தஞ்சாவூர் ஆனந்தா லாட்ஜ்
×××××××××××××××××××××××××××××
மாயவரம் காளியாகுடி ஹோட்டல் பற்றி அநேகம் பேர் மத்யமரில் பதிவு போட்டிருந்தார்கள், நான் உள்பட.
அதைப் போல தஞ்சாவூரில்ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது ஆனந்தா லாட்ஜ்.இந்த ஹோட்டல் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது என்பது சரியாகத் தெரியவில்லை.உத்தேசமாக 1925 ஆக இருக்கலாம் என்பது என் யூகம்.1970 வரை இந்த ஹோட்டல் இயங்கி வந்தது. 1950--70 களில் இதற்கு இணையாக மங்களாம்பிகா, சரவண பவன் ஹோட்டல்கள் பிரபலமாக இருந்தன.
ஆனந்தா லாட்ஜ் ,தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு மிக அருகில் இருந்தது. ஹோட்டல் அமைப்பு எப்படி இருந்தது தெரியுமா ? மேலே கீத்துக் கூரை.தரையில் மணல் பரப்பி இருக்கும்.ஹோட்டல் நடுவில் ஒரு பெரிய புளிய மரம் இருந்தது.கூரையும் அந்தப் பகுதியை விட்டுவிட்டு அமைந்திருந்தது.
அங்கு டிபன் வகைகள்,டிகிரி காபி மிகவும் ருசியாக இருக்கும்.அங்கு டிபன் சாப்பிடுஹதற்காகவே, ரயிலில் கும்பகோணம் டு திருச்சி செல்பவர்களும், திருச்சி டு கும்பகோணம் செல்பவர்களும் தஞ்சாவூரில் இறங்கி,ஆனந்தா லாட்ஜில் டிபன், காபி சாப்பிட்டு விட்பு, பக்கத்திலேயே இருந்த ,தஞ்சாவூரில் புகழ் பெற்ற நெய் வறுவல் சீவல்,தஞ்சாவூர் கதம்பம் வாங்கிக் கொண்டு,அடுத்த ரயிலில் தன் பயணத்தைத் தொடரும் சாப்பாட்டுப் பிரியர்களும் உண்டு.
இந்த எளிமையான ஹோட்டல் உரிமையாளர் கோபால்சாமி அய்யர்.அவர் உட்கார்ந்திருந்த கல்லாவிற்கு மேல்,அவர் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அவர்களிடம் அவார்டு வாங்கும் படம் ஒன்று பெரிய அளவில் மாட்டப்பட்டிருக்கும்.
ஒரு சமயம் என் தகப்பனார் பல வெளியூர்களுக்குச் சென்று விட்டு,இந்த ஹோட்டலுக்கு டிபன் சாப்பிட வந்திருக்கிறார்.அவர் கொல்லைப்புறம் சென்று கை கால் கழுவச் சென்றிருக்கிறார். அவர் அறியாமலே அவர் மடியிலிருந்த பர்ஸ் கீழே விழுந்து விட்டது.திரும்பி வரும்பொழுது தான் பர்ஸ் காணவில்லை என்பதை உணர்ந்தார். பீதியடைந்த அவர் முகத்தைப் பார்த்த ஓனர் ,இது உங்களுடையது தானா பாருங்கள் என்று பர்ஸை நீட்டியிருக்கிறார். எடுத்துக் கொடுத்த சிப்பந்தியின் நேர்மையைப் பற்றி என்னிடம் கூறியிருக்கிறார்.
இந்த ஹோட்டலின் ஆரம்ப காலத்தில், எஸ்.எஸ்.வாசன் ஆனந்த விகடன் ஆரம்பிக்கு முன்பு ஆவரது தாயார் மாவரைக்கும் பணி செய்து வந்ததாகவும், பிற்காலத்தில் வாசன் வசதியான நிலைக்கு வந்த காலத்தில், ஹோட்டல் உரிமையாளரின் ஷஷ்டி அப்த பூர்த்தியை முன்னிட்டு, அவருக்கு ஒரு வீடு வாங்கி அன்பளிப்பாகக் கொடுத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
--------------------------------
வி.வெங்கட்ராமன்
---------------------------------
No comments:
Post a Comment