🙏 நமஸ்காரம்
41 திருவயிந்திரபுரம்
மூலவர் - தெய்வநாயகன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார் - வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்
உற்சவர் - மூவராகிய ஒருவன் (தேவன்)
நாமாவளி - ஸ்ரீ வைகுண்ட நாயகீ (ஹேமாம்புஜவல்லிதாயார்) ஸமேத ஸ்ரீ தெய்வநாயகாய நமஹ
விமானம் - சந்திர விமானம், சுத்தஸ்தவ விமானம்
வழித்தடம்:
கடலூர் நகரிலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.திருப்பாதிரிப்புலியூர் இரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த திவ்யதேசம்.
பாசுரம்:
மூவ ராகிய வொருவனை மூவுல குண்டுமிழ்ந் தளந்தானை,
தேவர் தானவர் சென்றுசென் றிறைஞ்சத்தண் திருவயிந் திரபுரத்து,
மேவு சோதியை வேல்வல வன்கலி கன்றி விரித்துரைத்த,
பாவு தண்டமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே.
- பெரிய திருமொழி (1157)
திருமங்கையாழ்வாரால் மட்டும் பத்துப் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்.
பாசுரம் பதவுரை:
மூவர் ஆகிய ஒருவனை - தானொருவனே மும்மூர்த்தியாக உருவெடுத்து முத்தொழில் நிகழ்த்துமவனாய
மூ உலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை. - (பிரளயகாலத்தில்) மூன்று லோகங்களையும் உட்கொண்டு (பிறகு) வெளிப்படுத்தி (மற்றொருகால் திரிவிக்கிரமனாகி) அளந்தவனாய்
தேவர் தானவர் சென்றுசென்று இறைஞ்ச - தேவரும் தானவரும் வந்து வந்து வணங்கலாம்படி
தண்திரு அயிந்திராபுரத்து மேவு சோதியை - குளிர்ந்த திருவயிந்திரபுரத்திலே நித்யவாஸம் பண்ணுகிற பரஞ்சோதியான பெருமானைக்குறித்து
வேல் வலவன் கலிகன்றி - வேல் பிடிக்கவல்ல திருமங்கை மன்னன்
விரித்து உரைத்த - விரிவாக அருளிச்செய்த
பாவு தன் தமிழ் இவை பத்து பாடிட - அழகிய விஸ்தார கவியாக அமைந்த இப்பத்துப் பாசுரங்களையும் பாடியநுஸந்திக்குமளவில் பாவங்கள் பயிலா பாவங்கள் சேரமாட்டா.
ஸ்தல வரலாறு:
இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் ஐந்து அத்தியாயங்களிலும், ஸ்காந்த புராணத்திலும், ப்ரஹன் நாரதீய புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. இத்தலம் பற்றி ஸ்காந்த புராணம் பின்வருமாறு உரைக்கிறது. ஒரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்கட்கும் கடும்போர் மூண்டு யுத்தத்தில் அசுரர்கள் வெற்றி பெற்றனர். முறியடிக்கப்பட்ட தேவர்கள் திருமாலைத் துதித்து உதவி புரிய வேண்டுமென்று விண்ணப்பிக்க, அவர்கட்கு உதவ வந்த ஸ்ரீமந் நாராயணன் கருட வாகனத்தின் மேலிருந்து போரிட அசுரர்கள் நாராயணனையும் எதிர்த்து கடும்போர் புரிந்தனர். இறுதியில் ஸ்ரீமந் நாராயணன் சக்ராயுதத்தை ஏவ, அது சகல அசுரர்களையும் அழித்தது. இந்நிலையில் அசுரர்களின் உதவிக்கு வந்த சிவன் சக்ராயுதத்திற்கு எதிராக தனது சூலாயுதத்தை ஏவ அதுவும் சக்கரத்தின் பாற்பட்டு அதற்கோர் அணிகலன் போன்று அச்சக்கரத்தையே சார்ந்து நிற்க, இது கண்ட சிவன் தன் ஞான திருஷ்டியால் நோக்க, ஸ்ரீமந் நாராயணன் அங்கு தனது மும்மூர்த்தி வடிவத்தை அரனுக்கு காண்பித்தார். அவ்வடிவில் ஸ்ரீமந் நாராயணனுடன் பிரம்மா, சிவன், தேவர்களும் தெரிய, சிவன் துதித்து நிற்க எம்பெருமான் சாந்தமுற்று சக்ராயுதத்தை ஏற்றுக் கொண்டு, சூலாயுதத்தையும் சிவனிடமே சேர்ப்பித்து ரிஷிகள், தேவர்களின் வேண்டுகோளின்படி அவ்விடத்திலேயே கோயில் கொண்டார். அவ்வமயம் தாக சாந்திக்கு நீர் கேட்க, நீர் கொணர கருடன் ஆகாயத்தின் மீது பறக்க, ஆதிசேடன் தரையிலிறங்கி தனது வாலால் பூமியை அடித்துப் பிளந்து தீர்த்தம் உண்டு பண்ணி பகவானுக்கு அளித்தார். இவ்வாறு ஆதிசேடனால் திருவாகிய பூமியை வகிண்டு நீர் கொண்டு வரப்பட்டதால் திரு+வகிண்ட+நீர் (திருஹிந்தபுரம்) எனப் பெயருண்டாயிற்று. ஆதிசேடன் கைங்கர்யத்தாலே இத்தலம் திருவஹீந்திபுரம் என அழைக்கப்படுகிறது. அவன் பெயராலேயே இங்குள்ள தீர்த்தமும் சேஷ தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் எல்லைகளை பூலோகத்தில் திருக்குடந்தைக்கு வடக்கில் 6 யோசனை தூரத்திலும், காஞ்சிக்குத் தெற்கிலும், சமுத்திரத்திற்கு மேற்கே அரை யோசனை தூரத்திலும் அமைந்துள்ளது என்று புராணம் வர்ணிக்கிறது.
ஆதிசேடன் பூமியைப் பிளந்து உடனே நீர் கொண்டு வந்தான். ஆகாயத்தில் பறந்து சென்ற கருடன் சற்று தாமதித்து வைகுண்டத்திலிருந்து விரஜா தீர்த்தத்தைக் கொண்டு வந்தான். இவ்விதம் பரமனின் இரண்டு வாகனங்களால் தீர்த்தம் கொண்டுவரப்பட்ட சிறப்பு வேறெந்த திவ்ய தேசத்திற்குமில்லை. கருடனால் கொண்டுவரப்பட்ட தீர்த்தமே இங்கு நதியாக மாறி கருடாழ்வார் தீர்த்தமாகி காலப்போக்கில் கெடில நதியாகப் பெயர் மாறி தற்போதும் கெடிலமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. சற்று வேறுபட்ட கருத்திலும் இந்நிகழ்ச்சி சில நூல்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. எம்பெருமான் தாகத்திற்கு தண்ணீர் கேட்டதும் கருடன் விரஜா தீர்த்தம் கொணர ஆகாயத்தில் பறக்கையில் ஒரு ரிஷியின் கமண்டலத்தில் விரஜா தீர்த்தம் இருப்பதையறிந்து தன் அலகினால் கமண்டலத்தைச் சாய்த்து நதியாகப் பெருக்கி இத்தலத்தை நோக்கி ஓடச் செய்தார் என்றும், இதைக் கண்டு சினந்த ரிஷி கருடனை எதிர்க்க மனமில்லாமல் இத்தண்ணீர் கலக்கமடையக் கடவது என்று சபித்தார். உடனே நீர் களங்கமுற்றது. உடனே கருடன் தான் எம்பெருமானின் தாகத்தை தணிக்கவே இந்தக் கைங்கர்யத்தை மேற்கொண்டேன் என்று கூறியதும் அவ்வாறாயின் கலங்கியது மறையக் கடவதென்ன நீரும் முன்போல தெளிந்தது இன்றளவும் இந்நதியின் நீர் பார்வைக்கு கலங்கியிருப்பதைப் போன்று தெரியினும் கையில் எடுத்துப் பார்த்ததும் தெளிவாகத் தெரிவதைப் பார்க்கலாம். தான் வருவதற்குள் ஆதிசேடனால் எம்பெருமான் தாகவிடாய் தீர்த்ததைக் கண்ட கருடன் எம்பெருமானை நோக்கி நான் கொணர்ந்த தீர்த்தத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென விண்ணப்பிக்க கருடா நீ கொணர்ந்த தீர்த்தத்தையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். என் ரதோற்சவ தினத்தில் அந்த நதிக்கரையில் பூசைகளை ஏற்று நின் தீர்த்தத்தையும் ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்ல அவ்விதமே இன்றளவும் ரதோற்சவம் இந்த கெடில நதிக்கரையிலேயே நடைபெறுகிறது.
சிறப்பு:
தேவர்கட்கு நாதனாக இருந்து எம்பெருமான் யுத்தம் செய்தமையால் தேவநாதன் என்றும் திருநாமம் உண்டு. தேவர்களைக் காப்பதால் ஹேமாம்புஜ வல்லி என்றும், பார் எல்லாம் காக்கும் தன்மையால் பார்க்கவி என்றும் திருநாமமும் உண்டு.
ஒருமுறை சனகர், சநந்தனர் ஆகிய இரு முனிவர்கள் இறைவன் நாராயணன் மீது மிகுந்த பக்தி கொண்டு அவரை காணும் வழியை அறியாது தவித்தனர். ஒருநாள் இவர்களைக் கண்ட வியாச முனிவர் திருக்குடந்தையிலிருந்து ஆறு யோசனை தொலைவில் அமைந்துள்ள "ஔசதகிரி" என்ற மருந்து மலைக்கு அருகில் உள்ள கருட நதிக்கரையில் தவமியற்றினால் இறைவன் காட்சி தந்து அருளுவதாக ஆலோசனை கூறினார். அவ்வாறே இரு முனிவர்களும் இத்தலம் வந்து பல காலங்கள் தவமியற்றினர். அவர்களின் தவத்திற்கு மனமிறங்கிய இறைவன் அற்புத வடிவினனாகக் காட்சி தந்து அருளினார். ஔசதகிரிபுரம் என்பதே பிற்காலத்தில் ஆயிந்திரபுரம் என்றானது. திருமால் இங்கு அவதரித்ததனால் "திருவயிந்திரபுரம்" என்றானது.
இங்குள்ள சோழ மன்னன் ஒருவன் விஷ்ணு கோவில்களை இடித்துவிடும் நோக்குடன் இங்கு வந்ததாகவும் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் இது சிவன் கோயில் என்று கூற மன்னன் உற்று நோக்க சிவனைப் போல் அம்மன்னனுக்கு இப்பெருமான் காட்சியளித்தார் எனவும் கூறுவர்.
இங்குள்ள விமானத்தில் வைகுண்டத்தில் அமர்ந்திருப்பதைப் போலவே சுத்த ஸ்த்வ விமானத்தின் கீழ், கிழக்குத்திக்கில் பெருமாளும், தெற்கில் தட்சிண மூர்த்தியாகிய சிவனும், மேற்கு திக்கில் நரசிம்மரும், வடக்கில் பிரம்மாவும் அமைந்துள்ளதாகும்.
வெகு காலத்திற்கு முன் கோவில் பிரகாரத்திலிருந்த ஒரு பழைய புன்னை மரத்தின் வேரிலிருந்து சக்ரவர்த்தி திருமகனுடன் (ஸ்ரீராம பிரானுடன்) நம்மாழ்வாரும் தோன்றினாரென்றும் அதனாலே இங்கு இரண்டு நம்மாழ்வார்கள் சேவை சாதிக்கின்றனர் என்பதும் வரலாறு.
இப்பெருமான் மீது வேதாந்த தேசிகன் மும்மணிக் கோவையருளிச் செய்தார். வேதாந்த தேசிகன் பெருமாளை நாயகா, நாயகி பாவத்தில் (பெருமாள் - நாயகன் தேசிகன் - நாயகி) அனுபவித்து வழிபட்டுள்ளார். தன் விக்ரத்தைத் தானே செய்து கொண்ட தேசிகரது விக்ரகம் இன்னும் இத்தலத்தில் உள்ளது.
வ்ருத்தாசுரன் என்னும் அரக்கன் தனது கடின தபோ பலத்தால் பெற்ற சக்தியைக் கொண்டு இந்திரனை வென்று இந்திரலோகத்தை தன் கையகப்படுத்திக் கொண்டான். இந்திரன் இவ்விடத்திற்கு வந்து இங்குள்ள தாமரைத் தண்டில் ஒளிந்து கொண்டானென்றும். தேவர்கள் இந்திரனை எங்கு தேடியும் காணமுடியாது போகவே திருமாலைக் குறித்து தவஞ்செய்து தங்களது தலைவனைத் தந்தருள வேண்டுமென்று பிரார்த்தித்தனர். நீங்கள் அயிந்திரபுரத்தில் ஒரு வைஷ்ணவ யாகம் செய்தால் தாமரைத் தண்டில் ஒளிந்துள்ள இந்திரன் வருவான் என்று திருமால் அருள அவ்விதமே இங்கு யாகம் நடத்த இந்திரன் தோன்றினான். திருமாலும் பிரத்யட்சமாகி இந்திரனுக்கு வஜ்ராயுதத்தைக் கொடுக்க அதனால் வ்ருத்தாசுரனைக் கொன்று மீண்டும் இந்திரன் தனது நாட்டைப் பெற்றானென்பர்.
தன்னிடமிருந்தே பிரம்மனும், சிவனும் தோன்றினர் என்பதை இப்பெருமான் உணர்த்துகிறார். பிரம்மனுக்கு அடையாளமான தாமரைப் பூவினை கையிலும் விஷ்ணுவுக்கு அடையாளமான சங்கு சக்கரங்களையும் சிவனுக்கு அடையாளமான நெற்றிக்கண்ணும், சடையும் கொண்டு இப்பெருமான் திகழ்கிறார் என்பர். அதனால் தான் மூவராகிய ஒருவனை என்று மங்களாசாசனத்தை மொழிந்தார். மூவரும் இவனே என்பதை நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதி பாடலாலும் அறியலாம்.
முதலாம் திருவுருவம் மூன்றென்பர்,
ஒன்றே நிகரிலகு காருருவா நின்னகத்த தன்றே
முதலாகும், மூன்றுக்கு மென்பர்
முதல்வா புகரிலகு தாமரையின் பூ
திருமாலின் அமிசா அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவ அவதாரத்திற்கு இச்சன்னதியின் அருகாமையிலேயே ஒரு திருக்கோவில் அமைந்துள்ளது. தெய்வநாயகன் சன்னதிக்கு எதிரே உயரமான மேடிட்ட பகுதியில் அமைந்து ஒளஷதகிரி என்றழைக்கப்படும் இத்தலம் மிகவும் தொன்மையும் பெரும் சக்தியும் கொண்டதாகும். ஞானத்தையும் கல்வியையும் தரும் ஹயக்ரீவப் பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளார். மது, கைடபன் என்னும் அரக்கர்கள் பிரம்மனிடமிருந்த படைப்புத் தொழில் நடத்தும் ரகசிய வேதத்தை எடுத்து மறைத்துக் கொள்ள பிரம்மன் மேற்படி வேதத்தை தமக்கு மீட்டுத்தர திருமாலைக் குறித்து வேண்டினார். திருமால் ஹயக்ரீவ வடிவம் கொண்டு அரக்கர்களைத் துவம்சித்து படைப்புத் தொழிலுக்கான ரஹ்ஸய வேதத்தை மீண்டும் பிரம்மனிடமே ஒப்படைத்தார். இதனால்தான் ஹயக்ரீவ பெருமாளை "நால்வேதப் பொருளைப் பரிமுகமாய் அருளிய பரமன்" என்று போற்றுவர். இப்பெருமாளை வழிபடுவர்கட்குத் தங்கு தடையற்ற கல்வியும், தெளிவான ஞானமும் உண்டாகும். ஹயக்ரீவ பெருமாள் ஆதித்திருமேனிகள் இந்தியாவில் இரண்டு இடங்களில் உண்டு. ஒன்று இங்கு மற்றொன்று மைசூரில் உள்ள பரகால மடம். இந்த ஹயக்ரீவ மலைக்கு 74 படிகள் உண்டென்றும் அவைகள் இராமானுஜர் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிபர்களைக் குறிக்கும் என்றும் சொல்வர்.
கலியுகத்தில் இவ்விடத்தில் திருமால் அணிந்துள்ள மணியின் அம்சமாக ஒரு மகான் அவதரிக்கப் போகிறாரென்று புராணங்களில் கூறியதற்கொப்ப ஸ்ரீமாந்நிகாமந்த தேசிகர் இங்கே 40 ஆண்டுகாலம் எழுந்தருளியிருந்து வடகலை சம்பிரதாயத்திற்கு அருந்தொண்டாற்றி வளர்த்தார். வடகலை சம்பிரதாயத்திற்கு இத்தலம் ஒரு பாசறை போல் விளங்கிற்று என்றால் அது மிகையல்ல. நாற்பதாண்டுகள் இந்த திவ்ய தேசத்தில் ஜீவித்திருந்த தேசிகர் இவ்விடத்தில் ஒரு திருமாளிகை கட்டித் தமது திருக்கரத்தால் ஒரு கிணறும் வெட்டினார். இவர் வாழ்ந்திருந்த திருமாளிகை இன்றும் உள்ளது. இங்கு ஸ்ரீதேசிகர் தம்மைப் போல ஒரு திருமேனி செய்தார். உமது திருமேனிக்கும் உம்மைப்போல் உயிரோட்டம் தரமுடியுமா என்று ஒரு சிற்ப சாஸ்திரி கேட்க, ஸ்ரீராமானுஜர் பெரும்புதூரில் வடித்ததைப் போன்று இங்கு தேசிகரும் தம்மைப் போல் ஒரு திருமேனி செய்தார். திருமேனி செய்து முடிக்கப் பட்டவுடன் சிற்ப சாஸ்திரி அத்திருமேனியைத் தொட்டபோது அதில் விரல் கீறல் பட்டு ரத்தம் கசிந்ததாகவும், ஸ்ரீதேசிகரின் மகிமை அறியாது அவரிடம் ஆணவத்துடன் நடந்து கொண்ட முறைக்கு அச்சிற்ப வல்லுனர் தேசிகரின் பாதங்களில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டான் என்றும் சொல்வர். எண்ணற்ற அருஞ்செயல்கள் புரிந்து ஹயக்ரீவர் மீதும், தெய்வ நாயகன் மீதும் அளவற்ற பக்திகொண்டு அரும்பெரும் நூல்கள் இயற்றினார் தேசிகர். ஸ்ரீதேசிகர் ஹயக்ரீவ மந்திரத்தை ஜெபித்து ஹயக்ரீவரை இங்கு நேரில் தரிசித்துவிட்டு மலையிலிருந்து இறங்கி வரும்போது தெய்வநாயகனை வழிபடாது பெண்ணையாற்றங் கரைபற்றிச் செல்ல அடியார்க்கு மெய்யனான தெய்வநாயகன் வழிமறித்து இவருக்கு காட்சி கொடுத்ததாகவும் ஐதீஹம்.
இப்பெருமானுக்கு 1) தாஸ ஸத்யன் 2) அச்சுதன் 3) ஸ்த்ரஜ்யோதிஷ் 4) அனகஞ்யோதிஷ் 5) த்ரிமூர்த்தி என்று ஐந்து பெயர்களைப் புராணம் சூட்டி மகிழ்கிறது. இவற்றில் தாஸ ஸத்யன் என்பதை அடியார்க்கு மெய்யன் என்றும் ஸ்தரஜ்யோதிஷ் என்பதை மேவு சோதியன் என்றும் த்ரிமூர்த்தி என்பதை மூவராகிய ஒருவன் என்றும் திருமங்கை எடுத்தாண்டுள்ளார்.
திருப்பதிக்குச்செல்ல முடியாதவர்கள் இத்தலத்திற்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
உபன்யாசம் வீடியோ இணைப்பு:
ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.
https://youtu.be/4c21jr693ls
ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:
அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.
https://m.facebook.com/story.php?story_fbid=115003946966708&id=102047988262304&sfnsn=wiwspmo&extid=Yxx0Uu9oWble8IJ1
No comments:
Post a Comment