Sunday, August 2, 2020

திருக்கோவலூர்

🙏  நமஸ்காரம்    

42. திருக்கோவலூர்:

மூலவர் - திரிவிக்கிரமன் (நின்ற திருக்கோலம்)
தாயார் - பூங்கோவல் நாச்சியார்
உற்சவர் - கோபாலன், ஆயனர், தேஹளிசர்
உற்சவர் தாயார் -  கஜலெட்சுமி
விமானம் - ஸ்ரீகர விமானம்
தீர்த்தம் - கிருஷ்ண தீர்த்தம், சக்கர தீர்த்தம், பெண்ணையாறு
விமானம் - ஸ்ரீகர விமானம்
நாமாவளி - ஸ்ரீ பூங்கோவல் நாச்சியார் ஸமேத ஸ்ரீ த்ரிவிக்ரமாய நமஹ.

வழித்தடம்

விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலுக்கு ஏராளமான பேருந்து வசதி உண்டு. விழுப்புரம். காட்பாடி இரயில் மார்க்கத்தில் திருக்கோவிலூர் இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில்அமைந்துள்ளது.

பாசுரம்:

மஞ்சாடு வரையேழும் கடல்க ளேழும் வானகமும் மண்ணகமும் மற்று மெல்லாம்,
எஞ்சாமல் வயிற்றடக்கி யாலின் மேலோர் இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் றன்னை,
துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூயநான் மறையாளர் சோமுச் செய்ய,
செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. 
- பெரிய திருமொழி (1138)

பாசுரம் பதவுரை: 

மஞ்சு ஆடு வரை ஏழும் - மேகங்கள் உலாவப்பெற்ற குலபர்வதங்கள் ஏழும்
கடல்கள் ஏழும் - ஸமுத்ரங்கள் ஏழும்
வானகமும் - ஸ்வர்க்கம் முதலிய மேலுலகங்களும்
மண்ணகமும் - மண்ணுலகமும்
மற்றும் எல்லாம் - மற்றுமுள்ள எல்லாப்பொருள்களும்
எஞ்சாமல் - அழிந்து போகாதபடி
வயிறு அடக்கி - (இவற்றையெல்லாம்) திருவயிற்றிலே எடுத்து வைத்து
ஓர்ஆலின் இள தளிரின் - ஒப்பற்ற ஆலமரத்தினுடைய பால்மாறாத இளந்தளிரிலே
மேல் கண் வளர்ந்த - துயில் கொண்ட
ஈசன் தன்னை - ஸ்வாமியை
வளம் நீர் - மணிகள் முத்துக்கள் முதலியவற்றைக் கொழிக்கின்ற நீரானது
துஞ்சா - ஒருகாலும் மாறாமல்
சுரக்கும் - பெருகி வரப்பெற்ற
பெண்ணை - பெண்ணையாற்றினுடைய
தென்பால் - தென்கரையிலே,
தாய - ஒருபலனையும் விரும்பாமையாகிற மனத்தாய்மையை யுடையவர்களாய்
நால் மறை ஆளர் - நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்தவர்களான வைதிகோத்தமர்கள்
சோமு செய்ய - ஸோமயாகங்களைப் பண்ண (அத்தாலே)
செம் சாலி - செந்நெற்பயிர்களானவை
விளை வயலுள் - விளைநிலமான வயல்களிலே
திகழ்ந்து தோன்றும் - செழித்து விளங்கப்பெற்ற
திருக்கோவலூர்அதனுள் - திருக்கோவலூரென்னும் திருப்பதியிலே
நான் கண்டேன் - நான் ஸேவிக்கப்பெற்றேன்.

ஸ்தல வரலாறு:

பாத்ம புராணம், பிரம்மாண்ட புராணம் இவ்விரண்டும் இத்தலம் பற்றி விவரித்துப் பேசுகிறது. பகவான் தனது வாமன அவதாரத்தை தம்மைக் குறித்து தவமிருந்த முனிவர்கட்காக இத்தலத்தில் மீண்டும் ஒரு முறை வாமன அவதாரத்தைக் காட்டிக் கொடுத்ததாக ஐதீஹம். பஞ்ச கிருஷ்ணச் ஷேத்திரங்களில் இதுவும் ஒன்றாகும். வாமன திருவிக்ரம அவதார ஸ்தலம் என்றும் இது அழைக்கப்படுகிறது. கிருஷ்ணன் கோவில் என்றே வடமொழி நூல்கள் குறிக்கின்றன. ஆழ்வார்களால் முதன்முதலாப் பாடப்பட்ட திவ்ய தேசம் இதுதான்.  பெருமாள் வாமன அவதாரம் எடுக்கும் முன்பே கிருஷ்ணக் கோவில் என்று பிரதானமாக வழங்கப்பட்ட இத்தலத்தின் தொன்மை பல சதுர்யுகங்கட்கு முந்தியதாகும். கோபாலன் என்னும் சொல்லே கோவாலன் எனத் திரிந்தது. அந்த ஆயனான கோபாலன் எழுந்தருளியுள்ள ஸ்தலமே திருக்கோவலூர் ஆயிற்று. தட்சிண பினாகினி எனப்படும் தென்பெண்ணையாற்றங்கரையில் இத்தலம் அமைந்துள்ளது. மகா ஞானிகளும், நாரதரும், கின்னரங்களும் இந்தக் கிருஷ்ண ஷேத்திரத்தில் தவம் செய்தனரென்றும் தானும் இந்தச் ஷேத்திரத்தில் தவமியற்றியதாக கூறிய பிரம்மன், மார்க்கண்டேயரின் தந்தையான மிருகண்டு முனிவர் எம்பெருமானின் வாமன அவதாரத்தைக் காண விரும்பி தவமியற்றின ஸ்தலம் இதுதான் என்று பாத்ம புராணத்தில் எட்டு அத்தியாயங்களில் (பிரம்மன் கூறியதாக) இத்தல வரலாறு பேசப்படுகிறது.

முன்னொரு காலத்தில் மகாபலி என்னும் மன்னன் ஒருவன் தர்ம நியாயங்கட்கு கட்டுப்பட்டு ஆட்சி புரிந்து வந்தான். இருப்பினும் இம்மன்னன் தேவர்களைத் துன்புறுத்தி அவர்கட்குத் தொடர்ந்து இன்னல்கள் விழைத்து வந்தான். அசுரர்களின் குருவான சுக்கிர பகவான் இம்மன்னனுக்கு குருவாக இருந்து இம்மன்னனுக்கு சர்வ சக்திகளையும் அளித்து தேவர்களைத் துன்புறுத்தவும் தூண்டிவந்தான். இந்தக் காலகட்டத்தில் புத்திரப் பேறில்லாத ரிஷி தம்பதியரான கசியபர், அதிதி ஆகிய இருவரும் திருமால் குறித்து புத்திர காமேஷ்டியாகம் செய்து வந்தனர். 

இந்நிலையில் மகாபலியின் துன்பம் பொறுக்க இயலாத தேவர்கள், திருமாலைத் துதித்து தம்மைக் காத்தருள வேண்டுமென விண்ணப்பிக்க, புத்திரப்பேறு வேண்டி மகாயாகம் செய்து கொண்டிருக்கும் கஸியபர் அதிதி தம்பதிகட்குப் புத்திரனாக அவதாரமெடுத்து மகாபலியை ஒழித்து உங்கள் இன்னல்களைப் போக்குகிறேன் என்று நல்லருள் புரிந்தார்.

ரிஷி தம்பதிகளின் யாகத்தை மெச்சிய விஷ்ணு அவர்கட்கு மகவாக அவதரித்து குட்டையான வடிவம் கொண்டவாமன மூர்த்தியாக வளர்ந்து பிரம்மச்சர்யத்தை மேற்கொண்டார். பிரம்மச்சர்யம் மேற்கொண்டதும் பூமிதானம் பெறுவதற்காக மாபலிச் சக்ரவர்த்தியிடம் வந்தார். குட்டையான வாமன ரூபத்தைக் கண்டு வியந்த மாவலி ஏளனங்கலந்த புன்னகையுடன் என்ன வேண்டுமென்று கேட்க எனக்கு மூன்றடி மண் வேண்டுமென வாமனன் கேட்க, இதென்ன பிரமாதம் இப்போதே தந்தேன் என்று வாக்களித்து தாரை வார்த்து தானம் கொடுக்க ஆயத்தமானான். வந்திருப்பது ஸ்ரீமந் நாராயணன் என்றும், தனது சீடன் வீணாக வீழ்ந்துவிடப் போகிறான் என்பதை உணர்ந்த சுக்ராச்சார்யார் மாவலியிடம் உண்மை உணர்த்தி தானம் கொடுப்பதை நிறுத்தச் சொன்னார். கொடுத்த வாக்கை மீறாத குணம் படைத்த மாவலி தான் தானம் கொடுத்தே தீருவேன் என்றும் அவ்வாறு வந்திருப்பது ஸ்ரீமந் நாராயணனே எனில் அவருக்குத் தானம் கொடுப்பதும் தமக்குப் பெருமைதான் எனக் கூறி தாரை வார்க்கத் தொடங்கினான். இந்நிலையிலும் இதைத் தடுக்க நினைத்த சுக்ராச்சாரியார் ஒரு சிறிய வண்டின் வடிவமாக உருவெடுத்து தாரை வார்த்துக் கொடுக்கும் கமண்டலத்தின் துவாரத்தை அடைத்துக் கொண்டார். கமண்டல துவாரத்தை ஏதோ அடைப்பதையறிந்த வாமனன் ஒரு சிறிய நாணல் புல்லினையெடுத்து துவாரத்தின் வழியாகக் குத்த சுக்ராச்சாரியார் ஒரு கண்ணை இழந்தார். (இழந்த கண்ணை மீண்டும் பெறவும், செய்த பிழையின் பாவம் போக்கவுந்தான் சுக்கிரன் திருவெள்ளியங்குடியில் திருமாலைக் குறித்து தவமிருந்து தனது கண்ணை மீண்டும் பெற்றார் என்பது திருவெள்ளியங்குடி ஸ்தல வரலாறு ஆகும்).  மாவலி தாரை வார்த்துக் கொடுக்க தனது ஓரடியால் இந்த நிலவுலகு முழுவதையும் அளந்து மற்றோரடியை விண்ணுயரத் தூக்கி விண்ணுலகம் முழுவதும் அளந்து, திருவிக்ரம அவதார கோலத்தில் நின்று தனது மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்டு நின்றார். வாமன வடிவத்தில் வந்தவர் நெடிதுயர்ந்த திருவிக்ரம அவதாரங்காட்டி நிற்பதைக்கண்ட மாவலி மனம் பதைத்து, தன் நிலையுணர்ந்து மன்னிப்பு வேண்டி தங்களது மூன்றாவது திருவடிக்கு எனது சிரசே இடம் என்று சரணாகதி அடைந்தார். தமது திருவடியை மாவலியின் சிரசில் வைத்த மாத்திரத்தில் பாதாள உலகஞ்சென்று சேர்ந்தான் மாவலி. தேவர்கள் பூமாரி பொழிய, பக்தர்களும், ஞானிகளும் ஆனந்த பஜனம் பண்ண, விண்ணுலகை நோக்கிய திருவடி பிரம்மனின் சத்திய லோகம் வரை செல்ல இதைக் கண்ட பிரம்மன் அரிதான எம்பெருமானின் திருவடி பாக்கியம் தனக்கு கிட்டியதை எண்ணி கமண்டல நீரால் பாத பூஜை செய்ய அதனின்றும் தெறித்த நீர்த்துளிகளே கங்கையாகப் பெருகியதென்பர்.

இவ்விதம் ஒரே நேரத்தில் வாமன, திருவிக்ரம அவதாரம் எடுத்த திருக்கோலக் காட்சியைக் கேள்விப்பட்ட மிருகண்டு என்னும் முனிவர் தாமும் இவ்விரு திருக்கோலங்களையும் ஒரு சேரக் காண வேண்டுமென்று எம்பெருமானைக் குறித்து தவமிருந்ததாக ஐதீஹம். அன்ன பானமின்றி கடும் விரதம் மேற்கொண்ட இம்முனிவரின் தவத்தை மெச்சிய பிரம்மன் நீர்வாமன, திருவிக்ரம திருக்கோலத்தைக் காண வேண்டுமாயின் கிருஷ்ண பத்திரா நதிக்கரையில் கிருஷ்ண ஷேத்திரத்தில், கிருஷ்ணன் என்ற பெயரில் பகவான் கோயில் கொண்டுள்ள இடமே நீர் தவம் செய்வதற்கு உகந்த இடமாகும். எனவே அங்கு சென்று கடுந்தவம் புரிவதுடன் ஏழையெளியவர்கட்கும் வரையாது அன்னதானம் செய்ய வேண்டுமெனக் கூறினார். அதன்படி மிருகண்டு முனிவர் தமது துணைவியார் மித்ராவதியுடன் தென்புலத்துக் கிருஷ்ண ஷேத்திரத்தை அடைந்தார். பன்னெடுங்காலம் இவ்விதமே அன்னதானம் செய்து கடுந்தவமியற்றி வருங்காலை ஓர் நாள் மஹாவிஷ்ணு ஒரு வயோதிக பிராம்மணர் ரூபத்தில் வந்து அன்னம் கேட்க, அப்போது தானம் செய்யக்கூட அன்னம் இல்லாத நிலைமையிருக்க தனது மனைவி மித்ராவதியை அணுகிய மிருகண்டு முனிவர் வந்திருக்கும் வேதியர்க்கு உடனடியாக அன்னம் படைக்க ஏதாவது செய்ய வேண்டுமென, கற்பிற் சிறந்த அப்பெண்மணி நாராயணனை நினைத்துப் பாத்திரத்தைக் கையிலெடுத்த மாத்திரத்தில் அதில் அன்னம் நிரம்பி வழிந்தது.  அதைப் பெற்றுக் கொண்டு பெருமகிழ்வோடு முனிவர் வெளியே வர பகவான் சங்கு சக்ரதாரியாக காட்சி தந்தார். வீழ்ந்து பணிந்த மிருகண்டு முனிவர் வாமன திருவிக்ரம அவதாரத்தைத் தமக்கு காட்டியருள வேண்டுமென அவ்வண்ணமே திருமால் அருள் பாலித்த திருத்தலம் இத்திருக்கோவலூராகும்.

சிறப்பு

28வது திவ்யதேசமான திருக்காழிச்சீராம விண்ணகரம் என்னும் சீர்காழியில் அடியேன் கீழ்க்காணும் குறிப்பை குறிப்பிட்டிருந்தேன்.  அதனை இப்பொழுது நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

108 திவ்ய தேசங்களில் திரிவிக்கிரம அவதாரம் மூன்று இடங்களில் காணலாம். முதலாவதாக காழிச்சீராம விண்ணகரம் என்னும் தலத்தில் வாமனாவதாரம் முதல் நிலையிலும் இரண்டாவதாக திருக்கோவலூரில் மற்றும் மூன்றாவதாக திரு ஊரகம் உலகளந்த பெருமாள் காட்சி தருகிறார்.

மூலவர் திருமேனி தாருவால் (மரத்தால்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது. சாளக்கிரகத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்கள். 

இந்த தலத்தில் கிருஷ்ணன் மகிழ்ந்துறைவதை யெண்ணிய துர்க்கை விந்திய மலையிலிருந்து புறப்பட்டு தானும் இவ்விடத்தே கோவில் கொண்டாள். துர்க்கைக்கு இங்கே கோவிலும், வழிபாடுகளும் உண்டு. இது மற்றெந்த திவ்ய தேசத்திற்கும் இல்லாச் சிறப்பம்சமாகும். திருமங்கையாழ்வார் இந்த துர்க்கையை ‘விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடி பொழில்’ என்று புகழ்கிறார்.

இப்பெருமான் விராட் புருஷனாக இடது கையில் சக்கரம், வலது கையில் சங்கும் கொண்டு நீருண்ட மேகம் போன்ற திருமேனியுடன் மார்பில் ஸ்ரீவத்ஸம், கண்டத்தில் கௌஸ்துபம், காதுகளில் மஹாகுண்டலம், வைஜயந்தி வனமாலையுடன் தேஜோமயமாய் ஒளிரும் புன்னகையுடன் சுற்றியும் பிரகலாதன், மகாபலி, சுக்ராச்சார்யார், தேவர்கள், யட்சர்கள், சித்தர்கள், கருட வில்வக்ஸேநர் புடை சூழ ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளியிருக்கிறார்.

இங்குதான் ஆழ்வார்கள் மூவரும் முதன் முதலாக பகவானைத் தூய தமிழ்ப் பாக்களில் பாடித் துதிக்க ஆரம்பித்தனர். அதுவே பின்னர் ஆழ்வார்களால் நாலாயிரத் திவ்ய பிரபந்தமாக விரிந்தது. முதலாழ்வார்கள் மூவரும் பல ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருக்கோவலூரை அடைந்தனர். இவர்களை ஒன்று சேர்க்க எண்ணிய பகவான் பெரும் மழையைப் பெய்விக்கச் செய்தார். முதலில் வந்த பொய்கையாழ்வார் மிருகண்டு முனிவரின் ஆசிரமத்தை அடைந்து இரவு  தங்குவதற்கு இடமுண்டோ வென்று வினவ முனிவர் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி இங்கு ஒருவர் படுக்கலாம் என்று கூறிச் சென்றார். சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த பூதத்தாழ்வார் தமக்கும் தங்குவதற்கு இடம் உண்டோ வென்றார். ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாமெனக் கூறிய பொய்கையார் அவரை உள்ளே அழைத்துக் கொண்டார். சில வினாடிகளில் அவ்விடம் வந்து சேர்ந்த பேயாழ்வார் யாமும் தங்கவொன்னுமோ என்று கேட்க, ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று கூறி அவரையுஞ் சேர்த்துக் கொள்ள இட நெருக்கடிதாளாது முண்டிக்கொள்ள அப்போது நான்காவதாக மேலும் ஒருவர் வந்து மூவரையும் நெருக்குவது போன்ற உணர்வு உண்டாக, ஈதென்ன விந்தையென்று மூவரும் எம்பெருமானை ஒருங்கே நினைக்க, உடனே பேரொளியாய்த் தோன்றிய எம்பெருமான் தம் திருமேனியை மூவருக்கும் காட்டி அருள் புரிந்தார்.

வையம் தகளியாய் என்று பொய்கையாரும்
அன்பே தகளியாய் என்று பூதத்தாழ்வாரும்
திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்     
    
என்று பேயாழ்வாரும் மங்களாசாசனங்களை பாடியுள்ளனர்.  முதன்முதலில் ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்யதேசம் இதுதான். 

இங்கு ஆழ்வார்கள் மூவரும் பெருமாளை அனுபவித்ததை ஸ்ரீமந் நிகாமந்த தேசிகன் இப்படி வர்ணிக்கிறார். மூன்று ஆழ்வார்களாகிய கரும்பாலையில் மூன்று உருளைகள் கரும்பைப் பிழிவதைப் போல, தீங்கரும்பான எம்பெருமானை நெருக்கி அவருடைய திருக்குணங்களாகிய ரஸத்தைப் பருகுகிறார்கள்.

பிரம்ம புராணத்தின் பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களுள் ஒன்றாக இது குறிக்கப்படுகிறது. பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்கள்.

1. திருக்கோவலூர்     
2. திருக்கண்ணங்குடி
3. திருக்கவித்தலம்    
4. திருக்கண்ணபுரம்
5. திருக்கண்ணமங்கை

இந்த ஸ்தலம் தான் திவ்ய பிரபந்தத்திற்கு விளை நிலமாகும். உலகில் முக்கியமாக, ஒரு ஜீவன் மிக முக்கியமாக அறிய வேண்டிய ரகசியங்களான திருமந்திரம், துவயம், சரமச் லோகார்த்தம், முதலியவைகளை மூன்று பிரபந்தங்களாக முதல் மூன்று ஆழ்வார்கள் இங்கு வெளியிட்டருளியமையால் இத்தலம் ஜீவாத்மாக்கள் கடைத்தேற வித்திட்ட விளைநிலமாகும். ஆழ்வார்களின் மங்களாசாசனத்திற்கு அடிகோலிய ஸ்தலமாகும். திருவிளக்கு ஏற்றல் என்ற வியாஜ்யத்தாலே பொய்கையாழ்வார் மறையின் குருத்தின் பொருளையும், செந்தமிழ் தன்னையும், ஒன்றாய்க் கூட்டி திரித்து ஒரு திருவிளக்கு ஏற்றினார் என்பர் இத்தலத்து ஜீயர் சுவாமிகள்.

இடைகழியில் ஆழ்வார்கட்கு எம்பெருமான் காட்சி கொடுத்ததால் இத்தல பெருமாளுக்கு இடைகழி ஆயன் என்னும் பெயர் உண்டு. நடுநாட்டின் முதலாவது ஸ்தலமாகையாலும் விண்ணுலகிற்கும், பாதாள லோகத்திற்கும் நடுவுபட்டு நின்றமையால் நடுநாட்டான் என்னும் பெயர் வந்தது என்பர்

இரண்டாவது திருக்கோவில் - அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் -  ஆதி திருவரங்கம்.

நடுநாட்டின் இரண்டாவது திவ்யதேசம் இரண்டு திருத்தலங்களைக் கொண்டதாக இவ்வூர் மக்களால் கூறப்படுகிறது. திருக்கோவலூர் தனியாகவும், ஆதிதிருவரங்கம் தனியாகவும் 16 கி.மீ தொலைவில் இருந்தாலும் ஒரே திவ்யதேசமாகக் கொள்ளப்படுகிறது. 

ஒரு அற்புதமான ஷேத்திரம் அனைவரும் கண்டிப்பாக சென்று தரிசிக்க வேண்டிய திருத்தலம்.

மூலவர் - அரங்கநாதர்  (சயனத் திருக்கோலம்)
தாயார் - அரங்கநாயகி
உற்சவர் - பெரிய பெருமாள்
விமானம் - சந்தோமய விமானம்
தீர்த்தம் - தென் பெண்ணையாறு
விமானம் - சந்தோமய விமானம்
நாமாவளி - ஸ்ரீ ரங்கநாயகீ ஸமேத ஸ்ரீ ரங்கநாதாய நமஹ.

ஸ்தல வரலாறு:

இறைவன் நாராயணன் வையகத்தில் எடுத்ததோ பத்து அவதாரங்கள். அவற்றில் முதலாவது அவதாரம் மச்ச அவதாரம். அத்தகைய மச்ச அவதாரம் நிகழ்த்தி காட்சி தந்த திருத்தலமே தீந்தரங்கம் என்று போற்றப்படும் "ஆதிதிருவரங்கம்" ஆகும். சோமுகன் என்னும் அசுரன் தேவர்களை வெல்வதற்காக வேதங்களை அபகரித்து சமுத்திரத்தில் மறைத்து வைத்தான். தேவர்களும், முனிவர்களும் மிகுந்த கவலை அடைந்து திருமாலிடம் முறையிட்டு வேதங்களை மீட்டுத் தருமாறு வேண்டினர். இவர்களின் வேண்டுகோளை ஏற்ற நாராயணன், மச்சம் அதாவது மீனாக அவதரித்து சமுத்திரத்தில் ஒளிந்து கொண்டிருந்த சோமுகனை அழித்து வேதங்களை மீட்டு கொண்டு வந்து, தேவர்களிடம் கொடுத்தார். அத்தகைய பெருமான் பிரம்மாவிற்கு இத்தலத்தில் உபதேசம் செய்ததாக தலவரலாறு கூறுகிறது.

பிள்ளைச் செல்வம் அருளிய பெருமாள்:-

'சுரதகீர்த்தி' என்னும் தொன்மையான சக்ரவர்த்தி எல்லாச் செல்வங்களைப் பெற்றிருந்தும் பிள்ளைச் செல்வம் இல்லாமல் வருந்திய போது, நாரத முனிவரின் அறிவுரையின்படி "உத்தரரங்கம்" என்னும் இத்தலத்திற்கு வந்து வணங்கினான். இத்தல இறைவனின் திருவருளால் குழந்தையையும் பெற்று மகிழ்ந்தான் என்று தலபுராணம் மற்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.

ஆதிதிருவரங்கம் பெயர்க் காரணம் :-

அக்காலத்தில் காஞ்சி மாநகருக்கு தொண்டை நாடு என்பது பெயர். பல்லவர்களின் காலம் மற்றும் சோழர்களுக்கும் முற்பட்ட காலம் என்பதால் இத்தலம் மிகவும் தொன்மை வாய்ந்த திருத்தலம் என்பதை நம்மால் அறிய முடிகிறது. "உத்தரரங்கம்" என்ற பெயரே மருவி "ஆதிதிருவரங்கம்" என்றானது.

தமிழ்நாட்டில் எந்த ஆலயத்திலும் காண முடியாத அளவு மிகப்பெரிய தானிய களஞ்சியம் இத்திருக்கோவிலில் அமைந்துள்ளது.

மக்கள் கூற்று :-

108 திவ்யதேசத்தில் நடுநாட்டுத் திருத்தலங்கள் இரண்டில் திருக்கோவிலூர் மற்றும் திருவகீந்திபுரம் ஆகிய இரு தலங்களை விடத் தொன்மையான தலம் "ஆதிதிருவரங்கம்" ஆகும். ஆகவே இந்த இரு தலங்களையும் பாடியுள்ள "திருமங்கையாழ்வார்" இத்தலத்தின் மீதும் பாடியுள்ளார் என்று மக்கள் கூறும் சொல் குறிப்புகள் நம்ப வைக்கிறது.

ஆழ்வார் கூற்று :-

திருமங்கையாழ்வார் தனது பெரிய திருமொழியில் காவிரி சூழ் தென்னரங்கம் என்று சில பாசுரங்களையும்,"சேல் உகளும் (மீன்கள் விளையாடும்) வயல் புடை", "சூழ்த்திருவரங்கத்தம்மான்" என்று சில பாசுரங்களையும் பாடியுள்ளார். ஆகவே, தென்னரங்கம் என குறிப்பிடப்படுவது 'திருச்சி திருவரங்கம்' என்றும் 'திருவரங்கத்தம்மானே' என்று குறிப்பிடப்படுவது 'ஆதிதிருவரங்கம்' என்றும் இவ்வூர் வைணவ அடியார்களின் கருத்து.

பெரிய திருமொழி, ஐந்தாம் பத்து, எட்டாம் திருமொழியிலுள்ளபத்து பாசுரங்கைளும் இத்தல வரலாற்றையே குறிக்கின்றன.

அதிலும் 9 ஆம் பாசுரத்தில் தென்னை மன்னவன் அருள் பெற்ற வரலாற்றையும் திருமங்கையாழ்வார் பதிவு செய்துள்ளார்.

"துளங்கு நீண்முடி அரசர்தங் குரிசில் தொண்டை மன்னவன் திண்டிற லொருவற்ககு
உளங்கொ ளன்பினோ டின்னருள் சுரந்தங் கோடு நாழிகை யேழுட னிருப்ப,
வளங்கொள் மந்திரம் மற்றவற் கருளிச் செய்த வாறடி யேனறிந்து, உலகம்
அளந்த பொன்னடி யேயடைந் துய்ந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே!!!"

இப்பாடலில் ஆழ்வார்கள் மற்றவர்க்கு அருள் செய்தவாறு காட்சி தருவதாகக் குறிப்பிடுகிறார். இத்தல இறைவனும் அவ்வாறே கைகளை உயர்த்தி அருளிய நிலையில் காட்சி தருகிறார். ஆனால், திருச்சி திருவரங்கப் பெருமான் வேறு விதமாகச் சயனித்துள்ளார். எனவே இந்த பத்து பாடலும் இத்தலத்தைக் குறிப்பதாக இவ்வூர் மக்கள் கூறுவது உறுதியாகிறது.

ஆகவே, ஆழ்வார் கூற்று, கந்த புராணச் சான்று, கல்வெட்டுச் சான்று, தலவரலாற்றுச் சான்று என அனைத்தும் ஒரே வரலாற்றைக் கொண்டுள்ளதால் ஆதிதிருவரங்கம் திருத்தலமும் திவ்யதேசம் என்பதில் மாற்றமில்லை.

உபன்யாசம் வீடியோ இணைப்பு:

ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

https://youtube.com/aJLdTu93Hws

ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:

அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

https://www.facebook.com/102047988262304/posts/115661960234240/?sfnsn=wiwspmo&extid=5TBNynZbHAWBapgl

No comments:

Post a Comment