோட்டத்தை அழித்து இரண்டு நடுத்தர குடும்பங்கள் குடியிருக்கும் அளவிற்கு வாடகைக்கான வீடுகள் கட்டியாயிற்று. நகரிலிருந்து ஐந்து கிலோமீட்டரிலேயே கிராமம் அமைந்துள்ளதால் அதன் வயல் வரப்பெல்லாம் தூர்க்கப்பட்டு தனித்தனி பங்களாக்கள் கொண்ட நகர்களாக உருமாற்றம் அடைந்தாயியிற்று.
கறவை மாடுகள் காணாமல் போனதால் பக்கத்து டவுனிவிருந்து வரும் கேன் மற்றும் பாக்கெட் பாலிற்கு மக்கள் காத்துக் கிடக்க வேண்டியதாயிற்று. ஆடிக் காற்றில் அம்மியே ஆலாய்ப் பறக்கையில் செக்காவது, சிவலிங்கமாவது. உள்ளூர் மளிகைக்கடை, ஜவுளிக்கடை எல்லாம் அழிந்து போய் பக்கத்து சிற்றூரிலிருக்கும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களுக்கு கிராம மக்கள் படையெடுப்பது அன்றாட நிகழ்வாயிற்று. துணி வாங்கி ஆடைகள் தைத்த காலம் மறந்து போய் ஆண், பெண் அனைவருக்கும், அனைத்து வயதினருக்கும் ரெடிமேட் ஆடைகள் புழக்கத்திற்கு வந்தாயிற்று.
வீட்டு வேலைக்கு, தோட்ட வேலைக்கு, மின் சாதனங்கள் பராமரிப்புக்கு என உள்ளூர் மக்களே பணியாளர்களாக வந்தாலும், அவர்களிடம் ஒரு புரொபஷனலிசம்தான் தெரிகிறதே தவிர இன்டிமஸியைக் காண முடிவதில்லை. பரஸ்பர நம்பிக்கையின்மை என்பது முதலாளிக்கும், தொழிலாளிக்குமான பொதுக் கொள்கையாக அமைந்து போனது.
ஒரு சின்ன உதாரணம்.
" பாப்பா முழிச்சுக்கிச்சு… அந்த பெட் ரூமையும் பெறுக்கித் துடைச்சுட்டுப் போ பார்வதி…"
" இப்பதானம்மா மாப்பை அலசி உலத்தினேன்... இனிமேல நாளைக்குத்தான் அந்த வேலையை என்னாலே செய்ய முடியும்மா…நான் இன்னும் இரண்டு வீட்டு வேலைக்குப் போகணுமில்லே…"
தனியார் பள்ளி ஆசிரியர்களைவிட குறைந்தது இரண்டு மடங்கு அதிகமாக மாத ஊதியம் பெறும் உள்ளூர் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் உட்பட பெரும்பாலான பிள்ளைகள் பக்கத்து டவுனிலுள்ள தனியார் பள்ளியில்தான், ஷூ மற்றும் யுனிபார்முடன் போய் படித்து வருகிறார்கள்.
பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய பத்து இருபது விடலைப் பையன்கள் பெற்றோரை கசக்கிப் பிழிந்து காசைப் பிடுங்கி விலையுயர்ந்த டூ வீலரில் தினந்தோறும் பக்கத்து டவுன்களுக்குப் போய் வம்பை விலைக்கு வாங்கி வருகிறார்கள். அவர்களின் தலைமுடி கிராப்பும், ஆடை அலங்காரமும் கிராமத்துச் சூழ்நிலைக்குப் பொருந்துவதாய் இல்லாததால் அவர்கள் தாங்களாகவே தனிமைப்பட்டு போனார்கள். வயல் வேலையும் தெரியாமல், எந்தவிதமான பயிற்சியும், தொழில் அனுபவமும் இல்லாமல் அருமையான இளமைப் பருவத்தை அவர்கள் வெறுமனே ஊரைச் சுற்றித் திரிந்து வீணடிக்கிறார்கள்.
ஆண் பெண், ஏழை பணக்காரன், வாலிபம் வயோதிகம் என்ற எந்த பேதமும் இல்லாமல் செல் போனிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் மக்கள் தம் எஞ்சிய பொழுது முழுவதையும் கழிப்பதால், உறவுகள், நட்புகளின் நெருக்கம் குறைந்து நான்கு சுவர்களுக்குள் வாழ்பவர்கள் கூட தமக்குள் அன்னியப்பட்டு போகிறார்கள்.
அரசியலில் ஈடுபாடு கொண்ட ஒருசிலர் ஏதோவொரு குருட்டு அதிர்ஷ்டத்தில், எதிரெதிர் மாவட்ட அளவிலான கட்சித் தலைமைகளின் கடைக்கண் பார்வை பட்டதால் பெரும் பணக்காரர்களாகிப் போனார்கள். இதனைக் கண்ட அவர்களின் நெருங்கிய சொந்த பந்தங்களும் அதே கட்சிகளில் அதீத ஈடுபாடு காட்டியதால், அரசியல் என்பது ஒரு முழு நேரத் தொழிலாக கிராம மக்களில் சிலருக்கு மாறிப் போனது.
' எங்கள் தலைவர் வாழ்க ' என்று சொல்வதை விட்டு , ' அவர்கள் தலைவர் ஒழிக ' என்று வசை பாடும் வெறுப்பு அரசியல் வளர்க்கப்பட்டது. இதன் விளைவாக கிராமம் இரண்டு பட்டது என்று சொன்னால் அது பொய். கட்சிக்கும், சாதிக்கும் உள்ள செல்வாக்கிற்குத் தக்கபடி நாலைந்துக்கும் மேலாகவே பிளவு பட்டுப் போனது.
உழவுத் தொழிலை கைவிட்ட மக்கள் கட்டுமானம், சாலை போடுதல், மரம் வெட்டுதல், தோட்ட வேலை செய்தல், வீடுகளுக்கு பெயின்ட் அடித்தல் போன்ற நிரந்தரமில்லாத அமைப்பு சாரா தொழில்களில் வெவ்வேறு ஊர்களில் கடினமாக உழைத்து, சொற்ப ஊதியத்தையே பெற்றார்கள். இவ்வாறு சம்பாதித்ததில் முக்கால் வாசியை தினந்தோறும் டாஸ்மாக்கிற்கிக்கு அர்ப்பணித்துவிட்டுதான் வீடு திரும்பினார்கள்.
ஊரில் உள்ள சிறு சிறு கோவில்கள் மறக்கப் பட்டன. நற்பணி மன்றங்கள் தோன்றின. ஒரு குழு பிரதோஷ நாட்களில் பாடல் பெற்ற சிவத் தலங்களுக்கு சுற்றுலாவாகப் போனால், இன்னொரு மன்றம் சுவாதி மற்றும் ஏகாதசி தினங்களில் ஆழ்வார்கள் மங்களாஸாசனம் செய்த திவ்ய தேசங்களுக்கு யாத்திரை அழைத்துச் சென்றது. ஆண்டவனிடம் பக்தி செலுத்துவதில் கூட போட்டிதான் விஞ்சியது.
சுடுகாடு மற்றும் களத்து மேட்டு சாலைகளை செப்பனிடுதல், பொது வாய்க்கால் வரப்புகளை பராமரித்தல், குளம் தூர் வாருதல் போன்ற மராமத்து பணிகளை விரைந்து நிறைவேற்றிட மாவட்ட ஆட்சியரிடம் ஊர் மக்கள் சார்பாக ஆளும் கட்சியினர் நீங்கலாக மற்ற அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் ஆண்டு தோறும் மனு கொடுப்பார்கள். அதே சூட்டோடு உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகம் முன்னர் இரண்டு மணி நேர அடையாள உண்ணாவிரதமும் இருப்பார்கள். செய்தி சானல் புகைப்படக் காரர்கள் இதனை படமாக எடுத்ததும் கலைந்து சென்று விடுவார்கள்.
அரசு தரும் மானியங்கள், இலவசங்கள், கடன் தள்ளுபடிகள் ஆகியவற்றை ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டு, ' நேற்று வரை அம்மா, இன்று முதல் அய்யா ' என்று அப்போதைய மாநில முதல்வர் இருக்கும் கோட்டை திசை நோக்கி நன்றிப் பெருக்குடன் கும்பிடுவார்கள். உணவுக்கான பொருட்களும், அன்றாட செலவிற்கு கணிசமான பணமும் எளிதில் கிடைத்து விடுவதால் உழைத்து உண்ண வேண்டும் என்பதை இவர்கள் மறந்தே போனார்கள்.
விவசாயத்திற்கான ஆட்கள் போதிய அளவில் கிடைக்காததால், தாங்கள் பயிரிட்டு வந்த விளைநிலங்களை மூன்று ஆண்டுகள் விவசாயம் பார்க்காமல் கறம்பாகப் போட்டு, பின்னர் அவற்றை மனைகட்டுகளாக விற்று கோடீஸ்வரராகி விடலாம் என்ற நப்பாசைக் கனவில், சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசாயத்தைத் துறந்து நிகழ்கால வறுமையை எதிர்கொள்ள துணிந்து விட்டார்கள்.
ஆண்டாண்டு தோறும் அரசுகள் போட்டி போட்டு அளித்து வரும் இலவசங்களால், ஓட்டு வங்கி என்னும் உலக வங்கி அறியாத புது விதமான வங்கியை உருவாக்கி, எங்கள் கிராம மக்கள் சுபிட்சமாக இருப்பதாக எண்ணி இன்று வரை ஏமாந்து மகிழ்கிறார்கள்.
**********************
கடந்த நாற்பது ஆண்டுகளில் எங்கள் கிராம மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் paradigm shift ஆக அடைந்த தலைகீழ் மாற்றத்தைத்தான் நான் மேலே தந்திருக்கிறேன்.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்றாலும், இது வரவேற்கத் தக்க வாழ்வியல் மாற்றம்தானா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
இது உங்களின் நினைவு அலைகளுக்கு
************************
No comments:
Post a Comment