Easychair_44
அத்யாயம் : 44. .. ஈஸி சேர்.
ஊரே திரண்டு பாலத்தடிக்கு பர்வதத்தை வழியனுப்ப வந்தது. இவர்கள் பஸ்ஸுக்காக காத்திருந்த நேரத்தில் கடந்த பஸ்களில் இருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்.
கோபாலண்ணா, விடாம கலெக்டரை அடிக்கடி பார்த்து ஞாபகப் படுத்திண்டே இருங்கோ. இந்த கலெக்டர் நல்ல மாதிரியா இருக்காப்போல தெரியறது. அதனால இவர் இருக்கும்போதே ஆஸ்பத்திரிய கொண்டு வர முயற்சிங்கோ.
அவள் பெரிசா சாதிச்சதா நினைக்கவில்லை. இருந்தாலும் ஓரளவு அனுகூலமா வரும்போது முழுமூச்சா பிரயத்தனப் படலேன்னா வீணா போகிவிடுமே. இந்த ஊரில் இத்தனை நாள் இந்த ஜனங்களோடு இருந்ததற்கு நல்லது நடக்கணும். வேண்டிக்கொண்டாள் சாமுண்டியை.
பஸ் வந்தது. ஓரே சந்தோஷம் கலந்த வருத்தம் எல்லார் முகத்திலும். உதடு சிரிப்பை உதிர்த்ததே தவிர கண்கள் கண்ணீரைத்தானே கொடுத்தன.
பஸ் கிளம்பிய சில நொடிகளில் தன்னையும் அறியாமல் வைத்தா தோளில் சாய்ந்து சற்று கலங்கினாள். வைத்தா தேற்றினான்.
என்ன சின்ன கொழந்தையா நீ. கண்ண தொடச்சுக்கோ. எல்லாரும் உன்னையே பார்க்கிறா பார்.
பயணம் முழுக்க பூவனூர் பேச்சுதான். அதுவும் தாத்தியைப் பற்றி அவள் பேச்சு நீண்ட நேரம் தொடர்ந்தது.
சென்னைக்கு அன்றிரவே வந்து விட்டனர். நடராஜ ஐயர் மூவரையும் வரவேற்றார்.
மறுநாள் சமைத்து விட்டு வேதராமன் வீட்டிற்கு சென்றாள். வாசலில் வேதராமன் வரவேற்றார். அவர் அன்று வேலைக்கு போகவில்லை போல இருந்தது.
வாம்மா, எப்படி இருக்கே. என்ன பூவனூர விட்டு மனசே வரலியா?
சிரித்தாள். 'அது கிடக்கட்டும் அண்ணா. மன்னி இருக்காளா? உடம்பு சரியில்லைனு எங்காத்துக்காரர் சொன்னாரே'
உள்ள இருக்காம்மா. போய்ப்பாரு.
உள்ளே சென்றாள். மீனாட்சியை பார்த்தவுடன், 'என்ன மன்னி, உடம்புக்கு என்ன. அவர் ஏதோ சொன்னாரே'.
சொல்றேன். நீ எப்படி இருக்க. எங்களை எல்லாம் ஒரேடியா விட்டுட்டு பூவனூரிலேயே இருந்துடலாம்னு நெனச்சியா'.
இல்ல மன்னி. மறக்க முடியுமா உங்களையெல்லாம். அதான் வந்துட்டேனே.
போன மாசம் டாக்டர் கிட்ட போனேன். கர்பப்பை வீக்கா இருக்காம். எந்த வேலையும் செய்யக் கூடாதாம்.
அவளவு தானே மன்னி. நான்தான் வந்துட்டேனே. கவலையை விடுங்கோ. நம்மாம் பக்கத்தில தானே இருக்கு. நான் பார்த்துக்கறேன். நீங்க ரெஸ்ட் எடுங்கோ.
உனக்கு ஏம்மா சிரமம்.
என்ன இப்படி சொல்லிட்டேள் மன்னி. அண்ணாவும் நீங்களும் எங்களுக்கு செஞ்ச ஒத்தாசைக்கெல்லாம் நாங்க எவ்வளவோ செய்ய கடமை பட்டிருக்கோம்.
சிறிது பூவனூர் கதையெல்லாம் பேசினாள். அதுவரை கவலையோடு இருந்த மீனாட்சி புது தெம்பு பெற்றாள். ஆறுதலான பேச்சுக்கள் தான் ஒருவரை எப்படி தெம்பூட்டுகிறது.
அது சரி பர்வதம். எப்ப கொழந்தை குட்டியெல்லாம்? ஏற்கனவே ரொம்ப நாளாயிடுத்து. இன்னும் வைத்தாவ கவனிக்காம இருந்தா எப்படி?
போங்கோ மன்னி.
வெட்கத்தால் நாணினாள், கோணினாள். சிரித்தாள்.
கணவன் சொல்லித்தர, மனைவி அள்ளித் தர வேண்டும். தாம்பத்தியம் இனி புது கணக்குகளோடு புது வீட்டில்.
விடை பெற்றுக் கொள்ளுமுன், 'மன்னி நான் எங்காத்துலேயே உங்களுக்கெல்லாம் சமச்சுடறேன். நீங்க அடுப்படி பக்கம் போகவேண்டாம். ட்ரைவரை அனுப்புங்கோ. அவர் வைதீகத்துக்கு போன உடனே, அம்மாவுக்கு சாத்த போட்டுட்டு இங்க வந்துடறேன். நீங்க ஒடம்ப கவனிச்சுக்கோங்கோ. நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன்'.
தொடரும்.....
No comments:
Post a Comment