Thursday, July 28, 2022

திருநறையுர் ஆகாச மாரியம்மன்

 🌹#ஆடி_மாதத்தில்_தினம்_ஒரு_மகமாயி..!!


ஆடி மாதம் -13ஆம் நாள்..!!

திருநறையுர் ஆகாச மாரியம்மன்..!!

☄🦅ஆகாச மார்க்கமாக அருள்பாலித்ததால் இக்கோயிலை ஆகாச மாரியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

☄ 🦅கண்ணபுரத்திற்கு (சமயபுரம்) கண்ணாடி வளையல்களை வியாபாரம் செய்ய வந்தனர்.சொந்த ஊர் திருநறையூராக இருந்தாலும், குதிரையின் மேல் மல்லாரம் வைத்து வளையல் சாரங்களை ஏற்றிக்கொண்டு ஒவ்வொரு ஊராகச் சென்று வியாபாரம் செய்வது வழக்கம் ஆகும். ஒரு முறை வளையல் வியாபாரிகள் சமயபுரத்துக்கு  வந்து அம்மனை வழிபட்டனர். வளையல்கள் கொண்ட சாரங்களைத் தெருத்தெருவாக எடுத்துச் சென்று விற்பனை செய்தனர். மாலை நேரம் முடிந்தது, இரவு வந்தது. அதனால் இரவு இங்கேயே தங்கிவிட்டு, மறுநாள் பக்கத்திலுள்ள ஊர்களுக்குச் செல்லலாம் என்று சமயபுரம் கோயிலின் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் தன்னுடன் வந்த வளையல் வியாபாரிகளுடன் வயதான வளையல் வியாபாரி ஒருவர் தங்கினார். 

☄🦅நல்ல உறக்கம், நடு இரவில் மண்டபத்தில் படுத்திருந்த வளையல் வியாபாரியான பெரியவரின் கனவில், இளம்பெண்ணாக வந்தாள் சமயபுரத்தாள். தாத்தா, எனக்கு வளையல்கள் போட்டு விடுகிறீர்களா? என்று கேட்டாள். தெய்வீகக் களைவீசும் அந்தப் பெண்ணைப் பார்த்ததும், உனக்கு இல்லாத வளையல்களா? எல்லாம் உனக்குத்தாம்மா இப்படி உட்கார் என்று தான் கொண்டு வந்திருந்த சிறிய ஜமுக்காளத்தை விரித்து, வளையல்களை அடுக்கி, வைத்திருந்த பெட்டியையும், வளையல் சாரம் கொண்ட மூட்டையையும் எடுத்து அந்தப் பெண்ணின் முன் வைத்தார். அந்தப் பெண் அமர்ந்து, வளையல் வியாபாரி அந்த அழகான கைகளுக்கு ஏற்ற வண்ணமயமான கண்ணாடி வளையல்களை ஒவ்வொன்றாகத் தேர்வுசெய்து, அந்தப் பெண்ணின் கைகளில் அணிய முற்படும் போது, வளையல்கள் உடைந்து கொண்டே வந்தன. இது அவருக்கு அதிசயமாகவும் திகைப்பாகவும் இருந்தது. அவர் எதிரில் அமர்ந்திருந்த பெண்ணோ, சிரித்துக்கொண்டே பெரியவரின் முகத்தைப் பார்த்தாள். பெரியவரோ, வளையல்களைஅந்தப் பெண்ணுக்கு அணிவிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் ஆழ்ந்திருந்தார். 

☄🦅அம்மா, என்னவென்றே தெரியவில்லை! ஆத்தா என்னைச் சோதிக்கிறாள் என்று நினைக்கிறேன். நீ யார் அம்மா? என்று பெரியவர் பணிவுடன் கேட்டார். அந்தப் பெண் பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து, கோயிலை நோக்கிச் சென்றாள். அவரோ, அந்தப் பெண் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தார்.

 ☄🦅கனவிலிருந்து விடுபட்டு திடுக்கெனக் கண்விழித்த பெரியவர், தான் கண்டது கனவா என்றவாறே, வளையல்களை அடுக்கி வைத்திருந்த பெட்டியையும், வளையல்கள் கொண்ட சாரத்தையும் உடனே பிரித்துப் பார்த்தார். என்ன ஆச்சரியம் ! அவர் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த அத்தனை வளையல்களும் உடைந்தது. இது சமயபுரத்தாளின் சோதனை என்பதை உணர்ந்த பெரியவர், கோயிலை நோக்கி கைகூப்பித் தொழுதார். 

☄🦅காலை பொழுது விடிந்தது. மண்டபத்தில் அவருடன் இருந்த மற்ற வியாபாரிகள், எழுந்திருக்க முடியாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் உடல் முழுவதும் அம்மை போட்டிருந்தது. என்ன செய்வது? ஆத்தா, இப்படிச் சோதித்துவிட்டாளே! ஆத்தா, நாங்க ஏதாவது தப்பு செய்திருந்தா எங்களை மன்னிச்சிடும்மா என்று கோயிலை நோக்கி சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து வணங்கினார் அந்தப் பெரியவர். 

☄🦅அப்போது, கோயில் குருக்கள் திருநீறு, குங்குமம் கொண்ட பூஜைத்தட்டுடன் அவர்முன் நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

 ☄🦅கவலைப்படாதீர்கள்! விடியற்காலை ஆத்தா என் கனவில் வந்து, வளையல் வியாபாரியான பெரியவர் கொண்டு வந்திருந்த வளையல்களைப் போட்டுக்கொள்ள ஆசைப்பட்டு, என் கையை நீட்டும்போதெல்லாம் விளையாட்டாக வளையல்கள் உடையும்படி செய்துவிட்டேன். அந்த பெரியவர் மிகவும் பயந்துபோய் கவலையாக இருப்பார். நான் உடைத்த வளையல்களுக்குக் கிரயமாக, என் சன்னிதானத்தில் என் காலடியில் வைத்திருக்கும் பொற்காசுகளை அவருக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று கூறினாள். நான்தான் வந்தேன் என்பதை அவர் தெரிந்துகொள்ள, அவருடன் வந்திருக்கும் வியாபாரிகளின் உடலில் என் முத்திரையைப் பதித்து உள்ளேன். அவர்கள் ஏன் துன்பப்பட வேண்டும்? நீங்கள் பக்தர்களுக்கு அளிக்கும் பிரசாதமான குங்குமத்தையும், திருநீற்றையும் அவர்கள் உடலில் பூசி விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று உத்தரவு வந்தது. 

☄🦅அத்துடன், நீங்கள் இருக்கிற இடத்தையும், உங்களையும் எனக்கு அடையாளம் காண்பித்தாள் என்று சொன்ன குருக்கள், பொற்காசுகளைக் கொண்டு வந்து பெரியவரிடம் கொடுத்தார். அம்மை போட்டவர்களின் உடலில் திருநீறும், குங்குமமும் தெளிக்க, அம்மை முத்துக்கள் எல்லாம் மறைந்து, உடல்நலம் பெற்று அவர்கள் எழுந்தார்கள்.

அனைவரும் கோயிலுக்கு அருகில் உள்ள ஆற்றில் நீராடிவிட்டு, குருக்களுடன் கோயிலுக்குச் சென்று அம்மனை மனம் உருக தரிசனம் செய்தனர். 

 ☄🦅ஒரு  சமயம் அவரால் சமயபுரம் வரை செல்ல முடியவில்லை.  மனம் வருந்திய அவர் அம்மனைப்  பார்க்க முடியவில்லையே என வருந்த அவருக்காக ஆகாய மார்க்கமாய் அம்பிகை சமயபுரத்தில்  இருந்து கிளம்பி இங்கே வந்து காட்சி கொடுத்ததாகவும், அது முதல் அவர் வேண்டுகோளின்படி  ஒவ்வொரு வருடமும் சமயபுரத்தில் இருந்து ஆகாய மார்க்கமாய் இங்கே வந்து காட்சி கொடுக்கச்  சம்மதித்ததாகவும் கோயிலின் தல வரலாறு கூறுகிறது.

☄🦅இந்நிகழ்வு நடந்தது வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமை என்று சொல்லப் படுகிறது.  ஆகவே ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை  அம்மன் வருகையை ஒட்டி உற்சவம் ஆரம்பித்துப் பத்து நாட்கள் நடக்கின்றது.  ஊரே கூடி நடத்தும்  விழா கடைசி நாள் அன்று அம்மனுக்கு விடையாற்றிக் கண்ணீரோடு வழி அனுப்புவதோடு  முடிகின்றது.  

☄🦅அம்மனை தர்ப்பையால் ஒவ்வொரு வருடமும் உருவாக்குகின்றனர்.  பத்து  நாட்களும் செப்புக் குடத்தில் கலசம் வைக்கப்பட்டு விழா எடுக்கப்படுகின்றது.  கலச நீரும்  அம்மனுக்குச் சாத்தப்படும் எலுமிச்சை மாலையில் எலுமிச்சம் பழமும் பிரசாதமாய் பக்தர்களுக்குத்  தரப்படும். 

 ☄🦅தர்ப்பையால் உருவாக்கப்பட்ட அம்மனை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு  அலங்காரத்தில் காண முடியும்.  

☄🦅ஆதி அந்தமில்லாப் பெரும் ஜோதியான அம்பிகை சிறிய  உருவத்துடன் உருவாக்கப்பட்டுக் கடைசியில் பத்தாம் நாள் அன்று வளர்ந்து இராஜ ராஜேஸ்வரியாய்க் காட்சி அளிப்பாள்.  அதன் பின்னர் அம்பாளுக்குப் பிரார்த்தனைகள் நிறைவேற்றப்பட்டு பக்தர்களால் காவடிகள் எடுக்கப்பட்டு சமயபுரத்துக்கு அம்பாளை எழுந்தருளச் செய்கின்றனர்.  நாச்சியார் கோயிலில் வேறு கிராமத் தெய்வங்களோ, காவல் தெய்வங்களோ  கிடையாது. இந்தக் கோயில் ஒன்று தான் உள்ளது.  

☄🦅இந்த வைகாசி மாதம் திருவிழா சமயம் தவிர  மற்ற நாட்களில் இங்கு ஜோதி வடிவில் அம்பாள் காட்சி கொடுத்து அருள் பாலிக்கிறாள்.  அம்மனுக்கு என தனியாக சிற்பமோ, விக்கிரஹமோ,பஞ்சலோகச் சிலையோ கிடையாது. 

☄🦅 இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் அமாவாசையை தொடர்ந்து வரும் முதல் வெள்ளிக்கிழமை புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலாவாக கோயிலுக்கு வருதலும், அதைதொடர்ந்து 10 நாட்கள் பல்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் சமயபுரம் திரும்புதல் நிகழ்ச்சி நடைபெறும். 

🌺சுவாமி 🌸:   ஆகாச மாரியம்மன்.

🌺தலவிருட்சம் 🌿 வேம்பு மரம்.

🌸நடைதிறப்பு : 

காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல்  இரவு 8.00 மணி வரை.

🔔பூஜை விவரம் : ஒரு கால பூஜை.

💐☄திருவிழாக்கள் : வைகாசி - அமாவாசையை அடுத்துவரும் புதன்கிழமை முதல் 10 நாட்களுக்கு அம்மன் வந்து செல்லும் திருவிழா.

☄🦅அமைவிடம்: திருநறையூர், தஞ்சாவூர்.

No comments:

Post a Comment