Friday, July 22, 2022

தர்ப்பண பூஜை முறைகள். பகுதி - 4

ஆடி அமாவாசைக்கு ஸ்பெஷல்

எளிய தர்ப்பண பூஜை முறைகள். பகுதி - 4

யாவர்க்கும் முக்தி தரும் சற்குரு.

சீடர்கள் (ஒருமித்த குரலில் "சற்குருவின் மகிமை கேட்கக் கேட்கத் தெவிட்டாதே மேலும் விளக்க வேண்டுகிறோம், ஐயனே!"

ஸ்ரீஅகஸ்தியர் : "பூலோக ஜீவன்கள் எதுவாயினும் அதற்குப் பிறப்பு இறப்பற்ற நிலையைத் தரவல்ல சற்குருவே எத்தனையோ கோடிக்கணக்கான மைல்கள் தாண்டி பல லோகங்களில் வாழும் பிதருக்கள், சுந்தர்வர்கள், ரிஷிகளுக்குக் கூட முக்தியளிக்கும் தெய்வீக சக்தி பொருந்தியவர். எவ்வாறு தெரியுமா?"

பித்ரு தேவர்கள் நிலையே மிக உயர்ந்த நிலை என்றாலும் அவர்கள் மேலும் உயர்ந்த நிலைகளை அடைய அவர்களுக்கு என்று விதிக்கப்பட்டுள்ள நற்காரியங்களைச் செய்தேயாக வேண்டும். ஒவ்வொரு பித்ருவும் அவரவருடைய சந்ததி யினருக்காகப் பிரார்த்தித்து அவர்களை நல்வழிப்படுத்தி என்றும் இறை நினைவுடன் வாழ்ச் செய்வதே பித்ருக்களின் கடமையாகும்.

பித்ருக்களில் வசு, ருத்ர, ஆதித்ய பித்ருக்கள் என்று முக்கியமான மூன்று வகையினர் உண்டு. இவை தவிர எண்ணற்ற வகையான பித்ரு லோகங்களில் உள்ள பித்ருக்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கடமைகள் விதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, தாவரங்களை மேல்நிலைப்படுத்த ஒரு வகை பித்ருக்கள், நாலுகால் ஜீவராசிகளை உயர்த்த ஒரு வகையினர். பறவைகளுக்காக வேறு வகையினர், நீர்வாழ் உயிரினங்களை மேம்படுத்த ஒரு வகை பித்ருக்கள் என பலதரப்பட்ட பித்ரு வகையினர் இப்பூவுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் ஆன்மீக வழியில் உயர்த்த அல்லும்பகலும் அரும்பாடுபட்டு வருகின்றனர்.

பொதுவாக பித்ருக்களுக்கு பசியோ, உறக்கமோ கிடையாது. எனவே எப்போதுமே அவர்கள் தம் வம்சாவழியினர் ஆன்மீக வழியில் முன்னேறக் கடுமையாகப் பாடுபடுகின்றனர். ஆனால் பூவுலகில் மனிதனோ மாயைச் சுழலில் அகப்பட்டுத் தன் வாழ்வை முழுமையாக வீணாக்கிக் கொண்டே இருப்பது வழக்கம். எனவே பித்ருக்கள் சற்குருவை நாடித் தங்கள் சந்ததியினரைக் கரையேற்றுமாறு வேண்டுகின்றனர்.

போகர் : ''ஐயனே! கருணைக் கடலாம் சற்குருநாதர் தம்மை நாடி வந்த பித்ருக்களுக்குக் கருணை புரியும் முறையை விளக்க வேண்டுகிறோம்."

ஸ்ரீஅகஸ்தியர் : மஹான்கள் தலைசிறந்த மனோரீதியான ஆற்றலைப் (Telepathy) பெற்றிருப்பதால் அவர்களால் எந்தப் பித்ரு தேவருடனும் நினைத்த உடன் ஆன்மீகத் தொடர்பு கொள்ள முடியும் என்றாலும் ஆன்மீக விந்தைகளை இயற்கை நியதிக்கு முரணாகச் செய்வதில்லை. சித்தமெல்லாம் சிவன்பால் இருப்பதால் அவர்கள் இறைவன் இட்ட நியதிப்படியே செயல்படுகின்றனர்.''

பொதுவாக, மூதாதையருக்கு அமாவாசை, பௌர்ணமி, மாதப் பிறப்பு, சூரிய சந்திர கிரகணங்கள் போன்ற விசேஷ தினங்களில்தான் பூவுலகிற்கு வர அனுமதியுண்டு. ஆனால் பூலோகத்தில் எந்தக் கோயிலுக்கும் எப்போதும் வந்து செல்ல அனுமதி உண்டு.

சற்குருநாதர் தம்மை நாடி வந்த அடியார்களின் கர்ம வினைப் பாங்கிற்கேற்ப அவர்களுக்கு உரித்தான உழவாரத் திருப்பணிகளுக்கு அனுமதி அளிக்கின்றார். கோயில் உழவாரப் பணியில் தாம் ஈடுபடுத்தும் அடியாரது உடலில் சூட்சுமமாகப் புகுந்து இறைப்பணி ஆற்ற அவர்களது பித்ருக்களுக்கும் அனுமதி அளிக்கின்றார்.

ஒரு அடியாரின் உடலில் பல பித்ருக்கள் ஒரே சமயத்தில் சூட்சுமமாகப் புகுந்து செயல்படுவதுண்டு. இதற்கான ஆற்றல் சாதாரணமாக எந்த அடியாரிடமும் இருப்பதில்லை. பல பித்ருக்களின் சூட்சும சரீரங்களைத் தாங்கும் சக்தியையும் சற்குருவே அடியாருக்கு அளிக்கின்றார். பூலோகத்தில் வாழ்ந்தபோது எந்தக் கோயிலிலும் உழவாரத் திருப்பணி செய்யும் வாய்ப்பைப் பெறாத பித்ருக்கள் தம் சந்ததியினரின் உடலில் புகுந்து அந்தக் கர்ம பாக்கியினைத் தீர்த்துக் கொள்வதோடு, தாங்களும் உய்வு பெற்றுத் தம் வம்சாவழியினரையும் மேம்படுத்துகின்றனர்.

சீடர்கள் : ''குருதேவா! பித்ரு சாபத்திற்குச் சிறந்த பரிகாரம் சற்குருவின் ஆணைப்படி நடைபெறும் கோயில் உழவாரத் திருப்பணியே என்று தாங்கள் கூறி வருவதன் பொருளை இன்று உணர்ந்தோம்."

ஸ்ரீஅகஸ்தியர் : பித்ரு சாபம் மட்டுமல்ல, எனதருமைக் குழந்தைகளே! கலியுலகில் மனிதன் சந்திக்கும் எப்படிப்பட்ட பிரச்னைக்கும் தீர்வும். பரிகாரமும் தர வல்லவர் சற்குரு ஒருவரே! இதை அறிந்த பின்னராவது ஒவ்வொரு மனிதனும் சற்குருவைத் தேடி அவரது பாதக் கமலங்களில் சரணடைவதையே வாழ்வின் தலையாய கடமையாகக் கொள்ளட்டும்!"

ஆடி அமாவாசை 2022: பித்ரு தர்ப்பணம் - Aadi Amavasai 2022

ஆடி அமாவாசை - (ஆடி11)ஜுலை 27, 2022 புதன் இரவு 9:11தொடங்கி, மறுநாள் (ஆடி12) ஜுலை 28, 2022 வியாழன் இரவு 11:24 முடிவடைகிறது.

ஆடி அமாவாசை தர்ப்பணம்

ஆடி அமாவாசை என்பது தமிழ் மாதமான ஆடியில் வரும் அமாவாசை ஆகும். ஆடி அமாவாசை உங்கள் மூதாதையர்களை போற்றவும் அவர்களின் நித்திய ஆசீர்வாதங்களைப் பெறவும் தர்ப்பணம் வழங்கும் மூன்று சக்திவாய்ந்த அமாவாசை நாட்களில் ஒன்றாகும்.

ஆடி அமாவாசையின் முக்கியத்துவம் தெய்வீக சக்திகள் பூமியை கிருபையுடன் ஆசீர்வதித்து, உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கும் ஆடி மாதம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை அன்று உங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது அவர்களின் ஆன்மாக்கள் மோட்சத்தை அடைய உதவும்.

அமாவாசை  நாளில், சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் உள்ளனர். சூரியன் தந்தையையும் ஆன்மாவையும் குறிக்கிறது அதேசமயம் சந்திரன் தாய் மற்றும் மனதைக் குறிக்கிறது. சந்திரனின் ராசியான கடக ராசியை சூரியனும் சந்திரனும் ஆக்கிரமித்திருப்பதால் ஆடி அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆடி அமாவாசை அன்று, முன்னோர்கள் காணிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு அதிக விருப்பத்துடன் இருப்பதாகவும், அவர்களின் வாரிசுகள் அவர்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது திருப்தி அடைவதாகவும் நம்பப்படுகிறது. கூடுதலாக, ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதத்தில், சூரியன் தெற்கு நோக்கி நகர்வதைத் தொடங்குகிறது, இது ‘தட்சிணாயனம்’ என்று அழைக்கப் படுகிறது. இந்தக் காலக்கட்டத்தில் இது முதல் அமாவாசை நாள் என்பதால், தர்ப்பணம் செய்ய மிகவும் சக்திவாய்ந்த நாளாக இது கருதப்படுகிறது.

இந்நாளில் உங்களுக்கு அருகில் உள்ள புனிதம் நிறைந்த நீர் நிலைகளுக்கு சென்று முன்னோர்களுக்கு தர்பணம் செய்வதன் மூலம் அவர்கள் மோட்சம் பெறுவதுடன்,உங்களை சார்ந்த அனைத்து பாவங்களும் மோட்சம் பெறும் என்பது ஐதீகம்.

*ஆடி அமாவாசை ஸ்பெஷல் !*

*தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல்* *தான்என்றாங்கு*
*ஐம்புலத்தாறு ஓம்பல் தலை*

தெய்வத்தை வணங்குகிறோமோ இல்லையோ, முன்னோர்களை நிச்சயம் வழிபட வேண்டும் என்றுரைக்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மூதாதையர் வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து தான் அவர் இப்படி உணர்த்தி சென்றுள்ளார்.

இந்த முன்னோர் வழிபாட்டில் முக்கிய இடம் பிடிப்பது அமாவாசை தினம். பித்ருக்கள் என்று அழைக்கப்படும் முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.  அந்த நாட்களில் தர்ப்பணம் கொடுப்பதால் நம் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. 

ஆடி அமாவாசையின் முக்கியத்துவம்...*

ஒரு வருடத்தில் ஆடி மாதம் முதல் மார்கழி முடிய உள்ள காலம் தேவர்களுக்கு இரவு நேரம் என்பதால் ஓய்வுக்குச் சென்று விடுவார்கள். அந்த நேரத்தில் நம்முடைய முன்னோர்கள் நம்மைக் காப்பாற்று வதற்காக பித்ருலோகத்தில் இருந்து வரவேண்டும் என்பதற்காக நாம் அவர்களுக்கு ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுக்கிறோம்.

பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பது சாஸ்திரம். அவ்வாறு இயலாத பட்சத்தில் வருடத்தின் முக்கிய அமாவாசை தினங்களான ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்று தினங்களில் அவசியம் தர்ப்பணம் கொடுக்கவேண்டும். 'நன்றி மறப்பது நன்றன்று' என்ற வகையில் நம்முடைய முன்னோர்களுக்கு நன்றி கூறும் வகையில் கொடுக்கப்படவேண்டிய தை அமாவாசை தர்ப்பணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

*எப்படி செய்ய வேண்டும்?*

மறைந்த பெற்றோர் மற்றும் மூதாதையரை மனதில் நினைத்து இந்த  நாளில், ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி
மூதாதையர்களுக்குப் தர்ப்பணம் செய்ய வேண்டும்.  இதற்கு உகந்த நேரம்  மதிய வேளை. அதேபோல இந்நாளில் புரோகிதர் மூலமாக தர்ப்பணம் செய்வது சிறப்பு. அவ்வாறு இயலாத பட்சத்தில், பக்தியுடன் மனதார பித்ருக்களை வழிபட்டு அரிசி, காய்கறி, பழம், தட்சிணை, புத்தாடை முதலானவற்றை படைத்து வழிபாடு செய்யவேண்டும். அந்த ஆடை மற்றும். உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாகும்.

மேலும் தடைபட்ட திருமணம், வேலை யின்மை, நீண்ட நாள்பட்ட நோய்நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் கிடைக்கும். அன்று பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் நல்ல பலன் தரும். அதேபோல பித்ரு பூஜையைச் முழு மனதோடு, முறையாக செய்யாவிட்டால் முன்னோர்களின் சாபத்துக்கு உள்ளாக நேரிடும்  என்றும் சாஸ்திரம் சொல்கிறது.

தர்ப்பணம் முடிந்ததும், முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபடவேண்டும். பிறகு முன்னோர்களின் பிரதிநிதிகளாகச் சொல்லப்படும் காகத்துக்கு உணவு தரவேண்டும். உயிரினங்களில் கூடி வாழ்ந்து, சேர்ந்து உண்ணும் வழக்கமுள்ள உயர்ந்த குணம் கொண்டது காக்கை இனம். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுதன் மூலம் பித்ருக்களின் ஆசியைப் பெற முடியும் என்று சாஸ்திரம் கூறுகிறது. எனவே காகத்திற்கும் அமாவாசை தினத்தில் உணவளிப்பது சிறப்பு.

ஆடி அமாவாசையன்று, முன்னோர்களின் பெயரால் பிறருக்கும் உதவிடுவோம்,  முன்னோர்களின் ஆசிகளுடன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வோம்.

*ஆடி அமாவாசை விரத கதை!*

ஆடி அமாவாசை  பித்ரு காரியங்கள் செய்வதற்குரிய தினமென்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது.

அன்றைய தினம் ஒரு கதையைப் படித்தபிறகு மறுநாளான அமாவாசையன்று விரதமிருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் முன்னோர் கூற்று.

*விரதம் சரி அது என்ன கதை?*

அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமமிக்க அவன் வாரிசு இல்லாத காரணத்தால் மிகுந்த துயரத்திலிருந்தான். எனவே அவன் தன் மனைவியோடு தீர்த்தயாத்திரை மேற்கொண்டான். அதன்பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி வாக்கு, “உனது மகன் இளமைப் பருவத்தை எட்டும்போது இறந்துபோவான்’ என்று கூறியது.

அதைக் கேட்ட மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளிகோவில் ஒன்றில் அவன் வழிபட்டபோது, “உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர்பெறுவான்’ என்ற குரல் கேட்டது.

இளமைப்பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம்முடிக்க பெண் தேடியபோது யாரும் அதற்கு முன் வரவில்லை. அரசன் நிறைய பொன் தருவதாக அறிவித்தான். அப்போது,  பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம்பெண்ணை, அவளது உறவினர்கள் ஏமாற்றி இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர்.

இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டுபோய் விட்டனர். அப்பாவியான அந்தப்பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடியும்வரை அவனருகிலேயே கண்ணுறங்காமல் காத்திருந்தாள். விடிந்தபின் தன் கணவன் இறந்துவிட்டானென்ற உண்மை தெரியவந்தது. அழுதாள்… அரற்றினாள்… தவித்தாள்… தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள்.

உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். ஈசனின் அனுமதியோடு இறந்துகிடந்த இளவரசனை உயிர்பெற்றெழச் செய்தாள்.

இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாள். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண், “இருண்டுபோன என் வாழ்வை ஒளிபெறச் செய்தது போலவே, இந்த நாளில் தங்களை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினாள்.

மகிழ்ந்த அம்பிகை, “ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் உனது கதையைப் படித்துவிட்டு, மறுநாள் விரதமிருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து என்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும். அவர்கள் இல்லத்தில் அஷ்டலட்சுமி கடாட்சம் நிலவும்’ என சொல்லி மறைந்தாள்.🙏🌹
தர்ப்பண மகிமை தொடரும் ..

No comments:

Post a Comment