Thursday, July 21, 2022

அஹில்யா பாய்

 பயணங்கள்

மகாராணி அஹில்யாவின் இந்தோர்

முப்பது ஆண்டுகள் மத்தியப்பிரதேசத்தில் மால்வா ராஜ்யத்தை அரசாண்ட ராணி அஹில்யாவின் கதையை ஐநூறு வார்த்தைகளுக்குள் சொல்லிவிட முடியுமா? சாதாரண குடும்பத்தில் கி.பி.1725ல் பிறந்து தந்தையிடமிருந்து எழுதப் படிக்க கற்றுக் கொண்டார். எட்டு வயது சிறுமி கோவிலில் ஏழைகளுக்கு சேவை செய்வதைக் கண்ட இந்தோரிலிருந்து பயணம் வந்திருந்த ராஜா மல்ஹர் ராவ் ஹோல்கர் தன் மகனுக்காக அவளை பெண் கேட்க, பட்டத்து இளவரசியானாள் அஹில்யா. 

வில் வாள் வித்தைகளும் கணக்கும் நிர்வாகமும் பயின்ற அஹில்யா கணவருக்கு உறுதுணையாக போர் புரிந்தாள்; அரசியல் அறிந்தாள்; அறமும் அறிவும் நிறைந்தவளாக போற்றப்பட்டாள். 29 வயதில் கணவர் இறக்க, அந்தக் கால முறைப்படி உடன்கட்டை ஏற இருந்தவளை மாமனார் தடுத்தார். மாமனாருக்குப் பின் ஆட்சிக்கு வந்த மகனும் ஒரே வருடத்தில் இறந்துவிட, 1767ல் அரசியாகி முப்பது ஆண்டுகள் திறம்பட ஆட்சி புரிந்தாள். இந்தோரை நிர்மாணித்தாள். 

மகாராணி அஹில்யாபாய் ஹோல்கரை மனதில் நினைத்தபடி தான் இந்தோரைப் பார்க்க வேண்டும். அரசியென்றால் இவளல்லவோ அரசி. எத்தனை பிரமிக்க வைக்கும் ஆளுமை, கருணை, கண்ணியம், வீரம், ஈகை, பக்தி, சாதுர்யம்! இந்தோரின் ஒவ்வொரு வீதியும் அவள் கதை சொல்லும். இன்றும் நகரம் முழுவதும் நிறைந்திருக்கும் கோவில்களும், அரண்மனைகளும், பயணிகள் தங்குமிடங்களும், குளங்களும், கட்டிடங்களும் அவள் இதிகாசத்தை பறைசாற்றியபடி இருக்கின்றன. விமான நிலையம் தொடங்கி பல்கலைக் கழகம் வரை அவள் பெயர் தான். 

இந்தோரில் உள்ள IIMல் முதுகலை பாடம் guest facultyயாக நடத்த நான் சில வருடங்கள் மும்பையிலிருந்து சென்று வந்தேன். ஒரு கோர்ஸ் சொல்லித்தர மூன்று மாதங்களில் நான்கு முறை என இந்தோர் பயணம் அந்த வருடங்களில் எனக்குக் கிடைத்தது. வேலை நிமித்தமாகவும் சில முறைகள் சென்றுள்ளேன். ஒவ்வொரு முறையும் இந்தோரின் இதிஹாசத்தில் முத்தெடுத்து மகிழ்ந்திருக்கிறேன். Architecture and history enthusiasts must not miss Indore. 

Lalbagh palace restorationற்குப் பிறகு மிக அழகாக மிளிர்கிறது. ஐரோப்ப கட்டட உத்திகளும், பல் வேறு நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட carpets, chandeliers, artifacts பார்க்கப் பெருமிதம் கொள்ள வைக்கும். மராட்ட-ராஜ்புதான வடிவமைப்பில் கட்டப்பட்ட ஏழு மாடி ராஜ்வாடா அரண்மனை கட்டடக்கலை மாணவர்களுக்கு இன்றும் ஒரு case study. தேக்கும் சுண்ணாம்பும் பளிங்கும் பல நூறு வருடங்களுக்கு முன் உபயோகித்து கட்டப்பட்ட அதிசயம். கண்ணடிகள் நிறைந்த காஞ்ச் மெஹல்; 120 ஏக்கரில் பரந்துவிரிந்திருக்கும் Daly College; பாதியில் நின்று போன ஃபூட்டி கோட்டி; தென்னிந்திய பாணியில் உள்ள அன்னபூரணி கோவில் என்று பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம். 

இன்றைய இந்தோர் சுத்தத்திற்கு பேர் போனது. It has been ranked the cleanest city in India, five years in a row to 2021. Their waste management strategies are inspirational. சாப்பாட்டு பிரியர்களுக்கு இருக்கிறது சப்பன் தூக்கான் (56 உணவு கடைகள்) மற்றும் இரவு முழுவதும் மூடிய தங்கக் கடைகளின் நடைபாதைகளில் விரியும் sarafa. பலவிதமான ருசிகரமான உணவுகளை சாப்பிட்டு மாளாது. இந்தப் பதிவில் அந்தக் கதைகள் இல்லை! 

ஒரு முறை நான் பாடம் நடத்திக் கொண்டிருந்த அதே நாட்களில் ஒரு மாலை இவர் IIMற்கு pre placement talk வழங்க வந்திருந்தார். ஆமாம், உமா சஷிகாந்தில் உள்ள சஷிகாந்த் நான் தான் என்று introductionல் சொன்னதாக என் மாணவர்கள் சொன்னார்கள்! திடீரென்று நினைத்துக் கொண்டு இரண்டு நாள் அருகில் உள்ள மகேஷ்வரி நகரம்  செல்ல முடிவெடுத்தோம். நாங்கள் இருவர் மட்டுமே இருக்கும் கால நிலையின் மிக ஆனந்தமான அட்வான்டேஜ் இது போன்ற திடீர் பயணங்கள். 

ராணி அஹில்யாவின் அரண்மனை இந்தோரிலிருந்து 95கிமி தொலைவில் மகேஷ்வரி நகரில் நர்மதா நதிக் கரையில் இருந்தது. அவர் சந்ததியின் இன்றைய வாரிசு ரிச்சர்ட் ஹோல்கர் ஒரு பகுதியை heritage hotelஆக நடத்துகிறார். அந்த அரண்மனையின் அழகும் ராணியைப் பற்றிய கதைகளின் பெருமையும், இதிகாச பிரசித்தி பெற்ற கட்டடக் கலையும் ரிச்சர்ட் வழங்கும் பாரம்பரிய உணவும் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டியவை. 

பூக்களும் பட்சிகளும் இல்லாத நெசவு வேண்டும் என்று அஹில்யா ராணி கேட்டதினால் geometric pattern borderல் நெசவு செய்த மகேஷ்வரி புடவைகளை வாங்கத் தவறாதீர்கள். பட்டும் பருத்தியும் கலந்து இன்று நாடெங்கும் கிடைக்கின்றன. My favorite weave. படமும் போட்டுவிட்டேன்! 

நாடெங்கும் அஹில்யா பாய் புனர் நிரமாணம் செய்த கோவில்கள் பல நூறு. பயணிகளின் நலனுக்காக கட்டிய சத்திரங்களும், சாலைகளும், கிணறுகளும், உணவகங்களும் பல. நம் ராமேஸ்வரம் உள்பட. ஆனால் எதிலும் தன் பெயரை பொறிக்கக் கூடாது, இது தெய்வ காரியம் என்றவள் நம் ராணி. 2025ல் அவளது 300ஆவது பிறந்த நாளுக்கு இந்தோர் களைகட்டும். இறைவன் அருளிருந்தால் அப்போது இந்தோருக்கு மீண்டும் வரும் உத்தேசம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத நகரம். அப்போது உங்களில் யார் வந்தாலும் சுற்றிக் காட்டும் டூரிஸ்ட் கைடாக பணியாற்ற சித்தமாக இருக்கிறேன்! ஆனால் அது வரை பொறுக்க வேண்டிய அவசியமில்லாமல் இதோ பக்கத்தில் தான் இருக்கிறது இந்தோர்!


No comments:

Post a Comment