Sunday, August 2, 2020

மலை நாட்டுத்திருப்பதிகள் பகுதி 26

மலை நாட்டுத்திருப்பதிகள் (கேரள வைணவ திருத்தலங்கள்) பகுதி26.
(By சுஜாதா&வெங்கடேசன்))6381369319)

ஆட்டோ அடுத்து கிழக்கே 9 கிமீ தூரத்திலுள்ள திருவாறன் விளையில் போய் நிக்கறது. 

அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், ஆரமுளா (திருவாறன்விளை) – 689 533, பத்தனம்திட்டா மாவட்டம், கேரளா மாநிலம்.
+91- 468 – 221 2170 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

சென்று புனன்மூழ்கிச் செய்தவங்கள் செய்தாலும்
வென்றுபுல னைந்தடக்கி விட்டாலும் - இன்றமிழால்
மாறன் விளைத்த மறையோதார்க் கில்லையே
ஆறன் விளைத்திருமா லன்பு. (71)
  - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் 108 திருப்பதி அந்தாதி 


ஆறன்முளா என்று அழைக்கப்படும் திருவாறன்விளை செங்கண்ணூருக்கு அருகில் பம்பா நதியை ஒட்டி உள்ளது. ஆறன்முளா என்ற சொல் ஆறு கொம்புகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட படகைக் குறிக்கிறது. 

மாங்காட்டு நம்பூதிரி என்பவர் இல்லத்தில் ஒவ்வொரு திருவோணத்தன்றும் அதிதியாக வந்து ஒரு பிரம்மச்சாரி உணவு அருந்தி விட்டு வந்தார். 
ஒருமுறை இந்த திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாள், நம்பூதிரியின் கனவில் வந்து, பிரம்மச்சாரியாக வந்து உணவருந்தி விட்டுப் போவது  தான்தான் என்று கூற, பெருமாளைக் காண நம்பூதிரி தன்  ஊரிலிருந்து ஆறு கொம்புகளால் செய்யப்பட்ட ஒரு படகில் வந்தார். அதனால் இந்த ஊருக்கு ஆறன்முளா என்ற பெயர் ஏற்பட்டது.

இந்தக் கோவிலில் இருக்கும் பெருமாள் முதலில் நிலக்கண் என்ற ஊரில் உள்ள கோவிலில் இருந்ததாகவும் நிலக்கண் நாராயணன் என்று பெயர் பெற்ற அந்தப் பெருமாள் இந்த ஊறில் எழுந்தருள விரும்பி, ஒரு பக்தரின் கனவில் வந்து தன்னை இங்கே பிரதிஷ்டை செய்யும்படி கூறியதாகவும், அதன்படி நிலக்கண் நாராயணர் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் ஒரு ஐதீகம் உண்டு.

வியாசரும், பிரம்மாவும் மது, கைடபர்கள் என்ற அரக்கர்களை அழிக்கக் கோரி விஷ்ணுவைக் குறித்து இங்கே தவம் செய்தனர். அப்போது பெருமாள் பிரம்மா, வியாசர் இருவருக்கும் காட்சி கொடுத்தார்.

இந்தக் கோவில் அர்ஜுனனால் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மகாபாரதப் போரில் கர்ணனை யுத்த தர்மத்துக்கு விரோதமாக அவன் ஆயுதம் ஏந்தாதபோது கொன்றதற்குப் பிராயச்சித்தமாக, அர்ஜுனன்  இந்தக் கோவிலைப்  புனர்நிர்மாணம் செய்தான்.  

இங்கு உள்ள வன்னி மரத்திலிருந்து உதிரும் வன்னி மரக்காய்களை இத்தலத்தின் கொடிக்கம்பத்தின் முன்பு குவித்து வைத்து விற்கிறார்கள். இவைகள் அர்ஜு னன் ஆயுதங்களை மறைத்து வைத்த வன்னி மரத்திலிருந்து வந்ததால் குழந்தைகள் நோய்வாய்ப்பட்ட காலத்தில் இந்த வன்னிமரத்துக் காய்களை தலையைச் சுற்றி எறிந்தால் அர்ஜுனன் அம்பினால் எதிரிகளின் அம்பு சிதைவது போல், நோய் சிதையும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. குருவாயூரில் துலாபாரம் கொடுத்தல் போல் இங்கும் துலாபாரம் கொடுக்கும் முறை நடைமுறை உள்ளது. இங்கு துலாபாரமாக வன்னிமரத்துக் காய்களை கொடுப்பது பழக்கமாக உள்ளது. கேரளாவின் புகழ்பெற்ற பம்பா என்றழைக்கப்படும் பம்பை நதி இத்தலத்தின் வடக்கு வாசலைத் தொட்டுக்கொண்டுதான் செல்கிறது. இந்த தலத்தில்தான் ஸ்ரீசபரிமலை ஐயப்ப சுவாமியின் அணிகலன்கள் பத்திரமாக வைக்கப்பட்டு மகர ஜோதியின் போது ஊர்வலமாக சபரிமலைக்கு பக்தர்கள் புடைசூழ மேளதாளத்துடன் எடுத்துச் செல்லப்படுகிறது. நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.

இன்பம் பயக்க எழில் மலர் மாதரும்*  தானும் இவ் ஏழ் உலகை,* 
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து*  ஆள்கின்ற எங்கள் பிரான்,* 
அன்புற்று அமர்ந்து உறைகின்ற*  அணி பொழில் சூழ் திருவாறன்விளை,* 
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து*  கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ! (2)     
          தொடர்வது திருவண்வண்டூர்



No comments:

Post a Comment