Saturday, July 23, 2022

வில்வாரணி முருகன்

 S:

இன்று(23-7-22) ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பதிவு

அறுபடை வீடுகள் எல்லாவற்றிற்கும் சென்று முருகன் அருள் பெற்றதற்கு சம்மான ஆடி கிருத்திகை ( 23-7-22)மற்றும் இதர மாத கிருத்திகை நாட்களில் வழிபடவேண்டிய அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில்,

செங்கம், வில்வாரணி - திருவண்ணாமலை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

திருவண்ணாமலையில் இருந்து போளூர் செல்லும் பஸ்களில் 35 கி.மீ., தூரம் அல்லது வேலூரில் இருந்து 45 கி.மீ., பயணம் செய்து போளூரை அடைந்து, அங்கிருந்து செங்கம் செல்லும் பஸ்களில் 10 கி.மீ., தூரம் சென்றால் வில்வாரணியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் உள்ளது. கோயிலுக்கு செல்ல 300 படிகள் ஏற வேண்டும்.

ஆடி கிருத்திகை மற்றும் இதர மாத கிருத்திகை நாட்களில் இங்கு விழாக்கோலம் தான். பங்குனி உத்திரம் பத்து நாள் நடக்கிறது.

ஐந்தாம் நாளில் முருகன் மலையில் இருந்து கீழிறங்கும் நிகழ்ச்சி நடக்கும். ஏழாம் நாளில் தேரோட்டம் நடக்கிறது. இதற்காக 16 லட்சம் ரூபாய் செலவில் தேர் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாத கிருத்திகையன்றும் 27 நட்சத்திரங்களும், கார்த்திகை பெண்களும்  வில்வாரணி வந்து முருகனை வழிபடுவதாகவும் நம்பிக்கை .

எனவேதான் இது ‘நட்சத்திரக் கோயில்‘ என அழைக்கபடுகிறது.

ஆகையால் 27 நட்சத்திரங்களில் பிறந்த எல்லா உயிர்களும் இந்த முருகனை வழிபட்டால் எல்லா நலன்களும் பெறுவார்கள் என்பது உறுதி.

‘நட்சத்திரக் கோயில்’ என்ற பெயர் ‘ நல்ல க்ஷேத்திரக் கோயில்‘ – வழிபட சிறந்த தலம் – என்றும்  பொருள் கொள்ளலாம்..!.

சிவனும் முருகனும் ஒன்றே என்பதை நிரூபிக்கும் வகையில் செங்கம், வில்வாரணி தலத்தில்  லிங்க வடிவ சுப்பிரமணியராக கோலமயில் மேல் ஏறி காலமறிந்து கருணை பொழியும்  திருத்தலமான “நட்சத்திரக் கோயிலில் அருள்பாலிக்கிறார்.

ஜாதகரீதியாக ராகு, கேது தோஷ முள்ளவர்கள் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், வில்வாரணி ஊரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த திருத்தலம் வில்வாரணி முருகனை வழிபட்டு துன்பம் நீங்கி இன்ப வாழ்வு பெறுவர் என்பது நம்பிக்கை.

நெருப்பு சிவன். அதிலுள்ள வெப்பம் உமாதேவி,நெருப்பின் நிறம் கணபதி, அதன் ஒளி முருகன். இவையாவும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை என்றும், லிங்க வடிவில் முருகன் தோன்றியதால், சிவனே முருகன், முருகனே சிவன் என்றும் இந்த கோயில் மூலம் உணர முடிகிறது.

பல ஆண்டுகளுக்கு முன் கோயில் குருக்கள் ஒருவர் பல கோயில்களுக்கு பூஜை செய்து வந்தார். வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு குதிரையில் சென்று வருவார்.,

தன் சக குருக்கள் ஒருவருடன் ஆண்டு தோறும் ஆடி கிருத்திகையன்று திருத்தணி சென்று முருகனை வழிபடுவார்.

 சில காரணங்களால் அங்கு செல்ல இருவருக்கும் தடங்கல் ஏற்பட்ட  மனம் நொந்த அவர்கள் அன்றிரவு உறங்கும் போது, இருவர் கனவிலும் தோன்றிய முருகன், ""நான் நாக வடிவில் சுயம்புவாக நட்சத்திர மலையில் எழுந்தருளியுள்ளேன். எனக்கு அந்த இடத்தில் கோயில் கட்டி கிருத்திகை நட்சத்திரங்களில் வழிபாடு செய்யுங்கள்,'' என கூறினார்.

மறுநாள் முருகன் குறிப்பிட்ட மலையில் சுயம்புவைத் தேடினர். அங்கே முருகன் குறிப்பிட்டபடி லிங்கம் ஒன்று கிடந்தது. அதை ஒரு நாகம் பாதுகாத்துக் கொண்டிருந்தது.

குருக்களைக் கண்டதும் நாகம் லிங்கத்திற்கு குடைபிடித்த நிலையில் சிலையாகி விட்டது.

குருக்கள் இருவரும் சிறு கொட்டகை அமைத்து லிங்கத்தை முருகனாக கருதி வழிபட்டனர்.

 வள்ளி, தெய்வானை சமேத முருகன் சிலையும் வைக்கப்பட்டது.

நாகம் வடிவெடுத்து சுப்பிரமணியருக்கு நிழல் தந்ததால், நாகத்தின் கீழ் சுப்பிரமணியர் இருப்பது போல் சிலை வடிக்கப்பட்டது.

,மூலவரின் பெயர் சுப்பிரமணியர், சுயம்பு மூர்த்தியாக லிங்க வடிவில் அருள் பாலிக்கிறார்.

ஆதிசங்கரர் திருச்செந்தூரில் சுப்ரமணிய புஜங்கம் பாடி  நோய்நீங்கப்பெற்றது போல நட்சத்திரக் கோயில் ஆலயத்திலும் ஆதிசேடன் முருகனை வழிபட்டு நிழல் தந்து நிற்கும் அற்புதம் நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே” என்று எண்ணி எண்ணி வியக்க வைக்கும் அபூர்வ காட்சியாகும்

கிருத்திகை நட்சத்திரத்தில் இத்திருக்கோயில் முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டதாலும், கார்த்திகைப் பெண்கள் இத்திருக்கோயிலில் வந்து ஒவ்வொரு கிருத்திகை அன்றும் முருகன் வழிபடுவதாக நம்பப்படுவதாலும் இது 

‘கிருத்திகைக் கோயில் ‘ எனவும் அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாத கிருத்திகையன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் இத்திருமலையை வலம் வந்து வள்ளல் முருகன் அருளை அள்ளிச் செல்கின்றனர்.

அங்காரஹ (செவ்வாய்)தோசம் உள்ளவர்கள் இந்த நட்சத்திரக் கோயில் ஆறுமுகனை நம்பி அபிஷேக ஆராதனை செய்தால் மங்காத வாழ்வு பெறுவார்கள்.

கனவில் வந்து சுயம்புவாய் காட்சியளித்து ஆலயம் அமைக்கச் சொன்னவன் திருத்தணிகை முருகன்.  

ஆதிசேடன் வழிபாடு செய்து நிழல் தந்து நிற்பதால் திருசெந்தூர் முருகன் .

சிவபெருமான் ஓம் எனும் பிரணவத்திற்கு பொருள் கேட்க முருகன், என்னை குருவாக ஏற்று நீங்கள் சிஷ்யனாக அமர்ந்தால் சொல்கிறேன் என்றது போலவே இந்த ஆலயத்திலும் சிவலிங்கம் மூலவருக்கு கீழே அமைந்திருப்பதால் சுவாமிமலை முருகன். 

அருள்மிகு அன்னை வள்ளி மற்றும் தேவசேனாவுடன் காட்சியளிப்பதால் பழமுதிர்சோலை மற்றும் திருபரங்குன்றம் முருகன். 

தஞ்சமடைந்தோரின் நெஞ்சில் நின்று தரிசனம் தரும் தண்டாயுதான் தனிக்கோயில் கொண்டிருப்பதால் பழனி முருகன்.

எனவே இந்த ஆலயத்திற்கு வந்து முருகனை வணங்கினால் அறுபடை வீடுகள் எல்லாவற்றிற்கும் சென்று முருகன் அருள் பெற்றதற்கு ஈடாகும் என்பது ஆன்றோர் கண்ட அனுபவம்.

No comments:

Post a Comment