அருள்மிகு வைகுண்டநாதர் (நவ திருப்பதி-1) திருக்கோயில்
ஸ்ரீஸ்ரீமதே ராமானுஜாய நம
🌸எம்பெருமானார் திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள் திருவடிகளே சரணம்!🌸
தினமும் ஒரு திவ்ய தேசம்
பாண்டிய நாடு - 18
80. ஸ்ரீவைகுண்டம்
புளிங்குடி கிடந்து வரகுண மங்கை
யிருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே
என்னையாள்வாய் எனக்கருளி
நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல்
கனிவாய் சிவப்ப நீ காணவாராயே
(3571) திருவாய்மொழி 9-2-4
என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் திருநெல்வேலியிலிருந்து, திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள “நவதிருப்பதிகளை” இதனை முதல் இருப்பிடமாகக்கொண்டு சேவித்து திரும்பலாம்.
வரலாறு.
பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தைப் பற்றிச்சொல்லப்படுகிறது. பிரம்மன் எழுந்தருளியுள்ள சத்தியலோகத்தில் ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டு எங்கும் நீர் சூழ்ந்து கொண்டிருந்த காலத்தில் சோமுகாசுரன் என்ற அரக்கன் பிரம்மதேவன் வைத்திருந்த (சருஷ்டி ரகஸ்யக்கிரந்தம்) படைப்புத்தொழில் ரகசியம் பற்றிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஒளிந்து கொண்டான்.
தம் நிலையுணர்ந்து வருந்திய பிரம்மா அதனை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு விஷ்ணுவைக் குறித்து தவமியற்ற எண்ணி தன் கரத்திலிருந்து ஒரு பிரம்பை ஒரு பிரம்மச்சாரியாகச் செய்து, தாம் தவமியற்றுவதற்கு ஒரு சிறந்த இடத்தை தெரிவு செய்து வருமாறு
பூவுலகிற்கு அனுப்பினார். தாமிரபரணி நதிக்கரையிலிருக்கும் ஜயந்தீரபுரத்திற்கு வந்து, அங்கிருந்த அழகியின் மயக்கத்திலீடுபட்டு தான் வந்த வேலையை மறந்து போயினான்.
இதன்பின் பிரம்மா தன் மறுகையிலிருந்த தண்டத்தை ஒரு பெண்ணாக்கி, யான் தவம் புரிய ஏற்ற இடம் பார்த்துவா என்று சொல்ல அவள் தாமிரபரணியாற்றங்கரையில் சோலைகள் நிறைந்த ஓரிடத்தை தெரிவு செய்து பிரம்மனிடம் கூற, பிரம்மன் அங்கு வந்து திருமாலைக்
குறித்து கடுந்தவம் இருக்கலானார். பிரம்மனின் தவத்தை மெச்சிய திருமால் வைகுண்டத்திலிருந்து படைப்பின் ரகசியத்தை மீளவும் பிரம்மனிடமே சேர்ப்பித்தார்.
வைகுண்டத்திலிருந்து எழுந்த கோலத்தில் இவ்விடம் காட்சி தந்தமையாலும், இதே திருக்கோலத்தில் பக்தர்களுக்கு இவ்விடத்தே நின்று அருள வேண்டுமென்று பிரம்மன் வேண்டியதால் இத்திருத்தலத்திற்கு ஸ்ரீவைகுண்டம் என்ற பெயருண்டாயிற்று.
பின்பு இதே ஸ்ரீவைகுண்டத்தில் காலதூஷகன் என்னும் திருடன் ஒருவன், இப்பெருமானை வழிபட்டே திருடச்செல்வதும், அவ்வாறு திருடிய பொருட்களில் பாதியை இப்பெருமானுக்கே சமர்ப்பணம் செய்து, இடையறாது பக்தி செலுத்திவந்தான். ஒரு நாள் தன் கூட்டத்தினருடன்
அரசனின் அரண்மனையில் திருடிக்கொண்டிருக்கும்போது இவன் கூட்டத்தைச் சார்ந்த சிலரை காவலாளிகள் பிடித்து விசாரணை செய்ய, அவர்கள் தாங்கள் காலதூஷகனின் கையாட்களே என்றும் எங்களோடு வந்தால் காலதூஷகனைக் காண்பிக்கிறோம் என்று சொல்லஅவ்விதமே காவலாளிகளும் தேடிவந்தனர்.
இதனையறிந்த காலதூஷகன் ஸ்ரீவைகுண்டனைச்சரணடைந்து தன்னைக் காக்குமாறு வேண்ட அப்பெருமானே காலதூஷகன் வேடத்தில் எதிரில் வர,காவலாளிகள் பிடித்துக்கொண்டுபோய் மன்னன்
முன்னிலையில் நிறுத்தினர். காலதூஷகனை மன்னன் கூர்ந்து நோக்கியபோது தன் சுயரூபத்தை அவனுக்கு மட்டும் காட்டியருள அடிபணிந்து நின்ற மன்னன் என்னிடம் கொள்ளையடித்துச் செல்ல வேண்டிய காரணம் என்னவென்று கேட்க, "திரவியத்திற்கு சத்ருக்கள் நால்வர்"அவர்கள் தர்மம், அக்னி, சோரன், ராஜா என்பவர்கள். இதில்
முதலாவதாகிய தருமத்தை நீ கொஞ்சமேனும்கடைப்பிடிக்கவில்லை. இதை உனக்குப் புகட்டி தர்மத்தில்உன்னை நிலைநாட்டச் செய்யவே இந்நாடகமாடினோம் என்றார்.
மிகவும் ஆனந்தித்து பேரின்பக் காட்சியைக் கண்ட அம்மன்னன் எனக்கருள்புரிந்த இத்திருக்கோலத்திலேயே கள்ளப் பிரானாக (சோரநாதனாக) எந்நாளும் காட்சியளிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ள வைகுண்டத்துஎம்பெருமான் அவ்விதமே ஆகட்டும் என்று கூறி
மறைந்தார்.
சோரநாதனிடம் ஈடற்ற பக்தி கொண்ட அம்மன்னன், காலதூஷகனையும் நண்பனாகக் கொண்டு இக்கோவிலுக்குஎண்ணற்ற தான தருமங்களைச் செய்து மண்டபமும், மதிலும் எழுப்பினான். இம்மன்னன் யாரென்றும், பெயரின்னதென்றும் அறியுமாறில்லை.
அதுமுதல் இப்பெருமானுக்கு கள்ளப்பிரான் என்ற திருநாமமே பிரதானமாக இருந்து வருகிறது.
மூலவர்
ஸ்ரீவைகுந்த நாதன், கள்ளப்பிரான்.
தாயார்
வைகுந்தவல்லி, பூதேவி.
தீர்த்தம்
பிருகு தீர்த்தம்,ஷாப்பிங் தாமிரபரணி தீர்த் தம், கலச தீர்த்தம்.
விமானம்
சந்தர விமானம்
காட்சி கண்டவர்கள்
பிரம்மா, இந்திரன், காலதூஷகன்.
சிறப்புக்கள்
1. பிரம்மா தமது கமண்டலத்தில் தாமிரபரணி நீரையெடுத்து திருமாலுக்குத் திருமஞ்சனம் செய்து, நதிக்கரையிலேயே கலசத்தை ஸ்தாபிதம் செய்ததால் இன்றும் கலச தீர்த்தம் என்றே வழங்கப்படுகிறது. பிரம்மனாலேயே இங்கு வைகுண்டநாதனுக்கு சித்திரை உற்சவம் நடத்தப்பட்டது.
2. மற்றெல்லா ஸ்தலங்களிலும் ஆதிசேடனில் தான் பெருமாள் பள்ளிகொண்டிருப்பார். ஆனால் இங்கு நின்ற திருக்கோலத்தில் உள்ள பெருமானுக்கு ஆதிசேடன் குடைபிடிக்கும் வண்ணத்தில் அமைந்துள்ள காட்சி வேறெங்கும் காண்டற்கரியதாகும்.
3. நம்மாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம்.
4. 108 வைணவ திவ்ய தேசங்களில் விண்ணுலகில் இருப்பதாகக் கருதப்படும் ஸ்ரீவைகுண்டம் என்னும் திருப்பெயரை மண்ணுலகில் தாங்கி நிற்கும் ஒரே திருத்தலம் இதுதான்.
5. மணவாள மாமுனிகளும் இங்கு எழுந்தருளினார்.
6. சோரநாதன் என்று பெயர்கொண்ட இப்பெருமானின் மீது வடமொழியில் இயற்றப்பட்டுள்ள “ஸ்ரீசோரநாத சுப்ரபாதம்”
மிகவும் பிரசித்திபெற்றதாகும்.
7. காலதூஷகனுக்கு அருள் பாலித்து ஸ்ரீவைகுண்டநாதனாக எழுந்தருளியிருந்த பெருமானும், அச்சிறு சன்னதியும் வெகு காலத்திற்குப்பின் பூமியில் புதையுண்டு போனது. ஒரு சமயம் பாண்டிய மன்னர்கள் நெல்லையில் தமது அரசாட்சியை செலுத்துங்கால் மணப்படை, கொற்கை போன்றன, பாண்டியர்களின் முக்கிய பிரதேசமாக விளங்கின. அவ்வமயம் பாண்டியனின் பசுக்களை
மேய்ப்பவன் சந்நிதி மூடிய இவ்விடத்திற்குப் பசுக்களை ஓட்டி வந்ததும் ஒரு பசுமட்டும் தனித்துச் சென்று வைகுண்ட பெருமாள் பூமியில் மறைந்துள்ள இடத்தில் பால் சொரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இதைக்கண்ட பசுமேய்ப்பவன் இதனை மன்னனுக்குத் தெரிவிக்க மன்னன் தன் பரிவாரங்களுடன் சூழ இவ்விடம் வந்து தோண்டிப் பார்க்கையில், அங்கே வைகுண்டப் பெருமான் சன்னதியிருப்பதைக்கண்டு மிகவும் ஆனந்தித்து தற்போதுள்ள கோவிலை அமைத்தான் என்பர்.
8. இங்குள்ள கள்ளப்பிரானின் திருமேனியை உருவாக்கிய சிற்பி அப்பேரழகில் பெரிதும் மயங்கி தன் உள்ளத்தைப்பறிகொடுத்து ஆசைமிக்குப் போனதால் செல்லமாகக்கன்னத்தில் கிள்ளி விட்டார். ஆத்மார்த்தமான பக்தியில் கிள்ளிய வடுவை எம்பெருமான் கன்னத்தில் ஏற்றுக் கொண்டார். இன்றும் இப்பெருமானின் கன்னத்தில் கிள்ளப்பட்ட வடுவைக்காணலாம்.
9. இந்த இறைவனைத் "திருவழுதி வள நாட்டு ஸ்ரீவைகுந்தத்து நாயனார் கள்ளப்பிரான்” என்று கல்வெட்டு கூறுகிறது.
10. இத்தலத்து எம்பெருமானை ஆண்டுக்கு இருமுறை சூரியதேவன் வந்து வழிபாடு செய்கிறான். அதாவது சித்திரை 6ம்தேதி, ஐப்பசி 6ந்தேதி. இவ்விரு தினங்களிலும் இளஞ்சூரியனது பொற்கிரணங்கள் கோபுரவாயில் வழியாக வைகுந்த நாதனின் திருமேனிக்குஅபிஷேகம் செய்கிறது. இத்தகைய அமைப்பில்இக்கோவிலின் கோபுர வாசல் அமைக்கப்பட்டது,எண்ணியெண்ணி வியக்கத் தக்கதாகும். சூரிய வழிபாடு108 திருத்தலங்களில் இங்கு மட்டுமே உள்ளது.
11. கி.பி. 1801 இல் கட்டப்பொம்மனுக்கும்,ஆங்கிலேயர்கட்கும் நடைபெற்ற போரில் இந்தக்கோவிலையும் சுற்றியுள்ள பகுதிகளையும் மையமாக வைத்து ஒரு கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டது.
இப்பேர்பட்ட திருத்தலத்தை ஸ்ரீமான் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் உபன்யாசத்துடன் கீழே காணொளியில் திவ்யமாக சேவியுங்கள்.
அடியேன் பேரருளாளன்
ராமானுஜதாசன் கூடப்பாக்கம்
அலைபேசி:9345454656
🌹🌹🌹🙏🙏🙏👇👇👇👇
No comments:
Post a Comment