Wednesday, July 13, 2022

எனது பயணத்தில் பாடம்

 எனது பயணத்தில் பாடம்!

நான் நிறைய பிரயாணம் செய்வேன். நேரம் காலம் பார்க்காமல் ஒற்றையில் வண்டி ஓட்டிச் செல்வேன்! 

சென்ற வாரம் பெங்களூர் தாண்டி தும்கூர் வரை போக நேர்ந்தது!. ஒற்றையில் பயணிக்கும் நான் நேரம் காலம் பார்ப்பதில்லை!

இரவு 11:30 க்கு பெங்களூர் நகரத்தைக் கடந்து சென்ற போது, பசி பயங்கரமாக வயிற்றைக் கிள்ளியது. NHAI யில் ஒரு கடையும் தென்படவில்லை! 

மேம்பாலத்தின் சைடு பாதையில் போனால் பாலத்தின் செங்குத்து ரோடுகளில் பெரும்பாலும் வர்த்தகம் செய்யும் கடைகள் இருக்கும். அப்படி ஒன்றைத் தேடி அந்த இரவில் சைடு ரோடில் ஏதேனும் தென்படுகிறதா என்று பார்த்த போது ஒரு தட்டி விலாஸ் மங்கலான குண்டு பல்ப் ஒளியில் தென்பட்டது!

பரவாயில்லை, திறந்துள்ளதே என நினைத்து வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றேன்.

அது ஒரு தட்டி விலாஸ்தான். இரண்டு பனைமர நீள மேஜைகள் இருபுறமும் இடப்பட்டு அதே பனைமர பெஞ்சுகள் மூணு பேர் அமர்வது போல அமைக்கப் பட்டு இருந்தது!

ஒரு வயதான பிராமணப் பெரியவர் உள் பக்கமிருந்து வந்தார். கன்னடத்தில் 'என்ன வேணும் சார்? இத்தனை நேரம் கழிச்சு வந்திருக்கீங்களே! கடையை மூடி ரொம்ப நேரமாச்சே!' என்றார்.

நானும் அவரிடம் 'வண்டி ஓட்டி வரும்போது நேரம் போனது தெரியவில்லை! ஏதாவது கிடைக்குமானால் நல்லது!' என்றேன்.

'உப்புமா சாப்பிடுவீங்களா? பிடிக்குமா? மாமியை பண்ணச் சொல்றேன்!'

'சரி!' என்றேன். உள்ளே சென்றவர் மாமியிடம் கன்னடத்தில் சொல்ல, மாமியும் கரி அடுப்பை மூட்டத் தொடங்கினார்.

மாமாவிடம் சில பல குசல விசாரிப்புகளுக்குப் பின் கேட்டேன் 'உங்களுக்கு குழந்தைகள் இல்லையா?'

'ஏன் இல்லை! ஒரு பெண், ஒரு பையன். ரெண்டு பேரும் கம்யூட்டர் சயின்ஸ் படிச்சுட்டு, கல்யாணம் ஆகி அமெரிக்காவிலே இருக்கா!'

அந்த இடத்தின் அடையாளங்கள் அவரது பிள்ளைகளின் பொருளாதார நிலையை உணர்த்தவில்லை.

'நீங்க அவங்க கூட அமெரிக்கா போகலையா?'

'நான் ஏன் போகணும்? பல முறை கூப்பிட்டாங்க. நாங்க மறுத்துட்டோம்!'

'இல்லை! இங்கே இத்தனை கஷ்டப்பட்டு வாழ என்ன அவசியம்?'

'எது சார் கஷ்டம்? காலங்கார்த்தாலே நாலு மணிக்கு எழுந்து அங்கே வாசல் கோலம் போட முடியுமா? இல்லை, உஷத் கால மஞ்சுநாதரின் விஸ்வரூப தர்ஷனம் பார்க்க முடியுமா? இந்த தும்கூர் ரோடில் பிறந்து, விளையாடி வாழ்ந்த எங்களுக்கு மட்டும்தான் இந்த செம்மண் பூமியின் அருமை தெரியும்! ஒரு மணி போட்டால் நூறாக விளையும் வள மண் இது. இந்த இதமான குளிரும், கோடையில் ரம்மியமான குளிர் காற்றும் அங்கே கிடைக்குமா சார்?. இத்தனை படிச்சுட்டு அவங்கதான் தங்கள் வாழ்க்கையை இங்கே வாழ பயந்து போய் நாளைக்கே பணக்காரனாகணுங்கிற எண்ணத்தில் பணம் பண்ணும் இயந்திரமாக மாறிட்டாங்க! இவங்க இன்னைக்கு இத்தனை படிச்சு சம்பாதிக்க நாங்க ரெண்டு பேரும் வெளிநாடு போகலையே! பணம் மட்டுமே வாழ்க்கையா சார்? இரவு பனிரெண்டு மணிக்கு பசிக்கும் போது கிடைக்கும் ரவா உப்புமாவிற்கு விலை பேச முடியுமா சார்? நம் மனசில் இருக்கு சார் வாழ்க்கை!'

மேற்கொண்டு என்னால் பேச முடியாமல் போனது் உப்புமாவைக் கட்டிக் கொடுக்கச் சொல்லி விட்டுப் புறப்பட்டேன். 

'எத்தனை ரூபாய் சுவாமி?'

'பசின்னு வந்தவனிடம் காசு பார்க்காதேன்னு இந்து தர்மம் சொல்லி இருக்கு சார். இந்த உப்புமா என் புண்ணியக் கணக்கில் எழுதப் படட்டும்! பணம் என்ன சார் பணம்? நீங்க என்னை காலத்துக்கும் நினைப்பீங்க இல்லை? அது போதும்! காசு வாங்க மாட்டேன்' என்று பிடிவாதமாக மறுத்து விட்டார்!

என் கண்கள் குளமாவதை அவர் காணக் கூடாது என்று வேகமாக அங்கிருந்து நகர்ந்தேன்!

No comments:

Post a Comment