Friday, July 22, 2022

பவளமலை முருகன் கோவில்

பவளமலை (பச்சைமலை) முருகன் கோவில்!.*

*பச்சைமலை (மரகதாச்சலம்) அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், ஈரோடு மாவட்டத்தின் கோபிச் செட்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாகும். "பச்சைமலை பவளமலை எங்கள் மலை நாடு" என்ற வாசகத்திற்கேற்ப இவ்விருமலை முருகன் கோவில்களும் இப்பகுதி மக்களால் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருத்தலத்தில் முருகன், குழந்தை வடிவாக ஞான தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார்.*

*நாம் பலரும் நினைப்பது போல பச்சைமலை என்று இம்மலை பெயர் பெற காரணம் மரங்களோ, செடிகளோ அல்ல. பழைய படங்களை புரட்டினால் பச்சைமலையில் அவ்வளவாக மரங்கள் இல்லாமல் பாறைகளும் கற்களுமாக இருப்பதையே காண முடியும். இங்கு "பச்சை" என்பது நீரை குறிக்கிறது. இங்குள்ள மூலவருக்கு நேர் கீழாக ஒரு நீரூற்று இருப்பதாக நம்பப்படுகிறது. இது சமீப காலத்தில் நிரூபானம் ஆனது ஒரு சுவையான நிகழ்ச்சியின் மூலம் அறியலாம். வருடம் 2000 க்கு முன்பு பச்சைமலைக்கு நீர் மலை அடிவாரத்தில் இருந்து தான் கொண்டு செல்லப்படும். அப்பொழுது ஏற்பட்ட வறட்சியில் கிணறுகள் வற்றிவிட்டன. அப்பொழுது மலைக்கு மேலே ஆழ்குழாய் கிணறு அமைத்தல் பற்றிய திட்டம் உருவானது. மலை அடிவாரத்தில் தண்ணீர் இல்லாத சமயம் மலைக்கு மேலே தண்ணீர் இருக்க முடியாது என்பதால், மிகுந்த சந்தேகத்தோடு தான் ஆழ்குழாய் தோண்டப்பட்டது. அன்று சிறு ஆழத்திலேயே மிகவும் வேகமாகவும், உயரமாகவும் நீர் வெளியேறியதை அருகிலிருந்தோர் இன்றும் பரவசத்தோடு நினைவு கூறுகின்றனர். இதனால், பச்சைமலையில் பயன்படுத்தும் நீர் அனைத்தையுமே நாம் தீர்த்தமாக கொள்ளலாம்.*

*இந்த கோவிலும் பச்சைமலையில் முருகக்கடவுளை வைத்து வழிபாடு செய்த துர்சாவ முனிவரால் உருவாக்கப்பட்டது என்றே கூறப்படுகிறது.*

*ஒரு முறை வாயுபகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அது படிப்படியாக பெரியதாகி, அவர்களில் யார் பெரியவர்? என்ற போட்டி எழுந்தது. அந்த போட்டி போராக மாறியது. தங்கள் பலத்தையும் சக்தியையும் காட்டி அவர்கள் போர் செய்தனர். யாரும் யாரையும் வெல்ல முடியாத நிலை. வாயுபகவான் தனது சக்தியை எல்லாம் திரட்டி மேரு மலையை தகர்த்துக்காட்டுகிறேன் என்று சவால் விட்டு மலையுடன் மோதுகிறார்*

*காற்றின் வேகத்தை தாங்க முடியாக மேரு மலையின் சில பாகங்கள் மலையை விட்டு பறந்தன.* *அதில் ஒரு துளி விழுந்த இடம்தான் பவளமலை என்கிறது பவளமலையின் தல புராணம். மகேசனாகிய சிவபெருமான் இந்த கோவிலில் குடியிருந்து அவரை நாடி வரும் மக்களுக்கு நல்லாசி வழங்குகிறார். இந்த லிங்கமானது, அருகில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் உழவுப்பணி செய்யும்போது சுயம்புவாக தோன்றியது என்றும், அதையே எடுத்து வந்து மலைமீது வைத்து தொன்று தொட்டே வணங்கி வருவதாகவும் தல புராண கதை கூறுகிறது.*

*பவளமலை கோவிலில் சிவபெருமானுக்கு ஈடாக முருகபெருமானை கொண்டு நடைபெறும் திரிசத அர்ச்சனை சிறப்பு மிக்கதாகும்.*

*திரி என்றால் மூன்று, சதம் என்றால் நூறு. திரிசதம் என்பது முந்நூறு. அதாவது முருக பெருமானுக்கு செய்யப்படும் புகழ்மிக்க அர்ச்சனை இது.* *ஆறுமுகக்கடவுள் என்று போற்றப்படும் முருகன், பன்னிரு கைகள், ஆறு முகத்துடன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று சிவபெருமானை போன்று ஐந்தொழில்களையும் மேற்கொள்பவராக இருக்கிறார். அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவரது ஒரு முகத்துக்கு 50 அர்ச்சனைகள் வீதம், ஆறு முகங்களுக்கும் சேர்த்து 300 அர்ச்சனைகள் செய்வதே திரிசத அர்ச்சனை.*

*சூரபத்மனை வதம் செய்து இந்திர லோகத்து தேவர்களை எல்லாம் முருக கடவுள் மீட்டார். எனவே அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் தேவர்களின் அரசன் இந்திரன் தலைமையில் தேவர்களால் செய்யப்பட்ட அர்ச்சனையே திரிசத அர்ச்சனை. எனவே எதிரிகளை வீழ்த்தும் திரிசத அர்ச்சனை என்றும் இது அழைக்கப் பட்டது. திருமணத்தடை நீங்க, குழந்தை பேறு கிடைக்க, தொழில், அரசியலில் எதிரிகளிடம் இருந்து வெற்றி பெற விரும்புபவர்கள் பவளமலையை தேடி வந்து திரிசத அர்ச்சனையை சிறப்பாக செய்வது வழக்கம். பவளமலை கோவில் 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கிறது. 2004-ம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டு உள்ளது.*

*பவளமலை முருகனை காண படியேறி சென்றால் அதுவரை பக்தர்களின் எண்ணங்களில் குடிகொண்டிருந்த துன்பங்களும், துயரங்களும் காணாமல் போகும் என்பதே நம்பிக்கை*

No comments:

Post a Comment