Sunday, August 2, 2020

மலை நாட்டு திவ்யதேச யாத்திரை பகுதி 7

புடவூர் திருஎஸ் விஜயராகவன் ஸ்வாமிகள் வழங்கும் மலை நாட்டு திவ்யதேச யாத்திரை பகுதிஎட்டு.           ஒன்பது
திருவல்லவாழ்

நாங்கள் மூனேகாலுக்கே கிளம்பிவிட்டோம். குளித்து வேஷ்டி உடுத்திக் கொண்டு கைப்பையில் உத்தரியத்தை மடித்து  வைத்து கொண்டு பஸ் பிடித்து திருவல்லா போகும்போது மணி 3-45. கோயிலுக்கு போய்ச் சேர்ந்தபொழுது மணி நாலாகவில்லை. இருப்பினும் அம்பலம் திறப்பதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது. தென்னங் குருத்து ஓலைகளை (தந்த குருத்துகள் போன்ற கலர்) ரெண்டு ரெண்டாக முன் மண்டபத்தில் தொங்க விட்டு கொண்டிருந்தார்கள் இடை இடையே ஒரொரு சரம் புஷ்பங்களை தொங்க விட்டார்கள் கோயில் சிப்பந்திகள். தேவஸ்வம் ஆபீஸ் ரூம் திறந்து டிக்கெட்டுகள் கொடுத்து கொண்டிருந்தனர். கோவில் நன்கு விஸ்தாரமாய் இருந்தது.

அர்ச்சக நம்பூத்ரி மடியுடன் உள்ளே விளக்கேற்றி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். முன்னால் ஒரு சிறிய திரை தொங்கினாலும் அதன் மெல்லிய துணி வழியாக நம்பூத்ரி செயும் பூஜா காரியங்கள் வெளியே நிற்கும் செவார்த்திகளுக்கு நிழல் மாதிரி தெரிந்து கொண்டிருந்தது உள்ளே நிறைய விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததும் தெரிந்தது. சாம்பிராணி புகை லேசாக கர்ப்பக்ருஹத் திலிருந்து வெளியேறி எங்கும் மணம் பரப்பி வந்தது. சரியாக 4-1௦ க்கு திரை திறந்து தூப தீபாராதனைகள் நடந்து கற்பூர ஹாரத்தி ஆகிய போது சேவார்த்திகள் பக்கமிருந்து நாராயண, நாராயண” என்ற கர்நாம்ருதமான உச்சரிப்பு சப்தம் குருவாயூரில் கேட்ட மாதிரி கேட்டுக் கொண்டிருந்தது கோயில் சற்று பெரிதாகவே தெரிந்தது. அங்கே துவஜஸ்தம்பதுக்கு முன்னே ஒரு பெரிய மூன்றடக்கு கருட ஸ்தம்பம் வெகு அழகாக காட்சியளித்தது. ஸ்தம்பத்தின் உச்சியில் ஒரு பெரிய கருட விக்கிரஹமே காட்சியளித்தது. அதை கீழேயுள்ள போட்டோவில் பார்க்கலாம் அந்த மண்டபத்தை முன் போட்டோ-வில் பார்க்கலாம்

நாங்கள் டிக்கெட் வாங்கிக்கொண்டு சன்னதி முன்பாக வைதீக கோலத்தில் நின்று கொண்டிருந்தோம். அர்ச்சனை முடிந்ததும் ஐம்பது ரூபாய் சேர்த்து விட்டு பிரசாதங்களை பெற்றுகொண்டு பிரதக்ஷணமாக வரவும் காலை நங்கள் பார்த்த வடகலை குடும்பம் எங்கள் எதிரே வரவும் சரியாக இருந்தது. அவர்கள் மெதுவாக புன்னகைக்க நானும் சிறிது சிரித்துக்கொண்டே கை கூப்பி அஞ்சலி பண்ணேன்.. “மதியம் பார்க்கும்போது சொல்ல வில்லையே இங்கே வரப் போவதாக” என்றார் அக்குடும்பத்து பெரியவர்.
நான் பதில் சொன்னேன். ”எனக்கு தெரியும். காலை உங்களை பார்த்தவுடன் இங்கே பார்ப்போம் என்று” என்றேன். “அது எப்படி?” என்று அவர் கேட்க “திருக்குடந்தை மங்களாசாசனத்தை அடுத்து திருவல்ல வாழ்  மங்களாசாசனம் தானே நம்  நம்மாழ்வார் பண்ணார்.   ..  அதனாலே திருகுடந்தை ஸ்வாமியை சேவித்த பிறகு திருவல்லவாழ் திவ்ய தேசத்திலே செவிப்பேன் என்று நினைத்தேன். தேவரீர் சேவை சாதித்தாகி விட்டது.”
“அப்படியா நம்மாழ்வார் மங்களாசாசனம் உள்ளது? அது எனக்கு தெரியாது சுவாமி.  திருகுடந்தைக்கு பிறகு இங்கேயா?” நான் புத்தகத்தை காண்பிக்க “ரொம்ப சாதூரியமாக பேசினீர். இதெல்லாம் எப்படி நினைவில் வைத்து கொண்டிருக்கிறீர்.”

“அடியேனும் சாதரணமானவன்தான் சுவாமி. நாங்கள் ஒவ்வொரு இடத்திலும் அந்தந்த ஆழ்வார் பதிகத்தை சேவித்து வருகிறோம். இன்று என்ன பதிகம் என்று  பார்த்தபோது இது விஷயம் கண்ணில் பட்டது.”
“சரி, இப்போது இங்கே இந்த பதிகத்தை சேவிக்க போகிறோம். நீங்களும் கலந்து கொண்டால் சந்தோஷப்படுவேன். எங்களிடம் இரண்டு புஸ்தகம் உள்ளது. ஒருபுச்தகத்தை நீரும் உங்கள் திருக்குமாரர் தானே இவர், அவரும் சேர்ந்து பார்த்து சொல்லுங்கள். நாங்கள் இருவரும் ஒரு புத்தகத்தை பார்த்து  
சேவிக்கிறோம்” அதன்படியே அவர்களும் எங்கள் பக்கத்திலே உட்கார்ந்து சேவிக்க ஒரு கோஷ்டி போலவே இருந்தது. அந்த குடும்பத்துடன் இரண்டு ஸ்திரீகளும் இருந்தனர். ஆக நாங்கள் ஐவர் ஒரு வரிசையாக அமர்ந்து சேவித்ததை  எல்லோரும் பார்த்து சென்றனர். சில ஸ்திரீகள் எங்களை சேவித்து விட்டும் சென்றனர். ஒரு சிலர் காது கொடுத்து கேட்டு அஞ்சலி பண்ணி போயினர்..   .  
மானேய்நோக்கு நல்லீர்
வைகலும் வினையேன் மெலிய
வானார் வண்கமுகும்
மதுமல்லிகை கமழும்
தேனார் சோலைகள்சூழ்
திருவல்லவாழுறையும்
கோனாரை, அடியேன்
அடிகூடுவதென்றுகோலோ
  
வாசு இடது மணிக்கட்டில் இருந்த வாட்ச்சை பார்க்க “வாசு மணி என்ன?ஐந்தரைதானே. கிளம்புவோம். சுவாமி நாங்கள் திருவாரன்விளை பெருமாளை சேவிக்க போகணும் எட்டு மணிக்கு சாத்தி விடுவார்கள். விடை கொடுக்கவேணும்”. அதற்கு அவர் “நாங்கள் அதை காலையிலேயே முடித்துக்கொண்டு விட்டோம். இப்போ திருக்கடித்தானம் போகிறோம்” . அதற்கு நான் “சந்தோஷம் நாங்கள் வடக்கே இருந்து தெற்கே பொய் கொண்டிருக்கிறோம். நீங்கள் தெற்கே இருந்து வடக்கே போகிறீர்கள் போலிருக்கிறது. போய் வாருங்கள் வருகிறோம்” என்று கைகூப்பி விடை கொடுத்து வெளியே வந்தோம். ஆறு மணிக்கு செங்கன்னூர் வந்து ஆரன்முலா பஸ் பிடித்து கோயிலை  அடைய மணி ஏழு ஆகிவிட்டது.

 ஒன்பது    
             திருவாறன்விளை

திருவாரன்விளை அம்பலம் நல்ல உயரத்தில் இருந்தது. கோவிலை யொட்டி பம்பை நதி ஓடிக்கொண்டிருந்தது. இதே பம்பை நதி திருவண்வண்டூர் அம்பல பக்கத்திலும் ஓடுவதாக ஒருவர் சொல்லி தெரிந்து கொண்டேன். ஆழ்வார் அந்த பதிகத்தில் அதைபற்றி குறிப்பிட்டுள்ளதும் ஞாபகத்திற்கு வந்தது. இந்த கோயில் அர்ஜுனன் மாதிரியே ஒரு தனி அழகாக கம்பீரமாக என் கண்களுக்கு தெரிந்தது.
   
உள்ளே சென்றோம். அடடா கோயில் அமைப்பு பிரமாதம். கேரளா  அம்பல ARCHITECTURE என்று ஒரு தனி புஸ்தகமே நான் எர்ணகுளத்தில் இருந்தபோது வாங்கியுள்ளேன். பாதி கோயில் சுற்றுப்புரங்கள் மண் ஓடுகளால் வேயப்படிருந்தாலும் உள்ளே கழிகளில் நல்ல வேலைப்பாடுகள் இருக்கும். மூலஸ்தான கூரைகள் அவ்வளவும் செப்பு தகடுகளால் மூடப்பட்டிருக்கும். செப்பு தகடுகளுக்கு உள்ளே இருக்கும் தேவதையின் சக்தியை பாதுகாத்து பக்தர்களுக்கு வழங்குவதில் பெருமையுண்டு.. அதனால் தான் நம் ஊரிலும் செப்பு கலசங்களை வைக்கிறார்கள். அவர்கள் முழுதுமே செப்பு தகடுகளால் வேய்கிறார்கள். சுமார் இருபது, முப்பது அடியிலிருந்து 1௦௦அடி விட்டம் வரை  கூட மூலஸ்தானம் இருக்கும். அவ்வளவு பெரிய வட்டத்தை நடுவில் ஒரு தாங்குதல் கூட இராமல் உயர்ந்த  தேக்கு மர (நல்ல வேலைப்பாடு அமைந்தது) தூளங்களால் வட்ட வடிவ சுவற்றிலிருந்து நாடு மைய கலசம் வரை சாய்வாக கொண்டு சென்றிருப்பது எப்படி காலம் காலமாக நிற்கிறது என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கும். குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு தூலங்கள் மேல் நோக்கி செல்லும் கழிகளை இணைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்..    

நாங்கள் உள்ளேசென்ற சமயத்தில் சீவேலி நடந்துகொண்டிருந்தது. நம் ஸ்ரீ PBA சுவாமி எழுதுவார். மலை நாட்டு திவ்ய தேசங்களில் பிரமோற்சவம் கூட வாகனங்கள் கிடையா. நிஜ யானைகளின் மீதுதான் நடக்கும் என்று. நித்யபடி சீவேலி கூட பாதி அம்பலங்களில் யானை மீதுதான் நடக்கிறது. அங்கே யானை மேலிருந்துதான் உள்புறப்பாடு ஆகி கொண்டிருந்தது. ஒரு பழைய தமிழ் பாடல் நினைவிற்கு வந்தது.
“சேரநாடு வேழமுடைத்து, பாண்டியநாடு முத்துடைத்து, சோழ நாடு சோறுடைத்து,தொண்டைநாடு சான்றோர் உடைத்து” என்று. சேர நாட்டில் அதனால் யானைக்கு பஞ்சமில்லை. பாரதியும் பாடினான்,=: “சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்” என்று.
இதோ அந்த கன காம்பீர்யமான ( சீவேலி என்பது நித்யபடி நம்மூரில் பலி சாய்ப்பது போன்ற புறப்பாடு தான்)

                         AARANMULA SEEVELI

வழக்கமாக வாங்கும் டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு உள்ளே பொய் அர்ச்சனை செய்தோம். ஆழ்வார் பாடுகிறார்: “மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக்கூடுங்கோலொ” என்று. அதனால் நாம் பன்னீர் போன்ற வாசனை நிறைந்த நீர்களை கொண்டு சென்று சமர்ப்பித்தால் அதை அங்கே எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதாக புத்தூர் சுவாமி எழுதியுள்ளார். அதை நினைத்துக்கொண்டே பிரதக்ஷணம் வந்தேன். அப்போது வாசு “என்ன எஸ்.வி. ரொம்ப நேரமாக SILENTஆக வருகிறாய், என்ன விசேஷம்?” என்றான். ஒன்றுமில்லை ஆழ்வார் பாசுரம் வரி ஒன்று நினைவிற்கு வந்தது என்று சொல்லி அதை விளக்கி கூறினேன். அதோடு ஒரு விஷயம் தெரியுமா? இந்த கோவிலுக்கு நிறைய விசேஷங்கள் உள்ளது. முதல் சிறப்பு: இப்பெருமானுக்கு  நம்  நம்மாழ்வார் மங்களாஸாசனம்.கிடைத்தது இரண்டாவது சிறப்பு: இங்கேதான் சபரிமலை ஐயப்பன் திருவாபரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்தே அவைகள் ஆண்டுக்கு ஒருமுறை சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்டு மகரஜோதியன்று ஐய்யபனுக்கு சாத்தப்பட்டு மீண்டும் இங்கே கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. மூன்றாவது சிறப்பு:: இங்கே பக்கத்தில் ஓடுகிற பம்பை நதியில் தான் ஓணம் பண்டிகை யின் போது படகு போட்டி எல்லாம் நடக்கும்.  இதோ ஒரு போட்டோ தருகிறேன் பார்:

சூப்பர் பா! இங்கே கோயில் தெரியவில்லையே எஸ்.வி.இது ஆலப்புழை என்று நினைக்கிறன். அது வேறு. ஆலப்புழையில் நடப்பது நேரு TROPHY. இங்கே நடப்பது நம் ஸ்ரீ பார்த்தசாரதி TROPHY.
“என்ன SV கிண்டலா?” “கிண்டலும் இல்லை. சுண்டலும் இல்லை. இங்கே பார்த்தசாரதி சன்னதி பக்கத்தில் ஓடும் பம்பை நதியில் நடப்பதால் அப்படிசொன்னேன் “இந்த போட்டோவைப் பாரு:அப்போது ஒத்துக் கொள்வாய்”  “இது என்ன SV ? கோவிலுக்கு போட்டிலேயே வந்து இறங்கலாம் போலே இருக்கு”. “சரி வா நாம் இன்னும் இந்த
      

திவ்ய பதிகத்தை சேவிக்கவில்லை. இன்னும் நாற்பது நிமிஷத்தில் கோவில் மூடி விடுவார்கள். இங்கேயெல்லாம் எட்டு மணிக்கு நடை சாத்தி விடுவார்கள் என்று உனக்கு தெரிந்ததுதானே?”

நமஸ்கார மண்டபத்தில் அமர்ந்து திருவாய்மொழி, ஏழாம் பத்து பத்தாம் பதிகம் சேவித்தோம்:

இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானும் இவ்வேழுலகை
இன்பம்பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள்பிரான்
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணிபொழில்சூழ் திருவாறன்விளை
அன்புற்றுஅமர்ந்துவலம்செய்து கைதொழும் நாள்களும் ஆகுன்கொலோ

  
பதிகத்தை சேவித்து முடித்து நமஸ்கரித்து எழுந்தபோது ஒரு தமிழ் தேசத்து கிழவர் எங்களை கிட்ட அழைத்தார். அவர் பிராமணர் இல்லை என்று தெரிந்தது. கிட்டே சென்று கைகூப்பிய போது, “நான் உத்தமபாளையத்தில் இருக்கிறேன்” அதற்கு நான் . “உத்தம பாளையம் எந்த பக்கம். நான் தமிழ் நாட்டவன்தான்”. என்றபோது அவர் “அது பரவாயில்லை. திண்டுக்கல் பக்கம் உள்ளது.”
“சரி! என்ன விஷயம். நீங்கள் பாடின பாடல் எந்த புத்தகத்தில் உள்ளது?
இந்த வூர் ஸ்தல புராணத்தில் உண்டோ.” “இல்லை இல்லை, இது ஸ்தல புராண விஷயமில்லை. எங்கள் நம்மாழ்வார் இந்த திவ்ய தேசத்தை பற்றி பாடின பத்து பாசுரங்கள். திருவாய்மொழி என்ற ப்ரபந்தத்தில் உள்ளது.”அதற்க்கு அவர் “ரொம்ப இனிமையாக இருந்தது. அனால் உங்கள் கோயில்களில் பாடுகிறமாதிரி  நிறுத்தி நிதானமாக பாடினால் இன்னும் நன்றாக இருக்கும் இல்லையா?” “ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இரண்டு பேர் சேவித்தால் அம்மாதிரி நிதானமாக சேவிப்பது கஸ்டம்தான். மேலும் இங்கே எட்டு மணிக்கு நடை சாத்துவதற்குள் முடிக்க வேண்டும். நாங்கள் வந்தது கொஞ்சம் லேட். திருவல்லா போய் இருந்தோம்.” என்று சொல்லிக்கொண்டே அவருடன் நடந்து வரும்போது “இங்கே எங்கே வந்தீர்கள்?” அவர் சொன்னது “இவ்விடத்தில் என் மகன் KRTC-ல் பணி புரிகிறான். (கேரளா அரசாங்க பஸ் ட்ரான்ஸ்போர்ட்) அப்பப்ப மூன்று மாஸத்திற்கொரு முறை வருவேன். அவன் ஒரு மலையாள பெண்ணை கட்டிகொண்டு இருக்கிறான்” என்று சொல்ல “சரி சார், நான் வருகிறேன்” என்று சொல்லி பஸ் ஏறி செங்கன்னூர் வந்து ஸ்டேஷன் VRL ஸ்டால் டிபன் சாப்பிட்டு படுத்தோம்.

No comments:

Post a Comment