Wednesday, July 27, 2022

ஒற்றைக்கல் மண்டபம்

 ஏழு ஆண்டுகளுக்குப்பின் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி ஆதிகேசவப்பெருமாளை தரிசித்தேன்!

.....................

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் புனரமைப்புப் பணிகளுக்காக கருவறையில் இருந்து அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் பாலாலயத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பின்னர் கருவறையில் பாம்பணை மீது பள்ளி கொண்டு அருள்பாலிக்கும் நம் ஆதிகேசவப் பெருமாளை ஒற்றைக்கல் மண்டபத்த்தில் ஏறி தரிசிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. 

 இதோ கும்பாபிஷேகம் முடிந்து விட்டது. அதன்பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பகவானை தரிசிக்க அனுமதிக்கப்படும் என அறிவித்திருந்தனர். ஆனால் ஒற்றைக்கல் மண்டபத்தில் பொருத்த வேண்டிய பாதுகாப்பு கம்பிகள் இணைக்கும் பணி தாமதமாகி நேற்று ஒருவாறாக முடிந்தது. இதனால் இன்று காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஒற்றைக்கல் மண்டபத்தில் அனுமதிக்கப்பட்டனர். 

பத்து மணி அளவில் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறினேன். படியில் கால் வைக்கும்போதே சிலிர்த்தது மண்டபத்தில் ஏறினேன். அதன் மேற்கூரையில் உள்ள வித விதமான சிற்ப வேலைப்பாடுகளை ரசித்தேன். அதன் நுணுக்கமான வேலைகளைப்பார்த்து ஆச்சரியப்பட்டேன். மூன்று வாயில்கள்.. துவாரபாலகர் சிலைகள்..  மனம் முழுக்க மகிழ்ச்சியுடன்  பகவானை கண்குளிர தரிசித்து மகிழ்ந்தேன். அருகாமையில் நின்று பெருமாளை தரிசிக்கையில் மனம் இனம் புரியா மகிழ்ச்சியில் திளைத்தது. 

108-வைணவத் தலங்களில் மிக நீண்ட சயனக் கோலத்தில் ஆதிகேசவப்பெருமாள் திருவட்டாறில்  பள்ளிகொண்டுள்ளார்.  இவ்வளவு பெரிய கடுசர்க்கரை யோகத்தில் உருவான கடவுள் உருவம் இந்தியாவில்  வேறு எங்குமே இல்லை என்கிறார்கள். . பதினாறாயிரத்து எட்டு சாளக்கிரமங்களைக் கொண்டு, அதன் மேல் லேபனம் என்ற சாந்தால் மூடிச் செய்திருக்கிறார்கள். அதுவே கடுசர்க்கரை யோகம் என்று அழைக்கப்படுகிறது.  கடுசர்க்கரை யோகங்களுக்கு அபிஷேகம் கிடையாது.

இந்த சயன விக்கிரகம்  6.60 மீட்டர் நீளம் கொண்டதாகும். 

ஆதிகேசவப்பெருமாள்  ஐந்து தலைகள் கொண்ட பாம்பின்  மூன்று மடிப்புகள் கொண்ட அரவணையில்  சம சயன நிலையில் பள்ளி கொண்டுள்ளார்.  பெருமாள் தெற்கு வடக்காக  படுத்த கோலத்தில் காட்சி தருகிறார்.  முகம் சற்று மேல் நோக்கி பார்ப்பது போல் அமைந்தது.  பிரகாசமான புன்முறுவலுடன், பார்ப்பவரின் மனதை வசீகரிக்கும் வகையில் உள்ளது. 

பெருமாளுக்கு இரண்டு கைகள்.  வலது கை மடிந்து முகத்தை  நோக்கி சிம்ம கர்ண முத்திரை காட்டுகிறது. இடது புஜம் கிடையாக நீட்டி கை நீட்டி விரல்களைத்தொங்க விட்ட நிலையில் உள்ளது.   உடல் பகுதி பட்டாடையால் மூடியுள்ளனர்.

நடுவாசல் வழியாக பஞ்சலோகத்தில் ஜொலித்த அர்ச்சனா மூர்த்தி  நின்ற கோலத்தில் காட்சி தந்தார்.  நான்கு கைகள்,  வலது மேல் கையில் சக்கரம், இடது மேல் கையில் சங்கு, இடது கீழ் கை லோக ஹஸ்தத்துடன் உள்ளது. வலது கீழ் கை அபய முத்திரை காட்டுகிறது. அர்ச்சனா மூர்த்தியின் இடது புறம் பூதேவியும், வலது புறம் ஸ்ரீதேவியும் காட்சி தந்தனர். 

கருவறையின் கிழக்குச்சுவரில் வரிசையாக மது, கைடவர்,சூரியன் ஆகியோரும்,  ஆயுத புருஷர்களான சக்கரம், வாள், கதை, வில், சங்கு, சந்திரன், கருடன் ஆகியோரை புடைப்புச்சிற்பங்களாக பார்த்து மகிழ்ந்தேன்.

பார்த்து பார்த்து ரசித்து ரசித்து பகவானைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.

கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் கோவிலில் பக்தர்கள்   அதிக அளவில் வருகின்றனர்.

ஏனைய நாட்களில் வந்தால் கூட்ட நெரிசல் இன்றி பகவானை  நெருக்கமாக வெகுநேரம் தரிசித்து மகிழலாம். 

வாய்ப்பிருப்போர் திருவட்டாறுக்கு வாருங்கள். வந்து ஆதிகேசவப்பெருமாளை தரிசித்து, அவனது அளவிலா அருளைப்பெற்று மகிழுங்கள்..!

No comments:

Post a Comment